கட்டுரைகள்

செல்லரிக்கும் திட்டம் சீர்படுத்தப்படுமா?

இந்தியாவின் முதுகெலும்பே கிராமங்கள்தான் என்பது மகாத்மா காந்தியின் கூற்று. அதிக எண்ணிக்கையிலான கிராமங்களைக் கொண்ட நம் நாட்டில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் பொருளாதாரச் சிக்கலில் சிக்கித் தவிக்கும் குடும்

காளீஸ்வரன்

இந்தியாவின் முதுகெலும்பே கிராமங்கள்தான் என்பது மகாத்மா காந்தியின் கூற்று. அதிக எண்ணிக்கையிலான கிராமங்களைக் கொண்ட நம் நாட்டில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் பொருளாதாரச் சிக்கலில் சிக்கித் தவிக்கும் குடும்பங்களுக்காக 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்டதுதான் "தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்' (என்.ஆர்.இ.ஜி.எஸ்.)'

  தொடக்கத்தில் 130 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம், தற்போது 590-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

 நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது வடமாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது இத்திட்டம் என அரசியல் நோக்கர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

  இதனால், இத் திட்டத்தின் மீது காங்கிரஸ் கட்சிக்கு இனம்புரியாத பாசம் ஏற்பட்டுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.

  வறுமையை ஒழிக்கும் நோக்குடன் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்துக்காக நடப்பாண்டில் ரூ. 39,100 கோடியை (சென்ற ஆண்டு ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது) ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் அண்மையில் நடைபெற்ற ஒரு விழாவில் தெரிவித்துள்ளார்.

  இத் திட்டத்தின் மூலம் 2008-2009-ம் ஆண்டில் 4.49 கோடி கிராமப்புறக் குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாகவும், இதில் 14.48 சதவீதம் பேர் நூறு நாள்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாகவும் கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.  இந்நிலையில் கிராமப்புறங்களில் இத்திட்டம் ஒழுங்காகச் செயல்படுகிறதா என்று கேள்வி எழுப்பினால் "கரும்பு தின்பதற்கு கூலி...' என்ற சொற்றொடர்தான் நினைவுக்கு வருகிறது.

  தமிழகத்தைப் பொருத்தவரை பொதுப்பணித் துறை மற்றும் ஊராட்சிக்கு உள்பட்ட சுமார் 40 ஆயிரம் குளங்களைத் தூர்வாருவதும், விவசாயப் பாசனத்துக்கு இடையூறாக அடைத்துக் கிடக்கின்ற கால்வாய்களைத் தூர்வாருவதும், விவசாயத்துக்குத் தண்ணீர் செல்ல வழி ஏற்படுத்துவதும்தான் இத்திட்டத்தின் பிரதான நோக்கம் எனக் கருதப்படுகிறது.

  இத்திட்டத்தில் வேலை செய்வோர் காலை 9 மணிக்கு பணிகளைத் தொடங்கி, மாலை 4 மணி வரை வேலை செய்ய வேண்டும் என்ற விதி உண்டு. ஆனால், எத்தனை பேர் காலை 9 மணிக்கெல்லாம் களத்தில் இருக்கிறார்கள் என்று ஆராய்ந்தால் ஏமாற்றமே மிஞ்சும்.

  காலை 10.30 மணிக்கு வருகைப் பட்டியல் முடித்து, அதுதொடர்பான விவரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு (தே.ஊ.வே.தி.) தொலைபேசி மூலம் அறிக்கை அனுப்பவேண்டும், தினமும் 7 மணி நேரம் பணியாள்கள் வேலை செய்வதை உறுதி செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் இருந்தாலும் பெயரளவிலேயே அந்த விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

  எனவே, இத்திட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் தரமானதாக அமையவில்லை எனவும், பணிகள் இலக்கை பெரும்பாலான கிராமங்களில் எட்டமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பரவலான விமர்சனங்கள் எழுகின்றன.

  பணியில் ஈடுபடுவோருக்கு வங்கியில் கணக்குத் தொடங்கி, அவர்களின் வங்கிக் கணக்கில்தான் சம்பளம் போடவேண்டும் என்ற பிரதான விதிமுறை பெரும்பாலான பகுதியில் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்ற புகாரும் பல மாவட்டங்களில் எழுந்துள்ளது.

  இத்திட்டத்தில் முறைகேடு செய்ததாக 60-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் இதுவரை பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

  கூலி வழங்கப்படுவது தொடர்பாகப் பயனாளிகளுக்கும், அலுவலர்களுக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வருவதை செய்திகள் வாயிலாக அறியமுடிகிறது.

  இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதால் கிராமங்களில் விவசாய வேலைக்கு ஆள்கள் கிடைக்கவில்லை என்ற மிகப் பெரிய பிரச்னை எழுந்துள்ளது.

  இதனால், களை எடுப்பு, பாத்தி கட்டுதல், நாற்று நடுதல் உள்ளிட்ட விவசாயப் பணிகளுக்கான "ஒரு நபர் கூலி' தற்போது இரு மடங்காக உயர்ந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

  "செய்யும் வேலையோ எளிது; கைமேல் கூலி' என்ற மனப்பான்மையில் மூழ்கியுள்ள கிராமப்புற மக்களிடையே இத் திட்டத்தில் வேலை செய்ய கடுமையான போட்டி நிலவுகிறது.

  பருவமழை பொய்க்கும் நேரத்தில் வருவாய் இழப்பை ஈடுகட்டும் விதமாக எத்தனையோ மாவட்டங்களில் வேலையில்லாதோருக்கு "ஆபத்பாந்தவனாக' இத்திட்டம் கை கொடுக்கிறது.

  தினமும் பொன் முட்டையிடும் வாத்தை வயிற்றைக் கிழித்து உள்ளே "பொன் முட்டைகள்' இருக்குமா எனப் பார்த்த கதையாகத்தான் இத் திட்டம் மாறிவிடுமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

  எனவே, உண்மையான உழைப்பில் கிடைக்கும் பணம்தான் உடலில் ஒட்டும் என்ற மனப்பான்மை இத் திட்டத்தில் வேலை செய்யும் பயனாளிகளுக்கு வரவேண்டும்.   அதே நேரத்தில் ஊழலுக்கு இடம் கொடுக்காமல் அதிகாரிகள் செயல்பட இத் திட்டத்தின் விதிமுறைகளில் சில மாற்றங்களை அமல்படுத்தி, அதைக் கண்காணித்து அரசு தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.

  அவ்வாறு முறைப்படுத்தும்பட்சத்தில் வறுமையால் வாடும் கோடிக்கணக்கானோருக்கு இத்திட்டம் தொடர்ந்து ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

SCROLL FOR NEXT