ரெளடிகள் சாம்ராஜ்யம்... சென்னை பெருநகர புதிய காவல் துறை ஆணையர் அருண் கட்டுப்படுத்துவாரா? என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
தலையீடு இல்லையென்றால்...
ரெளடிகள் சாம்ராஜ்யத்தை காவல் துறையினரால் கட்டுப்படுத்த முடியும், அரசியல், ஜாதிய தலையீடு இல்லாமல் இருந்தால். மிரட்டல் வேலைக்கு வேண்டிய நபர்களை உருவாக்கி, அதை வன்முறைக் கும்பலாக மாற்றுவது அரசியல்வாதிகளே. காவல் துறையில் அரசியல் தலையீடு இல்லையென்றால் ரெளடிகள் உருவாக மாட்டார்கள். சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமம் என்ற சிந்தனை, பிரச்னைகள் எப்படி ஆரம்பமாகின்றன, அதன் வேர் என்ன என்று அணுகினால் ரெளடிகளை கூண்டோடு ஒழிக்க முடியும். கொடூர குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக தயக்கமின்றி நடவடிக்கை வேண்டும். ரெளடிகள் இல்லாத தமிழகத்தைக் காண மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
ஆர்.ஜெயபிரகாஷ், தேவகோட்டை.
கேள்விக்குறியே!
"ரெளடிகள் சாம்ராஜ்யத்தை' சென்னையில் புதிய காவல் துறை ஆணையர் அடக்கி ஒழிப்பாரா என்பது கேள்விக்குறியே! ரெளடிகளை அடையாளம் காண முடியாமல் காவல் துறை திணறி வருகின்றதா என்ன? அல்லது அடையாளம் தெரிந்தும் அவர்களின் செயல்பாடுகளைக் காவல் துறை கண்டு கொள்ளாமல் இருந்து விடுகிறதா என்பது புரியாமல் இருக்கிறது. அவர்களுக்கு உள்ள அரசியல் தொடர்புகள், கூலிப்படைகளுக்கு கிடைக்கும் ஊக்குவிப்புகள் - இவையெல்லாம்தான் பொதுவாக ரெளடிகளை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதற்கான காரணங்களாகும். காவல் துறை தலைமை மாற்றத்தால் பெரிய பயன் இல்லை.
ச.கருணாகரன், கருவேலம்பாடு.
கரங்களைக் கட்டாதீர்
சட்டம் ஒழுங்கு சிறப்பாக அமைய வேண்டுமானால் காவல் துறை மட்டும் நினைத்தால் போதாது. காவல் துறைக்கு சுதந்திரமான, தன்னிச்சையான செயல்பாடு இருப்பது கட்டாயத் தேவை. கட்சியினரின் ஒத்துழைப்போடு மட்டுமே ரெளடிகள் சாம்ராஜ்யம் மற்றும் சமூ கவிரோத செயல்பாடுகள் நடத்தப் படுகின்றன. ரெளடிகள் சாம்ராஜ்யத்தையும் சமூக விரோத செயல்களையும் கட்டுப்படுத்த இரும்புக்கரம் தேவையில்லை. காவல் துறையினரின் கட்டப்படாத கரங்களே தேவை. மாநில அரசு காவல் துறையை கட்டிப் போட துடிக்க வேண்டாம், கண்காணித்தால் மட்டும் போதும். காவல் துறையினரின் கரங்களைக் கட்டாதீர்.
வீ.வேணுகுமார், கண்ணமங்கலம்.
நம்பிக்கை தருகிறது
சென்னை நகரின் புதிய ஆணையர் அருண் நேர்மையான துணிச்சலான காவல் துறை அதிகாரி. தவறிழைப்போரை கண்டிப்புடன் அணுகும் குணம் கொண்டவர். அவர் ஆரம்பத்தில் நான்குநேரி உட்கோட்டத்தில் உதவிக் கண்காணிப்பாளராகத் திறம்படப் பணியாற்றியவர். இப்போது கூட, மிகத் துணிவுடன் "குற்றவாளிகளிடம் அவர்களுக்குப் புரிகிற மொழியில் பேசுவோம்' என்று கூறியிருப்பதும், தவறு செய்யும் காவல் துறையினர் மீது நடவடிக்கை உண்டு என்று உறுதியளித்திருப்பதும் எல்லோருக்கும் நம்பிக்கை தருவதாக இருக்கிறது. பெருநகர ஆணையர் என்ற முறையில் அவரது வியூகம், அரசியல் பின்புலம் கொண்ட அதீத வன்முறையாளர்களை வீழ்த்தும் என்பது உறுதி.
வலம்புரி மோசே, வள்ளியூர்.
சுதந்திரமாகச்செயல்பட வேண்டும்
தமிழக காவல் துறையை அரசு தலையீடு இல்லாமல் சுதந்திரமாக செயல்பட அனுமதித்தாலே ரெளடிகள் அட்டகாசம் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்பது நிதர்சனம். காவல் துறை அதிகாரிகளை மாற்றுவதால் மட்டும் சட்டம் ஒழுங்கு சரியாகி விடாது. சட்டம் ஒழுங்கை சிறப்பாகப் பராமரிப்பது, குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, ரெளடியிஸத்தை கட்டுப்படுத்துவது மற்றும் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறையினர் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றால் அவர்கள் கைகளைக் கட்டிப்
போடக் கூடாது.
என்.வி.சீனிவாசன், புது பெருங்களத்தூர்.
பெரும் சவால்
கள்ளச்சாராயம், கஞ்சா , போதைப்பொருள் கடத்தல், கந்து வட்டி, ரியல் எஸ்டேட்- இப்படி சமூகத்தை சீரழிக்கும் வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு கூலிப்படையாக செயல்பட்டு வருகிறனர். ரெளடிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் அரசுக்கு உள்ளது, அது பெரும் சவாலாக இருந்தாலும் கூட. சென்னையின் புதிய காவல் ஆணையர் கட்டுப்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு பாமர மக்களிடையே இருக்கின்றது. மக்கள் பாதுகாப்போடு நிம்மதியாக உறங்க வேண்டும். கட்சிப் பாகுபாடின்றி, தவறு செய்வோருக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உதயா ஆதிமூலம், திருப்போரூர்.
ஒடுக்க முடியும்
சென்னையின் புதிய மாநகர காவல் ஆணையராகப் பதவியேற்ற பின்னர் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, "சென்னை எனக்குப் புதிதல்ல; ரெளடிகளுக்குப் புரியும் மொழியில் அவர்களுக்கு என்னால் பதில் அளிக்க முடியும்' என்று கூறியது, அவர் ரெளடியிஸத்தை அடக்கி ஒடுக்குவார் என்ற நம்பிக்கையைத் தருகிறது. மேலும் அவர் சென்னை போக்குவரத்துக் கூடுதல் கமிஷனராக இருந்தவர். பொது விநியோகத் துறையின் சிஐடி பிரிவில் அவரின் சிறப்பான நடவடிக்கைகளின் விளைவாக ரேஷன் அரிசி கடத்தல் நின்றுவிட்டது. பல்வேறு மாவட்டங்களில் அவர் சிறப்பாக பணியாற்றியிருக்கும் அனுபவத்தால், ரெளடிகள் சாம்ராஜ்யத்தை அவரால் அடக்கி ஒடுக்க முடியும்.
தி.சேகர், பீர்க்கன்கரணை.
நம்பிக்கை வெளிப்படுகிறது
சென்னை நகரின் புதிய காவல் துறை ஆணையராகப் பொறுப்பேற்றுள்ளவர் நமது பல மாவட்டங்களில் திறமையாகப் பணியாற்றியவர் என்று கூறப்படுகிறது. அவரது சட்ட ஒழுங்கு அனுபவத்தின் மூலமாக, சமூக விரோதிகளின் நாடித் துடிப்பை நன்கு அறிந்தவர் என்று எடுத்துக் கொள்ளலாம். "ரெளடிகளின் மொழியிலேயே அவர்களுக்குப் பதில் சொல்வேன்' என்று கூறியதில் அவருடைய நம்பிக்கை வெளிப்படுகிறது. புதிய தலைமையின் கீழ் காவலர்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும். மாநிலத்தின் சட்ட ஒழுங்கை சீர் செய்ய வேண்டும். போலீஸார் புதிய உத்வேகத்துடன் செயல்பட்டால் ரெளடிகள் சாம்ராஜ்யம் ஒழியும்!
ஜூலியட் லாசர், சென்னை.
இயலாத காரியம்
சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் ரெளடிகள் ராஜ்யத்தைக் கட்டுப்படுத்தப்படுவது என்பது இயலாத காரியம். ரெளடிகளை வளர்த்து ஆளாக்கி, போஷாக்கு தந்து ஆதரிப்பது அரசியல்வாதிகளே. காவல் துறை சில காலம் கண்டிப்பாக இருக்கும். அதுவரை ரெளடி கும்பல்கள் அடங்கியிருக்கும். அல்லது தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்வார்கள். சில்லறைகளை கைது செய்யவிட்டு, பெரிய முதலைகள் தப்பிவிடுவார்கள். பரபரப்பு அடங்கியதும் ரெளடிகள் தொழில் ஆரம்பம் ஆகிவிடும். ஊழலும் ரெளடிகளும் அரசியலின் ஒரு பகுதியாகி விட்ட பிறகு, அதைப் பிரிப்பது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல.
ஜீவன்.பி.கே., கும்பகோணம்.
ஒழித்துக் கட்டுவது உறுதி
ரௌடிகள் சாம்ராஜ்யம் அதிகரித்துள்ளதை மாநில முழுவதும் பார்க்க முடிகிறது. பின்புலத்தில் அரசியல் கட்சியினர் உடந்தையாக உள்ளனர். சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுகிறது. ரியல் எஸ்டேட், பணம் கொடுத்து வாங்கல் மற்றும் அரசியல் காரணங்களுக்காகவும் கொலைகள் நடைபெறுகின்றன. ரௌடிகள் தோன்றுவதை காவல் துறை ஆரம்பத்திலேயே கண்டறிய வேண்டும். காவல்துறை கடுமை காட்ட நினைத்தால் ஒருசில நாட்களில் நடவடிக்கை எடுத்து நிலைமையை சீராக்க முடியும். அரசியல் பிடியிலிருந்து விலகி, முழு சுதந்திரம் வழங்கினால் காவல் துறை ரௌடிகள் சாம்ராஜ்யத்தை ஒழித்துக் கட்டுவது உறுதி. இதற்கு உத்தர பிரதேச மாநிலம் எடுத்துக் காட்டு.
தி.ரெ.ராசேந்திரன், திருநாகேச்சரம்.
விழிப்புடன் செயலாற்ற வேண்டும்
தற்போது தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே கொலைகள் பட்டப்பகலில் கூட நடப்பதை செய்திகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான கொலைகள் கூலிப்படைகள் மூலம்தான் நடைபெறுகின்றன என்று தெரிய வருகிறது. இவர்களைக் கட்டுப்படுத்துவது காவல் துறையின் முழுப் பொறுப்பு. ஒவ்வொரு பகுதியின் காவல் நிலைய அதிகாரிகள், காவலர்கள், மேலதிகாரிகள் தத்தம் பணிகளை திறம்பட ஆற்றினால் ரெளடிகள் தொல்லை குறையும். சென்னையின் புதிய ஆணையர் சுறுசுறுப்பாகப் பணியாற்றி தக்க அறிவுரைகளை வழங்கி, விழிப்புடன் செயலாற்றி ரெளடிகள் சாம்ராஜ்யத்தை வீழ்த்துவார் என்ற நம்பிக்கை உள்ளது.
கே.எ.நாராயணன், மருங்கூர்.
கட்டுக்குள் வரும்
சென்னை பெருநகர காவல் ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதில் சட்டம் ஒழுங்கை பராமரித்தல், குற்றம் நடவாமல் தடுத்தல், ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளல் எனப் பல கோணங்களில் நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக இணை மற்றும் துணை ஆணையர்கள் காலை மற்றும் இரவு நேரங்களில் ரோந்து செல்ல வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், காவல் துறை மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விரைவில் சென்னை பெருநகரத்தில் ரெளடிகளின் சாம்ராஜ்யம் கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கலாம்.
ப.இந்திராகாந்தி, பிடாரிப்பட்டு.