விவாதமேடை

"இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப்பின் 10 சதவீத கூடுதல் வரி விதிப்பு அச்சுறுத்தல்' குறித்து...வாசகர்களிடம் இருந்து வந்த கருத்துகளில் சில...

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு பத்து சதவீத கூடுதல் வரி விதிப்பு என்பது ஓர் அச்சுறுத்தல் மட்டுமே.

தினமணி செய்திச் சேவை

அச்சுறுத்தலே...

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு பத்து சதவீத கூடுதல் வரி விதிப்பு என்பது ஓர் அச்சுறுத்தல் மட்டுமே. பிரிக்ஸ் கூட்டமைப்பினர் அமெரிக்க பணமான டாலரை வலுவிழக்க முயற்சி செய்வதாகவும், அதனால் அமெரிக்க வர்த்தக நலன்களைப் பாதுகாக்க இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டு, இது வெகு விரைவில் அமலாக்கப்படும் என்று சொல்லப் படுகிறது. இதை நம் நாடு எப்படி எதிர்கொள்ளும் என்பது புரியாத புதிராக உள்ளது.

நந்தினி கிருஷ்ணன், மும்பை.

கடனை சரிசெய்யுமா...

அமெரிக்காவின் பொருளாதாரம் 35 டிரில்லியன் டாலர் கடனில் தத்தளிக்கிறது. அதை எப்படி சரி செய்வது என்ற பதற்றத்தில் டிரம்ப் பலவித கூடுதல் வரிகளை உலக நாடுகளுக்கு விதிப்பதாக மிரட்டிப் பார்க்கிறார். பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்து ஒரு நிதி அமைப்பை உருவாக்குவது, வர்த்தகத்தை டாலரின் மதிப்பில் அல்லாமல் வேறு கரன்ஸிகளின் அடிப்படையில் மேற்கொள்வது என்ற முடிவுகள் டிரம்ப்பை எரிச்சலூட்டி இருக்கிறது; அதன் விளைவே இந்த அறிவிப்பு.

தி.சேகர், பீர்க்கன்கரணை.

நாடகமே

அண்மைக்காலமாக டிரம்ப்பின் அறிவிப்புகள் நிலையற்ற தன்மையாக உள்ளது. தான் சொல்வதை இரண்டு மூன்று நாள்கள்கூட, அவரால் கடைப்பிடிக்க முடிவதில்லை. சீனா மீது நினைத்துக்கூட பார்க்க இயலாத அளவுக்கு முதலில் அதிக வரிகள் விதித்ததும், அதனால் ஏற்பட்ட பின்னடைவுகளைக் கண்டு தலைகீழாக வரி விதிப்பை மாற்றி விட்டார். பிரிக்ஸ் கூட்டமைப்பு வர்த்தகத்தை அமெரிக்க டாலருக்கு மாற்றி பொது நாணயத்தை யூரோ போல கொண்டு வரலாமா என்ற ஆலோசனைதான் டிரம்ப்பை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அதனால்தான், இந்த அச்சுறுத்தல் நாடகம் நிகழ்கிறது.

சீ.காந்திமதிநாதன், கோவில்பட்டி.

பேராசை

பிரேஸிலில் அண்மையில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டைத் தொடர்ந்து டிரம்ப்பின் வரி விதிப்பு அச்சுறுத்தல் வெளியாகி உள்ளது. முன்னேற்றப் பாதையில் வளர்ந்து வரும் நாடுகள் இந்த அறிவிப்பால் அசராது, மாற்று வழிமுறைகளைத் தேட முயலும். இதனால், அமெரிக்கப் பொருளாதாரம் தொய்வடையப் போவது உறுதி. அமெரிக்க டாலரின் மதிப்பு எப்போதும் பிற நாட்டு கரன்ஸிகளைவிட உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் வழக்கமான பேராசை இந்த வரி விதிப்பு உயர்வில் தெளிவாகத் தெரிகிறது.

கே.ராமநாதன், மதுரை.

அமெரிக்காவுக்கு சாதகமே

பிரிக்ஸ் நாடுகளுக்கான டிரம்ப்பின் அச்சுறுத்தல் உரிய பலனைத் தந்திருக்கிறது என்பதை சீனாவின் அறிக்கை வெளிப்படுத்தி இருப்பதுடன் அச்சுறுத்தலுக்குப் பிறகான பிரிக்ஸின் செயல்பாடுகளும் அதை மெய்ப்பித்துள்ளன. பார்ப்பதற்கு டிரம்ப்பின் ஒவ்வொரு செயல்பாடும் பரிகாசத்துக்குரியதைப் போலத் தோன்றின. ஆனால், உண்மையில் அமெரிக்காவுக்கு சாதகமான பலன்களை அவர் படிப்படியாக ஏற்படுத்தி வருகிறார் என்பது ஊன்றிப் பார்ப்போரால் அறிய முடியும். டிரம்ப் நற்பலன்களை அறுவடை செய்து வருவதை; செய்யப் போவதை காலம் உணர்த்தும்.

த.முருகவேள், விழுப்புரம்.

அவர்களுக்கும் பாதிப்பு

இந்தியா எப்போதும் ஒரே நாட்டை சார்ந்திருப்பதில்லை. பிரிக்ஸ் நாடுகள் மீது 10 சதவீதம் கூடுதல் வரிவிதிப்பு அச்சுறுத்தலாகவோ, உண்மையாகவோ இருக்கலாம். டிரம்ப்பின் நிலைப்பாட்டை புரிந்து கொள்ள இயலாது. அவர் மனதில் என்ன நினைக்கிறாரோ அதைச் சொல்வார். அவர் சிந்தித்து செயல்படுவதாகத் தெரியவில்லை. தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக்கொள்ளும் சுபாவம் உடையவர். கூடுதல் வரி விதிப்பால் அவரது நாடும் பாதிக்கப்படும்; வளரும் நாடுகளும் பாதிப்பை எதிர்கொள்ளும். அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் இருப்பதால் நம்மால் சமாளிக்க இயலும்.

தி.ரெ.ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.

அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்

வீட்டில் சிறு குழந்தைகள் தவறு செய்தால் அடிப்பேன் என்று அச்சுறுத்துவதைப் போலத்தான் டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்பு அறிவிப்பு. இது நடைமுறைக்கு வந்தால், ஏற்படும் விளைவுகளை இப்போது இந்த வரி விதிப்பைப் பற்றி சொன்னவர்கள் யோசிக்க மறந்து விட்டனர். அச்சுறுத்துவதால் கிடைக்கும் ஆனந்தத்தை இப்போது அனுபவிக்கட்டும்; அது நடைமுறைக்கு வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று யோசிக்க வைக்கிறது. அவ்வளவுதானே தவிர வேறு எண்ணமே வரவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

பிரகதாம்பாள், கடலூர்.

நிராகரித்தல் நலம்

இந்த வரி விதிப்பை ஏற்றுக் கொள்ள இந்தியா தயங்கினால், வரி விதிப்பால் அச்சுறுத்துபவருக்கு எந்த பயமும், பயனும் இல்லை. இதனால், பாதிக்கப்பட்டவருக்கே பயம் வருகிறது. எந்தப் பொருளுக்கு இப்படி வரி கூடுதல் விதித்தார்களோ; அந்தப் பொருள் நம் நாட்டுக்குத் தேவையா என்று தீர்மானித்து மிக மிக அவசியம் என்றால் வரி விதிப்பை ஏற்றுக் கொள்ளலாம். இல்லையெனில், மறுத்து விடுவது தவறல்ல; இதைத் தீர்மானிக்க வேண்டியது இந்திய அரசுதான். மக்களின் தேவையறிந்து செயல்பட்டால் இந்த 10 சதவீத கூடுதல் வரி விதிப்பை அச்சுறுத்தல் என்று எண்ணாமல் நிராகரிக்கலாம்.

உஷா முத்துராமன், மதுரை

குளறுபடியே...

டிரம்ப்பின் 10 சதவீத கூடுதல் வரி விதிப்பு என்ற அச்சுறுத்தல், இந்தியா போன்ற நாடுகளில் தகவல் தொழில்நுட்பம், மருந்துத் துறை, ஜவுளித் துறை போன்ற தொழில்கள் பெரும் பாதிப்பை சந்திக்கும் என்ற நிலை உள்ளது. உலக நாடுகள்ஒற்றுமையுடன் ஒன்றுசேர்ந்து இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டும். இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்பின் 10 சதவீத கூடுதல் வரி விதிப்பு அச்சுறுத்தல் குறித்து டிரம்ப் இரண்டாம் முறை அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றதிலிருந்து சீர்திருத்தம் என்ற பெயரில் பல்வேறு குளறுபடிகளை செய்து வருகிறார்.

உதயா ஆதிமுலம், திருப்போரூர்.

பதிலடி தேவை

இது இந்தியா உள்ளிட்ட வளர்ந்துவரும் நாடுகளின் ஏற்றுமதிக்கு நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இந்தியாவைப் பொருத்தவரை, "இந்தியாவில் தயாரிப்போம்", 'சுயச் சார்பு இந்தியா' போன்ற திட்டங்கள் வலுப்பெறும் நிலையில், டிரம்ப்பின் இந்த அறிவிப்பு பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக அமையக்கூடும். இதை சர்வதேச அரசியல் கணக்கில் ஓர் அழுத்தம் ஏற்படுத்தும் நடத்தையாகவே பார்க்கலாம். இந்த அச்சுறுத்தலுக்கு பிரிக்ஸ் நாடுகள் ஒருமித்த பதிலடி கொடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

சா.முஹம்மது ஹுசைன், அறந்தாங்கி.

அச்சுறுத்துதலே நோக்கம்

அமெரிக்கா வல்லரசு நாடு என்பதால், அதன் அதிபர் இதுபோன்று செயல்படுகிறாரோ என்ற கவலை உள்ளது. அனைத்து நாடுகளுடனும் சுமுகமாகவும், நல்லுறவுடனும் நட்பைப் பேணி பாதுகாப்பது அவசியம். ஆனால், டிரம்ப்பின் நடவடிக்கை பிற நாடுகளை அச்சுறுத்தும் விதமாக இதுபோன்ற வரி விதிப்புகளைக் கையாண்டு வருவது வேதனை அளிக்கிறது. பிற நாடுகளை தன் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்பதே நோக்கமாக இருக்கும்.

மா.பழனி, கூத்தப்பாடி.

அபத்தமானது

டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றதிலிருந்து அதிரடி அறிவிப்புகளை பல்வேறு நாடுகளுக்கு எச்சரிக்கையாகவும், பயமுறுத்தலாகவும் விடுத்துக் கொண்டிருக்கிறார். அவரது இந்த 10 சதவீத கூடுதல் வரி விதிப்பு அமெரிக்காவுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். ஏனெனில், இந்தியா உள்ளிட்ட அந்த பத்து நாடுகளும் தங்களது நாட்டில் அமெரிக்கப் பொருள்களுக்கு 10 சதவீதம் வரியை உயர்த்தினால், அந்தப் பொருள்களின் விற்பனை சரியும் அபாயம் உள்ளது. இதனால், பாதிக்கப்படுவது அமெரிக்கப் பொருளாதாரம்தான். எனவே, இந்த அறிவிப்பு அபத்தமானது.

ஆ.ஜூடு ஜெப்ரிராஜ், கோவை.

தன்முனைப்பு

அதிக வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட பிரிக்ஸ் நாடுகள் தங்களது எதிர்ப்பைக் காட்டுவது இயல்பானது. ஏற்றுமதிப் பொருள்கள், பணிகள் அதிக வரியில் பின்தங்கிப் போகலாம். தங்களது நாட்டின் வழியாக மட்டுமே பெறக் கூடிய பொருள்களை அதிக வரி விதிப்பால் வாங்க முடியாத நிலைக்கு மக்களும் தள்ளப்படுவர். தனக்கு அஞ்ச மறுக்கும் நாடுகள் மீது அமெரிக்க அதிபர் எடுக்கும் நிலைப்பாடு என்பது தன்முனைப்பானது; தன்னை முன்னிலப்படுத்தும சிறு மதியே தவிற வேறொன்றுமில்லை.

ஆ.லியோன், மறைமலைநகர்.

உள்நாட்டு எதிர்ப்பு

பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா பங்கேற்றுள்ளது என்பதால், கூடுதல் 10 சதவீத வரி என்று தனது எதிர்ப்பையும், எச்சரிக்கையையும் அமெரிக்கா காட்டியுள்ளது. என்னதான் வல்லரசாக இருந்தாலும், உலகின் மற்ற நாடுகளை அலட்சியப்படுத்தி வரியின் மூலம் வாட்டி வதைப்பது சரியாக இருக்குமா? அனைத்து நாடுகளும் சேர்ந்து ஓரணியில் நின்றால் அமெரிக்கா எவ்வாறு செயல்படும்? இந்தச் செயலுக்கு அமெரிக்க மக்களிடமே எதிர்ப்பு உள்ளது. இது டிரம்ப்பின் ஆட்சிக்கு ஆபத்தாக முடியும் வாய்ப்புள்ளது.

கலைப்பித்தன், கடலூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கத்தாரில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: ஹமாஸ் தலைவர்கள் பலி?

ஆசியக் கோப்பையில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெறாததன் காரணம் இதுதானா? அமித் மிஸ்ரா கூறுவதென்ன?

காலித் ஜமில் தலைமையில் இந்திய கால்பந்தின் புதிய சகாப்தம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: வாக்களிக்காத 13 பேர் யார்?

2025-க்கான இபி-1 கிரீன் கார்டு விசா முடிந்தது: அமெரிக்கா

SCROLL FOR NEXT