கட்டுரைகள்

சரித்திரம் படைக்கட்டும்

""மக்களவைத் தலைவராக போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மீராகுமார் (64). அரசமைப்புச்சட்ட உயர் பதவிகளில் ஒன்றான இந்தப் பதவியை அலங்கரிக்கும் முதல் பெண்மணி,

வெ. இன்சுவை

""மக்களவைத் தலைவராக போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மீராகுமார் (64). அரசமைப்புச்சட்ட உயர் பதவிகளில் ஒன்றான இந்தப் பதவியை அலங்கரிக்கும் முதல் பெண்மணி, அதுவும் தலித் பெண்மணி என்கிற பெருமை பெற்று சரித்திரம் படைத்துவிட்டார்'' என்று நாளேடுகள் எழுதின. எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தோம். தூதரகப் பணியால் கிடைத்த நிர்வாகத் திறமையும் நாடாளுமன்றத்தில் 25 ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதியாக இருந்ததும், மத்திய அமைச்சராகப் பணியாற்றிய அனுபவமும் அவருக்குக் கைகொடுக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

"நடுநிலை பிறழாமல் நின்று அவையை நடத்திச் செல்வேன்' என்று அவர் நம்பிக்கையுடன் கூறியுள்ளார். நீண்டகாலமாகக் கிடப்பில் உள்ள மகளிர் மசோதா நிறைவேறுமா? என்று பலரும் கேட்கிறார்கள். இதைவிட மிக முக்கியமான கேள்வி நம்மிடம் எழுகிறது. இவரால் இச் சபை உறுப்பினர்களை அமைதியாக ஒழுங்காக நடந்து கொள்ள வைக்க முடியுமா? மிக மிக மென்மையாகத் தோன்றும் இவரால் காட்டுக் கூச்சல்களை மீறி உரக்கப் பேச முடியுமா?

ஏனோ, பயமாக இருக்கிறது. காரணம் - நாம் இதற்கு முன் பார்த்துள்ள "திகில்' நிறைந்த நாடாளுமன்றக் காட்சிகள். நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்து கொண்டுள்ள விதத்தைப் பார்த்து நாடே அவமானத்தில் சிறுத்துப் போனது. அடிக்கடி அந்த அவையின் பெருமைக்குக் களங்கம் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

உறுப்பினர்களிடையே எந்தவிதக் கட்டுப்பாடும், ஒழுங்கும் இருந்தது இல்லை. கூச்சலும், குழப்பமும் நிலவுவது அன்றாட வாடிக்கையாகிவிட்டிருக்கிறது. அவையைக் கட்டுப்படுத்த முடியாமல் முன்னாள் அவைத் தலைவர்கள் திணறிப் போனார்கள். அவையை ஒத்தி வைப்பதே அவர்களது வாடிக்கையான செயலாக இருந்தது. அனைவரையும் அமைதி காக்கச் சொல்லி மன்றாடுவார்கள். ஆனால் பலன் இருக்காது. வகுப்பைக் கட்டுப்படுத்த முடியாத ஆசிரியரின் நிலையில் அவர்கள் இருந்தனர். அவைத் தலைவரின் பேச்சுக்குக் கூட செவி சாய்க்காதவர்களிடம் இந்த நாடு ஒப்படைக்கப்பட்டிருக்கிறதே, மனது வலித்தது.

மாறுபட்ட கருத்துகள் இருப்பதில் தவறேதும் இல்லை. ஆனால் அதை வெளிப்படுத்துவதில் சபை நாகரிகம் வேண்டாமா? எல்லோரும் ஒரே சமயத்தில் கத்துகிறார்கள். தரக்குறைவான வார்த்தைகளைப் பேசுகிறார்கள். மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியும். ஆனால் அதைப் பற்றியெல்லாம் சிந்திக்கக்கூட அவர்களுக்கு நிதானம் இல்லை. மக்களின் பிரச்னைகளைப் பேசுவதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டவர்கள் அவையின் மரபை உத்தேசித்தாவது தங்களின் இயல்பான குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டாமா?

சபையில் "அமளி துமளி', "கலவரம்' "வெளிநடப்பு' "கை கலப்பு' இதெல்லாம்தான் நாம் கேட்கும், படிக்கும் காணும் காட்சிகளேயொழிய அங்கே ஆக்கபூர்வமான விவாதமோ பிரச்னைகளுக்குத் தீர்வோ - எதுவும் நடைபெறுவது எப்போதாவதுதான். பிரச்னை எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் - கோபம் யார்மீது வேண்டுமானாலும் இருக்கட்டும் - அவற்றை வெளிப்படுத்தும் விதத்தில் நாகரிகம் இருக்க வேண்டும்.

உறுப்பினர்கள் அனைவருமே வயதிலும், அனுபவத்திலும் முதிர்ந்தவர்கள். அந்த முதிர்ச்சி அவர்களின் செயல்களில் இருக்க வேண்டுமேயொழிய, உணர்ச்சிவயப்படக் கூடாது. எதிர்ப்பை கத்தி, கலாட்டா செய்துதான் காட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்களுக்கு நாம் எவ்வளவு மரியாதை தருகிறோம்! அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் எந்த அசம்பாவிதமும் இன்றி நல்லபடியாக நடந்து முடிய வேண்டும் என்று காவல் துறையினரும், உயர் அதிகாரிகளும் எவ்வளவு விழிப்புடன் இருக்கிறார்கள்! நிகழ்ச்சிகளில் ஏதாவது குற்றம், குறை இருந்தால் அரசியல்வாதிகள் நிகழ்ச்சி அமைப்பாளரைச் சும்மா விடுவார்களா? ஆனால் அவையில் மட்டும் கண்ணியத்தைக் கடைப்பிடிக்காமல் பாமரர்கள் போல் நடந்து கொள்கிறார்களே!

ஒருவர், தான் சார்ந்துள்ள அரசியல் கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். ஆனால் அந்த விசுவாசத்தை வன்முறையில் இறங்கித்தான் காட்ட வேண்டுமா? அவையை நடத்தவிடாமல் செய்வது ஒரு சாதனையா? நம் வரிப்பணம் பாழாய்ப் போகிறதே என்பது நம் வேதனை.

சபைக்கு வரும்போதே, அன்று ரகளை செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டுதான் வருவார்களோ, என்னவோ? இவர்கள் அடித்துக் கொள்வதை அப்படியே படம்பிடித்து, பின் இவர்களை உட்கார்த்தி வைத்து முழுக்கூட்டத் தொடர் லட்சணத்தையும் பார்க்க வைக்க வேண்டும். அப்போதுதான் அவர்களே வெட்கித் தலைகுனிவார்கள். கண்ணியமாக நடந்து கொள்ளத் தெரியாதவர்களை வேறு எப்படித் திருத்துவது?

பிரச்னைகளை ஆணித்தரமாக விவாதிக்கட்டும். ஒருவர் பேசும்போது, கத்திக் கூச்சலிடாமல், மேசையைத் தட்டாமல் அவர் பேசுவதைக் கேட்க வேண்டும். அதன்பின், அவைத் தலைவரின் அனுமதி பெற்று, அக்கருத்தை மறுக்கவோ அல்லது எதிர்கேள்வி கேட்கவோ செய்யலாம். அப்போதுதான் அவை அமைதியாக நடக்கும். அவைத்தலைவரின் பணியும் இனிமையானதாக இருக்கும். ஆனால் எத்தனை தடவை சொன்னாலும் அமைதி காக்காவிட்டால் உறுப்பினர்களை எப்படிக் கையாள்வது?

ஆண்களே சளைத்துப் போன பதவி இது. சே! என சலித்துக் கொள்ளத் தோன்றும் பதவி இது! இப்போது என்ன செய்யப் போகிறார் நம் புதிய பெண் அவைத் தலைவர்? ஒருவித அச்சம் கலந்த உணர்வு நம்முன் எழத்தான் செய்கிறது. சாதாரணமாக பெண்கள் இரு சக்கர வாகனம் ஓட்டிச் சென்றாலே, நம் விடலைப் பையன்களுக்குப் பொறுப்பதில்லை. தங்கள் வாகனத்தை அதிவேகமாக ஓட்டிக் கொண்டும், சப்தமெழுப்பிக் கொண்டும் அவர்கள் அருகில் மோதுவதுபோல் வந்து பயங்காட்டி, அவர்களை நிலைதடுமாறச் செய்து மகிழ்ந்து போகிறார்கள். எனவே தான் கொஞ்சம் கலக்கமாக இருக்கிறது.

நாம் சுதந்திரம் அடைந்து 61 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுவிட்டது. தொழில் பெருகி உள்ளது. தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது என புள்ளி விவரங்களைக் கேட்டு புளகாங்கிதம் அடைகிறோம். ஆனால் நாம் செய்ய வேண்டியவை ஏராளம். ஏராளம். ஆக்கபூர்வமான சிந்தனைகளும் அதற்கான செயல்திட்டங்களும் நம் உடனடித் தேவைகளாக இருக்கும்போது நம் அரசியல்வாதிகள் மோசமாக நடந்து கொள்ளலாமா?

ஒரு பெண்மணியால் சீறி எழவும் முடியும். பொங்கி எழவும் முடியும். நம் புதிய அவைத் தலைவரின் நெடிய அரசியல் அனுபவம் கண்டிப்பாக அவருக்கு உறுதுணையாக இருக்கும். போட்டியின்றி ஒரு மனதாக அனைவராலும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எனவே உறுப்பினர்கள் அவைரும் இடையூறு இன்றி அவையை நடத்த அவருக்கு உதவ வேண்டும். பெண்கள் பலவீனமானவர்கள் என்பதை உணர்த்தும் சம்பவங்கள் நிகழாமல் இருக்கட்டும்.

மக்களவைத் தலைவராக தேர்வாகிய முதல் பெண்மணி என்ற சாதனையைவிட அவையை அமைதியாக, ஒழுங்காக நடத்திச் சென்ற முதல் மக்களவைத் தலைவர் என்ற சாதனையை நிகழ்த்தி அவர் ஒரு சரித்திரமாகட்டும். அதற்குரிய ஆன்ம பலம் அவருக்குக்கிட்ட பல்லாயிரம் இந்தியப் பிரஜைகள் பிரார்த்திப்பார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

SCROLL FOR NEXT