முகப்பு
கட்டுரைகள்

நிலை தடுமாறும் ஊடகத்துறை...

பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் நடைப்பிணங்களாய் கையேந்தி நின்றுகொண்டிருக்கிறார்கள்; ஒரு வேளை கஞ்சிக்கு, ஒரு வாளி தண்ணீருக்கு. சின்னச்சின்ன கூடாரங்களில் அஞ்சி ஒடுங்கிக்கிடக்கிறார்கள

Updated On : 20 செப்டம்பர், 2012 at 7:25 PM
பகிர்:

பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் நடைப்பிணங்களாய் கையேந்தி நின்றுகொண்டிருக்கிறார்கள்; ஒரு வேளை கஞ்சிக்கு, ஒரு வாளி தண்ணீருக்கு. சின்னச்சின்ன கூடாரங்களில் அஞ்சி ஒடுங்கிக்கிடக்கிறார்கள்; வெட்டவெளியில், பொட்டல் காட்டில்; சூழ்ந்திருக்கும் ராணுவத்தினரின் கொடிய சந்தேக நடவடிக்கைகளுக்கும் கூரிய வேலிக்கும் நடுவே.

  இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா "நலன்புரி நிலையங்க'ளிலிருக்கும் தமிழர்களின் நிலைக்கும் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டிலிருக்கும் முள்ளிவாய்க்கால் "பாதுகாப்பு வளைய'த்திலிருக்கும் தமிழர்களின் நிலைக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

  இயற்கை உபாதைகளைக் கழிக்கக்கூட ஒதுங்குமிடம் ஏதுமின்றி வவுனியாவும் முள்ளிவாய்க்காலும் மனிதர்களால் நிரம்பி வழிகின்றன. ஆனால், குண்டுகள் சத்தமும் மனிதக் கூக்குரலும் ஓய்வின்றி ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.

Advertisement

  உலகின் அத்தனை நாடுகளின் கண்களும் பார்த்திருக்க இப்படியோர் அவலம் மாதக் கணக்காய் தொடர்வதைவிடவும் சர்வதேச நாடுகளுக்கும் சர்வதேச அமைப்புகளுக்கும் ஒரு கேவலமுமில்லை.

  இதன் பின்னணியில் உள்ள நாடுகள், அரசியல்வாதிகள், அரசியல் சூட்சமங்கள், தேர்தலை முன்வைத்து அரசியல்வாதிகள் நடத்திவரும் நாடகங்கள் எல்லாவற்றையும் நாம் எல்லோருமே அறிந்திருக்கிறோம். எனினும், இதனால் விரக்தியடைந்துவிட முடியாது.

  நவீன அரசியல் அகராதியில் மனிதநேயம், மனித உரிமைகள் போன்ற வார்த்தைகளுக்கெல்லாம் நேரடியான அர்த்தம் ஏதும் கிடையாது. எல்லாமே ஆதாயம் சார்ந்த விஷயங்கள்தான். ஆகையால், அரசியல்வாதிகளிடம் இவையெல்லாம் எதிர்பார்க்கக் கூடியவைதான்.

  ஆனால், சமகாலத்தின் மிகப் பெரிய வரலாற்றுத் துயரமான இந்த மனிதப் பேரவலத்தை ஊடகங்கள் குறிப்பாக, இந்திய ஊடகங்கள் வெளிப்படுத்திவரும் விதம் மிகுந்த அதிர்ச்சியையும் வெட்கத்தையும் ஏற்படுத்துகின்றது.

  இலங்கை விவகாரத்தைப் பொருத்த அளவில் ஊடகத்துறையினரின் செயல்பாடு எப்போதுமே விமர்சனத்துக்குரியதாகவே இருந்துவந்திருக்கிறது. காரணம், தாக்குதல்கள் நிகழும் பகுதியான தமிழர்கள் வாழ்விடங்களுக்கும் ஊடகத் துறையினருக்கும் உள்ள இடைவெளி.

  இலங்கையில் உள்ளூர் ஊடகவியலாளர்களும் சரி, சர்வதேச ஊடகவியலாளர்களும் சரி. ஆகப் பெரும்பான்மையினர் தலைநகர் கொழும்பிலேயே தங்கியிருக்கின்றனர். எந்தவொரு தகவலுக்கும் இவர்கள் அரசுத் தரப்பினரையே நம்பியிருக்கிறார்கள். தவிர, தங்களுடைய நலனுக்கும் பாதுகாப்புக்கும் அரசையே சார்ந்திருக்கிறார்கள்.

  ஆகையால், அரசும் ராணுவமும் வெளியிடும் தகவல்களை அடிப்படையாகக்கொண்டே ஊடகத் துறையினர் செய்திகளை வெளியிடுகின்றனர். இதனால், அரசின் குரலை ஊடகத் துறையினர் அப்படியே எதிரொலிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எப்போதுமே உண்டு.

  ஆனால், இப்போது ஊடகவியலாளர்களுக்கு வேறு வகையான ஆதாரங்கள் இருக்கின்றன. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கையில் எடுத்திருக்கும் ஈழத் தமிழர்கள் புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்படும் இணைய தளங்கள் வாயிலாக போர்ச் செய்திகளையும் படங்களையும் உடனுக்குடன் வெளியிடுகின்றனர். அரசு தரப்பிலிருந்து வெளியாகும் எந்தவொரு செய்தியின் மறுபக்கமும் இவர்கள் மூலம் அடுத்த சில நொடிகளில் வெளியாகிவிடுகிறது.

  ஒரு நல்ல ஊடகவியலாளரால் இந்த இரு தளங்களிலிருந்தும் வரும் தகவல்களின் வாயிலாக உண்மையான செய்தியை ஓரளவுக்கு யூகிக்க முடியும். நடுநிலையோடு செய்திகளை அளிக்க முடியும். ஆனால், ஊடகத்துறையோ மிக அலட்சியமாக இப்பிரச்னையைக் கையாள்கிறது.

  தேர்தல் அறிவிப்பு வெளியாகும் வரை இந்திய ஆங்கில பத்திரிகைகளும் 24 மணி நேர செய்தி தொலைக்காட்சி நிறுவனங்களும் இலங்கைப் போரை கொஞ்சம்கூட பொருட்படுத்தவில்லை. அரசியல்வாதிகளைப்போலவே தேர்தலையொட்டி இப்போது இலங்கையைக் கையிலெடுத்திருக்கின்றன. ஆனால், இப்போதும்கூட இந்த விவகாரத்தை விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தொடர்பான ஒரு செய்தியாகவே அணுகுகின்றன.

  இந்த அணுகுமுறை சரியல்ல. ஈழப் போராட்டம் என்பது ஒரு வரலாறு. இப்போது அது அதன் முக்கியமான ஒரு கட்டத்தை அடைந்திருக்கிறது. ஆனால், ஒட்டுமொத்த வரலாற்றையும் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கும் மனிதப் பேரவலத்தையும் புறந்தள்ளிவிட்டு ஒரு தனிப்பட்ட மனிதர் சார்ந்த பிரச்னையாக ஈழப் போரைச் சித்திரிப்பது சரியன்று.

  ஊடகத் துறையின் தொழில் தர்மம் எங்கே போனது? அதன் உயர்ந்த மாண்புகளும் தார்மிகக் கடமைகளும் எங்கே வீழ்ந்தன? பிடிப்பான நம்பிக்கைகள் மளமளவென சரியும் தருணத்தில் வெட்கித் தலைகுனிவதைத் தவிர வேறு வழியில்லை; எவருக்கும்!

  ஒரு இனப்படுகொலை நடந்துகொண்டிருக்கிறது. இறந்துகொண்டிருப்பது யார், அவருக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன, கொலைக்கான பின்னணி என்ன என்கிற தர்க்க நியாயங்களெல்லாம் கிடக்கட்டும். ஓர் உயிர் அழிந்துகொண்டிருக்கிறது; அதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்கிற குறைந்தபட்ச பிரக்ஞையைக்கூடவா ஊடகத்துறை இழந்துவிட்டது?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.