‘நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்’
என்கிற பாரதியின் மணிமொழிகளையே "தினமணி' இலட்சிய முழக்கமாகக் கொண்டு, பாரதியின் 13-ஆவது நினைவுநாளில் தொடங்கப்பட்ட பத்திரிகை "தினமணி'.
அன்று தொட்டு இன்று வரை பாரதிக்குப் பெருமையும், புகழும் சேர்க்கும் வகையில், பற்பல தமிழ் அறிஞர் பெருமக்கள் எழுதிய பாரதியைப் பற்றிய கட்டுரைகளை வெளியிடுவதை தன் தலையாய பணியாகவும், கடமையாகவும் கொண்டு செயல்பட்ட சிறப்பும் "தினமணி'க்கு உண்டு.
என்னைப் புகழ் ஏணியின் உச்சத்தில் உயர்த்திய பெருமையில் "தினமணி'யின் பங்களிப்பு மகத்தானது.
1962ஆம் ஆண்டு முதற்கொண்டு, இன்றைய தினம் வரை தொடர்ந்து என்னின் பாரதி பணிக்குக் கைகொடுத்து, உதவி செய்து வருவதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.
இதன்பொருட்டுத் "தினமணி'க்கு என் இதயங் கனிந்த நன்றியை முதலில் புலப்படுத்திக் கொள்ளவும் கடமைப்பட்டு உள்ளேன். பாரதியின் வெளிவராத படைப்புகளைப் பதிப்பிப்பதை மட்டுமே எனது வாழ்நாள் பணியாகக் கொண்டேன். பாரதியைப் பற்றி எழுதியும், பாரதி படைப்புகளைத் தேடிப் பிடித்து வெளியிட்டும் பல நூல்களைப் பிரசுரம் செய்துள்ளேன். சற்றேத்தாழ எல்லா நூல்களுக்குமே மதிப்புரை எழுதியும், பாராட்டுரை வழங்கியும் என் பாரதி பணிகள் சிறக்க நேசக்கரம் நீட்டியது "தினமணி' மட்டுமே ஆகும்.
1962 டிசம்பர் 11-ஆம் நாளைப் பாரதியின் 81-ஆவது பிறந்த நாள் விழாவாகக் கொண்டாட அன்றைய தமிழக அரசு முடிவு செய்தது.
பாரதி விழாக் கொண்டாட்டத்தின்போது பாரதியின் மகிமைகளை விளக்கிக் காட்டும் நூல் ஒன்றை வெளியிடக் கருதி, பல்துறை அறிஞர் பெருமக்கள் பாரதியைப் பற்றி எழுதிய கருத்துரைகளை ஒன்று திரட்டி "தமிழகம் தந்த மகாகவி'' என்று தலைப்பெயரிட்டு 1962 டிசம்பர் 11-ஆம் தேதி வெளிப்படுத்தினேன். என்னுடைய முதன் முயற்சி நூலுக்கு முதன் முதலாக மதிப்புரை எழுதி என்னின் பணியைப் பாராட்டியது "தினமணி'தான்!
தமிழக அரசு பதிப்பித்து வெளியிட்ட "தமிழ் நூல்கள் விவர அட்டவணை'யை முன்மாதிரியாகக் கொண்டு பாரதி எழுதிய நூல்கள், பாரதியைப் பற்றி வெளிவந்த நூல்கள் ஆகியவற்றைத் தேடி "மகாகவி பாரதி: நூற்பெயர்க் கோவை'' என்கிற நூல் 1981-இல் வானவில் பிரசுரத்தின் சார்பில் வெளியிடப்பட்டது.
பெரியவர் "சே.ரா.' என்கிற சுருக்கப் பெயரால் நன்கு அறியப்பட்ட "தினமணி சுடர்' பகுதியின் பொறுப்பை ஏற்றிருந்த திரு. சே. ராமாநுஜசாரியார் அவர்களே "மகாகவி பாரதி: நூற்பெயர்க்கோவை'' நூலுக்கு மிக நீண்ட மதிப்புரை எழுதியிருந்தார்.
மதிப்பிற்குரிய ஐராவதம் மகாதேவன் ஆசிரியராக இருந்த காலப் பகுதியில், பாரதியைப் பற்றியும், பாரதியுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட சான்றோர்கள் பற்றியும், பொதுநலச் சேவையில் ஈடுபட்ட பெரியோர்கள் பற்றியும் கட்டுரைகளை எழுதித் தருமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார்.
அந்த வகையில் 1979-ஆம் ஆண்டு தொடங்கி, அவ்வப்போது 1988 -ஆம் ஆண்டு வரை "தினமணி'யில் வெளிவந்த எட்டுக் கட்டுரைகளை நான் "மறுமலர்ச்சிக் கவிஞர்'' (1982), "கட்டுரை மணிகள்'' (1989) ஆகிய நூல்களில் வெளியிட்டேன்.
பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 99-ஆவது பிறந்த நாள் விழா தருணத்தில், பாவேந்தரைச் சந்தித்தேன்' என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரையைத் "தினமணி'' "தமிழ்மணி' பகுதியில் 28.4.1990-ஆம் தேதியிட்ட இதழில் வெளியிட்டு எனக்குப் பாரதிதாசன் வட்டாரத்திலும் புகழைத் தேடித் தந்தார் ஐராவதம் மகாதேவன்.
"கலாரசிகன்' கி. வைத்தியநாதன் அவர்கள் "தினமணி'யில் ஆசிரியராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்ட காலம் முதல் இன்றைய தினம் வரை என்னுடைய பாரதி பணிக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார்.
கவிஞர் கண்ணதாசன், பாரதியின் இளவல் சி. விசுவநாதர், சிலம்பொலி செல்லப்பன், சுப்பிரமணிய சிவா, காமராஜர் ஆகியோர் பற்றி நான் எழுதிய கட்டுரைகளைப் பிரசுரம் செய்ததுடன் "இந்த வாரம்' பகுதிகளில் என்னைப் பற்றிப் பலரும்அறியச் செய்தவர், கி. வைத்தியநாதன் (கலாரசிகன்) அவர்கள் என்று குறிப்பிடுவதில் பெருமிதம் கொள்கிறேன்.
பரலி சு. நெல்லையப்பர் பெயரில் பாரதி நெல்லையப்பர் மன்றத்தால் விருது வழங்க முன்வந்தபோது, அந்த விருதைப் பெற நான் தகுதியுடையவன் என்று எழுதி, எனக்கு விருது வழங்கச் சிபாரிசும் செய்தவர், கி. வைத்தியநாதன் 11.12.2018-இல் பாரதியின் 137-ஆவது பிறந்தநாள் விழாவில் எனக்குப் பாரதி விருதை வழங்கச் செய்து, என்னுடைய பாரதி பணிகளுக்கு "மணிமகுடம்' சூட்டியவர் கி. வைத்தியநாதன்.
1.12.2018-ஆம் தேதி பாரதியின் ஜன்ம பூமியான எட்டயபுரத்தில் பாரதியின் 137-ஆவது பிறந்தநாளன்று எனக்கு "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்திலிருந்து வெளிவரும் "தினமணி' நாளிதழ் மகாகவி பாரதி விருதும், வாழ்த்துப் பத்திரமும், ஒரு லட்ச ரூபாய் பொற்கிழியும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களின் திருக்கரத்தால் வழங்கிச் சிறப்புச் செய்தது.
இதற்காக, "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்திற்கும், "தினமணி'யின் ஆசிரியர் கி. வைத்தியநாதனுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.