விவாதமேடை

"நாட்டின் பல்வேறு இடங்களில் ஒன்றன்பின் ஒன்றாக நெரிசல் விபத்துகள்-தடுக்கவே முடியாதா?' குறித்து...வாசகர்களிடம் இருந்து வந்த கருத்துகளில் சில...

நாட்டில் அவ்வப்போது ஏற்படும் பெரும் விபத்துகள் கூட்ட நெரிசல்களாகவும், வாகன விபத்துகளாகவும் இருக்கின்றன.

தினமணி செய்திச் சேவை

மனிதத் தவறே

நாட்டில் அவ்வப்போது ஏற்படும் பெரும் விபத்துகள் கூட்ட நெரிசல்களாகவும், வாகன விபத்துகளாகவும் இருக்கின்றன. லட்சக்கணக்கான மக்கள் கூடுகின்ற இடங்களில் முன்கூட்டியே திட்டமிட்டு கூட்டத்தை ஒழுங்குபடுத்த சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்; பொதுமக்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். ஒருவரை ஒருவர் முந்த நினைப்பதால் ஏற்படுகிற பாதிப்பு உயிரிழப்பில் முடிகிறது. அனைத்து நிலைகளிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் விபத்துகளைத் தவிர்க்கலாம். நெரிசல் விபத்துகள் மனிதத் தவறுகளால்தான் நடைபெறுகின்றன.

மா.பழனி, கூத்தப்பாடி.

வருமுன் காப்போம்

நாட்டின் பல்வேறு இடங்களில் ஒன்றன்பின் ஒன்றாக நெரிசல் விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க வருமுன் காப்போம் என்ற அணுகுமுறைதான் அத்தியாவசியம். நெரிசல் வரக்கூடிய ஜனரஞ்சகமான நிகழ்வுகளைத் தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டே தீர வேண்டும். இயற்கைப் பேரழிவுகளுக்கு நிவாரணம்தான் தர முடியுமே தவிர, உயிர்ச் சேதங்களைத் தவிர்ப்பது யார் கையிலும் இல்லை. ஆனால், அனுமதி பெற்று நிகழ்த்தப்படும் நிகழ்ச்சிகள், எதுவாக இருப்பினும், அரசும் மக்களும் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்வது அவசியம்.

ஆர்.ஜி.பாலன், திசையன்விளை.

அரசு மட்டுமல்ல...

விதிகளை மீறுதல் எல்லாக் காலங்களிலும் இருந்தாலும் அண்மைக்காலமாக இது அதிகரித்துள்ளது. உதாரணத்துக்கு ஐபிஎல் கிரிக்கெட் கோப்பையை வென்ற அணிக்கு பெங்களூரில் நடைபெற்ற பாராட்டு விழாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11பேர் உயிரிழந்தனர். இதற்குக் காரணம், அரசின் திட்டமிடலில் ஏற்பட்ட தோல்வி, அதிகாரிகளின் அலட்சியம், மக்களின் பொறுப்பின்மை. மேலும் அறியாமை, மூடத்தனம், சுயநலம் எனக் கூறலாம். மக்கள் சுயக் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.

உதயா ஆதிமூலம், திருப்போரூர்.

ஒருங்கிணைப்பு அவசியம்

நாட்டில் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்படும் நெரிசல் விபத்துகளைத் தவிர்க்க முடியும். அதற்கான திட்டமிடல், முன் எச்சரிக்கை, கண்காணிப்பு ஆகிய செயல் திட்டங்களை சரிவர செய்தல் வேண்டும். ஒரு நாள், இரு நாள் நடைபெறும் திருவிழாக்களில் பலர் உயிர் இழக்கின்றனர். அதற்குக் காரணம் கவனக் குறைபாடு. முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தொடர் கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவை மட்டுமே விபத்துகளைத் தடுக்கும்.

ஜீவன்.பி.கே., கும்பகோணம்.

கட்டுப்பாடு மக்களுக்காவே...

எந்த ஒரு திருவிழாவும் பல நாள்களுக்கு முன்பே திட்டமிட்டு செயல்படுத்தப்படுவதால், அதற்கு அரசும், காவல் துறை அதிகாரிகளும் தேவையான முன்னேற்பாடுகளை முடிந்தவரை சரியாகதான் செய்கிறார்கள். ஆனால், அந்த நிகழ்ச்சிகளுக்கு வரும் பொதுமக்கள் அதிகாரிகளின் அறிவுரைகளை மதிக்காமல் தங்களின் விருப்பங்களையே குறிக்கோள்களாகக் கொண்டு கூட்டத்தில் நெரிசல்களை உண்டாக்குகின்றனர். இதனால், காவல் துறையிரின் கட்டுப்பாட்டை மீறி விபத்துகள் நிகழ்ந்து விடுகின்றன. பொதுமக்கள் கட்டுப்பாட்டுடன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலே விபத்துகளைத் தடுத்து விடலாம்.

உஷா முத்துராமன், மதுரை.

நேரடி ஒளிபரப்பு...

ஒரு பொது நிகழ்ச்சி நடைபெறும் போது, நிச்சயமாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருப்பார்கள். ஆனால், அவற்றை பொதுமக்கள் சிறிதும் கடைப்பிடிப்பதில்லை. தாங்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்து விட்டோம்; நாமும், நம் குடும்பமும் இந்த நிகழ்ச்சியில் எல்லாவற்றையும் பார்த்து விட வேண்டும் என்ற சுய

நலத்துடன், கூட்டத்தில் முன்னேற முயல்வதால் இதுபோன்ற விபத்துகளை சந்திக்க வேண்டியுள்ளது. ஊடகங்கள் நேரலையில் ஒளிபரப்புவதைப் பயன்படுத்தினாலே பெரும்பாலான கூட்ட நெரிசல் விபத்துகளைத் தடுக்க முடியும்.

நந்தினி கிருஷ்ணன், மும்பை.

திட்டமிடலில் தெளிவு

நாட்டின் பல்வேறு இடங்களில் ஒன்றன்பின் ஒன்றாக நெரிசல் விபத்துகள் நடைபெற்று வருகின்றகன. ஒரு நிகழ்வு நடைபெறும் வேளையில் முன்னேற்பாடுகளில் திட்டமிடல் அவசியம் . விபத்துகள் நிகழ்வது திட்டமிடல் குறைபாட்டினால் அதிகரிக்கலாம். பல்வேறு சூழல்களில் குறிப்பிட்ட நேரங்களில் மக்கள் நெருக்கம் அதிகரிப்பது வழக்கமானதுதான். காவல் துறை , உள்ளாட்சி அமைப்புகள், சேவை அமைப்புகள், தன்னார்வலர்கள் இணைந்து தெளிவான திட்டமிடலுடன் செயல்பட்டால் மட்டுமே நெரிசல் விபத்துகளைக் கட்டுப்படுத்த முடியும்.

வீ.வேணுகுமார், கன்னியாகுமரி.

தண்டிக்க வேண்டும்

சமுதாய உணர்வு அடுத்தவர் நலனை மதிக்காத சுயநலம், அதிக ஆசை, ஆர்வம், வினோத பிரியம் போன்றவற்றால் நெரிசலைப் பற்றிய கவனம் இல்லாத மக்கள் பெருகிவிட்டனர். அருகில் இருப்பவர் தன்னைப் போன்ற மனிதர் என்ற உணர்வு கொள்ளாமல் நடந்து கொள்கின்றனர். கூட்ட நெரிசல் மட்டுமல்லாமல், வாகனங்களாலும் நெரிசல் ஏற்பட்டு தினமும் விபத்துகள் அதிகரிக்கின்றன. விபத்துக்குக் காரணமானவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஆ.லியோன், மறைமலைநகர்.

காத்திருத்தல் நலம்

நெரிசல் விபத்துகள் ஒன்றும் தடுக்க முடியாதது அல்ல. பொறுமையையும் வரிசை முறையையும் கடைப்பிடிப்போமானால் நெரிசல், தள்ளுமுள்ளு என்ற பேச்சுக்கே இடமில்லை. மக்கள் அதிகளவில் கூடும் இடங்களுக்குச் செல்லும் போது சரியான திட்டமிடுதல் வேண்டும். ஒரு நாள் முன்னதாகவோ, பின்னதாகவோ அல்லது மக்கள் குறைவாக வரும் நேரத்தை அறிந்து செல்ல வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக காத்திருக்கும் பண்பை சிறு வயது முதல் வளர்த்தலே சிறந்த தீர்வு.

ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

சிரமம்தான்

நெரிசலால் விபத்துகள் நடைபெறுவதைத் தடுப்பது என்பது மிகவும் சிரமமானதுதான். மக்கள் தற்போதெல்லாம் பல நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள தயங்குவது இல்லை. கோயில் போன்ற ஆன்மிக நிகழ்வுகளில் மிக அதிகமாக பொதுமக்கள் ஆவலுடன் கலந்து கொள்வதால், கூட்ட நெரிசல் சகஜமாகி விட்டது. இந்தக் கூட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வர யார் முயன்றாலும் அவர்கள் பொதுமக்களின் எதிரியாகி விடுகின்றனர். அதை முறியடிக்க மக்கள் முயலும் போது, மேலும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதை யாராலும் தடுக்க முடியாததே இதுபோன்ற விபத்துகளுக்குக் காரணம்.

பிரகதாம்பாள், கடலூர்.

வேண்டும் ஒத்திகை

நாட்டின் பல்வேறு இடங்களில் ஒன்றன்பின் ஒன்றாக நெரிசல் விபத்துகள்} தடுக்கவே முடியாதா? என்றால், கண்டிப்பாகத் தடுக்கலாம். அதற்கான வழிகளும் உள்ளன. நிகழ்ச்சியை நடத்துகிறவர்கள் உத்தேசமாக எவ்வளவு பேர் வருவார்கள் என்பதைக் கணக்கில் கொண்டும். எவ்வளவு நேரம் கூடி இருப்பார்கள் என்பதையும் கணக்கிட்டு தள்ளுமுள்ளு ஏற்படாத வகையில் நடப்பதற்கும், அமர்வதற்கும், நின்று பார்ப்பதற்கும் இடம் என்கிற வகையில் ஏற்பாடுகளும், கண்காணிப்பு கோபுரத்தின் துணையோடு ஒலிபெருக்கி வழியே அவ்வப்போது வழிகாட்டுதல்கள் கொடுத்தல் போன்ற அனைத்தையும் ஒத்திகை பார்த்து, செயல்பட்டால் நெரிசல் விபத்துகள் நடைபெறாது.

ந.கோவிந்தராஜன், ஸ்ரீமுஷ்ணம்.

சுலபமல்ல

கூட்ட நெரிசல் என்பது தவிர்க்க முடியாதது என்றாலும், திட்டமிட்டு செயலாற்றினால் நிச்சயம் கட்டுக்குள் கொண்டு வர முடியும். சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் வெற்றியைக் கொண்டாட ஏற்பாடு செய்த விதத்தில் விளையாட்டு அரங்கில் ரசிகர்கள் அதிகமாக கூடியதாலும், திருப்பதி கோயிலில் வாசல் திறக்கும் போது பக்தர்களுக்குள் ஏற்பட்ட தள்ளுமுள்ளினாலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தை முறைப்படுத்துவது சுலபமான காரியம் அல்ல.

என்.வி.சீனிவாசன், புது பெருங்களத்தூர்.

பொறுப்புடன் நடந்தால்...

மக்களிடம் சுயக் கட்டுப்பாடும், சுய ஒழுக்கமும் ஏற்படாத வரை பொது இட நெரிசல் விபத்துகளைத் தடுக்க முடியாது. மாதந்தோறும் பெüர்ணமி நாள்களில் திருவண்ணாமலையில் ஐந்து முதல் பத்து லட்சம் பேர் கூடுகின்றனர். அங்கு எவ்வித விபத்தோ, நெரிசலோ ஏற்படுவதில்லை. ஆனால் அரசியல் கூட்டங்கள், இலவசங்களைப் பெற, வேடிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள மக்கள் முட்டி மோதி, முன்வரிசையில் இடம் பிடிக்க முனைவதால் நெரிசல் ஏற்படுகிறது. எவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தாலும் மக்கள் கட்டுப்பாடு இல்லை என்றால் விபத்தைத் தடுப்பது சிரமம்.

தி.சேகர், பீர்க்கன்கரணை.

மக்களின் கடமை

நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெறும் நெரிசல் விபத்துகளைத் தடுக்க முடியும். மக்கள், அரசு இயந்திரம் ஆகியவை விதிகளைப் பின்பற்றி நடந்தால் தடுக்கலாம். நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் பத்தாயிரம் மக்கள் பங்கேற்பாளர்கள் என்றால் அதற்கேற்ப காவல், மருத்துவர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் என தேவையான ஏற்பாடுகளை செய்வது சிறந்தது. நெரிசல் விபத்துகள் எதனால் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை ஆய்வு செய்து, அதற்கேற்ப முன்னேற்பாடுகள் அவசியம். அனைவரும் பொறுப்புணர்வுடன் தங்கள் கடமைகளை சரிவர நிறைவேற்ற வேண்டும்.

தி.ரெ.ராசேந்திரன், திருநாகேச்சரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கத்தாரில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: ஹமாஸ் தலைவர்கள் பலி?

ஆசியக் கோப்பையில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெறாததன் காரணம் இதுதானா? அமித் மிஸ்ரா கூறுவதென்ன?

காலித் ஜமில் தலைமையில் இந்திய கால்பந்தின் புதிய சகாப்தம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: வாக்களிக்காத 13 பேர் யார்?

2025-க்கான இபி-1 கிரீன் கார்டு விசா முடிந்தது: அமெரிக்கா

SCROLL FOR NEXT