மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பு அரண்!
இன்று உள்ள சமூகச் சூழ்நிலையில், வயதான பெற்றோர்களைப் பார்த்துக் கொள்ளும் வாய்ப்பு அல்லது ஆர்வம் பிள்ளைகளுக்குக் குறைந்து வருவது வெளிப்படை. பலர் வெளிநாடுகளில் இருப்பார்கள். பெற்றோர்களுக்கு அனுப்பிக் கொண
இன்று உள்ள சமூகச் சூழ்நிலையில், வயதான பெற்றோர்களைப் பார்த்துக் கொள்ளும் வாய்ப்பு அல்லது ஆர்வம் பிள்ளைகளுக்குக் குறைந்து வருவது வெளிப்படை. பலர் வெளிநாடுகளில் இருப்பார்கள். பெற்றோர்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்த பணமும் நாளடைவில் நின்றுவிடுவது உண்டு.
÷மருத்துவ வளர்ச்சியின் பயனாக, சராசரி ஆயுள்காலம் அதிகரித்து வருகிறது. இதனால், பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களில் அநேகர், நீண்டு வரும் வயோதிக காலத்தில் தங்களைத் தாங்களே பராமரித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
÷இந்நிலையில், கையிருப்பு விரைவில் கரைந்துவிடுமோ, விலைவாசி ஏற்றத்தின் காரணமாக, அடிப்படை வசதிகளைக்கூட குறைத்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் மூத்த குடிமக்களைக் கவ்விக்கொள்கிறது. இந்தியாவின் மக்கள்தொகையில் மூத்த குடிமக்கள் 7 சதவிகிதம். அதாவது, 7 கோடியே 70 லட்சம் பேர்.
÷இவர்களைப் பொருளாதார ரீதியாகப் பாதுகாக்கும் நோக்கத்தில், தேசிய வீட்டுக்கடன் வங்கி (நேஷனல் ஹவுசிங் பேங்க்) என்னும் அரசு அமைப்பு, 2007-ம் ஆண்டில், ஓர் உதவித் திட்டத்தை உருவாக்கியது. அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் இதனைச் செயல்படுத்தி வருகின்றன.
÷திட்டம் இதுதான்:
÷60 வயதைத் தாண்டிய ஒரு நபருக்குச் சொந்தமாக ஒரு வீடு அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் அவர் வசித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அவருக்கு வேறு வருவாய் அல்லது வாழ்க்கையை நடத்திச் செல்வதற்குத் தேவையான நிதி வசதி இல்லை. பிள்ளைகளின் ஆதரவும் இல்லை. இந்நிலையில், அவர் என்ன செய்யலாம் என்றால், ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியை அணுகி, "ரிவர்ஸ் மார்ட்கேஜ்' என்னும் கடன் உதவித் திட்டத்தின் கீழ், தன் வீட்டை அடமானம் வைக்கலாம். இதன் பயனாக, அவருக்கு 15 ஆண்டுகளுக்கு மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை வங்கியிலிருந்து கிடைக்கும். தேவையானால், மேலும் 5 ஆண்டுகளுக்கு கால அளவை உயர்த்திக் கொள்ளலாம். ஆக, அதிகபட்சமாக இத்திட்டத்தின் மூலம் 20 ஆண்டுகளுக்கு மாதாந்திரத் தொகையை வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். வீட்டின் மதிப்பு, கடன் தொகை ஆகியவற்றைப் பொறுத்து மாதத்தொகை அமையும். கடன்தொகைக்கு ஏற்ப, ரூ. 4,000, ரூ. 5,000, ரூ. 10,000, ரூ. 15,000 என்று மாதத்தொகை நிர்ணயிக்கப்படும். வட்டி விகிதம் 10 சதவீதமாக உள்ளது.
÷உடனடியாக, மருத்துவச் செலவு போன்ற பெரிய தொகை தேவைப்பட்டால், கடன் தொகையிலிருந்து 50 சதவீதம் வரை பணத்தை, தொடக்கத்திலேயே ஒரே தவணையில் பெற்றுக் கொள்ளலாம். வங்கியிலிருந்து பெற்றுக் கொள்ளும் மொத்த தொகைக்கோ அல்லது தவணைத் தொகைக்கோ வருமான வரி கிடையாது.
÷இந்தத் தொகையை எந்தக் காலகட்டத்திலும், அடமானம் வைத்தவர் திரும்பச் செலுத்தத் தேவையில்லை. அவரும், அவரது மனைவியும் வாழ்நாள் முழுவதும் அந்த வீட்டில் வசிக்கலாம். இதனால்தான் இந்தத் திட்டத்துக்கு ரிவர்ஸ் மார்ட் கேஜ் என்று பெயர். அதாவது, அடமானம் வைத்தவர் திரும்பச் செலுத்த வேண்டாம் என்பதால் "தலைகீழ் அடமானம்' எனப்படுகிறது.
÷அடமானம் வைத்தவரும் அவரது மனைவியும் காலமானபிறகு, வங்கி அந்த வீட்டை விற்று அடமானத்தை மீட்கும். கடன் கணக்கை அடைத்துக் கொள்ளும்.
÷வீட்டை விற்கும்போது, கடன்தொகையைவிட கூடுதலாகக் கிடைத்தால், மீதத் தொகையை பெரியவரின் வாரிசுகளுக்கோ அல்லது உபரித் தொகையை யாரிடம் வழங்க வேண்டும் என்று அடமானம் வைத்தவர் எழுதிக் கொடுத்துள்ளாரோ, அவர்களிடம் வழங்கப்படும். இதற்கு அடமானம் வைப்பவர்கள் "நாமினேஷன்' வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒருவேளை விற்பனையின் மூலம் கடன்தொகையை முழுமையாகப்பெற முடியவில்லை என்றால் மீதத்தொகைக்கு வங்கியே பொறுப்பேற்கும்.
÷வேறு ஒரு நிலையும் ஏற்படலாம். அடமானம் வைத்தவரின் மறைவுக்குப் பிறகு, அவரது பிள்ளைகள் கடன் தொகையை வங்கிக்குச் செலுத்திவிட்டு, வீட்டை மீட்க விரும்பினால், அவ்விதம் செய்து கொள்ள முடியும்.
÷உலகில் பல வளர்ந்த நாடுகளில், இத்திட்டம் செயல்படுகிறது. ஆனால், வளரும் நாடுகளில் இதைச் செயல்படுத்தும் முதல் நாடு இந்தியாதான்.
÷இத்திட்டத்தில் பல மூத்த குடிமக்கள் ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளனர். அதாவது அதிகபட்சமாக ஒருவர் 20 ஆண்டுகள் மட்டுமே மாதத் தொகையைப் பெற முடியும்.
ஒருவர் 60 வயதில் வீட்டை அடமானம் வைத்தால், 80 வயது வரை மட்டுமே, மாதத் தொகை பெற முடியும். அவர் அதற்கு மேல் சில, பல ஆண்டுகள் உயிர் வாழ்ந்தால் அவர் நிலை என்ன? அவர் அந்த வீட்டில் ஆயுள்காலம் முழுவதும் வசிக்கலாம். ஆனால், மாதாந்திரப் பணம் நின்று விடும் என்பது கவனிக்கத்தக்கது. இதைக் கருத்தில்கொண்டு, நேஷனல் ஹவுஸிங் வங்கி மீண்டும் ஒரு புதிய திட்டத்தை, இரண்டாவது திட்டமாக 2009-ல் உருவாக்கியுள்ளது. அதற்கு ""ரிவர்ஸ் மார்ட்கேஜ் எனேபிள்டு ஆனியுட்டி'' திட்டம் என்று பெயர்.
÷இந்த இரண்டாவது திட்டத்தின்படி, வீட்டை அடமானம் வைப்பவர் மற்றும் அவரது மனைவிக்கு அவர்களது ஆயுள் முழுவதும் மாதாந்திரப் பணம் கிடைக்கும். நேஷனல் ஹவுஸிங் வங்கியின் இரண்டாவது (2009) திட்டத்தை ஒரு வங்கியால் மட்டும் தனித்துச் செயல்படுத்த முடியாது. ஒரு வங்கியும் ஓர் ஆயுள் காப்பீட்டு நிறுவனமும் இணைந்துதான் செயல்படுத்த முடியும்.
இந்நிலையில், தேசியமயமாக்கப்பட்ட சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ஸ்டார் யூனியன் டை - இச்சி ஆயுள் காப்பீட்டு நிறுவனமும் இணைந்து புதிய திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கிவிட்டன. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளான பேங்க் ஆப் இந்தியா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஜப்பானிய பெரும் காப்பீட்டு நிறுவனமான "டை-இச்சி' நிறுவனமும் இணைந்து உருவானதுதான் மேற்கூறிய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
÷புதிய திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்னவெனில் ஒன்று, அடமானம் வைத்தவர் மற்றும் அவரது மனைவி ஆயுள் முழுவதும் மாதாந்திரத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்.
÷முன்பணமாக ஒரு மொத்தத் தொகை வேண்டுமானால், கடன் தொகையில் 25 சதவீதம் வரை ஒரே தவணையில் பெற்றுக் கொள்ளலாம். இரண்டு-மாதாந்திரத் தொகை 2007-ம் ஆண்டு திட்டத்தில் கிடைப்பதைவிட அதிகமாக-கிட்டத்தட்ட, இரண்டு மடங்காகக் கிடைக்கும். வட்டி விகிதமும் 9.5 சதவீதம் மட்டுமே. முந்தைய திட்டத்தைவிட அரை சதவீதம் குறைவு. ஆனால், இதற்கு வருமான வரிச்சலுகை கிடையாது.
÷சரி, இந்தக் கூடுதல் நன்மை கிடைப்பது எப்படி? அரசுடைமை வங்கியும், ஆயுள் காப்பீட்டு நிறுவனமும் செய்து கொள்ளும் ஒப்பந்தப்படி, வங்கி வழங்கும் கடன் தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் தொடக்கம் முதல் முதலீடு செய்து, கூடுதல் வருவாய் ஈட்டி, அதன் மூலம் கிடைக்கும் வருவாய் மற்றும் காப்பீட்டு போனஸ் ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்வதால், மாதாந்திரத் தொகை கூடுதலாகக் கிடைப்பது சாத்தியம் ஆகிறது.
÷வருமான வரி செலுத்த வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டாலும், புதிய திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மாதாந்திரத் தொகை கணிசமாக அதிகம் என்பதில் ஐயம் இல்லை.
÷ரிவர்ஸ் மார்ட்கேஜ் அடிப்படையிலான ஆனியுட்டி திட்டம் (ஆயுள் காலத் திட்டம்) புதுமையான திட்டம் மட்டும் அல்ல, மூத்த குடிமக்களுக்கு வாழ்நாள் முழுவதும் பொருளாதாரப் பாதுகாப்பு வழங்கும் திட்டம் ஆகும்.
நேஷனல் ஹவுஸிங் வங்கி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவர் எஸ். ஸ்ரீதர், சென்னையில் சில தினங்களுக்குமுன் மேற்கூறிய வங்கிகள் மற்றும் அகில இந்திய நுகர்வோர் சங்கத்தின் கருத்தரங்கில் பேசுகையில், புதிய திட்டத்திலும் மத்திய நிதி அமைச்சகம் வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார். அத்துடன், மற்ற அரசுடைமை வங்கிகளும் புதிய திட்டத்தை விரைந்து செயல்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு அரசு தலைமைச் செயலர் கே.எஸ். ஸ்ரீபதி புதிய திட்டம் மூத்த குடிமக்களுக்கு உண்மையிலேயே ஒரு பாதுகாப்பு அரண் என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.