FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பள்ளிகளில் கட்சி நிகழ்ச்சிகள்: தவெகவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

கல்வி நிறுவனங்களில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து...

Updated On : 13 ஜூலை 2026, 12:45 pm IST
சென்னை உயர்நீதிமன்றம் - ENS
பகிர்:

சென்னை: கல்வி நிறுவனங்களில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்ததை அடுத்து, தவெகவுக்கு எதிரான வழக்கை அதிமுக நிர்வாகி திரும்பப் பெற்றார். இதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிமுக நிர்வாகி பரமசிவம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் தவெகவினர், அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான விஜய்யை முன்னிலைப்படுத்தும் வகையில் செயல்படுகின்றனர்.

தவெக கட்சித் தலைவருக்கு ஆதரவு கோஷங்களை எழுப்ப மாணவர்களை நிர்பந்திக்கின்றனர். கல்வி நிலையங்களில் தேசிய தலைவர்களின் புகைப்படங்களுடன் தவெக தலைவரின் புகைப்படத்தையும் காட்சிப்படுத்துகின்றனர்.

Advertisement

Advertisement

கல்வி நிறுவனங்களை அரசியல் பிரசாரத்துக்காகப் பயன்படுத்துகின்றனர். அரசியல் ரீதியாக மாணவர்கள் சுரண்டப்படுவதைத் தடுக்கக் கோரி மத்திய, மாநில அரசுகள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு புகார் மனு அனுப்பி உள்ளேன்.

இது குறித்து உடனே விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கல்வி நிறுவனங்களில் அரசியல் பிரசாரங்களை தடை செய்வதோடு, இதற்கான வழிமுறைகளை வகுக்க வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகளை அனுமதிக்கும் கல்வி நிறுவன அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஏற்கனவே இதே விவகாரம் தொடர்பாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரே விஷயத்துக்காக ஏன் இத்தனை மனுக்கள் தாக்கல் செய்யப்படுகிறது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர், இந்த விவகாரத்தில் ஏற்கெனவே வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதித்து கடந்த 10 -ஆம் தேதி சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து, மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், மனுவை திரும்பப் பெற அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

summary

Political events in schools: Case against TVK dismissed by Madras HC

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments