விவாதமேடை

தவெக தலைவர் - நடிகர் விஜய்யின் "ஜனநாயகன்' வெளியீடு தாமதமாவது குறித்து...வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

தினமணி செய்திச் சேவை

அரசியல் பரமபதம்

அதிக வன்முறையோ, ஆபாசமோ மட்டும் தடைக்குக் காரணமாகிவிடாது. "ஜனநாயகன்' திரைப்படத்தில் தேசிய பாதுகாப்பு சின்னங்களைக் காண்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகின. அதுதான் தணிக்கைக் குழுவின் தடைக்குக் காரணமாக இருக்கலாம். உழைத்து முன்னேறுபவர்களுக்கு மத்தியில் குறுக்கு வழியில் முன்னேற நினைப்பவர்

களும் உண்டு. மக்கள் பணி செய்து அரசியலுக்கு வர நினைப்பவர்களுக்கு மத்தியில், பரமபத ஏணியில் ஏறுவதுபோல் பதவிக்கு வர நினைத்தால் பாம்பு தீண்டி ஆரம்பித்த இடத்துக்கே வந்துவிடுவதுபோல் ஆகிவிடும். அதுதான் நடக்கிறது.

ராஜலட்சுமி, பத்தமடை.

அரசியல் ஆசை

ஒரு சாதாரண நிகழ்வை ஏன் பூதாகரமாக ஆக்கியுள்ளார்கள் எனப் புரியவில்லை. விஜய் நாட்டின் வளர்ச்சிக்காக எந்தச் செயலையும் செய்யவில்லை. காலம் மாறினாலும் கோலம் மாறவில்லை என்பது சரியாகத்தான் உள்ளது. நடிகர்களின் அரசியல் ஆசை இன்னும் தணிந்தபாடில்லை. மேலும், இந்த விஷயத்தில் அரசியல்வாதிகளின் தலையீடு தேவையில்லை. மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் ஏராளம் தேங்கி இருக்க, நடிகரின் பிரச்னைகள் தலைப்புச் செய்திகளாகி விடுகின்றன. இது அவர்களின் திரைப்படங்களுக்கு வசூலை அதிகரிக்கத்தான் உதவும்.

எஸ்.வேணுகோபால், சென்னை.

ஆதரவு பயம்

தவெக தலைவர் விஜய் திரைப்பட நடிகராக மட்டும் இருந்திருந்தால் இது போன்ற சிக்கல் வந்திருக்காது. அவரது அரசியல் பிரவேசத்தை விரும்பாதவர்கள் செய்த செயல்தான் ஜனநாயகம் திரைப்படம் வெளிவர முடியாத நிலைக்குக் காரணம் எனத் தெரிகிறது. விஜய்யின் அரசியல் பிரவேசம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதால், அந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில

வசனங்களால், அவருக்கு பொதுமக்களின் ஆதரவு அதிகமாகக் கிடைத்து விடுமோ என்ற பயத்தின் காரணமாகக்கூட திரைப்படத்தை வெளியிட தாமதம் செய்கிறார்களோ எனத் தோன்றுகிறது.

உஷா முத்துராமன், மதுரை.

பலன் தராது

நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கலாம். எனவே, இதை திசை திருப்ப என்ன செய்யலாம் என்று யோசித்து, அவரது திரைப்படமான ஜனநாயகன் வெளிவரும் தருணத்தில், ஏதாவது ஒரு காரணத்தைக்கூறி தாமதம் ஏற்படுத்துவதால், அவரின் கவனம் அரசியலில் இருந்து திரும்பி விடும் என்று எதிர்பார்த்து இவ்வாறு நடந்திருக்கிறது. திரைப்பட வெளியீட்டை தாமதப்படுத்துவதால் எந்தப் பலனும் கிடைக்காது.

பிரகதாம்பாள், கடலூர்.

சரிதான்

மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ஜனநாயகன் படத்தில் மத ரீதியான ஆட்சேபணைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி மறு ஆய்வுக்குப் பரிந்துரைத்தது. தற்போது வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. ஜனநாயகன் படத்தைத் தடுக்க நினைப்பது தமிழ்க் கலாசாரத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளது ஏற்புடையது அல்ல. மத ரீதியான காட்சி, பாதுகாப்புப் படை சின்னங்கள் இடம் பெற்றுள்ளன என்று தணிக்கை வாரியம் கூறியுள்ளது. அதன் அதிகாரத்தை மற்றவர்கள் கையில் எடுப்பது தவறானது.

க.அருச்சுனன்,செங்கல்பட்டு.

ஏற்க முடியாது

அனுபவித்துத்தான் ஆக வேண்டும்; களத்தில் நிகழ்வது அரசியல். தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளன. மத்தியிலும் மாநிலத்திலும் பெரும் கட்சிகள் காய்களை நகர்த்தி வருகின்றன. அடிக்கும் காற்றுக்குத் தகுந்தபடி பாய்மரத்தை செலுத்தினால்தான் கரைசேர முடியும். இதில் இரக்கம், நீதி, நேர்மை உள்ளிட்டவற்றுக்கு இடமில்லை. மக்களுக்காகப் போராடி தங்களது கொள்கையை நிலைநிறுத்தி வென்றும், தோற்றும் களமாடும் கட்சிகளுக்கு மத்தியில் திரைப்படக் காட்சிகளைக் காண்பித்து ஆட்சியைப் பிடிக்க முனைவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

பால.வேங்கடநாதன், பெங்களூரு.

பேசுபொருளானது

ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டுத் தேதியை தணிக்கைக்குச் செல்லும் முன்பாகவே விளம்பரப்படுத்தியது தவறு. பாஜக கொள்கை எதிரி; திமுக அரசியல் எதிரி என்று பேசிவிட்டு, விஜய்யின் கரூர் நிகழ்ச்சிக்குப் பிறகு அரசியல் அடிப்படையில் திரைப்படத்தில் சில காட்சிகள் சேர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தணிக்கைத் துறையின் செயல்பாடுகள் என்பது வழக்கமான நடைமுறை என்றாலும், அவரது அரசியல் வருகையால் வெளியீட்டில் தாமதம் என்பது பேசுபொருளாகிவிட்டது.

அ.கருப்பையா, பொன்னமராவதி.

திட்டம் போட்டு...

ஜனநாயகன் திரைப்பட வெளியீடு தாமதமாவதற்கு திரை மறைவில் பல சதி வேலைகள் நடந்திருப்பதாக பேசப்படுகிறது. தவெக தலைவர் விஜய்யை தங்கள் வழிக்குக் கொண்டு வர மத்திய அரசு எடுத்திருக்கிற துருப்புச் சீட்டுதான் ஜனநாயகன் திரைப்படம். திரைப்படத்தின் வெளியீட்டை தாமதப்படுத்தி இழப்பை ஏற்படுத்தினால் அவர் தாமாக முன்வந்து

தங்கள் கூட்டணியில் சேர்ந்து விடுவார் என்றும் மத்திய அரசு நினைக்கிறது.

ரஃபீக்.ஐ, திருச்சி மாவட்டம்.

விஜய்யின் இயலாமை

நடிகர் விஜய்யின் திரைப்படம் தணிக்கைப் பிரச்னையைச் சந்திப்பது முதல்முறையல்ல. பல நடிகர்கள் அரசியலில் இல்லாமல் இதுபோன்ற பிரச்னையைச் சந்தித்துள்ளனர். தேர்தல் நெருங்குவதால் இதில் அரசியல் சாயம் பூசப்படுகிறது. தணிக்கைக் குழுவின் அதிகாரத்தை அரசியலுக்குப் பயன்படுத்த பாஜக முயல்கிறது என்பது கற்பனை. ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டில் மெüனம் காத்து தனது இயலாமையைக் காட்டியுள்ளார் விஜய். திரைப்படம் வெளிவரத் தாமதமாவதற்கு படத் தயாரிப்பாளரின் அலட்சியமே காரணம்.

ஜீவன்.பி.கே., கும்பகோணம்.

சுழலில் விஜய்

ஜனநாயகன் வெளியீட்டின் தாமதம் குறித்து கவலைப்பட முடியாமல், தனது நிலை குறித்தே கவலைப்படும் நிலைக்கு அரசியல் சுழல் விஜய்யை அலைக்கழிக்கிறது. அதிலிருந்து வெளிவந்தால்தான், மற்றவை குறித்து அவர் சிந்திக்க முடியும். இந்த விவகாரத்தில் அரசியல் நாடகக் காட்சிகள் மர்மமாக உள்ளதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு சதுரங்க நாடகம் தொடங்கப்பட்டு விட்டது. எல்லோராலும் காணவியலாத காட்சிகளாகவே அது திட்டமிட்டு அரங்கேற்றம் செய்யப்பட்டுவிட்டது.

த.முருகவேள், விழுப்புரம்.

அனைத்துமே ஊகம்தான்

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் வெளியீடு தாமதமாவது குறித்து விவாதிக்கத் தேவையில்லை. தணிக்கை வாரிய விதிமுறைகளைக் கடைப்பிடித்து படம் வெளியாகும்போது பார்த்துக் கொள்வார்கள். ஒரு திரைப்படம் மக்களுக்கு என்ன செய்தியை சொல்ல வருகிறது என்பதை அது வெளியான பிறகு பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு முன்பாகவே ஊகத்தின் அடிப்படையில் அதன் வசனங்களை அளவிட முடியாது. நிழல் நிழல்தான்; நிஜம் நிஜம்தான்.

மா. பழனி, கூத்தப்பாடி.

நாடகம் நடக்கிறது

ஒரு திரைப்படத்தைத் தடை செய்வதை மையமாக வைத்து அரசியல் சுழல் ஏற்படும் என்றால், அதைவிட வெட்கித் தலைகுனிய வேண்டிய காரியம் வேறில்லை. எந்தக் காட்சியை எப்படி எடுத்தால் தணிக்கை வாரியம் அனுமதி தரும் என்கிற விஷயம் இயக்குநருக்குத் தெரியாமலா இருக்கும்? தணிக்கை வாரியத்தின் அனுமதி கிடைக்காமல் வெளியீட்டுத் தேதியை அறிவித்தது தவறு. நீதிமன்றத்தை நாடியது இரண்டாவது தவறு.

எல்லாமே நாடகம்போல இருக்கிறது.

வள.ஜயதாரணி, சென்னை.

தடை உதவாது

விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தைத் தடை செய்ய முயற்சிப்பது அவரது அரசியல் வளர்ச்சிக்கு உதவுமே தவிர வேறு எந்தப் பயனும் ஏற்படாது. படத்தின் வெளியீடு தாமதமாவதற்கு சில கட்சிகளின் குறுக்கீடும், அரசியல் காழ்ப்புணர்வும் தவிர வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும், இந்தத் திரைப்படம் விரைவில் வெளியாகும். அதைத் தடை செய்ய முயல்வோரின் முயற்சி தோல்வியடையும்.

கோ.ராஜேஷ் கோபால், மணவாளக்குறிச்சி.

கருத்துத் தெரிவிக்காத...

திரைப்படம் என்பது பொழுதுபோக்கு அம்சம். முன்பெல்லாம் திரைப்படங்கள் மக்களை நல்வழிப்படுத்தும் விதத்தில் அமைந்து நல்ல கருத்துகளை விதைத்தன. தற்போது பல திரைப்படங்கள் தவறான வழிகாட்டுகின்றன. குறிப்பாக, மக்களுக்கான போராட்டங்களில் பங்கேற்காமல், அவர்களுக்காகப் பாடுபடாமல் நேரடியாக அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்யப் போகிறேன் எனக் கூறி கதைக் களத்தை அமைக்கின்றனர். ஜனநாயகன் விவகாரத்தில் திரைப்படத்தின் நாயகன் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

மவ்லவீ எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ,

விழுப்புரம்.

விஜய்யின் தவறு

விஜய்யின் அரசியல் வருகை போன்ற சில விஷயங்களைப் பார்க்கும்போது, அவருக்கு மத்திய அரசு மறைமுகமாக நெருக்கடி தருகிறது என்பதை மறுக்க முடியாது. ஜனநாயகன் விவகாரம் திரைத்துறை சார்ந்த தன்னை நம்பிய நபர்களைப் பாதிக்கும் என்பதால், இதுவிஷயத்தில் விஜய் முன்னின்று தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும். இதை அவர் தவிர்க்கும் சூழலில் அது அவருக்கு புகழைப் பெற்றுத் தந்த துறைக்குச் செய்யும் தவறாகும்.

சி.கார்த்திகேயன், சாத்தூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பராசக்தி ரூ. 100 கோடி வசூல்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 4,120 உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 5,000 உயர்வு!

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

கவனம் ஈர்க்கும் ரஜிஷா விஜயனின் மஸ்திஷ்கா மரணம் டீசர்!

பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பு!

SCROLL FOR NEXT