விவாதமேடை

தெரு நாய்கள், கால்நடைகளை அப்புறப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை நடைமுறைப்படுத்துவது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

தெரு நாய்கள் பெருக்கத்தைக் கண்கூடாகக் காண்கிறோம். அதிகாலை, இரவு நேரங்களில் தனியாகப் போகும்போது அவை துரத்துவதிலிருந்து யாரும் எளிதில் தப்பிவிட முடியாது.

தினமணி செய்திச் சேவை

தலைவணங்க வேண்டும்

தெரு நாய்கள் பெருக்கத்தைக் கண்கூடாகக் காண்கிறோம். அதிகாலை, இரவு நேரங்களில் தனியாகப் போகும்போது அவை துரத்துவதிலிருந்து யாரும் எளிதில் தப்பிவிட முடியாது. நாய் கடித்து சிறுமி உயிரிழந்த செய்தியைப் படிக்கிறோம். விலைமதிப்பற்றது உயிர்; விலங்குகளால் அச்சம் என்றால், அவற்றை அப்புறப்படுத்த தயவு தாட்சண்யம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. உச்சநீதிமன்ற உத்தரவை உடனே நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். நீதிமன்ற உத்தரவுக்கு தலைவணங்க வேண்டும்.

ப.தாணப்பன், தச்சநல்லூர்.

வாழ்வதற்கு வழிவகை

தெருக்கள், சாலைகள், பொது இடங்களில் தெரு நாய்கள், கால்நடைகள் சுற்றித் திரிவது அதிகரித்துள்ளது. இதனால், சாலை விபத்துகள் நிகழ்ந்து உயிர்ச் சேதமும், பொருள் சேதமும் ஏற்படுகின்றன. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் குழந்தைகள் எனப் பலரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். சில இடங்களில் தெரு நாய்கள் ஒன்றுசேர்ந்து குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரையும் கடிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது . உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தி அச்சமில்லாமல் வாழ வழிவகை செய்வது அரசின் கடமை.

உதயா ஆதிமூலம், திருப்போரூர்.

செயல்படுத்த வேண்டும்

தெரு நாய்கள், மாடு, பன்றி, குதிரைகள் போன்றவை தெருக்களில் சுற்றித் திரிந்தால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டியது அவசியம். அதனால்தான் இவற்றை அப்புறப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை விரைந்து செயல்படுத்தினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைவர். தெரு நாய்கள் உள்ளிட்ட பிராணிகளை அடித்து விரட்டினால் "ப்ளூ கிராஸ்' வந்து விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் அமைதி காக்கின்றனர். மக்களுக்கு நிம்மதி வேண்டும் என்றால் உச்சநீதிமன்ற உத்தரவை உடனே நடைமுறைக்கு கொண்டு வருவதுதான் சிறந்தது. நீதிமன்றத்தின் உத்தரவு வரவேற்கப்பட வேண்டியதே.

நந்தினி கிருஷ்ணன், மும்பை.

இன்றியமையாதது

தெரு நாய்கள், கால்நடைகளை அப்புறப்படுத்துவது மிக மிக இன்றியமையாதது. உச்ச நீதிமன்ற உத்தரவை உடனே நடைமுறைப்படுத்தினால் மக்கள் மகிழ்வர். தெரு நாய்களும், கால்நடைகளும் சாலையில் சுற்றித் திரிந்தால் மக்கள் எப்படிச் செல்ல முடியும்? நடந்து செல்பவர்களைக் கடித்து துன்புறுத்தும் தெரு நாய்கள், வாகனங்களில் செல்பவர்களுக்கும் இடையூறு அளிக்கின்றன. அனைவரையும் சங்கடத்தில் ஆழ்த்தும் தெரு நாய்களையும், கால்நடைகளையும் அப்புறப்படுத்தி மக்களுக்கு உதவி செய்யும் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு மிகவும் பயனுள்ளது.

உஷாமுத்துராமன், மதுரை.

பலன் தராது

தெரு நாய்கள், கால்நடைகளை அப்புறப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை நடைமுறைப்படுத்துவது குறித்து அனைவரும் சிந்திக்க வேண்டும். சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டு அதைச் செயல்படுத்தியும், அது முழுமையாக பலன் தரவில்லை. வெட்டப்பட்ட சில காலங்களில் மீண்டும் வளர்கின்றன. நாய்கள் நன்றியுள்ள பிராணியாகக் கருதப்படுகின்றன. தெரு நாய்களுக்கு உணவளித்து மன நிறைவடைந்தோரும் உள்ளனர். அவற்றை அகற்ற உத்தரவு பிறப்பிக்க முடியுமே தவிர, மனதிலிருந்து அகற்ற எந்த உத்தரவும் பலன் தராது.

ஆர்.ஜி.பாலன், திசையன்விளை.

இனப்பெருக்க கட்டுப்பாடு

மாநிலங்கள் நடவடிக்கை எடுத்ததை கூறச் சொல்லியும் பல தலைமைச் செயலாளர்கள் பதில் தெரிவிக்காததால் நேரில் வரச்சொல்லி கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகும்கூட சில மாநிலங்கள் உரிய நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. நாய் வளர்ப்பவர்கள் ஊராட்சி, நகராட்சி நிர்வாகங்களில் அனுமதி பெற வேண்டும். தெரு நாய்களுக்கு இனப்பெருக்க கட்டுப்பாடு செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் அப்போதுதான் பரிதாப மரணங்கள் தவிர்க்கப்படும்.

க.அருச்சுனன், செங்கல்பட்டு.

கருணைக் கொலை...

தெரு நாய்கள், கால்நடைகளை அப்புறப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நடைமுறைகளைப் பின்பற்றுவதில் சிக்கல்கள் நிறைய உள்ளன. கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு, தனியார் நிறுவனங்களை நகராட்சி அதிகாரிகள் இனம் கண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது சாத்தியமில்லை. கிராமப்புறங்களில் அவற்றை எந்தக் காப்பகங்களில் அடைப்பது? கருத்தடை செய்து அதே இடங்களில் விட்டுவிடுவதால் குழந்தைகள், முதியவர்களுக்கு அவற்றால் தீங்கு ஏற்படாதா? வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட விலங்குகளைக் கருணைக் கொலை செய்வதுதான் சரியான நடைமுறை.

அ.கருப்பையா,பொன்னமராவதி.

ஏக்கத்துக்குத் தீர்வு

தெரு நாய்கள், கால்நடைகளை அப்புறப்படுதுவது என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. தொலைக்காட்சியில் கொடுமையான செய்திகளைப் பார்க்கும்போது, இதற்கெல்லாம் ஒரு தீர்வு வராதா என்ற ஏக்கத்தைத் தீர்த்துவைத்த உச்சநீதிமன்ற தீர்ப்பைப் பாராட்டலாம். இதை உடனே நடைமுறைப்படுத்தினால் மிகவும் நல்லது. இப்படி தெரு நாய்களையும் கால்நடைகளையும் அப்புறப்படுத்துவது மக்களுக்குப் பேருதவியாக இருக்கும்.

பிரகதாம்பாள், கடலூர்.

மனிதனுக்கே சட்டம்...

உலகில் உயிர் வாழ அனைத்து உயிரினங்களுக்குமே சம உரிமை உண்டு. ஆயினும், தன் இன்னுயிர் காக்க போராட வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது சில கடினமான முடிவுகளை மனிதன் எடுகக வேண்டியுள்ளது.

குடிமக்கள் பாதுகாப்புடன் உயிர் வாழ அரசமைப்புச் சட்டத்தில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் வகைப்படுத்தியுள்ள வழிமுறைகளில் சில நடைமுறைகள் சாத்தியப்படுமா என்ற ஐயம் எழுந்தபோதும், குடிமக்களின் உயிரைக் காக்க தொலைநோக்குப் பார்வையுடன் முனைப்புக் காட்டும் நீதிமன்றத்தின் வழிமுறைகளை மதித்து மாநில அரசுகள் நடைமுறைப்படுத்துவது மிக அவசியம்.

கே.ராமநாதன், மதுரை.

உத்தரவுக்கு ஒத்துழைத்தல்

பீட்டா அமைப்பின் உதவியுடன் தெரு நாய்களுக்கு உணவளிப்பதை ஒரு சமூக சேவைபோல் பலர் செய்கிறார்கள். இவர்கள் அந்த நாய்களைத் தத்தெடுத்து காப்பகத்தில் சேர்க்கலாம். நாய்களின் பராமரிப்புச் செலவையும் ஏற்கலாம். அமாவாசைதோறும் பசு மாடுகளுக்கு அகத்திக் கீரை தருவதை புண்ணியமாகக் கருதுகிறார்கள். இவர்கள் காப்பகத்தில் உள்ள பசுக்களுக்கு ஆண்டுதோறும் அகத்திக்கீரை அளிக்க ஒரு குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக வழங்கலாம். நீதிமன்ற உத்தரவுப்படி அரசு அமைக்கும் காப்பகங்களோடு மக்களும் முழு ஒத்துழைப்பு நல்கினால் பிரச்னையை எளிதாகத் தீர்க்கலாம்.

ஜ அ.யாழினி பர்வதம், சென்னை.

சவாலானது

கால்நடைகளை உரியவர்கள் மூலம் அப்புறப்படுத்தி விடலாம். ஆனால், தெரு நாய்களை என்ன செய்வது? ஒரு நாய் குரைத்தால், அந்தப் பகுதியில் உள்ள பெரும்பான்மை நாய்களும் குரைத்துக்கொண்டு ஓடிவருவதைக் காண்கிறோம். இந்த விஷயத்தில் மனிதாபிமானப்படி செயல்பட வேண்டும். வளர்ப்பு நாய்களுக்கு பணம் செலுத்தி அனுமதி பெறலாம். தெரு நாய்களை ஆதரிப்போர் யாருமில்லை. எப்படியோ அவை வளர்கின்றன. அவற்றை அப்புறப்படுத்துவது என்பது சவாலானது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது எளிதான காரியம் அல்ல.

பி.சுந்தரம், வெண்ணந்தூர்.

உள்ளாட்சி அமைப்புகள்...

தெருக்களில் சுற்றிவரும் நாய்களும், கால்நடைகளும் மனிதர்களுக்குத் தீங்கு விளைவிப்பவையாக மாறிவிட்டன. நீதிமன்றங்கள் உத்தரவிட்டாலும் அவற்றை அமல்படுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டியது அவசியம். இதில் உள்ளாட்சி அமைப்புகள் முனைப்புடன் செயல்பட வேண்டும். மக்கள் அனைவரும் அவரவர் பகுதியில் சுற்றித் திரியும் நாய் உள்ளிட்ட பிராணிகளை அப்புறப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். நாய்களைப் பிடிப்பதிலும் அவற்றுக்கு இனப்பெருக்கத் தடை செய்வதிலும் ஊழல் நடைபெறாமல் இருக்க வேண்டும்.

வளர்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூர்.

தொடர் கண்காணிப்பு...

தெரு நாய்கள் மற்றும் கால்நடைகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவை மாநில, உள்ளாட்சி அமைப்புகள் கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயம். பொது சுகாதாரமும், குடிமக்களின் பாதுகாப்பும் முக்கியம் என்பதால் தெரு நாய்களைக் கட்டுப்படுத்தல், தடுப்பூசி செலுத்தல், பாதுகாப்பான தங்குமிடங்கள் அமைத்தல் ஆகியவை முன்னுரிமையாகச் செய்யப்பட வேண்டும். சட்டம் அனுமதிக்கும் வரம்புக்குள் மனிதாபிமான முறையில் நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியம். இதன் செயல்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் இணைந்து கண்காணிக்க வேண்டும்.

சா. முகம்மது ஹுசைன், அறந்தாங்கி.

தூய்மை காப்போம்

பொது இடங்களில் தெரு நாய்கள் மற்றும் கால்நடைகள் சுற்றித் திரிவது முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும். நாய் மற்றும் மாடுகள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளை வளர்ப்போர் அனைவரும் அவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் வளர்ப்பதே நல்லது. ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் தீவிரமாகக் கண்காணித்து வந்தால் அவற்றின் நடமாட்டத்தைத் தடுக்க முடியும். தெருக்கள், சாலைகள், மைதானங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தூய்மையைக் கடைப்பிடிப்பதன் ஒரு பகுதியாக அவ்விடங்களில் தெரு நாய்கள் மற்றும் கால்நடைகளின் நடமாட்டத்தை முற்றிலும் தடை செய்வதே சிறப்பு.

வீ.வேணுகுமார், கன்னியாகுமரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

விஜய்யிடம் கணிசமான வாக்குகள் இருந்தாலும் அவை திமுக கூட்டணியைப் பாதிக்காது: காா்த்தி ப. சிதம்பரம்

பவளப்பாறை பயன்கள் குறித்து மீனவா்களுக்கு விழிப்புணா்வு முகாம்

பிரதமா் மோடி இன்று கோவை வருகை: தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டைத் தொடங்கிவைக்கிறாா்

அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT