முகப்பு
கட்டுரைகள்

"திட்டமிடு.. திட்டத்தைச் செயல்படுத்து..'

"நூறு இளைஞர்களைத் தாருங்கள். வலிமையான இந்தியாவை உருவாக்குகிறேன்' என்றார் சுவாமி விவேகானந்தர். அவரது லட்சியத்தை நிறைவேற்றும் வகையில், நல்ல இளைஞர்களை உருவாக்கத் தொடங்கப்பட்டதுதான் நாட்டு நலப் பணித் திட்

Updated On : 25 டிசம்பர், 2023 at 3:02 PM
பகிர்:

"நூறு இளைஞர்களைத் தாருங்கள். வலிமையான இந்தியாவை உருவாக்குகிறேன்' என்றார் சுவாமி விவேகானந்தர். அவரது லட்சியத்தை நிறைவேற்றும் வகையில், நல்ல இளைஞர்களை உருவாக்கத் தொடங்கப்பட்டதுதான் நாட்டு நலப் பணித் திட்டம். இத்திட்டம் நிதி நெருக்கடியால் இன்று நலிவடைந்து வருகிறது என்பதே நிதர்சன உண்மை.

"எனக்கு அல்ல.. உனக்காக..' எனும் கோட்பாடோடு 1985-ம் ஆண்டு பரிசோதனை அடிப்படையில் தமிழ்நாடு, கர்நாடகம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மேல்நிலைப் பள்ளி, கல்லூரிகளில் என்.எஸ்.எஸ். அமைவு தொடங்கப்பட்டது. இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டதால், பிற மாநிலங்களிலும் விரிவுபடுத்தப்பட்டது.

7 பங்கு நிதியை மத்திய அரசும், 5 பங்கு நிதியை மாநில அரசும் இத்திட்டத்துக்கு வழங்குகின்றன.

குடும்பம், பள்ளிச் சூழ்நிலைகளில் இருந்து மாணவர்களை விலகி இருக்கச் செய்வதுடன், ஓய்வு மற்றும் விடுமுறை நாள்களை பயன் உள்ளதாகக் கழிக்கவும் இத்திட்டம் வழி வகுக்கிறது.

தலைமைப் பண்பை வளர்த்தல், தனித் திறன் மேம்பாடு, நல்வழிப்படுத்துதல், தீயபழக்கவழக்கங்களுக்கு அடிமையாகாமல் தடுத்தல், உடல், உள்ளம், மனம் ஆகியவற்றுக்கு நல்ல பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பல நல்ல செயல்களுக்கு இத்திட்டம் வழி வகுக்கிறது.

கிராமங்களைத் தத்தெடுத்தல், மக்களுக்கு விழிப்புணர்வு, சிறுசேமிப்பின் அவசியம், சுற்றுச்சூழல், மக்கள் நல்வாழ்வு, பள்ளிசாரா கல்வி, தீண்டாமை ஒழிப்பு, மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு பணிகளிலும் என்.எஸ்.எஸ். மாணவர்கள் ஈடுபடுகின்றனர்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் தொடர் பணி மற்றும் சிறப்பு முகாம் என்ற இரு பிரிவுகளாகச் செயல்படுகிறது.

பள்ளி வளாகங்களைச் சீரமைத்தல், உள்ளூர் திருவிழாக்களில் காவல்துறையினரோடு பணியாற்றுதல், கோயில்களில் புனரமைப்புப் பணியில் ஈடுபடுதல்...என 120 மணி நேரம் தொடர் பணியில் மாணவர்கள் ஈடுபடுகின்றனர்.

10 நாள் சிறப்பு முகாம்களின்போது, மாணவர்கள் கிராமங்களில் முகாமிடுகின்றனர். அங்கு கிராமத்தில் அதிகாலை எழும் மாணவர்களுக்கு யோகா, உடற்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பின்னர் அங்கு தூய்மைப்படுத்துதல், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்கின்றனர். மாலையில் மாணவர்களுக்கு நல்வழி காட்டும் வகையில் கருத்தரங்குகளும், தனித் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்கள் பங்கேற்கும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

தற்போது இந்தியாவில் 13 லட்சம் பேரும், தமிழகத்தில் 2 லட்சம் மாணவர்களும் என்.எஸ்.எஸ். அமைவில் உள்ளனர். தமிழகத்தில் சுமார் 2 ஆயிரம் பள்ளிகளில் என்.எஸ்.எஸ். அமைவுகள் செயல்பட்டு வருகின்றன. இத்திட்டத்துக்கு தொடர் பணிக்கு ரூ.6 ஆயிரம், 10 நாள் சிறப்பு முகாமுக்கு ரூ.7,500 வழங்கப்படுகிறது.

விலைவாசி உயர்ந்துள்ளதால் இத்திட்டத்துக்கான நிதியை உயர்த்த வேண்டும் என என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர்களும், பள்ளி நிர்வாகத்தினரும் பல ஆண்டுகளாக அரசிடம் கோரி வருகின்றனர்.

ஆனால், இக் கோரிக்கைக்கு தமிழக அரசும், பள்ளிக் கல்வித் துறையும் இதுவரை செவி சாய்க்கவில்லை.

25 மாணவர்கள், உள்ளூரில் தன்னார்வலர்களாக 3 இளைஞர்கள், திட்ட அலுவலர் மற்றும் உதவி அலுவலர் என 30 பேர் கிராமங்களில் 10 நாள் முகாமிடுகின்றனர். இதன்படி, நாள் ஒன்றுக்கு அவர்களுக்கு அரசு செலவிடும் தொகை ரூ.25.

கூலித் தொழிலாளி கூட 8 மணி நேரம் பணிபுரிந்துவிட்டு, நாள்தோறும் ரூ.150 பெறுகிறார். ஆனால், உடல் உழைப்பு, மக்கள் விழிப்புணர்வு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு 24 மணி நேரமும் கிராமங்களில் முகாமிடும் மாணவருக்கு அரசு செலவிடும் தொகை ரூ.25 தான்.

மூன்று வேளை உணவு, தேநீர், தங்கும் இடவசதி போன்றவற்றை மாணவர்களுக்கு அளிக்க வேண்டியுள்ளது. கருத்தரங்குகள், மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றுக்குப் பணம் செலவிட வேண்டியுள்ளது. நாள்தோறும் நடைபெறும் விழா மற்றும் கருத்தரங்கில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர்களுக்கு மரியாதை செய்வதற்காக பல ஆயிரம் செலவிடப்படுவதாக பள்ளி நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

அரசு வழங்கும் நிதியை விட கூடுதலாக ரூ.10 ஆயிரம் செலவழிவதாகவும், இந்நிதியை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் கிராமங்களில் முக்கிய பிரமுகர்களிடம் உதவிகள் பெற்று சரிசெய்வதாகத் திட்ட அலுவலர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், பல ஆண்டுகளாக திட்ட அலுவலர்கள் முன்வைத்த கோரிக்கையை கல்வித் துறை புறக்கணித்துவிட்டு அண்மையில் ஓர் உத்தரவை வெளியிட்டது. அதில், "10 நாள்கள் செயல்பட்டு வந்த என்.எஸ்.எஸ். முகாம்களை 7 நாள்கள் மட்டும் நடத்தினால் போதுமானது' என்று கூறியுள்ளது.

ஒவ்வோராண்டும் இலவசத் திட்டங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாயை அரசு செலவிடுகிறது. ஆனால், நல்ல இளைஞர்களை உருவாக்கும் ஒரு திட்டத்துக்கு போதுமான நிதி ஒதுக்க அரசு தயங்குவது ஏன்?

இதேபோல் மேல்நிலைப் பள்ளி வகுப்பில் ஆயிரம் மாணவர்கள் ஒரே பள்ளியில் படித்தாலும், என்.எஸ்.எஸ். அமைவில் 25 மாணவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவர். பிற மாணவர்கள் விரும்பினால்கூட, அரசு விதியின்படி வாய்ப்பு இல்லை.

என்.எஸ்.எஸ். திட்டத்தை முடக்காமல் உயர்நிலைப் பள்ளிகளிலும் விரிவுபடுத்த வேண்டும். மேலும், கூடுதல் மாணவர்களைச் சேர்க்கவும், கூடுதல் நிதியை ஒதுக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.

"நாளைய இந்தியா இன்றைய இளைஞர்கள் கையில்' என்பதை அறிந்து, இதைச் செயலாக்க அரசு முன்வர வேண்டும்.

"திட்டமிடு.. திட்டத்தைச் செயல்படுத்து..' என்பது என்.எஸ்.எஸ். திட்டத்தின் கோட்பாடு. இத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தி விவேகானந்தரின் லட்சியக் கனவை நனவாக்குமா அரசு?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.