தினமணியின் பன்னெடுங்கால பாரம்பரியத்துக்கும், எனது அரசியல் வாழ்க்கைக்கும் நீண்ட, நெடிய தொடர்பு உள்ளது.
பள்ளிப் பருவத்தில் இருந்தே பல நாளேடுகளை வாசிக்கும் பழக்கம் எனக்கு இருந்தாலும், அவற்றில் முதன்மையான நாளிதழாக இன்று வரை நான் கருதுவது தினமணியைத்தான்.
நான் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளராக இருந்த நேரம் அது. அப்போது கட்சிப் பணிகளிலும், தேசிய நலன் சார்ந்த சேவைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தேன். அந்த காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் எத்தனையோ பெரிய தலைவர்கள் இருந்தார்கள்.
அவர்களை ஒப்பிடும்போது அடியேன் மிகச் சாதாரண தொண்டன். இருந்தபோதிலும், என்னை புறந்தள்ளாமல் எனது அரசியல் நடவடிக்கைகளை உள்ளது உள்ளபடி செய்தியாக வெளியிட்டு ஊக்கமளித்தது தினமணிதான்.
அரசியல் பயணத்தில் அடுத்தடுத்த கட்டங்களை நான் எட்டியதற்கு அவ்வாறாக வெளியான செய்திகளுக்கும் பங்கு உண்டு. இது ஒருபுறமிருக்க, பெருந்தலைவர் காமராஜருக்கும், தினமணிக்குமான பந்தம் இன்னும் நெருக்கமானது. காமராஜரை கடவுளாக வழிபடும் நான் தினமணியை போற்றி மகிழ்வதற்கு அதுவும் ஒரு காரணம்.
தலைவர் காமராஜர், ஓர் எளிய தொண்டனாக சென்னைக்கு வந்து காங்கிரஸ் கட்சிக்காக துண்டு பிரசுரங்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த காலம் அது.
அப்போது மவுண்ட் ரோட்டில், நரசிம்மபுரம் பிரிவு அருகே (இப்போதைய கீதா கஃபே ஹோட்டல் இருக்கும் இடத்தில்) தினமணி நாளிதழின் உரிமையாளர் ராம்நாத் கோயங்காவுக்குச் சொந்தமான கிடங்கு இருந்தது. அங்குதான் தினமணி அச்சிடப்படுவதற்கான காகிதங்கள் இருப்பு வைக்கப்பட்டிருக்கும்.
அந்த கிடங்குக்குள் இருந்த ஒரு சோஃபாதான் பெரும்பாலான நாள்களில் காமராஜருக்கு இரவு நேர படுக்கையாக இருந்தது. அதில்தான் அவர் உறங்குவார். அவரது எளிமைக்கும், உழைப்புக்கும் அச்சில் ஏற்றப்படாத அந்த காகிதங்கள்தான் அன்றைக்கு நேரடி சாட்சியங்களாக விளங்கின.
அதன் பின்னர் அரசியல் வானில் பல உச்சங்களைத் தொட்ட பிறகும் காமராஜர், தினமணி நாளிதழுடனான உறவை மறக்கவில்லை.
லால் பகதூர் சாஸ்திரி மறைவுக்குப் பிறகு இந்திரா காந்தியை புதிய பிரதமராக தேர்ந்தெடுப்பது குறித்து தினமணி நாளிதழின் உரிமையாளர் ராம்நாத் கோயங்காவிடம் காமராஜர் கலந்தாலோசித்ததே அதற்கு ஒரு சான்று.
பரபரப்புக்கான செய்திகளையும், அதன் வாயிலாக விற்பனையையும் வளர்த்த பத்திரிகைகள் பல உண்டு.
ஆனால், தேசியத்தையும், தேசியத் தலைவர்களையும் வளர்த்தெடுத்த பத்திரிகைகளில் முதன்மையானது தினமணிதான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.