விவாதமேடை

புதிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட மசோதா நிறைவேற்றம் குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

மாநில அரசுகளின் வரி வருவாய் குறைந்து கொண்டேவரும் இந்தச் சூழலில் 40% நிதியை மாநில அரசின் பங்களிப்பு என்கிற பெயரில் அதிகரிப்பது மாநில அரசுகளை கடுமையான நிதிச் சுமையை நோக்கி தள்ளும்.

தினமணி செய்திச் சேவை

நல்ல அம்சங்கள்

மாநில அரசுகளின் வரி வருவாய் குறைந்து கொண்டேவரும் இந்தச் சூழலில் 40% நிதியை மாநில அரசின் பங்களிப்பு என்கிற பெயரில் அதிகரிப்பது மாநில அரசுகளை கடுமையான நிதிச் சுமையை நோக்கி தள்ளும். திட்டத்தின் பெயரை மாற்றியது தவறான முன்னுதாரணம். புதிய மசோதாவில் நல்ல அம்சங்களும் உள்ளன. குறிப்பாக, பணி நாள்களை 125-ஆக உயர்த்தியது, வேளாண் பணிகள் நடைபெறும் காலங்களில் 60 நாள்கள் வரை இந்தத் திட்டத்தின் கீழ் வேலை வழங்குவதை நிறுத்தி வைப்பது, வேளாண் பணிகளுக்கு முக்கியத்துவம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

க. சக்திவேல், கும்பகோணம்.

போட்டியாகக் கூடாது

மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டம் மத்திய அரசால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேலைநாள்கள் 125 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் பெயரும், சில விதிமுறைகளும் மாற்றம் கண்டுள்ளன. இவ்வாறான மாற்றங்கள் காலங்காலமாக நடைபெறுபவைதான். அந்த மாற்றம் மக்கள் நலன் சார்ந்தவையாக இருக்க வேண்டும். ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி இடையேயான போட்டியாக அமைந்துவிடக் கூடாது.

ரசிகா நாகராஜ், நடுக்குப்பம்.

சரியான முடிவு

புதிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைக் காட்ட இரண்டு முக்கிய காரணங்கள்தான். ஒன்று மகாத்மா காந்தியின் பெயர்

நீக்கப்பட்டது; மற்றொன்று, மாநிலங்களின் பங்களிப்பு 40 சதவீதமாக இருக்க வேண்டும் என்பதுதான். பெயர் மாற்றத்தை மத்திய அரசு தவிர்த்திருக்கலாம். மத்திய, மாநில பங்களிப்பு 60: 40 என்பது சரியான திருத்தமே. மத்திய அரசிடம் இருந்து 100% சதவீத பணத்தைப் பெற்றுக் கொண்டு, மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி அது மாநிலத் திட்டம் என்பதுபோல் விளம்பரம் தேடிக் கொண்டிருப்பது எல்லா மாநிலங்களிலும் நடக்கிறது.

அ.பட்டவராயன், திருச்செந்தூர்.

வேலை நாள்கள் உயர்வு

கிராமப்புற மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக 20 ஆண்டுகளுக்கு முன்பு மகாத்மா காந்தியின் பெயரில் கொண்டுவரப்பட்ட திட்டம், இப்போது, விபி-ஜி ராம் ஜி என்ற பெயர் மாற்றத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பாரபட்சமாக நிதி வழங்கப்பட்டு வரும் நிலையில், புதிய வேலை உறுதித் திட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிதிப் பகிர்வு 60%-40% என மாற்றப்பட்டுள்ளது. இது மாநில அரசுகளுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும். 100 நாள்களை 125 நாள்களாக உயர்த்தியுள்ளது வரவேற்கத்தக்கது.

பா.சிதம்பரநாதன், கருவேலன்குளம்.

நல்லது நடந்தால் சரி

ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு இருப்பது மகிழ்வானது என்றாலும், இவ்வளவு நாள் இதை நிறைவேற்றாமல் இப்போது நிறைவேற்றி இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தினாலும், ஏற்றுக் கொள்ளலாம். இதில் எந்தவித சுயநல எண்ணமும் இல்லாதிருப்பின் இது ஒரு போற்றத்தக்க செயல். பலன் தரும் இந்தச் செயல் மக்களுக்கு ஒரு நல்ல வாழ்வைக் கொடுக்கும் என்றால் மகிழ்ச்சியுடன் பாராட்டுவோம். தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் இதுபோன்ற மசோதாக்கள் நிறைவேற்றப்படுவது மக்களுக்கு மகிழ்வை தரும். நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் புதிய வேலை உறுதி திட்ட மசோதாவை வரவேற்போம்.

நந்தினி கிருஷ்ணன், மும்பை.

பெயரில் என்ன இருக்கிறது?

புதிய திட்டமான வளர்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு, வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டம் (விபி-ஜி ராம் ஜி) உழைக்கும் ஏழை கிராம மக்களுக்கு கூடுதலாக உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், பெயர் மாற்றம் செய்ய அவசியம், அவசரம் ஏன் என்று சிந்திக்க வேண்டியுள்ளது. வேலை நாள்களை அதிகரித்திருப்பது பொருளாதார அடிப்படையில் பயனுள்ளதுதான். பெயர் மாற்றம் என்பது தேவையில்லாதது. அதேநேரத்தில், "பெயரில் என்ன இருக்கிறது?' என்று கடந்து போக வேண்டியதுதான்.

கரு.பாலகிருஷ்ணன், தேவகோட்டை.

அரசியலாக்க வேண்டாம்

புதிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்படி வேலை நாள்களை 125 நாள்களாக உயர்த்தியிருப்பது வரவேற்கத்தக்கது. அதையே 150 நாள்களாக உயர்த்தியிருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். மகாத்மா காந்தியின் பெயரை மாற்றாமல் இருந்திருக்கலாம். இது தற்போதைய அரசின் கொள்கை முடிவு. எனவே, இதை அரசியலாக்குவது தேவையற்றது. இந்தத் திட்டம் தொய்வின்றி நடைபெறுவது அவசியம். ஊரகப் பகுதியின் வளர்ச்சிக்காக இந்தத் திட்டத்தை அரசு சீரிய முறையில் செயல்படுத்த வேண்டும்.

என்.கே. ராஜா, பெரும்பாக்கம்..

மாநிலங்களுக்கு நெருக்கடி

2005-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு

உறுதித் திட்டம் தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் சில மாற்றங்களைக் கண்டுள்ளது. மத்திய, மாநில அரசு நிதி பங்களிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 125 வேலை நாள்கள் என அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநில நிதிப் பங்களிப்பு அதிகரிப்பால், மாநில அரசுகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அபாயம் உள்ளது. மேலும், காலப்போக்கில் இத்திட்டம் மத்திய அரசால் கைவிடப்படும் சூழலும் ஏற்படும்.

கே.ஆர்.ராஜேந்திரன், திருப்பரங்குன்றம்.

பொறுத்திருப்போம்!

ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட மசோதாவில் மகாத்மா காந்தியின் பெயர் மாற்றம், நிதி வழங்குவதில் மாநில அரசின் பங்கு அதிகரிப்பு, மத்திய அரசின் பங்கு குறைப்பு மட்டுமின்றி முழு அதிகாரத்தை மத்திய அரசு தன் கையில் வைத்துள்ளது போன்ற பல நெருடல்கள் உள்ளன. எந்த ஒரு திட்டமும், மசோதாவும் அறிமுகப்படுத்திய உடனே அதன் தாக்கம் வெளிவராது. அது நடைமுறைக்கு வரும்போதுதான், அதன் சாதக, பாதகங்கள் தெரியவரும். பொறுத்திருந்து பார்ப்போம்.

மவ்லவீ மு.முஹம்மது ரபீக் ரஷாதீ,

விழுப்புரம்.

விவாதத்தை உருவாக்கியது

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றியிருப்பது, அரசியல் கட்சிகளிடையே பல்வேறு விவாதங்களை உருவாக்கி இருக்கிறது. திட்டத்துக்கு பெயரை மாற்றியதை அரசியல் உள்நோக்கம் கொண்டதாக மக்கள் பார்க்கிறார்கள். பெயரில் என்ன இருக்கிறது? ரோஜாவை என்ன பெயர் சொல்லி அழைத்தாலும் மணக்கத்தானே செய்யும் என்பார் மா சே துங் . திட்டங்களுக்கு ஏற்கெனவே சூட்டப்பட்டுள்ள பெயர்களில் அரசியல் செய்வதை விடுத்து, மக்களுக்குத் தேவையான திட்டங்களை நல்ல விதமாக செயல்படுத்துவது அவசியம்.

மா. பழனி, தருமபுரி.

நெருக்கடி கூடாது

புதிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட மசோதா நிறைவேற்றம் என்பது மேற்படி முந்தைய திட்டத்தைச் சீர்குலைக்கும் செயல்தான். மாநில நிதிப் பங்களிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வேலையை முன்பே முடிவு செய்து அனுமதி பெற்றே செய்ய வேண்டும் என்ற விதிமுறை சேர்க்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு வழிகாட்டுதல் என்பதை வரவேற்கலாம். அதேநேரத்தில் திட்டத்துக்கு நெருக்கடி அளித்தால், கிராமத்தில் ஏழைகளின் பசியையும் பட்டினியையும் போக்கிய திட்டம் கரைந்து போகும்.

ந.கோவிந்தராஜன், ஸ்ரீமுஷ்ணம்.

மிகச் சரியான மசோதா

புதிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கடந்த ஓராண்டாக நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டு திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக நடைபெற்ற திட்டத்தில் எந்தப் பணிகளும் முழமையாக நடைபெறவில்லை. திட்டச் செயல்பாடு மகாத்மா காந்தியின் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தும் விதத்தில் இருந்ததால், அதன் பெயர் மாற்றியமைக்கப்பட்டு, புதிய விதிமுறைகளும் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், கோடிக்கணக்கான நிதி சரியான முறையில் செயல்பட மசோதா வழிவகுத்துள்ளது. மாநில அரசின் நிதிப் பங்கீடு அதிகரிப்பால், திட்டம் சிறப்பு கவனம் பெறும்.

ரெ. சுப்பா ராஜூ, கோவில்பட்டி.

கிராமத்தினருக்கு வேலைவாய்ப்பு

அரசால் நிறைவேற்றப்படும் திட்டம் முறையாக மக்களைச் சென்றடைந்து நல்ல பலனைக் கொடுத்தால் அது வரவேற்கத்தக்கது. தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு உறுதித் திட்ட மசோதாவும் நல்ல வரவேற்பைப் பெறும். இந்தத் திட்டம் சரியான நபர்களுக்கு சென்றடைய வேண்டியது அவசியம். கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பை அளித்து அவர்களுக்கு வருமானத்தைக் கொடுக்கும் என்பதால் வரவேற்கலாம்.

பிரகதாம்பாள், கடலூர்.

கண்காணிக்க வேண்டும்

புதிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட மசோதா நிறைவேற்றம் கிராம மக்களின் எதிர்காலத்துக்கான முன்னெடுப்பு. இடைத்தரகர்களின் தலையீடு முற்றிலும் ஒழிக்கப்படும். சரியான நபர்களுக்கு வேலை வழங்கப்படும்.

மக்கள் நலனில் அக்கறை கொண்டு இதுபோன்ற பயனுள்ள மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றுவது வரவேற்க வேண்டிய ஒன்றாகும். இந்தப் புதிய மசோதாவை நிறைவேற்றுவதில் காட்டிய அக்கறையை அது முறையாகச் செயல்படுகிறதா என்பதையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

உஷா முத்துராமன், மதுரை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி: ப. சிதம்பரம்

மதவாத சக்திகள் வேரூன்றும்படி மதிமுக செயல்படாது: துரை வைகோ

திரிபுரா மாணவா் கொல்லப்பட்ட சம்பவம்: டேராடூன் ஆட்சியருக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

ஜனவரி 5 முதல் தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடா்

SCROLL FOR NEXT