விவாதமேடை

""அரசு மருத்துவமனையின் அவல நிலை மாற என்ன செய்யலாம்?'' என்ற கேள்விக்கு வாசகர்களிடம் இருந்து வந்த கடிதங்களில் சில

அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ற வசதியான கட்டடம், தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், நோயறியும் கருவிகள், மருந்து -மாத்திரைகள், குடிநீர், கழிப்பிட வசதி, இடைவிடாத மின்சாரம், கட்டில்கள், தள்ளுமேடைகள், சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட தளவாடங்கள் அவசியம்.

தினமணி

அர்ப்பணிப்பு தேவை

அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ற வசதியான கட்டடம், தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், நோயறியும் கருவிகள், மருந்து -மாத்திரைகள், குடிநீர், கழிப்பிட வசதி, இடைவிடாத மின்சாரம், கட்டில்கள், தள்ளுமேடைகள், சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட தளவாடங்கள் அவசியம். அரசு மருத்துவமனைகளில் தூய்மையைப் பராமரிக்கத் தொண்டு நிறுவனங்களின் உதவியை நாடலாம். நோயாளிகளும் உடன் வருவோரும் ஒத்துழைக்க வேண்டும்.

கி.வெங்கடசுப்பரமணியன், சமயபுரம்.

இலவசத்தால் அல்ல

இலவசமாக நடத்தப்படுவதால் அரசு மருத்துவமனைகளில் சுகாதாரச் சீர்கேடும் அலட்சியமும் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. புட்டபர்த்தி, பெங்களூர் ஒயிட்பீல்டு ஆகிய இடங்களில் நடத்தப்படும் சத்ய சாய் மருத்துவமனைகளும் கிறிஸ்தவ மிஷினரிகள் நடத்தும் மருத்துவமனைகளும் இலவச சேவையை, எவ்வளவு கனிவோடு, தூய்மையோடு தருகின்றன. நோயாளிகளுக்குச் சேவை செய்வதற்குத்தான் நமக்குச் சம்பளம், அதற்கும் மேல் எதிர்பார்க்கக்கூடாது என்ற உணர்வு அரசு மருத்துவமனையின் அனைத்துப் பணியாளர்களுக்கும் இருந்தால் அரசு மருத்துவமனைகள் சீரடையும்.

ம. இராமநாதன், திண்டுக்கல்.

லஞ்சமே கூடாது

மருத்துவமனை நிர்வாகத்துக்கு 3 ஷிப்டுகளில் (தலா 8 மணி நேரம்) மருத்துவம் செய்யாத 3 தலைமை மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும். அவர்கள் மேற்பார்வை செய்து, தக்க ஆலோசனைகளை வழங்கி, ஒழுங்கை நிலைநாட்டினாலே மருத்துவமனைகளின் சேவைத்தரம் உயரும். எந்த வடிவிலும் லஞ்சத்தை அனுமதிக்கக்கூடாது. இடைத்தரகர்கள் நுழைய இடமே தரக்கூடாது. டாக்டர்களிடமே பணம் கறப்பதை உயர் அதிகாரிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும். மாவட்ட மருத்துவ அலுவலருக்கு அதிக அதிகாரங்கள் தரப்பட வேண்டும். அமைச்சர்களும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளும் அடிக்கடி மாநிலத்தின் எல்லா அரசு மருத்துவமனைகளுக்கும் சென்று திடீர் சோதனை நடத்தவேண்டும்.

தெ. சுந்தரமகாலிங்கம், வத்திராயிருப்பு.

மக்கள்தான் காரணம்

அரசு மருத்துவமனைகளின் அவலநிலைக்கு மக்கள்தான் காரணம். ஒரு நோயாளிக்கு உதவி செய்ய குறைந்தபட்சம் 5 பேர் என்று கும்பலாகக் கூடி மருத்துவமனையின் அமைதியையும் சுகாதாரத்தையும் கெடுப்பவர்கள் இவர்களே. பணியாளர்கள் எடுத்துக் கூறினாலும் அவர்களுடன் சண்டைக்குச் செல்கிறார்கள். டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்பட அனைத்து நிலைகளிலும் ஆள் பற்றாக்குறை நிலவுகிறது. அடிப்படைப் பணிகளுக்கு டெண்டர் விடப்படுகிறது. அப்படி அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு பாதி ஊதியமே தரப்படுவதால் அவர்கள் வேலைகளில் அக்கறையின்றியும் மேல் வருவாயை எதிர்பார்த்தும் அவல நிலையை ஏற்படுத்துகின்றனர். பணம் படைத்த சிலர் ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்து கூடுதல் சலுகைகளைப் பெற்று தவறாக வழிகாட்டுகின்றனர்.

க. ராஜரத்தினம், ராமநாதபுரம்.

நோயாளிகளே காரணம்!

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் கை விபத்துப் பிரிவில் 35 நாள்கள் சிகிச்சை பெற்ற அனுபவத்தில் கூறுகிறேன், 70% அவல நிலைக்கு நோயாளிகள்தான் காரணம்.

தனியார் மருத்துவமனையில் அடக்க ஒடுக்கமாக நடப்பவர்கள் அரசு மருத்துவமனையில் கட்டுப்பாட்டுடன் நடப்பதில்லை. 20% அவல நிலைக்கு கடைநிலைப் பணியாளர்கள்தான் காரணம். லஞ்சம், அலட்சியம், மேலதிகாரிகளுக்கு அடங்க மறுப்பது ஆகியவையே இவர்களின் அடையாளங்கள். பணி நிரந்தரம் என்பதாலும் சங்கம் பாதுகாக்கும் என்பதாலும் இவர்கள் செல்வாக்கோடு இருக்கின்றனர். 10% மருத்துவமனை நிர்வாகமும் காரணம்.

ஆ. ஜெயபிரகாசம், ஆழ்வார்பேட்டை.

அச்சப்படாதவர்கள்

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் எவரும் எவருக்கும் அஞ்சுவதே இல்லை. எந்த ஒரு இலக்கும், பொறுப்பும் இல்லாமல் ஏனோதானோவென்று செயல்படுவதைப்போலவே அவர்களுடைய செயல்கள் அமைந்துவிடுகின்றன. வேலைக்கு வருவது, தங்களுடைய கடமையை நேரத்தில் தொடங்கி நிறைவாகச் செய்வது, நோயாளிகளோ உடன் வருகிறவர்களோ கேட்கும் கேள்விகளுக்கு நேரடியாக, பணிவாக பதில் சொல்வது என்ற எந்த வகையிலும் திருப்தியாகச் செயல்படுவதில்லை. அவர்களை மேலதிகாரிகள் கண்காணிப்பதே இல்லை. இந்தச் சூழலிலும் ஒரு சில நல்ல ஊழியர்களும் இருக்கின்றனர்.

டாக்டர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் கடமையில் கண்ணாகவே இருந்தாலும் புறச் சூழலும் மருத்துவமனையின் நிர்வாகக் கோளாறுகளும் அவர்களுடைய செயல்பாட்டுக்குக் கடிவாளங்களாக இருக்கின்றன.

ஜெயந்தி சேகர், வளசரவாக்கம்.

அரசியல் தலையீடே...

அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் முதல் கடைநிலை ஊழியர்வரை அனைவரின் நியமனம், இட மாறுதல் அனைத்தையும் தீர்மானிப்பது அரசியல்வாதிகளே. இதனால் யாரையும் வேலைவாங்குவது கடினம். அரசியல்வாதிகளின் தலையீடு அகன்றாலே மருத்துவமனைகள் சிறப்பாக நடைபெறும். டாக்டர்கள் தனியாக பிராக்டிஸ் செய்வதைத் தடுக்க வேண்டும். பணி நேரத்தில் அனைவரும் பணியிலிருப்பதை உறுதிசெய்ய வேண்டும். தவறு செய்வோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தயங்கக்கூடாது.

கோ. ராஜேஷ் கோபால், ஆவடி.

முகாம் வேலைகூடாது

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்களை அடிக்கடி இலவச சிறப்பு மருத்துவமுகாம்களுக்கு அழைத்துச் சென்று மருத்துவமனைப் பணிகளைச் சீர்குலைக்கக்கூடாது. எந்த முகாமாக இருந்தாலும் அதை மருத்துவமனை வளாகங்களிலேயே நடத்த வேண்டும். கிராம கல்விக்குழு, பள்ளி மேலாண்மைக் குழு இருப்பதைப்போல மருத்துவமனைகளின் செயல்பாட்டைக் கண்காணிக்கவும் மேம்படுத்தவும் உள்ளூர் அளவில் பொதுமக்கள், அதிகாரிகள், மக்களுடைய பிரதிநிதிகளைக் கொண்ட குழுக்களை அமைக்கலாம். மாவட்ட ஆட்சியர், மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ஆகியோர் அடிக்கடி மருத்துவமனைகளுக்குச் சென்று திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். சிறப்பாகச் செயல்படும் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் பாராட்டப்பட்டு பதவி உயர்வு, ஊதிய உயர்வு அளித்து ஊக்குவிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மருத்துவமனையிலும் நோயாளிகள் புகார் தெரிவிக்க தொலைபேசியையும் புகார் பெட்டி அல்லது புகார் பதிவுப்பேரேடு ஒன்றையும் வைக்க வேண்டும்.

மு.க. இப்ராஹிம், வேம்பார்.


உதவிக்கு ஒருவரே

உள்நோயாளியாகச் சேர்க்கப்படுகிறவருக்கு உதவியாக ஒருவரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். அனுமதி அட்டை இல்லாமல் யாரும் மருத்துவமனையில் சுற்றிவர அனுமதிக்கக்கூடாது. பார்வை நேரக் கட்டுப்பாட்டை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். நோயாளிகளுக்கு வெளியிலிருந்து சாப்பாடு கொண்டுவருவதைத் தடை செய்ய வேண்டும். அம்மா உணவகங்களை பெரிய அரசு மருத்துவமனை வளாகங்களில் திறக்கலாம். சேவை மனப்பான்மை உள்ளவர்களை மட்டுமே மருத்துவமனைப்பணியில் வைத்துக்கொள்ள வேண்டும். கழிப்பறை பராமரிப்பு, சுகாதார மேம்பாட்டு வசதிகளைத் தொண்டு நிறுவனங்களிடம் விட்டுவிட வேண்டும். கட்டட பராமரிப்பு, மின்சாரம், குடிநீர் வசதி ஆகியவற்றுக்கு பொதுப்பணித்துறையினர் தாங்களாகவே மாதந்தோறும் ஆய்வு செய்து பணிகளைச் செய்ய வேண்டும். மருத்துவமனை நிர்வாகம் பல மாதங்கள் அழைத்த பிறகே செல்வது என்று இருக்கக்கூடாது. மருத்துவமனைக்குள் மோட்டார் வாகனங்களை அனுமதிக்கக்கூடாது. தின்பண்டக் கடைகளையும் வளரவிடக்கூடாது.

த. நாகராஜன், சிவகாசி.

குறுநில மன்னர்கள்...

அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் முதல் கடைநிலை ஊழியர்வரை அனைவருமே ஏதோ குறுநில மன்னர்களைப் போல அலட்சியத்துடன் நடந்துகொள்கின்றனர். நோயாளிகள் தங்களுடைய வேதனைகளையும் குறைகளையும் சொல்லும்போது பரிவோடு அல்லாமல் அலட்சியமாகவும் எரிச்சலுடனும் கேட்கின்றனர். ஏதேனும் கேட்டால் பொறுமையின்றி வெடிக்கின்றனர்.

க. சுல்தான் ஸலாஹுத்தீன் மழாஹிரி, காயல்பட்டினம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜ்நாத் சிங்குடன் நெதா்லாந்து வெளியுறவு அமைச்சா் சந்திப்பு

கிராம உதவியாளா் பணிக்கான நோ்காணல், தோ்வு தொடக்கம்

திமுக ஆட்சியில் மகளிருக்கு அதிகமான திட்டங்கள் - முதல்வா் மு.க.ஸ்டாலின்

தில்லி காற்று மாசுபாட்டால் பெண்களை விட ஆண்களுக்ளே அதிக பாதிப்பு! - ஆய்வில் தகவல்

மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம் விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT