தேவை, புதிய வேலை வாய்ப்பு
உலக அளவில் பொருளாதாரத் தேக்கநிலை ஏற்பட்டதற்கு முன்புவரை, தொடர்ந்து 5 ஆண்டுகள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதத்துக்கு மேல் இருந்தது. அந்தச் சிறப்பான வளர்ச்சி காலத்தில்கூட, மேற்கூறிய வளர்ச்சி,
உலக அளவில் பொருளாதாரத் தேக்கநிலை ஏற்பட்டதற்கு முன்புவரை, தொடர்ந்து 5 ஆண்டுகள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதத்துக்கு மேல் இருந்தது. அந்தச் சிறப்பான வளர்ச்சி காலத்தில்கூட, மேற்கூறிய வளர்ச்சி, வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சியாக இருக்கவில்லை என்ற கவலை நிலவியது. கடந்த நிதி ஆண்டின் வளர்ச்சி 6.7 சதவீதமாகச் சரிந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில், இந்த அளவு வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பது சந்தேகமே. சரியும் வளர்ச்சியின் நேரடி பாதிப்பு வேலைகள் இழப்பே. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போன்ற வளர்ந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியின் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதி குறைந்துவிட்டது. அதிலும் குறிப்பாக, ஜவுளி, ஆயத்த ஆடைகள், தோல் பொருள்கள், தங்க ஆபரணங்கள், ஆபரணக் கற்கள், மருந்து தயாரிப்பு, ரசாயனம், கைவினைப்பொருள்கள் தயாரிப்பு ஆகியவற்றின் ஏற்றுமதி கடந்த எட்டு மாதங்களில் கடுமையாகச் சரிந்துள்ளது. கடந்த "மே' மாதத்தில் ஏற்றுமதி 29.2 சதவீதம் சரிந்துள்ளது. இதனால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ரூ. 8,900 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டம் வேலைகள் இழப்பில் முடிகிறது. ஜவுளித்துறை, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதித் துறையில் சுமார் 10 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இதுபோல், ஒவ்வொரு துறையிலும் லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்துள்ளனர். பொருளாதாரப் புத்துயிர் திட்டங்கள் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டுள்ளன. இதன் பயனாக எந்த அளவு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அண்மையில் வெளிவந்துள்ள "நவ்க்ரி டாட் காம்' ஆய்வு முடிவுகள் நம்பிக்கையூட்டுவதாக உள்ளன. பொறியியல், கட்டுமானப்பணி, மருத்துவம், மருந்து தயாரிப்பு, தொலைத்தொடர்பு ஆகிய துறைகளில் நடப்பாண்டில் புதிய அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது. வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், நிதி சேவை நிறுவனங்கள் அடுத்த 6 மாதங்களில் சென்னையில் 12 சதவீதம் கூடுதலாக புதிய அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதேபோல், மும்பையில் 13 சதவீதம், பங்களூரில் 10 சதவீதம், பூனேயில் 15 சதவீதம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் மேற்கூறிய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இவை ஓரளவு ஆறுதல் அளித்தாலும், இது யானைப் பசிக்கு சோளப்பொறி போன்றதுதான்! உலக வங்கியின் சமீபத்திய ""வறுமையும் வேலைவாய்ப்பும்'' என்ற தலைப்பிலான அறிக்கையில் காணப்படும் தகவல்கள் சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளன. ""வறுமையை ஒழிப்பதில் வேளாண்மை இன்றளவும் முக்கியப் பங்கு வகிக்கிறது'' என்பதே அந்த அறிக்கையின் மையக் கருத்து. வறுமையை ஒழிப்பதிலும், வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும், வேளாண் மேம்பாட்டுத் திட்டங்களின் பங்களிப்பு 19.8 சதவீதம் ஆகும் என்று உலக வங்கி தெரிவிக்கிறது. நல்லவேளையாக, புதிய பட்ஜெட்டில், வேளாண் துறை மேம்பாட்டுக்கும், ஊரகப் பகுதி மேம்பாட்டுக்கும் கணிசமாக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதுபோல், கிராமப்புற வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ. 2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவையெல்லாம் கிராமப்புற வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கலாம். அதேபோல் நாடு முழுவதிலும் நகரப் பகுதியில் வசிக்கும் ஏழைகளுக்கு வீட்டு வசதியை உறுதி செய்ய மத்திய அரசு நடப்பு நிதி ஆண்டில் 15 லட்சம் வீடுகள் கட்டுவதற்குத் திட்டமிட்டுள்ளது. இப்போது நாடு எதிர்கொண்டுள்ள பெரிய சவால், 8 முதல் 9 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி இருந்தபோதே, வேலைகள் போதிய அளவில் உருவாகவில்லையே; தற்போது 6.7 சதவீத வளர்ச்சி உள்ள நிலையில், புதிய வேலைகளை உருவாக்க வேண்டும் என்பதே. மிகவும் மதிக்கப்படும் பொருளாதார நிபுணரும், பிரதமருக்கு பொருளாதார ஆலோசனை வழங்கும் உயர்நிலைக் குழுவின் முன்னாள் தலைவருமான சி. ரங்கராஜன் எழுதியுள்ள ஓர் ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள விஷயம் இங்கு நினைவுகூரத்தக்கது: ""நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு 8.5 சதவீதமாக இருந்து, விவசாய வளர்ச்சி வீதம் 2 சதவீதமாக மட்டுமே இருக்குமானால், வேலைவாய்ப்பு வளர்ச்சி நாட்டின் முழுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு 2017-ம் ஆண்டுவரை காத்திருக்க வேணடும்'' என்பதே அது. வேளாண் வளர்ச்சி 4 சதவீதமாக உயர்த்தப்படும் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும் அது தற்போதைய நிலையில் சாத்தியம் அல்ல என்பது கண்கூடு. எனவே, 6.7 சதவீதம் வளர்ச்சி, குறைந்தபட்சம் 8.5 சதவீதமாக உயர்ந்தால் மட்டுமே இன்னும் 8 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு வளர்ச்சி, நாட்டின் முழுத் தேவையைப் பூர்த்தி செய்திட முடியும். உலக அளவில் பொருளாதாரத் தேக்க நிலை மறைந்தால் மட்டுமே இது சாத்தியம் ஆகும். இப்போது நாம் செய்யக்கூடியது இதுதான்: ஊரகப் பகுதி மேம்பாட்டுக்கு முனைப்பு காட்டும் அதேநேரம், இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ள சில துறைகளான உணவுப்பதனிடுதல், பருத்தி ஜவுளி, ஆயத்த ஆடைகள், தோல் பொருள்கள், ஆபரணக் கற்கள், அடிப்படை ரசாயனம், ரப்பர், பிளாஸ்டிக், நிலக்கரி, உலோகப் பொருள்கள், இயந்திரங்கள், போக்குவரத்து சாதனங்கள், மோட்டார் வாகனங்கள் ஆகிய துறைகளில் துரித வளர்ச்சிக்கும், ஏற்றுமதிக்கும் உகந்த வகையில் சிறப்புப் பொருளாதார புத்துயிர் ஊட்டும் திட்டங்கள் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் பிற நாடுகளுடன் போட்டியிடும் வகையில் வரிச்சலுகை அளிப்பது அவசியம். எந்தெந்த தொழில்களுக்கு சலுகைகள் அளிப்பதன்மூலம் அவற்றின் ஏற்றுமதி பெருகும், மற்ற நாடுகள் அந்தத் தொழில்களுக்கு அளிக்கும் சலுகைகள் என்ன என்ற விவரங்களைச் சேகரித்து அதன் அடிப்படையில் அரசின் அணுகுமுறை அமைய வேண்டும். இப்போதுள்ள தேக்க நிலையில் இத்துறையினருக்கு நம்பிக்கை ஊட்டுவது மிகவும் முக்கியம். அரசு அவர்களுக்குப் பக்கபலமாக இருக்கிறது என்ற உணர்வை அவர்களுக்கு ஊட்டிட வேண்டும். அப்போதுதான் இருக்கும் ஊழியர்களையும், அலுவலர்களையும் குறைக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கமாட்டார்கள். மாறாக, புதிய ஆர்டர்கள் கிடைக்கும், புதிய ஆள்கள் தேவை என்ற எண்ணம் தோன்றும். அதேநேரம், குறைந்த முதலீட்டில் நிறைந்த வேலைவாய்ப்புகள் தரக்கூடிய சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு முன்எப்போதையும்விட அதிக அளவில் உத்வேகம் அளிக்கும் சலுகைகளை மத்திய அரசும் பாரத ரிசர்வ் வங்கியும் வழங்க முன்வர வேண்டும். இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 39 சதவீதம் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் கூடங்களிலிருந்துதான் கிடைக்கிறது. ஏற்றுமதியில் அவர்களது பங்களிப்பு 33 சதவீதம் ஆகும்; வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் அவர்களது பங்களிப்பு 35 சதவீதம். இதை ஒரு கணமும் மறக்கலாகாது. வேலைவாய்ப்புகள் உருவாக்கும் திட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்களை இணைப்பது நல்ல பலன் அளிக்கும். இந்த மாபெரும் வேள்வியில் வங்கிகள் தங்கள் பங்கை அளிக்க முன்வர வேண்டும். பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்வதற்கு சிறந்த வழி, நல்ல நல்ல தொழில் முனைவோருக்கு வங்கிக் கடன்களை உரிய நேரத்தில், உரிய அளவில் கொடுத்து உதவுவதுதான். அவ்விதம் செய்வதன் மூலம் பொருளாதாரம் புத்துயிர் பெறும்; தொழில் செழிக்கும்; வேலைவாய்ப்புகள் உருவாகும்.