தமிழகத்தில் மதுக்கடைகளை மூடினால் திமுக அரசுக்கு நற்பெயர் கிடைக்கும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருப்பது குறித்து... என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
மதுக்கடைகளை மூடினால் திமுக அரசுக்கு நற்பெயர் கிடைக்கும்: திருமாவளவன் கருத்து
வரவேற்கத்தக்க ஆலோசனை
அண்மையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60}க்கும் மேற்பட்டோர் இறக்க நேரிட்டது தமிழ்நாடு அரசுக்குப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியிருந்தது. நட்புக் கட்சிக்கு ஏற்பட்டுள்ள தலைக்குனிவை நீக்குவது கடமை என்பதை உணர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நல்ல ஆலோசனையை நட்புக் கட்சிக்கு வழங்க முன்வந்துள்ளார். மதுவால் வரும் வருமானத்தை இழந்தாலும் பரவாயில்லை. மக்கள் நலவாழ்வே முக்கியம் என்பதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் மதுக்கடைகளை மூடினால் திமுக அரசுக்கு நற்பெயர் கிடைக்கும் என உரிய நேரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி த்தலைவர் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.
எஸ்.சிறீகுமார், கல்பாக்கம்.
கண்டுகொள்ளாது...
தொல். திருமாவளவன் கருத்து ஏற்புடையதுதான் என்றாலும், அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என அமைச்சர் கூறிவிட்டார். டாஸ்மாக் மது வருவாயை அரசு இழக்காது. தற்போதே லட்சக்கணக்கான கோடிகளில் அரசு கடனாளியாக இருக்கும்போது மதுக்கடைகளை மூடி நற்பெயரை எடுக்க தமிழக அரசு முயற்சிக்காது. மதுப்பழக்கம் புரையோடிவிட்ட இந்நாளில் மதுக்கடைகளை மூடினால் அண்டை மாநில மதுக் கடைகளுக்கு குடிப்பழக்கம் உள்ளோர் படையெடுக்கவும் கள்ளச்சாராயம் தலைவிரித்து ஆடும் ஆபத்தான நிலையும் ஏற்படும். எனவே தொல். திருமாவளவன் கருத்தை அரசு கண்டுகொள்ளாது.
உ. இராசமாணிக்கம், கடலூர்.
இருதலைக் கொள்ளி எறும்பு
தமிழக அரசு மதுக் கடைகளை மூடினால் நற்பெயர் கிடைக்கும் என்பது சரிதான். ஆனால் வருவாய் இழப்புக்கு வேறு வழிவகைகளை ஏற்படுத்த வேண்டுமல்லவா? மதுப் பிரியர்கள் தங்கள் பழக்கத்தை எளிதில் விட்டுவிடுவார்களா? மது ஆலை உரிமையாளர்கள், அதனால் பயன்பெறும் அரசியல்வாதிகள் சும்மா இருப்பார்களா? கூட்டணிக் கட்சியினர் பேச்சை ஆளும் கட்சியினர் கேட்பார்களா? பேச்சுக்கு சொல்வதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொண்டு செயல்படுவதற்கு திமுக நேற்று வந்த அரசியல் கட்சி அல்ல. விசிக தலைவரின் பேச்சுக்குப் பயனில்லாதது. பாவம், அவர், இருதலைக் கொள்ளி எறும்புதான்.
ஜீவன் பி.கே., கும்பகோணம்.
மாற்று வருவாய் குறித்து...
மதுவை எந்த விதத்திலும் அனுமதிக்கக் கூடாது என்பதுதான் பெரும்பாலான மக்களின் எண்ணமாக இருக்கிறது. சமூகத்தில் ஏற்படுகின்ற பல்வேறு பிரச்னைகளுக்கு மதுவே காரணமாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. மது குடித்தலை தனி நபர் சார்ந்த பிரச்னையாகக் கருதாமல், சமூகம் சார்ந்த பிரச்னையாகக் கருதி அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மது அடிமைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும். நாட்டின் வருவாய் என்ற நிலையில் இதை அணுகக் கூடாது. வருவாய்க்கு மாற்று ஏற்பாடுகளை அரசு ஆராய வேண்டும். அப்படி மதுவைத் தடை செய்தால் அரசுக்கு நற்பெயர் கிடைக்கும் என்பது உண்மையே.
உதயா ஆதிமூலம், திருப்போரூர்.
நல்ல ஆலோசனை
மது இல்லாத மாநிலமாக தமிழகம் மாறினால், மக்களின் வாழ்க்கை மேம்படும். போதைப்பொருள் புழக்கம் மற்றும் பழக்கம் பற்றிய போதிய விழிப்புணர்வு, வேலைவாய்ப்பு பெருகினால் மக்களின் அடிப்படை வாழ்க்கை தடம் புரளாமல் பார்த்துக் கொள்ள முடியும். போதைப்பொருள் தரும் மயக்கம் தற்காலிகமானது என்ற புரிதல் எல்லோருக்கும் எட்டும்படி செய்ய வேண்டும். கிடைக்கும் வருமானத்தை ஊதாரித்தனமாக செலவிட்டால் நம் குடும்பம் நடுத்தெருவில் நிற்கும் என்ற புரிதலை மதுப் பிரியர்களிடையே ஏற்படுத்த வேண்டும். தொல். திருமாவளவன் கூறியிருக்கும் இந்தக் கருத்தை அரசு நடைமுறைப்படுத்த முன் வர வேண்டும்.
ப.நரசிம்மன், திருச்சி.
கேட்பதற்கு இனிமை
மதுக்கடைகளை மூடினால் எல்லோருக்குமே நல்லதுதான். கேட்க இனிப்பாக இருக்கும் செய்தி நடை முறையில் சாத்தியமா என்றால், இல்லை என்பதுதான் உண்மை. ஆண்டுதோறும் வருவாய் பெருகுவதால் புதிய புதிய இலவசத் திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. குடும்ப வறுமைக்கும் கள்ளச்சாராய இறப்பிற்கும் பெண்கள் அழுது புலம்புகிறார்களே தவிர, அரசுக்கு எதிரான போராட்டமோ தேர்தல் புறக்கணிப்போ செய்வதில்லை. தமிழ் நாடு மட்டும் மதுவிலக்கை அமல்படுத்தினால் நெருப்புச் சூழலுக்கிடையே கற்பூரம் வைத்த கதையாகிவிடும். அரசுக்குத்தான் நெருக்கடி. மதுவிலக்கு மகிழ்ச்சிதான்; ஆனால், நடக்காது.
அ.கருப்பையா, பொன்னமராவதி.
கேள்விக்குறிதான்!
மதுக்கடைகளை மூடினால் ஆளும் திமுகவுக்கு நிச்சயம் நற்பெயர் கிடைக்கும். ஆனால், மாநிலம் முழுவதும் கள்ளச்சாராய ஆறு ஓடுமே? கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்தும் அரசு அதிகாரிகள் நேர்மையாக நடவடிக்கை எடுப்பார்களா? குடித்துப் பழக்கப்பட்டவர்களை கள்ளச் சாராயம் பக்கம் போகாமல் எப்படிக் கட்டுப்படுத்துவது? இந்தக் கேள்விகளுக்கு சரியான விடை தெரியாமல் மதுவிலக்கு கொண்டு வருவது சரியான அணுகுமுறை அல்ல. ஆங்காங்கே கள்ளச்சாராயத்தையே கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. முழு மதுவிலக்கு வந்தால் என்ன நிலையாகுமோ? இந்த நிலையில், தொல். திருமாவளவனின் சொல் அம்பலம் ஏறுமா என்பது கேள்விக்குறிதான்.
கரு.பாலகிருஷ்ணன், தேவகோட்டை.
நகைச்சுவை!
தமிழகத்தில் மதுக்கடைகளை மூடினால் திமுக அரசுக்கு நற்பெயர் கிடைக்கும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருப்பது நகைச்சுவையாக உள்ளது. தமிழக அரசே இந்த மதுக் கடையின் வருமானத்தில்தான் நடக்கிறது என்றும், தமிழக கஜானாவின் முக்கிய வருமானமே மதுதான் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி. இப்போது மதுக் கடைகளை மூடினால் அரசின் கஜானா காலியாகி விடும் என்ற பயம் இருப்பதால் திமுக அரசுக்கு நற்பெயரைவிட தமிழகத்தை சீரான பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற பொறுப்புடன் மதுக் கடைகளை மூடத் தயங்குவர்.
நந்தினி கிருஷ்ணன், மும்பை.
படிப்படியாக குறைக்கலாம்
தமிழகத்தில் மதுக்கடைகளை முழுமையாக மூடுவது என்பது மிகச் சிரமம். மதுக்கடைகளை மூடுவதால் பல்வேறுபட்ட மாற்றுவினைகளை சந்திக்க நேரிடும். ஆதலால், மதுக்கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்கலாம். நவீன பார் என்னும் மது அருந்தும் கூடத்துக்கான அனுமதியை முழுமையாக ரத்து செய்வதில் தவறில்லை. போதைப் பொருள் புழக்கத்தை ஒழிப்பதே பெரிய சவாலாக உள்ளது. கள்ளச்சாராயம் உள்ளிட்ட அனைத்து போதைப் பொருள்களின் புழக்கத்தையும் முழுமையாகத் தடை செய்தால் தமிழக அரசுக்கு நற்பெயர் கிடைக்கும் என்பது தெளிவு. ஆனால் நடக்காதது.
வீ.வேணுகுமார், கண்ணமங்கலம்.
நிதி ஆதாரம் பாதிக்கும்
மதுவிலக்கு கள்ளச்சாராய உற்பத்தியை பன்மடங்கு அதிகரிக்கும் என்பது பூரண மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலங்களின் அனுபவங்கள் நன்கு உணர்த்துகின்றன. அரசு மது விற்பனை உள்ளபோதே குறைந்த அளவிலான கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க முடியாத காவல் துறை தெருவுக்குத் தெரு முளைக்கும் கள்ளச்சாராய உற்பத்தியை தடுத்துவிடும் என நம்பும் அளவுக்கு இங்கு யாரும் முதிர்ச்சியற்ற தலைவர் அல்லர். மது விற்பனை இல்லையென்றால் அரசின் வருவாய் ஆதாரம் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகும். நாளுக்கு நாள் அறிவிக்கப்படும் நலத் திட்ட உதவிகளுக்கான நிதி ஆதாரம் போய்விடும். தமிழகத்தை ஆளும் எந்த அரசும் மதுவிலக்கு குறித்து நினைத்துக் கூடப் பார்க்காது.
த.முருகவேள், விழுப்புரம்.
அரசியல் பேச்சு...
தொல்.திருமாவளவன் கூறியிருப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கு அமல்படுத்தினால் மட்டுமே மதுவைத் தடுக்க முடியும். தமிழ்நாட்டில் தடைசெய்து புதுச்சேரியில் விற்றால், இங்கு தடைக்குப் பலன் ஒன்றும் இல்லை. மது குடிப்பது தவறு என்ற மனநிலையை சிறுவயதில் இருந்தே பிள்ளைகளிடம் உருவாக்கி அதை அவர்கள் பின்பற்றச் செய்ய வேண்டும். கட்டுப்பாடுகளை அதிகமாக்கி பயன்பாட்டைக் குறைக்கலாம். மதுக்கடைகள் வருமானத்தை வழங்கும் அமுதசுரபி. எனவே, மதுக் கடைகளை மூடுவோம் என்பது வெற்று அரசியல் பேச்சு மட்டுமே.
ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
தடுத்தே தீர வேண்டும்
ஒரு புறம் அரசே நல்ல தரமான மது என மதுவை விற்று கொண்டிருக்கையில், இன்னொரு புறம் கள்ளச்சாராயம் அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. அதனால், பல மரணங்கள் நிகழ்கின்றன. இந்த இரண்டு விதமான மது விற்பனைகளையும் நிச்சயம் தடுத்தே தீர வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை. இதையே தொல். திருமாவளவன் கூறியுள்ளார் . இது வரவேற்கத்தக்கது. மதுக் கடைகளை மூடினால் திமுக அரசுக்கு நிச்சயம் நல்ல பெயர் கிடைக்கும். இதைத்தான் பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கோ.ராஜேஷ் கோபால், மணவாளக்குறிச்சி.