முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

கானல் நீராகும் காவல் சீர்திருத்தம்!

நம் நாட்டு காவல் துறை சீர்திருத்தப்பட வேண்டியதின் அவசியத்தைப் பற்றி...

Updated On : 1 மார்ச், 2026 at 9:50 PM
கானல் நீராகும் காவல் சீர்திருத்தம்!
பகிர்:

'கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு காவலர்கள் பணி நீக்கம்; போதைப் பொருள்களை விற்பனை செய்த மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம்; நகை திருடிய புகார் தொடர்பாக விசாரணை செய்யப்பட்ட கோயில் காவலாளி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து ஐந்து காவலர்கள் கைது; காவல் வாகனத்தைப் பயன்படுத்தி சிறுவன் கடத்தல்'- இவை தமிழ்நாடு காவல் துறையின் சமீபத்திய செயல்பாடுகள் குறித்து செய்தித்தாள்களில் வெளியான சில தலைப்புச் செய்திகள்.

இந்திய குடிமக்கள் தங்களுக்கான ஆட்சியைத் தேர்வு செய்து கொள்ளும் உரிமையை ஐனநாயகம் வழங்கியிருக்கிறது. அதே சமயம், காவல் துறையின் சமூக விரோதச் செயல்பாடுகள் இந்திய ஜனநாயகத்தின் தரத்தை வெளிப்படுத்துகின்றன.

சுதந்திர இந்தியாவில் தற்போது செயல்பட்டுவரும் காவல் துறைக்கு அடித்தளமாக விளங்கும் 'இந்திய காவல் சட்டம்-1861' பிரிட்டிஷ் காலனியாக இந்தியா இருந்தபோது இயற்றப்பட்ட சட்டமாகும். காலனி நாடாக இந்தியா இருந்தபோது, இந்திய குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதைக் காட்டிலும், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக கலகக் குரல் எழுப்பிய போராட்டக்காரர்களை அடக்கிவைத்தல், பிரிட்டிஷ் கம்பெனிகள் இந்தியாவில் நடத்திய வாணிபச் செயல்பாடுகளுக்கு பாதுகாப்பாக இருத்தல், திருட்டுக் குற்றங்கள் குறித்து துப்பு துலக்குதல் மற்றும் திருட்டு நடைபெறாமல் கண்காணித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு பிரிட்டிஷ் அரசு 1861-ஆம் ஆண்டில் இந்திய காவல் சட்டத்தை இயற்றியது.

இந்தியா விடுதலை அடைந்த பின்னர், ஜனநாயக முறைப்படி இந்தியாவை நிர்வகிப்பதற்காக 1950-ஆண்டில் இயற்றப்பட்ட இந்திய அரசமைப்பின்படி, காவல் துறை மாநிலப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அதற்கிணங்க, சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, குற்றத்தடுப்பு, குற்றப் புலன் விசாரணை போன்றவை அந்தந்த மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

சுதந்திர நாடாக இந்தியா மாறிய போது, ஜனநாயக அடிப்படையிலான காவல் அமைப்பு இந்தியாவில் ஏற்படுத்தப்படவில்லை. மாறாக, இந்தியாவில் அப்போது நடைமுறையில் இருந்துவந்த 1861-ஆம் ஆண்டைய இந்திய காவல் சட்டம் அப்படியே நடைமுறைப்படுத்தப்பட்டது. காலப்போக்கில், தேவைக்கேற்ப சில திருத்தங்களை மட்டும் சில மாநில அரசுகள் அச்சட்டத்தில் செய்துள்ளன.

எனவே, நம்நாட்டில் தற்போதுள்ள காவல் துறை, மக்களுக்கு சேவை செய்யும் துறையாக செயல்படுவதைக் காட்டிலும், ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மாநில அரசின் விருப்பத்தை நிறைவேற்றும் கருவியாகவே தொடர்ந்து செயல்படுகிறது. இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னரும், பொதுமக்கள் மீதான காவல் துறையின் அத்துமீறல்களும், காவல் மரணம் (லாக்கப் மரணம்) உள்ளிட்ட காவல் மரணங்களும் நம் நாட்டில் அதிக அளவில் நிகழ்கின்றன.

ஒரு நாளைக்கு சராசரியாக ஏழு காவல் மரணங்கள் நம் நாட்டில் நிகழ்கின்றன என்பதை சமீபத்திய புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன. மேலும், காவல் மரணங்கள் அதிக அளவில் நிகழ்கின்ற உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் இருப்பது, இந்திய காவல் சீர்திருத்தத்தின் அவசியத்தை உணர்த்துகிறது.

ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள 'உலகளாவிய சித்திரவதை எதிர்ப்பு அமைப்பு' சர்வதேச அளவில் காவல் துறை, சிறைத் துறை ஆகியவற்றில் நடைபெறும் சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற நடத்தைகள் குறித்து ஆண்டுதோறும் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பு கடந்த ஆண்டில் வெளியிட்டுள்ள 'உலகளாவிய சித்திரவதை குறியீடு-2025'-இன் படி, அதிக அளவில் சித்திரவதை நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றிருப்பதும், நம் நாட்டு காவல் துறை சீர்திருத்தப்பட வேண்டியதின் அவசியத்தை வெளிப்படுத்துகிறது.

சட்டத்தின் ஆட்சிதான் ஜனநாயகத்தின் வலிமையாகும். சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய காவல் துறையானது எவ்வித அரசியல் அழுத்தமும் இன்றி, சுயாதீனமாகச் செயல்பட வேண்டும். ஆனால், மாநில அரசின் கீழ் காவல் துறை செயல்பட்டு வருவதால், மாநில அரசின் விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப காவல் துறை செயல்படுகிற நிலை நம் நாட்டில் நிலவிவருகிறது.

ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அரசியல்வாதிகளின் கடைக்கண் பார்வை இருந்தால்தான் காவல் துறையில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளுக்கு பணியிட மாற்றம் கிடைக்கும் என்ற நிலை பல மாநில காவல் துறைகளில் நிலவிவருகிறது. காவல் நிலையங்களின் தினசரி பணிகளில் அரசியல் தலையீடு மிகுந்து காணப்படுகிற இன்றைய சூழலில், காவல் துறையின் செயல்பாடுகள் மீதான அதிருப்தி பொதுமக்களிடம் மிகுந்து காணப்படுகிறது.

காவல் துறையின் முக்கியப் பணிகளில் ஒன்றான குற்றப் புலன் விசாரணையிலும் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களின் தலையீடு வெளிப்படுத்துகிற சம்பவங்கள் நம் நாட்டில் தொடர்ந்து நிகழ்கின்றன. அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சியினரைக் கைது செய்வதும், தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைப்பதும் தொடர்கின்றன.

அதே சமயம், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவாளர்கள் கொடுங்குற்றங்கள் புரிந்திருந்தாலும், அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதில் காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ள நிலையைக் காணமுடிகிறது.

மாநிலங்களின் நலனை மேம்படுத்தும் நோக்கத்துக்காக தகவல் திரட்ட வேண்டிய உளவுத் துறை, காலப்போக்கில் ஆட்சியாளர்களின் கைப்பாவையாக மாறி, அவர்களின் அரசியல் தேவைகளை நிறைவு செய்யும் விதத்தில் உளவுப் பணிகளை மேற்கொள்ளும் அமைப்பாக பல மாநிலங்களில் செயல்படுவதையும் காணமுடிகிறது.

ஜனநாயக நாடாக 1950-ஆம் ஆண்டில் இந்தியா மாறினாலும் இந்திய காவல் துறை முழுமையான ஜனநாயக காவல் அமைப்பாக இன்றுவரை மாற்றி அமைக்கப்படவில்லை. 1857-ஆம் ஆண்டில் நிகழ்ந்த சிப்பாய் கிளர்ச்சியைக் கண்டு அச்சம் கொண்ட பிரிட்டிஷ் அரசு இந்திய மக்களை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ்

வைத்துக்கொள்ள உதவும் விதத்தில் இந்திய காவல் சட்டத்தை 1861-ஆம் ஆண்டில் கொண்டுவந்தது. சுதந்திர இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர்களும் இந்த காவல் அமைப்பை மாற்றி அமைக்கும் முயற்சியை மேற்கொள்ளவில்லை. குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்தல், அரசியல் நோக்கத்துக்காக எதிர்க்கட்சியினரைக் கைது செய்தல், விசாரணை என்ற பெயரில் காவல் மரணங்களை ஏற்படுத்துதல், குடிமக்களுக்கு சேவை செய்வதற்குப் பதிலாக அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் செயல்படுதல் போன்ற ஜனநாயக விரோதச் செயல்

களில் காவல் துறை ஈடுபட்டு வருவதைத் தொடர்ந்து, காவல் துறையைச் சீர்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நம் நாட்டில் எழுந்தது. இந்தியக் காவல் துறையில் உள்ள குறைகளை ஆய்வு செய்து, பரிந்துரைகள் வழங்க 1977-ஆம் ஆண்டில் தேசிய காவல் ஆணையத்தை இந்திய அரசு அமைத்தது. தேசிய காவல் ஆணையம் வழங்கிய பரிந்துரைகளில் முக்கியமானதாகக் கருதப்படுவது, 1861-ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசு கொண்டுவந்த காவல் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அதற்குப் பதிலாக, அரசியல் தலையீடின்றி, சுயாதீனமாகச் செயல்படும் விதத்தில் காவல் துறையை மாற்றி அமைக்க வேண்டும். அதே சமயம், காவல் துறையினரின் அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க 'சுயாதீன புகார் ஆணையங்கள்' ஏற்படுத்தப்பட வேண்டும்.

ஜனநாயக சமூகத்தின் தேவைகளை நிறைவு செய்யும் விதத்தில் புதிய காவல் சட்டத்தை வடிவமைப்பதற்காக 2005-ஆம் ஆண்டில் சோலி சோரப்ஜி தலைமையில் நிபுணர் குழு ஒன்றை இந்திய உள்துறை அமைச்சகம் அமைத்தது. அரசியல் தலையீடு இன்றி, இந்திய ஜனநாயக அமைப்புக்குள்பட்டு காவல் துறை செயல்படுகிற விதத்தில் வரைவுக் காவல் சட்டத்தை இந்தக் குழு 2006-ஆண்டு அக்டோபர் மாதத்தில் சமர்ப்பித்தது. இந்த புதிய காவல் சட்டத்தை ஏற்றுக்கொள்வதில் பல மாநில அரசுகள் ஆர்வம் காட்டவில்லை.

நம் நாட்டு காவல் துறையை அரசியல் தலையீட்டில் இருந்து பாதுகாக்கவும், அதைப் பொறுப்புணர்வுடன் செயல்படுத்தவும் தேவையான சீர்திருத்தங்கள் செய்வது குறித்து முன்னாள் காவல் இயக்குநர் பிரகாஷ் சிங் 1996-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் 2006-ஆம் ஆண்டில் வழங்கிய தீர்ப்பின் சாராம்சம்:-

'காவல் துறை மீதான மாநில அரசின் தேவையற்ற தலையீட்டைக் கட்டுப்படுத்தவும், காவல் துறையின் செயல்பாட்டைக் கண்காணிக்கவும் மாநில பாதுகாப்பு ஆணையம் அமைத்தல், மாநில காவல் இயக்குநர் பணி நியமனம் குறித்த வழிகாட்டுதல், காவல் அதிகாரிகளின் பதவி உயர்வு, பணியிடமாற்றம் போன்ற நிர்வாக முடிவுகளை வெளிப்படையாக மேற்கொள்ளும் விதத்தில் காவல் துறை பணியாளர் மேலாண்மைக் குழு அமைத்தல், காவல் துறையினர் மீது பொதுமக்கள் அளிக்கும் புகார்களை விசாரிக்க சுயாதீனமான அமைப்பை உருவாக்குதல்'.

ஜனநாயக அமைப்பாக இந்திய காவல் துறை செயல்படும் விதத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இந்த அறிவுரைகளை எந்த ஒரு மாநிலமும் முழுமையாகக் செயல்படுத்தவில்லை. குறிப்பாக, மாநில காவல் இயக்குநர் பணி நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதலை பல மாநில அரசுகள் கடைப்பிடிக்கவில்லை.

வளர்ச்சியில் முன்னேறிய நாடுகளில் மக்கள் சேவையைப் பிரதானமாகக் கொண்டு காவல் துறை செயல்பட்டு வருகிறது. ஆனால், நம் நாட்டில் காலனிய மனப்பான்மையுடன் செயல்படுகிற காவல் துறையை மாற்றி, ஜனநாயக பண்புகளுடன் செயல்படும் காவல் துறையை ஏற்படுத்துகிற முயற்சி வெற்றி பெறாத நிலையில் இருந்து வருகிறது.

காவல் அதிகாரிகள் தங்களின் பணிக்காலத்திலேயே அரசியல் கட்சிகளோடு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு செயல்படுகிற தற்கால நிலையைப் பார்க்கும்போது, காவல் சீர்திருத்தம் நம்நாட்டில் கானல் நீராகி விடுமோ? என்ற ஐயம் எழுகிறது.

கட்டுரையாளர்: முன்னாள் காவல் துறை உயரதிகாரி.

முழு கட்டுரையைப் படிக்க →