முகப்பு
தமிழ்நாடு

உயர்கல்வியில் சேரும் தமிழ் மாணவர்கள் எண்ணிக்கை அதிகம்: அன்பில் மகேஸ்

கல்விச் சிந்தனை அரங்கில் அன்பில் மகேஸ் பேசியது குறித்து...

Updated On : 3 மார்ச் 2026, 3:00 pm IST
கல்விச் சிந்தனை அரங்கில் அன்பில் மகேஸ்
பகிர்:

ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சேரும் தமிழ் வழிப் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் இரு நாள்கள் (மார்ச் 2, 3) நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கின் இரண்டாவது நாளில், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கலந்துகொண்டார். இந்த விவாத நிகழ்வை தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் ஒருங்கிணைத்தார்.

இதில், கல்வி மேம்பாடு குறித்து அன்பில் மகேஸ் பேசியதாவது:

Advertisement

Advertisement

''தமிழ் வழியில் பயின்று ஐஐடி போன்ற ஆய்வுக் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நான்கரை ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் இருந்து ஐஐடி போன்ற பெரிய கல்வி நிறுவனங்களில் நுழைந்த மாணவர்களின் எண்ணிக்கை 2,538 ஆக உள்ளது. இது மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கிறேன்.

தமிழ் வேரைப் போன்றது. ஆங்கிலம் பாலத்தைப் போன்றது. ஆங்கிலம் கற்பதில் சிரமங்களை சந்திக்கும்போது அறிவியல் அறிவைப் பெறுவதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. ஆங்கிலத்தில் புலமை வாய்ந்தவர்களாக இருக்கும்போது பரந்த அளவிலான அறிவைப் பெற முடிகிறது.

மாணவர்களிடையே கற்றல் திறனை அதிகரிக்கும் வகையில், புதுமையான அம்சங்களை உள்ளடக்கி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. எண்ணும் எழுத்தும் திட்டம் மூலம் 5 ஆம் வகுப்பு வரை புதுமையான முறையில் பயிற்றுவிக்கப்படுகிறது.

புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டால், செய்யறிவு (ஏஐ) போன்று புதிய அம்சங்கள் அறிமுகமானால் அது குறித்தும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாணவரும் வாய்ப்பு பெற வேண்டும் என்பதே திராவிட மாடல் கல்வி. அதன் ஒரு பகுதியாக காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. நாங்கள் வெறும் உணவை மட்டும் மாணவர்களுக்குக் கொடுக்கவில்லை, சக மாணவர்களுடன் அமர்ந்து பயிலும் வகையிலான நம்பிக்கையை கொடுக்கிறோம்.

இதற்கு முன்பு மதிய உணவுத் திட்டம் இருந்தது. ஆனால், காலையில் வரும் பல மாணவர்கள் உணவு உண்ணாமலேயே பள்ளிக்குச் செல்கின்றனர். வயிறு காலியாக இருந்தால் கல்வியில் கவனம் இருக்காது என்பதற்காக காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இந்தியா மட்டுமின்றி ஜப்பான், மலேசியா போன்ற வெளிநாடுகளில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ் மாணவர்கள் பயில்கின்றனர். அனைவருக்கும் ஐஐடிஎம் திட்டத்தில் தமிழகத்தின் பிற்படுத்தப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களும் சேர்ந்துள்ளனர். உலகத்தின் எந்தவொரு மூலைக்குச் சென்றும் இயங்க முடியும் என்ற நம்பிக்கையை மாணவர்களிடையே வளர்த்துள்ளோம். இதுவே கடந்த 5 ஆண்டுகளாக பள்ளிக் கல்வித் துறை செய்த சாதனையாகக் கருதுகிறேன்.

புதிய கல்விக் கொள்கை 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கூட பொதுத்தேர்வை வலியுறுத்துகிறது. இது அடுத்தடுத்த வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கக்கூடும். மனப்பாடம் செய்து எழுதுவது மட்டுமே கல்வி அல்ல.

நிதியை விடுவிப்பதில் பாகுபாடு நிலவுகிறது. அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளுக்கான நிதி விடுவிக்கப்படவில்லை. தமிழக அரசின் திட்டங்கள் மத்திய அரசின் பாராட்டுகளைப் பெற்றிருந்தாலும் இதே நிலைதான். சில ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டால் மட்டுமே நிதி விடுவிப்பு என்பது ஏற்புடையதல்ல. பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் 2 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநில கல்விக் கொள்கை மிகவும் வலுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு எங்கள் இலக்கை நோக்கி மீண்டும் செயல்படுவோம்'' எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments