முகப்பு
கட்டுரைகள்

மகாத்மாவும்-லோக்நாயக்கும்!

18-2-1940 அன்று ஜாம்ஷெட்பூர் நகரில் நடைபெற்ற தொழிலாளர் கூட்டத்தில் ஆங்கில ஏகாதிபத்தியத்தை அகற்ற வேண்டியதன் அவசியம் பற்றி ஜெயப்பிரகாஷ் நாராயண் (ஜெ.பி. என மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர்) பேசியதற்காக

Updated On : 25 டிசம்பர், 2023 at 3:56 PM
பகிர்:

18-2-1940 அன்று ஜாம்ஷெட்பூர் நகரில் நடைபெற்ற தொழிலாளர் கூட்டத்தில் ஆங்கில ஏகாதிபத்தியத்தை அகற்ற வேண்டியதன் அவசியம் பற்றி ஜெயப்பிரகாஷ் நாராயண் (ஜெ.பி. என மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர்) பேசியதற்காக இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ஆங்கில அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டார்.

ஜெ.பி. கைது செய்யப்பட்டது குறித்து

16-3-1940 "ஹரிஜன்' பத்திரிகையில் மகாத்மா காந்தி பின்வருமாறு எழுதினார்:

""ஜெ.பி. கைது செய்யப்பட்டது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவர் ஒரு சாதாரணமான அரசியல்வாதி அல்ல. சமதருமக் கோட்பாடு பற்றி அவரைவிட அதிகமான விவரம் தெரிந்த அரசியல்வாதி இந்தியாவில் எவரும் இருக்க முடியாது. அவர் ஓர் உயர்தரப் போராட்ட வீரர். நாட்டின் விடுதலைக்காகத் தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் அர்ப்பணித்தவர். சலியாத உழைப்பாளி. அவரைப்போல் சொல்லொணா இன்னல்களையும், வேதனைகளையும் தாங்கிக்கொள்ளும் பகுக்குவம் வேறு யாருக்கும் இருக்க முடியாது. எந்தச் சட்டப்பிரிவின்கீழ் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பதற்கான முழு விவரங்கள் எனக்குத் தெரியவில்லை. ஆட்சியாளர்களுக்குப் பிடிக்காதவர்களை எளிதில் சிறையிலடைப்பதற்கு ஏதுவான சட்டப்பரிவுகளை அரசாங்கம் பயன்படுத்துகிறது என்பது மட்டும் தெரிகிறது. நாம் நடத்தும் விடுதலைப் போராட்டத்துக்கு ஒரு சோதனையை உண்டாக்க அரசாங்கம் முனைந்திருப்பதாகத் தெரிகிறது. இதற்குமுன், முதல் ஒத்துழையாமை போராட்டம் தொடங்கப்படுவதற்கு அலி சகோதரர்களைக் கைது செய்ததுதான் காரணமாக இருந்தது. அதேபோல் தற்பொழுது ஜெ.பி.யை கைது செய்ததும், ஆங்கில ஆட்சியாளர்கள் முன்கூட்டி திட்டமிட்டு, விளைவு தெரியாமல் ஆத்திரத்தில் ஓர் அதிகாரி செய்த குருட்டுத்தனமான செயலாக இருக்கக்கூடும். அப்படி இருந்தால், அதைத் திருத்த அரசாங்கம் முன்வர வேண்டும்.''

மகாத்மா காந்தி இந்த அளவுக்கு வெகுவாக இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் யாரையும் பாராட்டியது இல்லை.

அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான கடும் குற்றச்சாட்டின் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் ஜெ.பி. அதை மறுத்து எதிர் வழக்காடவில்லை. தமது சார்பில் ஓர் அறிவிப்பை மட்டும் நீதிபதியிடம் அளித்தார். தமது நாட்டுக்கு விடுதலை பெறவும், மக்களாட்சி முறை மலரவும் தாம் எடுக்கும் முயற்சிகள் எதுவும் குற்றமற்றவை என்ற ஜெ.பி. மேலும் இவ்வாறு கூறினார். ""நடைபெறும் உலகப்போரில் ஜெர்மனி வெற்றிபெற வேண்டும் என்று நான் சிறிதும் நினைக்கவில்லை. ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கும், ஜெர்மானிய நாசிசம் இரண்டுக்கும் நடைபெறும் போராட்டத்தில் இரண்டும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். அடிமைப்பட்ட ஒருவனுக்கு முன் இருக்கும் பிரச்னை எந்தவிதமான அடிமைத்தனத்தையும் ஆதரிப்பது என்பது அல்ல. தன்மீது திணிக்கப்பட்ட அடிமைத்தனத்தை எல்லாவகையிலும் நீக்க முற்படுவதுதான் அவனுடைய கடமை.''

இந்த வழக்கில் ஒன்பது மாதக் கடுங்காவல் தண்டனை ஜெயப்பிரகாசருக்குத் தரப்பட்டது. நீதிமன்றத்தில் ஜெயப்பிரகாசர் தந்த அறிக்கையைப் பாராட்டி "துணிச்சலான ஓர் அறிக்கை' என்ற தலைப்பில் 30-3-1940 "ஹரிஜன்' பத்திரிகையில் மகாத்மா எழுதியதாவது:

""ஜெயப்பிரகாஷ் நாராயணின் அறிக்கை துணிகரமாக, சுருக்கமாக, விளக்கமாக, அவருடைய பெருமைக்குத் தகுந்தவாறு தரப்பட்டுள்ளது. தம்முடைய தேசப்பற்றை அரசாங்கம் தண்டிப்பது சரிதான் என்று அவரே ஒத்துக்கொள்கிறார். நாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதை வெளிப்படையாக ஜெயப்பிரகாஷ் நாராயண் கூறியிருக்கிறார். அந்த அறிக்கையில் அவருடைய தூய்மையான மனிதநேயப் பண்பாடு வெளிப்படுகிறது. யார் மீதும் அவர் வன்மம் பாராட்டவில்லை. ஜெர்மானியர் மீதோ, ஆங்கிலேயர் மீதோ அவருக்கு எத்தகைய வெறுப்பும் கிடையாது. தனது ஏகாதிபத்தியத்தை இங்கிலாந்து கைவிடுமானால் இந்தியா மட்டுமல்ல, விடுதலையை விரும்பும் உலகமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு நாசிசத்தைத் தோற்கடிக்கவும், மக்களாட்சி முறையில் விடுதலையை ஏற்படுத்தவும் முன்வருவார்கள்''.

1940 டிசம்பர் மாதத்தில் ஜெயப்பிரகாசர் சிறைச்சாலையில் இருந்து வெளியேவந்தார். ஆயினும், அரசாங்கம் அவரை விட்டுவைக்கவில்லை. 1-1-1941}அன்று இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் திடீரென அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு எத்தகைய விசாரணையும் இல்லாமல் பம்பாய் ஆர்தர் சாலை சிறையிலும், ராஜஸ்தான் தியோலி முகாம் சிறையிலும், கடைசியாக உத்தரப் பிரதேசத்திலுள்ள ஹசாரிபாக் சிறையிலும் அடைக்கப்பட்டார்.

அவர் ஹசாரிபாக் சிறையில் இருந்தபொழுதுதான் "வெள்ளையனே வெளியேறு' என்ற போராட்டம் ஆகஸ்ட் 1942-ல் தொடங்கப்பட்டு காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

ஹசாரிபாக் சிறையிலிருந்த ஜெயப்பிரகாசரால் தனித்து அங்கே இருக்க முடியவில்லை. எப்படியாவது வெளியேறி அந்த இந்திய ஆகஸ்ட் போராட்டத்தை நாடெங்கும் நடத்தத் திட்டமிட்டார். அதன்படி 1942 நவம்பர் தீபாவளி அன்று மற்றவர்கள் கொண்டாட்டத்தில் இருந்த நேரத்தில் ஜெயப்பிரகாசரும் மற்ற ஐந்து நண்பர்களும் சிறைச்சாலை மதில்சுவரைத் தாண்டி தப்பித்துச் சென்றனர்.

வெவ்வேறு வேடமிட்டு அவர்கள் தனித்தனியாக நாடெங்கும் சுற்றிவருகையில் 18-9-1943-அன்று அமிர்தசரஸ் நோக்கிச் சென்ற ரயிலில் ஜெயப்பிரகாசர் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் கைதான செய்தியை போலீசார் மிக ரகசியமாக வைத்திருந்தபோதிலும், அது எப்படியோ வெளிப்பட்டு பொதுமக்களுக்கும், விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும் தெரியவந்ததுடன் லாகூர் கோட்டையில் அவர் பல்வேறுவிதமான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்படுவதும் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது. அவருடன் ராம் மனோகர் லோகியாவும் அதே சிறையில் தனித்தனியாக அடைக்கப்பட்ட விவரம் பின்னர் தெரியவந்தது.

5-5-1945 அன்று மகாத்மா புணேவிலுள்ள ஆகாகான் மாளிகையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். ஆயினும், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தலைவர்கள் அனைவரும் வெளியேவந்தாலொழிய, காங்கிரஸ் சார்பாக தனிப்பட்ட முறையில் இறுதியான முடிவு எதையும் தம்மால் எடுக்க முடியாது என்று காந்தியடிகள் அறிவித்தார்.

1946 மார்ச் இறுதியில் இங்கிலாந்து அமைச்சரவை சார்பில் பேதிக் லாரன்ஸ், ஸ்டாபோர்டு கிரிப்ஸ், அலெக்சாந்தர் ஆகியோர் அடங்கிய குழு இந்திய விடுதலைக்கான ஏற்பாடுகளை முடிவு செய்ய இந்தியா வந்தது. அப்பொழுது, அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு முன்னதாக ஜெயப்பிரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோகியா மற்றும் சிறையிலுள்ள அரசியல் கைதிகள் அனைவரும் வெளியேவர வேண்டும் என்று காந்திஜி வலியுறுத்தினார்.

அதன்பிறகு 11-4-1946}அன்று ஜெ.பி. லோகியா, சிறையிலிருந்து வெளியேவந்தார்கள். இருவருக்கும் கோலாகலமான வரவேற்பும், பாராட்டுதல்களும் ஆங்காங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்களால் தரப்பட்டது. குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் ஒரு மாபெரும் புரட்சித் தலைவராக ஜெயப்பிரகாசர் போற்றப்பட்டார்.

இந்தக் காலகட்டத்தில், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையை காங்கிரஸ் கட்சி பெரும்பாலும் ஏற்றுக்கொண்டுவிட்ட நிலைமை வந்துவிட்டது. பீகார் சென்று திரும்பிய ஜெயப்பிரகாசரிடம் காந்தியார் கூறினார்: ""ஜவாஹர்லால் - வல்லபாய் படேல் ஆகியவர்களை நம்பி நான் இருந்தேன். ஆனால், அவர்களும் பிரிவினையைத் தவிர வேறு வழியில்லை என்று என்னை விட்டு விலகிச் சென்றுவிட்டனர்''.

இந்தியாவின் ஒருமைப்பாட்டை மகாத்மா ஒருவரால்தான் காப்பாற்ற முடியும் என்று நம்பியிருந்த ஜெயப்பிரகாசருக்கு இது பெரும் அதிர்ச்சியைத் தந்தது.

மக்களிடையே ஜெயப்பிரகாசருக்கு உள்ள செல்வாக்கையும், சமதருமக் கொள்கைகளிலுள்ள ஈடுபாட்டையும் ஜவாஹர்லால் நேரு நன்கு உண்ர்ந்திருந்தார். அதனால், புதிதாக அமைக்கப்பட்ட காங்கிரஸ் செயற்குழுவில் ஜெயப்பிரகாசர் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டார். அப்பொழுதும் கொள்கை அளவில் காங்கிரஸ் கட்சி பின்னடைவதாக காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் பல பிரச்னைகளில் ஜெயப்பிரகாசர் கூறினார். கடைசி முயற்சியாக, காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஜெயப்பிரகாசர் வரவேண்டும் என்று காந்தியார் காங்கிரஸ் தலைவர்களிடம் கூறினார். இதை ஏற்றுக்கொள்வதில் காங்கிரஸ் தலைவர்கள் தயக்கம் காட்டினர்.

வகுப்புக் கலவரங்களைச் சமாளிக்க கல்கத்தாவிலிருந்த காந்தியார், நாடு விடுதலைபெற்ற நாளில் மௌன விரதம் பூண்டு துக்க நாளாக அனுசரித்தார். அதே நாளில் வகுப்புக் கலவரத்தால் அல்லல்பட்ட பீகாரில் ஜெயப்பிரகாசர் அமைதியை நிலைநாட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். தில்லியிலும் மற்றும் நாடெங்கிலும் இந்திய விடுதலை நாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டபொழுது, அதில் காந்தியாரும், ஜெயப்பிரகாசரும் கலந்துகொள்ளாததற்கு, இந்தியப் பிரிவினையை அவர்களால் மனதார ஏற்றுக்கொள்ள முடியாததுதான் முக்கியக் காரணம் ஆகும்.

1948 ஜனவரி முதல் வாரத்தில் மகாத்மாவுடன் ஜெயப்பிரகாசர் புறப்பட்டு தில்லிக்கு ரயிலில் வந்தார். தில்லி ரயில் நிலையத்தில் மகாத்மா வந்து இறங்கியதும் அவரை வரவேற்க காங்கிரஸ் தலைவர்கள் யாரும் வரவில்லை. இதைக்கண்ட ஜெயப்பிரகாசரின் மனம் பதைபதைத்தது. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்துக்குத் தேவைப்பட்ட மகான் காந்தி சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் தலைவர்களுக்குத் தேவைப்படவில்லை!

அதே ஜனவரி 30-ம் நாள் காந்தியடிகள் மறைந்தார். "அதற்குப்பின் காங்கிரஸில் கட்டுப்பாடற்ற பதவிப்போட்டியும், ஒழுங்கீனங்களும் மலிந்து வருவதைக் கண்ட ஜெயப்பிரகாசர் மேலும் வேதனைப்பட்டார். காங்கிரஸ் கட்சிக்குள் மற்ற கட்சிப் பெயர்களுடன் யாரும் உறுப்பினராக இருக்கக்கூடாது என்ற தீர்மானத்தை 1948 மார்ச் மாதத்தில் காங்கிரஸ் கட்சி நிறைவேற்றியது. அது, சமதருமவாதிகளாகத் தம்மைப்போல் காங்கிரஸில் இருந்தவர்களை வெளியேற்றுவதற்கான ஓர் ஏற்பாடுதான் என்பதை ஜெயப்பிரகாசர் நன்கு புரிந்துகொண்டார்.

நாசிக் மாநாட்டில் ஜெயப்பிரகாசரும், லோகியா, ஆச்சாரிய நரேந்திர தேவ், அச்யுத் பட்வர்தன் போன்ற சமதருமத் தலைவர்களும், உறுப்பினர்களும் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி சமதருமக் கட்சி என்ற பெயரில் தமது அரசியல் நிலைப்பாட்டைத் தொடங்கினார்கள்.

பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் ஆச்சாரிய கிருபளானி தலைமையில் ஜெ.பி., அசோக் மேத்தா, நரேந்திர தேவ் ஆகியோர் அடங்கிய பிரஜா சமாஜ்வாதி கட்சியும், லோகியா தலைமையில் சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சியுமாக சமதருமக் கட்சி பிரிந்துவிட்டது.

1953-ல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு சமதருமவாதிகள் முன்வர வேண்டும் என்று பிரதமர் ஜவாஹர்லால் நேரு கருதி அதன்படி நேருவும், ஜெயப்பிரகாசரும் தில்லியில் சந்தித்துப் பேசினார்கள்.

அமைச்சரவையில் பங்குபெற ஜெயப்பிரகாசருக்கு எத்தகைய உடன்பாடும் கிடையாது. பதினான்கு அம்சக் கொள்கைத் திட்டத்தை அவர் நேருவுக்கு அனுப்பி அதன்படி ஆட்சி நடப்பதென்றால் கூட்டணி ஏற்படுத்தலாம் என்று சொன்னார். ஆனால், காங்கிரஸ் கட்சி அந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

அதன் பிறகு, ஆக்கப்பணிகள் புரியும் பல துறைகளில் ஜெயப்பிரகாசர் பணியாற்றினார். மக்களாட்சி முறையில் அடிப்படை உரிமைகளுக்கு ஆக்கம் தந்து, கிராம அளவுக்கு அதிகாரப் பரவல் ஏற்படுத்தவும், ஆயுதம் தாங்கும் கூட்டத்தினரை அமைதியான முறையில் நல்வழிக்குக் கொண்டுவரவும், வினோபா பாவே தொடங்கிய சர்வோதய இயக்கத்தில் ஜெயப்பிரகாசர் ஈடுபட்டார்.

இந்தியாவுக்கு அரசியல் விடுதலை கிடைத்திருக்கிறதே தவிர, மக்கள் வாழ்க்கையில் மற்ற பகுதிகள் கவனிக்கப்படவில்லை என்று ஜெயப்பிரகாசர் கருதினார். முக்கியமாக, சமுதாயம், பொருளாதாரம், அரசியல், கல்வி, கலாசாரம், லட்சியம், நல்லொழுக்கம் ஆகிய ஏழு துறைகளில் புரட்சி ஏற்பட வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார்.

வானவில்லின் ஏழு வண்ணங்கள் எவ்வாறு ஒன்றுபட்டு வெண்மையான ஒளி வெளிப்படுகிறதோ, அதைப்போல் முழுமைப் புரட்சியில் அந்த ஏழு துறைகளிலும் மறுமலர்ச்சி வரவேண்டும் என்று அவர் கூறினார்.

1973-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திரா காந்தியின் ஆட்சிமுறை சர்வாதிகாரப் போக்கில் செல்வதைக் கண்டு, அதைக் கண்டிக்கும் வகையில் இந்திய மக்களை ஒன்று திரட்டி ஜனநாயக உரிமைகளை நிலைநாட்ட, தீவிரமாகப் பாடுபட்டு ஜெயப்பிரகாசர் ஜனதா இயக்கத்தைத் தோற்றுவித்தார்.

அவ்வியக்கம், மிகப்பெரிய போராட்டமாக உருவெடுத்து நெருக்கடி காலத்தில் இருண்டு போயிருந்த இந்தியாவில், மீண்டும் ஜனநாயக ஒளியை நிலை நிறுத்தியது.

இந்தியாவின் முதலாவது சுதந்திரப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியவர் மகாத்மா காந்தியடிகள். இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை நெருக்கடி காலத்தில் வெற்றிகரமாக நடத்தியவர் லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண்!

பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்

அருமை உடைய செயல்.

பெருமைப்பண்பு உடையவர் செய்வதற்கு அருமையான செயலைச்

செய்வதற்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்.

திருக்குறள்: (எண் - 975)  அதிகாரம்:

முழு கட்டுரையைப் படிக்க →