முகப்பு
கட்டுரைகள்

தொழிலாகிவிட்ட கல்வியும், சுகாதாரமும்

வளர்ச்சி பெற்ற நாடு என்ற நிலையை அடைய அந்த நாட்டில் வசிக்கும் குடிமக்களின் வாழ்க்கை நிலையே அடிப்படையாக இருக்க முடியும்.   இதற்காகத்தான் குடிமக்களின் அறிவையும், உடல் நலத்தையும் பராமரிக்கும் பொறுப்பு நீண

Updated On : 20 செப்டம்பர், 2012 at 4:36 PM
பகிர்:
Updated On : 25 டிசம்பர், 2023 at 8:03 PM

வளர்ச்சி பெற்ற நாடு என்ற நிலையை அடைய அந்த நாட்டில் வசிக்கும் குடிமக்களின் வாழ்க்கை நிலையே அடிப்படையாக இருக்க முடியும்.

  இதற்காகத்தான் குடிமக்களின் அறிவையும், உடல் நலத்தையும் பராமரிக்கும் பொறுப்பு நீண்ட நாள்களாக சேவைத் துறையாக- குறிப்பாக அரசுத் துறையாக இருந்து வந்தது.

  ஆனால், இப்போது அறிவை வளர்க்க வேண்டிய கல்வித் துறையும், உடல் நலத்தைப் பராமரிக்க வேண்டிய சுகாதாரத் துறையும்தான் அதிக லாபம் ஈட்டக் கூடிய தொழில்களின் பட்டியலில் சேர்ந்துள்ளன.

Advertisement

  தமிழ்நாட்டிலுள்ள பெரிய தொழிலதிபர்கள், முக்கியப் பிரமுகர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் எல்லோரும் ஏதாவதொரு வகையில் சில பள்ளிகளுடன், சில மருத்துவமனைகளுடன் தொடர்புள்ளவர்களாக இருக்கின்றனர்.

  அதாவது, நேரடியாகவோ, மறைமுகமாகவோ பள்ளிகளையும், கல்லூரிகளையும், மருத்துவமனைகளையும் இந்தப் பிரமுகர்கள் நடத்தி வருகின்றனர்.

  மக்களின் மீதுள்ள அக்கறை காரணமாக அவர்கள் கல்வி நிறுவனங்களையும், மருத்துவமனைகளையும் நடத்துவதைக் குறைகூறலாமா? என்று எவரேனும் கேட்டால் அவரைப் போல அப்பாவி இந்த நூற்றாண்டிலேயே இல்லை என்றே கூறலாம்.

  பால் மணம் மாறாத குழந்தையைப் பள்ளியில் சேர்க்க வேண்டுமென்றாலும், ஆண்டுக்கு குறைந்தது நான்கு இலக்க தொகையைச் செலவிட வேண்டிய நிலை உருவாகிவிட்டது. உயர் கல்வி என்பது லட்சங்களில் அல்ல- கோடிகளில் விலை பேசப்படுகிறது.

  ஏப்ரல் தொடங்கி, ஜூலை வரை பள்ளிச் சேர்க்கை, கல்லூரிச் சேர்க்கை மாதங்களாக நடுத்தர மக்களின் தினசரிக் குறிப்பில் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது.

  பிரபலங்களின் பரிந்துரையிலும்கூட கட்டணக் குறைப்பு கிடையாது; இடம் பிடிக்கவே பரிந்துரை. இன்னும் சில கல்வி நிறுவனங்களில் "ஆள் பிடித்துவிட்டால் கமிஷன் வேறு'. ஆள் என்றால் யார்? நம் குழந்தைகள்தான்.

  நாடு முழுவதும் விரவிக்கிடக்கும் இந்த அவலட்சணங்களால், அரசு மருத்துவமனையும், அரசுப் பள்ளிகளும் பல்லிளித்துச் சிரிக்கின்றன.

  கண்களைக் கட்டி, மூக்கை மட்டும் திறந்துவைத்துக் கொண்டு ஒருவரை ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால், தனது நாசித் திறனாலேயே அவர் கூறிவிடுவார் அந்த மருத்துவமனை அரசு மருத்துவமனையா? தனியார் மருத்துவமனையா? என்று.

  ஏறக்குறைய அரசுப் பள்ளிகளும், கல்லூரிகளும் இதேபோலத்தான். கால்நடைகளும் சாவகாசமாகத் திரியும் ஒரு கல்வி நிறுவனம் நிச்சயமாக அரசு கல்வி நிறுவனமாகத்தான் இருக்க முடியும்.

  இதனாலேயேதான் "தனியாரை' விரும்புவதாகவும் சில அறிவுஜீவிகள் பிதற்றத் தொடங்கியும் விட்டனர்.

  சின்னஞ்சிறிய நாடு கியூபா. சர்க்கரையைத் தவிர அங்கு வேறொன்றும் உற்பத்திப் பொருள் அல்ல. கியூபா நாட்டைச் சேர்ந்த - கியூபா நாட்டில் படித்த சுமார் 20,000 மருத்துவர்கள், அந்த நாட்டின் ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு, வளர்ந்து வரும் அண்டை நாடுகளில் இலவச சிகிச்சை அளித்து வருகிறார்களாம்- அத்தனை மருத்துவ வசதி மிக்க நாடு கியூபா.

  உயர்கல்வி வரையும் இலவசக் கல்வி. ரேஷன் கடையில் ஆட்டுக் கறியும், மாட்டுக் கறியும் வீட்டிலுள்ளோரின் எண்ணிக்கையின் அடிப்படையில் அளவு நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்படுகிறதாம்.

  மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பார்கள். அரசும், அரசியல்வாதிகளும் மனது வைத்தால் வருங்காலச் சமுதாயத்தை வளமுடையதாக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.