முகப்பு
கட்டுரைகள்

வேதனைகளைக் குவிக்கும் சாதனைகள்

 தேர்தல் நெருங்க நெருங்க ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளுங்கட்சியினரும் சரி, ஆட்சியில் உள்ள மத்திய அரசும் சரி தேர்தல் வெற்றிக்குரிய ஊன்றுகோல்களாக ஊடகங்களின் வாயில்களில் தங்கள் சாதனைகளைப் பட்டி

கட்டுரைகள்

வேதனைகளைக் குவிக்கும் சாதனைகள்

 தேர்தல் நெருங்க நெருங்க ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளுங்கட்சியினரும் சரி, ஆட்சியில் உள்ள மத்திய அரசும் சரி தேர்தல் வெற்றிக்குரிய ஊன்றுகோல்களாக ஊடகங்களின் வாயில்களில் தங்கள் சாதனைகளைப் பட்டி

Updated On : 26 டிசம்பர், 2023 at 6:06 AM
பகிர்:

 தேர்தல் நெருங்க நெருங்க ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளுங்கட்சியினரும் சரி, ஆட்சியில் உள்ள மத்திய அரசும் சரி தேர்தல் வெற்றிக்குரிய ஊன்றுகோல்களாக ஊடகங்களின் வாயில்களில் தங்கள் சாதனைகளைப் பட்டியலிட்டுக் காட்டுகின்றன.

 கடந்த பத்தாண்டுகளில் உலக வங்கி உதவிகொண்டும், மக்கள் வரிப்பணத்தைக் கொண்டும் நெடுஞ்சாலை, நீர் மின்சாரம், அணுமின்சாரம், அனல் மின்சாரம் போன்ற பல்வேறு கட்டமைப்புத் திட்டங்கள் நிறைவேறியவண்ணம் உள்ளன.

 அதற்கான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. அதேசமயம் அதற்கான நஷ்ட ஈடு விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும், ஆதிவாசிகளுக்கும் முறையாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் உள்ளபோது, நிலத்தைக் கையகப்படுத்தும் மசோதா ஒன்றும் மறுவாழ்வு மற்றும் மறுகுடியிருப்பு மசோதா ஒன்றும் அவசரம் அவசரமாக மக்களவையில் குறைவெண் வரம்பை மதியாமல், கூடிய உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்பட்டது.

 ஆனால் 26.2.2009-ல் மாநிலங்களவையில் இந்த இருமசோதாக்களும் நிறைவேறவில்லை. அரசியலில் இருதுருவங்களாக விளங்கும் பாரதிய ஜனதாவும் இரு கம்யூனிஸ்டுகளும் ஒருங்கிணைந்து மேற்படி மசோதாக்களைத் தோற்கடித்துவிட்டன. இவ்வாறு எதிர்க்கட்சிகள் இணைந்து இம் மசோதாக்களைத் தோற்கடித்துவிட்டது மிகவும் சரி. இதற்கான காரணங்கள் என்ன?

 முதலாவதாக நாடாளுமன்ற நிலைக்குழு விதித்திருந்த நிபந்தனைகள் எதையுமே ஆளுங்கட்சி பொருள்படுத்தவில்லை. இச்சட்டங்களில் உள்ள பல முரண்பாடுகளைச் சரிசெய்யும்படி நிலைக்குழு கூறியுள்ளது.

 நிலங்களை கையகப்படுத்துவதற்கு முன்பு "பொதுநல நோக்கம்' என்ற சொல்லுக்குரிய விளக்கம் கோரப்பட்டிருந்தது மட்டுமல்ல; 1894-ல் பொதுநலநோக்கம் பற்றிச் செய்யப்பட்டிருந்த வரையறையும் பின்பற்றப்படவில்லை.

 நிலத்தைக் கையகப்படுத்தும் முன்பு மறுவாழ்வு வழங்கிய பின்னரே அவ்வாறு செய்ய வேண்டும். மிகவும் குறைந்த அளவு மக்களின் வாழ்விடங்கள் பாதிக்கப்பட்டிருந்தால்கூட சமூக விளைவு மதிப்பீடு செய்திருக்க வேண்டும்.

 சமூக விளைவு மதிப்பீட்டில் கிராமப் பஞ்சாயத்துக் குழுக்களையும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்பதாக நிலைக்குழு பரிந்துரைத்துள்ளதை எதிர்க்கட்சிகள் குறிப்பிடத் தவறவில்லை.

 மேற்படி மசோதாக்கள் இவை குறித்த பழைய சட்டங்களின் புதிய திருத்தங்களில் பொருளாதார மண்டலம், அடிப்படைக் கட்டமைப்பு வசதி என்ற போர்வையில் மக்களிடமிருந்து கையகப்படுத்திய நிலம், புறம்போக்கு நத்தம் ஆகியவற்றில் சுமார் 70 சதம் தனியார் நிறுவனங்களுக்கும் அரசுப் பொதுப்பணிக்கு 30 சதம் என்றும் கம்யூனிஸ்டுகள் குற்றம்சாட்டியுள்ளன.

 மேற்படி சட்டத்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்படுமானால் அடித்தள ஏழை மக்களின் வாழ்நிலை பாதிக்கப்படும் என்று பா.ஜ.க.வும் கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து குரலெழுப்பியுள்ளது வரவேற்புக்குரியதே.

 இப்போதுள்ள நிலக் கைப்பற்றுச் சட்டப்படி பொதுநலம் பற்றிய வரையறையில் பள்ளிக்கூடம், மருத்துவமனை ஆகியவற்றை அரசே கட்டுமானால் அக் கைப்பற்று பொதுநலம் என்ற வரையறைக்குள் அடங்கும்.

 இப்போது திருத்தத்திற்கு வரும் மசோதாவில் சாலை, சுரங்கம், அணைக்கட்டு, விமானத்தளம், சுற்றுலா விடுதி எல்லாம் பொதுநலமாகக் கோரப்படுவதை பா.ஜ.க. மற்றும் கம்யூனிஸ்டுகள் கண்டனம் தெரிவித்தன.

 இந்திய கம்யூனிஸ்டு தலைவர் டி. ராஜா ஒருபடி உயர்ந்து, கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பதுபோல் இந்த அரசு மெல்ல மெல்ல ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் இறங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 கையகப்படுத்தும் 30 சதவீதம் நிலத்திற்கு அரசு நஷ்ட ஈடு / மாற்று இடம் வழங்கும் என்று நம்பப்பட்டாலும், தனியார் கைப்பற்றும் 70 சதவீதம் நிலத்திற்கு முறையாக மாற்றிடம், நஷ்ட ஈடு வழங்கப்படுவது சந்தேகமே என்று குறிப்பிட்ட அவர், இதில் உள்ள சமனற்ற நிலையைக் கருதியே, இம்மசோதாவை எதிர்ப்பதாகக் கூறினார்.

 "தகவல் பெறும் மக்கள் உரிமை விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் சேகர்சிங், 75 சதவீத மக்கள் தாமாகவே முன்வந்து நிலத்தை காலிசெய்து கொடுப்பதாக ஒப்புக்கொண்ட பின்னரே அரசு அந்நிலத்தைக் கையகப்படுத்த வேண்டும் என்று கருத்திசைந்துள்ளார்'. விவசாய நிலங்களைத் தொழில் வளர்ச்சிக்காகக் கைப்பற்றும் பிரச்னைகளில் நாடாளுமன்ற விவாதங்கள் ஒருபுறம் இருக்கட்டும்.

 இதுபோல் எத்தனையோ பிரச்னைகள் நாடாளுமன்ற விவாதத்துக்கு வருவதே இல்லை. அப்படிப்பட்ட சில பிரச்னைகளில் ""அயம் வார்ம்'' திட்டம் ஒன்று. சில தினங்களுக்கு முன்பு மக்கள் உரிமை தொடர்பான ஒரு கூட்டத்தில், புதுக்கோட்டை ரோஸ் அறக்கட்டளை நிர்வாகி கார்த்திக், ""அயம்வார்ம்'' பற்றிக் கூறிய தகவல்கள் திடுக்கிடும்படியாக இருந்தன.

 "உ.பி.யிலும் உத்தரகாண்டத்திலும் உள்ள நிகழ்வுகளை உரைக்கும் நீங்கள் உங்கள் ஊர் நிகழ்வுகளில் உள்ள ஊழல்களை வெளிச்சமிட முன்வரவில்லையே என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார். அவர் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தைப் பயன்படுத்தி இந்த ""அயம்வார்ம்'' திட்டச் செயல்பாட்டின் ஊழல்களைப் பல ஆங்கில இதழ்களில் அம்பலப்படுத்தியுள்ளார். "அயம்வார்ம்' அதாவது (‘ஐழ்ழ்ண்ஞ்ஹற்ண்ர்ய் அஞ்ழ்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங் ஙர்க்ங்ழ்ய்ண்ள்ஹற்ண்ர்ய் ஹய்க் ரஹற்ங்ழ் க்ஷர்க்ண்ங்ள் தங்ள்ற்ர்ழ்ஹற்ண்ர்ய் ஹய்க் ஙஹய்ஹஞ்ங்ம்ங்ய்ற்’ என்பது தமிழ்நாட்டில் மட்டும் செயல்பட்டு வரும் உலக வங்கித்திட்டம். பாசன விவசாயத்தை நவீனப்படுத்துதல் - நீர்நிலைகளை மீட்டுயிர்த்தல் - நிர்வாகம் என்று இத்திட்டத்தை மொழியாக்கம் செய்யலாம். இதற்கான உலக வங்கிக்கடன் 2547 கோடி ரூபாய். 2007-லிருந்து இத்திட்டம் அமலாகியுள்ளது.

 நீர்ப்பாசன விவசாயம் என்ற பெயரில் காவிரிக் கழிமுகத்தைத் தவிர்த்துவிட்டு 16 இதர நதிகளின் கழிமுகங்களில் உள்ள 63 வடிநிலங்களில் உள்ள ஏரி, குளங்களில் நீர் சேமிப்பை உயர்த்தி வேளாண்மை உற்பத்தியை உயர்த்துவதே இத் திட்டம். மாதிரிக்கு இத்திட்டம் செயல்பட்ட புதுக்கோட்டை - தஞ்சாவூர் மாவட்டத்தில் வெள்ளாறு, அம்புலியாறு, பாம்பாறு, அக்னியாறு கடலில் வடியும் வடிநிலப் பகுதிகளில் ரோஸ் அறக்கட்டளை நிகழ்த்திய ஆய்வுப்படி இத்திட்டம் வேளாண்மை உற்பத்தியை உயர்த்தாமல், உள்ள விவசாயத்தையும் பாழ்படுத்திய காரணத்தினால் இப்பகுதி விவசாயிகள் நஷ்ட ஈடு கேட்டுக் கிளர்ச்சி செய்வது வருத்தப்பட வேண்டிய நகைச்சுவையாகவும் உள்ளது.

 தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம் 5-வது பிரிவின்படி பஞ்சாயத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளங்களில் குறிப்பிட்ட பஞ்சாயத்துத் தலைவர்களின் ஒப்புதல் இல்லாமல் பொதுப்பணித்துறை ஏரிகளின் கரைகளில் சேதாரம் செய்துள்ளது. மக்கள் பங்கேற்பும் கண்துடைப்பாகிவிட்டது. பாசனக்கால்வாய் பயனீட்டாளர் சங்கங்களும் தூங்கி வழிகின்றன.

 ஹைதராபாதில் உள்ள ஏ.எம்.ஆர். கன்ஸ்ட்ரக்ஷன் என்ற நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் ஏரி - குள மராமத்துப் பணிகள் விடப்பட்டன. நீரியல் நுட்பம் தெரியாத இந்த நிறுவனம் ஏரி குளங்களைப் பாழடித்துவிட்டதாக கிராம மக்கள் கொதித்து எழுந்துள்ளனர். ஜே.சி.பி.யைப் பயன்படுத்தி வலுவாயிருந்த ஏரிக்கரை மரங்களைத் தோண்டி வேரோடு பிடுங்கிப் போட்டு அமைத்த புதுக்கரைகள் வலுவில்லாமல் உடைந்தவண்ணம் உள்ளன.

 ஏரிக்கரைக்கு பலமே மரங்கள்தாம். உலக வங்கி உடன்பாட்டில், "உயிர்ச் சூழலுக்கு ஊறு விளைவிக்கக் கூடாது' என்ற விதி இருந்தும் அது மீறப்பட்டுள்ளது. கரைகள் உடைந்து மழைநீர் ஏரியில் நிற்காமல் கடலில் கலந்து சாகுபடி நிலங்கள் பாழாகிவிட்டன.

 மதகு அமைப்பிலும் ஒரு பாரம்பரியத் தொழில்நுட்பம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஏரிப்படுகையில் பாசன நீரை வெளியேற்றும் மதகு அமைக்கும்போது எப்போதும் கசம் அமைப்பது உண்டு. ஒரு பள்ளம் அமைந்து மதகு திறந்தாலும் முழுமையாக நீர் வெளியேறாத கசக்குட்டை உருவாக்கப்படும். அங்கு மீன்கள் எப்போதும் இருந்து குஞ்சு பொறிக்கும். இப்போது மதகு திறந்தால் ஏரியே காலி. சொட்டுநீர்கூட மிஞ்சுவதில்லை. கசம் என்ற கட்டுமானமே புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதுதான் "அயம்வார்ம்' திட்ட லட்சணம்.

 "குளோபலைசேஷன்' "ஃப்ளாபலைசேஷன்' ஆகி உலக வர்த்தகமே ஆடிப் போய்த் தோன்றியுள்ள தொழில் வீழ்ச்சியில், கைகொடுக்கும் கரமாக விவசாயம் விளங்க வேண்டிய சூழ்நிலையில், இப்படியெல்லாம் ஊழல் நிரம்பிய உலக வங்கி வேளாண்மைத் திட்டங்களைச் செயல்படுத்தி வேளாண்மை உற்பத்தியையும் வீழ்த்தினால் நாடு என்ன ஆகும்?

 நாட்டைக் காக்க நல்லவர்களை வழங்கவும், தீயவர்களைத் திருத்தவும் கடவுள்தான் முன்வர வேண்டும். வேறு யாரிடம் முறையிடுவது? சாதனைகளில் வேதனைகள் வரலாகுமா?

முழு கட்டுரையைப் படிக்க →