தினமணி 85

அதிசயம் ஆனால் உண்மை - தலையங்கம்

இந்தியாவில் ஒரு மாநிலம்; அதற்கு ஒரு முதல் அமைச்சர்; அவர் பத்தாண்டுகள் ஆட்சி செய்தார்; அவர் முதல்வராக இருக்கும்பொழுதே தம் உடைகளைத் தாமே தோய்த்து உடுத்திக் கொண்டார்;

DIN

அதிசயம் ஆனால் உண்மை

இந்தியாவில் ஒரு மாநிலம்; அதற்கு ஒரு முதல் அமைச்சர்; அவர் பத்தாண்டுகள் ஆட்சி செய்தார்; அவர் முதல்வராக இருக்கும்பொழுதே தம் உடைகளைத் தாமே தோய்த்து உடுத்திக் கொண்டார்; தம் கையால் சமைத்துச் சாப்பிட்டார்; தம் செலவுகள் போக மிஞ்சிய சம்பளத்தைத் தம் கட்சிக்கு மாதாமாதம் கொடுத்துவிட்டார்; பதவிக் காலம் முடிந்த அன்றே அரசு கொடுத்த இல்லத்தைக் காலி செய்தார்; தம்முடன் இரண்டு பெட்டிகளில் தனது துணிமணிகளையும், புத்தகங்களையும் மட்டும் எடுத்துச் சென்றார்; சொந்த வீடு இல்லாததால் கட்சி அலுவலகத்தில் ஓர் அறையில் குடியேறினார்.

இது இந்திய விடுதலைக்குப் பிறகு ஒரு முதல்வர் எப்படி இருக்க வேண்டும் என்று கற்பனை செய்து கொண்டு ஓர் இலட்சியவாதி எழுதிய நாவலின் சுருக்கம் இல்லை. நேற்றைய நாளேடுகளில் தேடிப் பார்த்தீர்களானால் சின்னச் சின்ன எழுத்துகளில் வெளிவந்திருக்கும் ஒரு பெரிய செய்தி இது.

இந்த அதிசயம் - ஆனால் - உண்மைச் சம்பவம் நடந்த மாநிலம் திரிபுரா. அந்த முதல்வரின் பெயர் நிருபேந்(திர) சக்கரவர்த்தி. அவர் இடது கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்தவர்; அதைவிட முக்கியமான செய்தி அவர் பரம யோக்கியர் என்பதே.

அறியாமையிலும், ஊழலிலும், அரசியல்வாதிகளின் அடுக்கு மொழிகளிலும், சினிமா நடிக, நடிகைகளின் மாயா ஜாலங்களிலும் சிக்குண்டு, தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, பாழ்பட்டு நிற்கும் பாரத தேசம் இனி வாழவே முடியாது என்று கலங்கி நிற்கும் மக்களுக்கு இது ஒரு நற்செய்தி.

வாசகர்களுக்கு நினைவிருக்கிறதோ என்னவோ; தமிழ்நாட்டில் கூட ஒரு காலத்தில் இத்தகைய அதிசயப் பிறவிகள் உண்மையாகவே உயிர் வாழ்ந்தனர். காமராஜ் என்று ஒரு முதல்வர்; கக்கன் என்று ஒரு அமைச்சர். மாற்றுத் துணிகளைத் தவிர வேறு உடைமைகள் இல்லாதவர்கள் இவர்கள். மக்களின் அன்பு என்பதைத் தவிர வேறு செல்வத்தைப் பெறாதவர்கள் இவர்கள்.

யார் கண்டது; அங்கொன்றும் இங்கொன்றும் ஆக இன்று காணப்படும் தீப்பொறிகள் பற்றிக் கொண்டு உண்மைக் கனலாக வளர்ந்து இன்றைய அரசியலின் பொய்மைகளை எரித்து விடும் நற்காலமும் நம் நாட்டுக்கு வரலாம் அல்லவா. அதை நினைந்து நிருபேந் சக்கரவர்த்திகளை வாழ்த்தி வணங்குவோம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நிருபேந் சக்கரவர்த்தி (101) மறைவை முன்னிட்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 9.2.1988-இல் தினமணியில் வெளியான துணைத் தலையங்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

SCROLL FOR NEXT