அந்த "நூறு நாள்கள்'!
2009 ஏப்ரல் 16 தொடங்கி மே 13 வரை ஐந்து கட்டங்களில் 15-வது நாடாளுமன்ற மக்களவைக்குப் பொதுத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் மன்மோகன் சிங், தேர்தலில் வெற்றி பெற்றால்
2009 ஏப்ரல் 16 தொடங்கி மே 13 வரை ஐந்து கட்டங்களில் 15-வது நாடாளுமன்ற மக்களவைக்குப் பொதுத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் மன்மோகன் சிங், தேர்தலில் வெற்றி பெற்றால் நூறு நாள்களில் செய்யப்போகும் பிரம்மாண்டமான சாதனைகளின் பட்டியலை அசாம் தலைநகர் குவாஹாட்டியில் அறிவித்தார். ""இந்தியப் பிரதமர் இவ்வளவு முக்கியமான அறிவிப்பை அசாம் தலைநகரில் ஏன் வெளியிட்டார்?'' என்ற கேள்வி சிலருக்கு ஏற்பட்டிருக்கும். 1991-ல் பி.வி. நரசிம்ம ராவ் பிரதமராக ஆனதும், ஜுன் 21-ல் நிதியமைச்சராக மன்மோகன் சிங் நியமிக்கப்பட்டார். அப்பொழுது அவர் நாடாளுமன்றத்தின் எந்த அவையிலும் உறுப்பினராக இல்லாத காரணத்தினால், அப்பொழுது அசாமில் இருந்து மாநிலங்களவையில் காலியான ஓரிடத்துக்கு மன்மோகன் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து 1995, 2001, 2007-ம் ஆண்டுகளில் அவர் அசாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். அந்தவகையில் அசாம் மாநிலத்திலிருந்து தேர்தல் காலத்திய வாக்குறுதியாக, தாம் பிரதமரானால் "நூறு நாள்களில்' செய்யப்போகும் அரும்பெரும் சாதனைகளைத் தெரிவித்தார்.
மன்மோகன் சிங் அளித்த "நூறு நாள்' வாக்குறுதியில் முக்கியமானவை: 1. நாட்டு வருமானத்தை 9 - 10 சதவிகிதம் வரை உயர்த்துவது. 2. பொருளாதார நெருக்கடியை நீக்கி வேலை வாய்ப்புகளைப் பெருக்குவது. 3. வெளிநாட்டு வங்கிகளில் முடங்கிக் கிடக்கும் இந்தியாவின் கருப்புப் பணத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது.
தேர்தல் காலத்தில் வெளியிடப்படும் பல்வேறு வாக்குறுதிகள், தேர்தல் முடிந்து பதவியேற்றதும் மறக்கப்பட்டுவிடும் என்பது அரசியலில் இயல்பான ஒன்று. 2009 தேர்தலையொட்டித் தந்த வாக்குறுதிகளைவிட, இன்னும் அதிகமான அளவில் 2004 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வாக்குறுதிகள் தரப்பட்டிருந்தன. அந்தத் தேர்தலின் முடிவில் தனிப்பட்டு, நாடாளுமன்ற மக்களவையில் பெரும்பான்மை பலத்தைப் பெறாத காங்கிரஸ் கட்சி இதர 14 கட்சிகளின் ஆதரவுடன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சி அமைத்ததுடன், தேசிய குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டங்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டது.
2004-ல் கூட்டணியில் இருந்த பல கட்சிகள் வெளியேறிய நிலைமையில், 2009 தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைந்துவிட்டது என்பதற்கான கருத்துக் கணிப்புகள் வெளிவந்த தருணத்தில், புதிய ஆதரவுகளைத் தேட காங்கிரஸ் தலைவர்கள் முற்பட்டார்கள். பிகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமாரையும், தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவையும் பாராட்டிப் பேசிய காங்கிரஸ் கட்சியின் எழுச்சிமிக்க இளைய தலைவரான ராகுல் காந்தி, அவர்களை ஏற்றுக்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாக வெளிப்படையாகப் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
ஆனால், 2009 தேர்தல் முடிவுகள் பலவிதத்தில் எதிர்பாராமல் வந்தன. எதிர்பார்த்ததைவிட அதிகமான இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அதற்கு மாறாக, எதிர்பார்த்ததைவிட மோசமான நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிகள் தோல்வியடைந்தன. தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸின் ஆதிக்கம் வலுவடைந்தது. 2004-ல் வெளியிட்டதைப்போல கூட்டணிக் கட்சிகளை அழைத்து குறைந்தபட்ச செயல்திட்டம் போட காங்கிரஸ் கட்சி முன்வரவில்லை.
நூறு நாள்களில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி, வேலை வாய்ப்புகளைப் பெருக்கி, முடக்கப்பட்டுக் கிடக்கும் கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவதற்கான திட்டங்களைச் செயல்படுத்தப்போவதாகக் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெளிவந்து ஏழு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் 2009 மே 22-ல் மத்தியில் ஆட்சி அமைத்து 150 நாள்களுக்கும் மேல் கடந்துவிட்டது. ஆனால், பிரதமர் வாக்குறுதி தந்த "அந்த நூறு நாள்கள்' ஏன் இன்னும் வரவில்லை?
2004 பொதுத் தேர்தலில் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று 2009 தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி பலவாறு கூறியுள்ளது. ஆனால், அந்த முக்கியமான வாக்குறுதிகளை அதன் கடந்த ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் - 1800 நாள்களுக்கு மேலாக இருந்தும், நிறைவேற்றத் தவறிவிட்டது.
இந்தியப் பொருளாதார அமைப்பில் முதுகெலும்பாக இருக்கும் விவசாயத்தை நம்பி நாட்டின் மொத்த மக்கள்தொகையில் பாதிக்கு மேல் வாழ்கிறார்கள். 2004-ல் காங்கிரஸ் கூட்டணி வெளியிட்ட குறைந்தபட்ச செயல்திட்டத்தில் விவசாயத்துறைக்குத் தேவையான முதலீடு, நிதி உதவி, தொழில் வளர்ச்சிக்கான கட்டமைப்பு ஆகியவைகளுக்கு முதலிடம் தருவதாகக் கூறப்பட்டிருந்தது. விவசாயத்துறைக்குத் தரப்பட்ட மொத்த முதலீட்டு அளவு நாட்டின் மொத்த வருமான அளவில் 2001 - 02-ல் இருந்த 2.9 சதவிகிதம் 2007 - 08-ல் 2.5 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. நாட்டின் 60 சதவிகித மக்களின் உயிர்நாடியாக இருக்கும் விவசாயத்துறைக்குத் தேவையான முதலீடுகள் அனைத்துக்கும் முதலிடம் தருவோம் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 2004-ல் அளித்த வாக்குறுதி அடியோடு பொய்த்துவிட்டது.
வங்கிகளில் விவசாயிகள் பட்ட கடன் பளுவைவிட, தனிப்பட்ட வட்டிக்கடைக்காரர்களிடம் பட்ட கடன்தான் அதிகம் இருக்கும். விவசாயிகளின் கடன் தள்ளுபடித் திட்டத்தின்கீழ் சென்ற ஆண்டு 71 ஆயிரம் கோடி ரூபாய் அளித்தது பற்றி வெகுவாகப் பேசப்படுகிறது. ஆனால், அது அரசாங்கக் கருவூலத்திலிருந்து கடன் தந்த தேசிய வங்கிகளின் கணக்குக்குச் செய்யப்பட்ட பணப்பரிமாற்றமே தவிர, விவசாயத் தொழிலைச் செம்மைப்படுத்தப் பயன்படவில்லை. கடன் தள்ளுபடித் திட்டத்தைவிட, மற்ற தொழில்களைப்போல தன்னிறைவு பெறும் வகையில் கடன்படாத நிலைமைக்கு விவசாயத்தொழிலை அரசாங்கம் வலுவடையச் செய்திருக்க வேண்டும்.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் பெரும்பாலாக மத்திய ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி போட்ட திட்டங்களும், நிறைவேற்றிய பயன்பாடுகளும் இந்திய விவசாயத்தைப் பாதுகாக்க முற்றிலும் தவறிவிட்டன. ஐந்தாண்டு திட்டங்களில் விவசாயத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகையின் அளவு வேகமாகக் குறைந்து, உலகளாவிய பொருளாதாரத் திட்டத்தின்கீழ் நாட்டின் மொத்த வருமானம் 6, 7, 8 சதவிகிதமென பெருகினாலும், கடந்த பத்தாண்டு காலத்தில் விவசாயத்துறையின் வளர்ச்சி ஆண்டுக்கு 2 சதவிகித அளவுக்குக் குறைந்துவிட்டது. வருமானம் இல்லாமல் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாகி நாட்டுக்கு உணவு அளித்த விவசாயிகள் உண்ண உணவின்றி, பசியால், பஞ்சத்தால் முழக்கயிறைத் தேடி, நஞ்சு உரத்தை நாடி தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அண்மையில் வெளிவந்த மதிப்பீடுகளின்படி கடந்த 12 ஆண்டுகளில் 2 லட்சம் விவசாயிகள் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டனர். மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் வெளியிட்ட தகவலின்படி விவசாயிகளின் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.
2004-ல் காங்கிரஸ் ஆட்சியின் குறைந்தபட்ச திட்டத்தில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டதில், குறிப்பாக, தனது ஐந்தாண்டுகால ஆட்சியில் நாட்டின் மொத்த வருமானத்தில் கல்விக்கு 6 சதவிகிதமும், சுகாதாரத்துக்கு 2 முதல் 3 சதவிகிதமும் செலவிடப்போவதாகக் கூறப்பட்டது. தற்பொழுது அரசாங்கம் வெளியிட்டுள்ள 2008 - 09 பொருளாதார ஆய்வறிக்கை பின்வரும் விவரங்களைத் தந்துள்ளது.
2004 - 05-ம் ஆண்டில் கல்விக்கு 2.67 சதவிகிதமும், சுகாதாரத்துக்கு 1.19 சதவிகிதமும்; 2005 - 06-ம் ஆண்டில் கல்விக்கு 2.69 சதவிகிதமும், சுகாதாரத்துக்கு 1.27 சதவிகிதமும்; 2006 - 07-ம் ஆண்டில் கல்விக்கு 2.78 சதவிகிதமும், சுகாதாரத்துக்கு 1.26 சதவிகிதமும்; 2007 - 08-ம் ஆண்டில் கல்விக்கு 2.87 சதவிகிதமும், சுகாதாரத்துக்கு 1.41 சதவிகிதமும்; 2008 - 09-ம் ஆண்டில் கல்விக்கு 3.02 சதவிகிதமும், சுகாதாரத்துக்கு 1.41 சதவிகிதமும் செலவிடப்பட்டது.
மொத்த நாட்டு வருமானத்தில் கல்விக்கு 6 சதவிகிதம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தாலும், கடந்த ஐந்தாண்டுகால மன்மோகன் சிங் ஆட்சியில் அதிகபட்சமாக 3.02 சதவிகிதத்திலேயே நின்றுவிட்டது. அதேபோல், 2-3 சதவிகிதம் வரை சுகாதாரத்துக்குச் செலவிடப்படும் என்று தரப்பட்ட வாக்குறுதி 1.41 சதவிகித அளவிலேயே முடங்கிவிட்டது. நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கும், நல்வாழ்வுக்கும் இன்றியமையாத கல்வி, சுகாதாரம் ஆகிய இரண்டு துறைகளைப் புறக்கணித்து மன்மோகன் சிங் அரசாங்கம் மன்னிக்க முடியாத மாபெரும் தவறைச் செய்து வருகிறது. குறைந்தபட்ச திட்டத்தின்கீழ் பெரிய வாக்குறுதிகள் தரப்பட்டாலும் அவற்றில் மிகக்குறைவாகவேனும் நிறைவேற்றுவதற்கான அக்கறையும், திறமையும் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு இல்லை.
வெளிநாட்டு வங்கிகளில் பெருமளவில் புதைந்து கிடக்கும் இந்தியக் கருப்புப் பணத்தை மீட்க, தக்க நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக பிரதமர் மன்மோகன் சிங் மிகவும் ஆரவாரத்துடன் தேர்தலின்போது முழங்கினார். ஆனால், இதுவரை கருப்புப் பணக்காரர்களின் பாதுகாவலராகத்தான் காங்கிரஸ் கட்சி இருந்து வருகிறது.
1987-ல் போபர்ஸ் ஊழல் பற்றிய விவரங்கள் பரபரப்பாக வெளிவந்தன. ஆனால், உடனடியாக அப்பொழுதிருந்த காங்கிரஸ் அரசு எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிறகு வி.பி.சிங். ஆட்சிக் காலத்தில் போபர்ஸ் ஊழல் பற்றி 1990 ஜனவரி 22-ல் சி.பி.ஐ. வழக்குத் தொடுத்தது. 1997-ல் மத்திய புலனாய்வுத் துறை முயற்சியால் போபர்ஸ் ஊழல் பற்றிய முக்கியமான 500 ஆவணங்களை சுவிட்சர்லாந்து வங்கிகளிடமிருந்து பெற்றதன் அடிப்படையில் ஒட்டாவியா குவாத்ரோச்சி, வின் சத்தா, ராஜீவ் காந்தி, பட்நாகர், போபர்ஸ் நிறுவனத் தலைமை அதிகாரி மார்டின் ஆர்ட்போ ஆகியோர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்தது. 2003 ஜுன் மாதத்தில் சி.பி.ஐ. எடுத்த நடவடிக்கைகளால், பி.எஸ்.ஐ. ஏ.ஜி. என்ற சுவிஸ் வங்கியின் லண்டன் கிளையில் குவாட்ரோக்கி, அவர் மனைவி மரியா ஆகிய இருவரின் பெயரில் இருந்த 3 மில்லியன் யூரோவும், 1 மில்லியன் அமெரிக்க டாலரும் சட்டப்படி முடக்கப்பட்டன.
2004-ல் மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி வந்ததும் நிலைமை மாறியது. டிசம்பர் 22, 2005-ல் சட்ட அமைச்சர் ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ் உத்தரவின் பேரில் லண்டன் வங்கியில் முடக்கப்பட்டிருந்த குவாட்ரோக்கி - மரியா தம்பதியர் பணம் விடுவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. நிறுவனத்தைக் கலந்து ஆலோசிக்காமல் சட்ட அமைச்சர் முடிவெடுத்ததாகத் தெரிகிறது. 2009 மே மாதத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், போபர்ஸ் ஊழலுக்கு முடிவுரை எழுதப்பட்டது. செப்டம்பர் 29-ம் தேதி மத்திய அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் குவாட்ரோக்கியின் மீது இந்திய உச்ச நீதிமன்றத்திலிருந்த வழக்கு திரும்பப் பெறப்பட்டது.
வெளிநாட்டு வங்கிகளில் முடங்கிக் கிடக்கும் இந்தியர்களின் கருப்புப் பணத்தைத் திரும்பப்பெற தாம் ஆட்சிக்கு வந்த முதல் நூறு நாள்களில் தக்க நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக மன்மோகன் சிங் அறிவித்திருந்தார். சுவிஸ் வங்கிகளின் சார்பில் அதிகாரபூர்வமாக 2006-ல் தரப்பட்ட புள்ளிவிவரப்படி கீழ்க்கண்ட அளவுக்கு முதல் ஐந்து உலக நாடுகளின் பணம் சுவிஸ் வங்கிகளில் போடப்பட்டுள்ளது. (விவரங்கள் அமெரிக்க டாலர் மதிப்பில் தரப்பட்டுள்ளன. ஒரு மில்லியன் டாலர் என்பது தற்பொழுதுள்ள இந்திய ரூபாயில் 4,710 கோடி)
இந்தியா - $1,456 பில்லியன் (ரூபாய் 68 லட்சத்து 57 ஆயிரத்து 760 கோடி); ரஷியா - $470 பில்லியன் (ரூபாய் 22 லட்சத்து 13 ஆயிரத்து 700 கோடி); இங்கிலாந்து - $390 பில்லியன் (ரூபாய் 18 லட்சத்து 36 ஆயிரத்து 500 கோடி); உக்ரெய்ன் - $100 பில்லியன் (ரூபாய் 4 லட்சத்து 71 ஆயிரம் கோடி); சீனா - $96 பில்லியன் (ரூபாய் 4 லட்சத்து 52 ஆயிரத்து 160 கோடி).
உலகில் செல்வம் குவிந்து கிடக்கும் பெரிய வல்லரசாக உள்ள அமெரிக்காவைச் சேர்ந்த பலரும் சுவிஸ் வங்கிகளில் பணம் போடாமலில்லை.
ஆனால், அமெரிக்க அரசின் கட்டாயத்தினால் சுவிஸ் வங்கிகளில் பணம் போட்ட அமெரிக்கர்களில் ஒரு பகுதியினர் அமெரிக்க அரசாங்கத்துச் செலுத்தியிருக்க வேண்டிய வருமான வரியை அந்த வங்கிகளிடமிருந்து அமெரிக்கா பெற்றது. மீதமுள்ள அமெரிக்கர்களின் சுவிஸ் வங்கிக் கணக்குகள் பற்றிய நடவடிக்கைகளைப் பரிசீலித்து வருகிறார்கள். ஆனால் அதுபோன்ற நடவடிக்கை எதையும் எடுக்க இந்திய அரசாங்கம் தீவிரமாக இருக்குமா என்பது தெரியவில்லை.
லண்டன் சுவிஸ் வங்கிக் கிளையில் சட்டப்படி முடக்கப்பட்டிருந்த ஒரு குவாட்ரோக்கியின் ஊழல் பணத்தை இந்தியாவுக்குத் திரும்பக்கொண்டு வராமல் மன்மோகன் சிங் ஆட்சி தாரை வார்த்தது. அதேபோல், குவாட்ரோக்கி போன்ற பல ஊழல் பேர்வழிகள் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணத்தை மீட்டெடுக்கும் முயற்சியில், தங்களுக்கு வேண்டியவர்களைப் பாதுகாக்கும் மோசடியில் ஈடுபட்டு நாட்டுக்கு மேலும் ஒரு பெரிய துரோகத்தை காங்கிரஸ் ஆட்சியாளர்கள் செய்துவிடுவார்களோ என்ற அச்சம் மக்களுக்கு ஏற்படுகிறது.