கட்டுரைகள்

மாறிவரும் அடையாளங்கள்

ஓவ்வொரு மனிதனுக்கும், ஊருக்கும் ஓர் அடையாளம் உண்டு. அந்த அடையாளத்தை வைத்தே குறிப்பிட்ட ஊரையோ, தனி மனிதரையோ கண்டுகொள்ளலாம். அந்தவகையில், பொதுவாக வேலூர் என்ற உடன் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட

சி. வேழவேந்தன்

ஓவ்வொரு மனிதனுக்கும், ஊருக்கும் ஓர் அடையாளம் உண்டு. அந்த அடையாளத்தை வைத்தே குறிப்பிட்ட ஊரையோ, தனி மனிதரையோ கண்டுகொள்ளலாம்.

அந்தவகையில், பொதுவாக வேலூர் என்ற உடன் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் நினைவில் வந்து நிற்பது மத்திய சிறையும், கடுமையான வெயிலும்தான்.

ஆனால், இன்று வேலூரின் அடையாளம் மாறிவருகிறது. வேலூர் மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து நகரங்களின் அடையாளமும் மாறிவருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

சுமார் ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு பின்னர் ஏதாவது ஒரு நகரத்துக்குச் செல்ல நேர்ந்தால் அந்த ஊர்தான் இப்படி இருக்கிறதா என்று நினைக்கத் தோன்றும். வேலூர் என்ற உடன் இங்குள்ள பொற்கோயிலையும், கோட்டையையும்தான் அனைவரும் அடையாளம் காட்டுகின்றனர்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்துசெல்லும் இடமாக பொற்கோயில் அமைந்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் தென்கிழக்கு மலைத்தொடர்களான ஜவ்வாதுமலை, ஏலகிரிமலை, ரத்தினகிரிமலை, வள்ளிமலை, சோளிங்கர்மலை உள்ளிட்ட மலைத்தொடர்கள் உள்ளன. இவற்றில் ஜவ்வாதுமலையும், ஏலகிரிமலையும் சிறந்த சுற்றுலாத்தலமாக மாறிவருகிறது.

வெளிமாவட்ட மக்களுக்கு அவ்வளவாகத் தெரியாமல் இருந்த ஏலகிரிமலை அண்மையில் தமிழக முதல்வர் கருணாநிதியின் இரண்டுநாள் ஓய்வுக்குப்பின் அனைத்துத் தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

1857-ல் ஆங்கிலேயர்களால் சிப்பாய்க் கலகம் எனக் கூறப்பட்ட முதல் இந்திய சுதந்திரப் போருக்கும் முன்னோடியாக அமைந்தது 1806-ல் வேலூரில் நடந்த நமது வீரர்களின் கலகம்தான்.

இவ்வளவு சிறப்புமிக்க இந்த மாவட்டத்துக்கு உள்பட்ட காவனூரில்தான் ஆசியாவிலேயே பெரிய தொலைநோக்கியான வைனுபாப்பு தொலைநோக்கி அமைந்துள்ளது. பல்வேறு சிறுதொழில் வளர்ச்சியில் வேலூர் மாவட்டம் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக, கடல்மட்டத்திலிருந்து மேலே செல்லச்செல்ல ஒவ்வொரு 1,000 மீட்டருக்கும் 6.5 டிகிரி வீதம் வெப்பநிலை குறைந்துகொண்டே செல்வதாக அறிவியல் அறிஞர்கள் கணித்துள்ளனர்.

எனவே, ஓரிடத்தின் வெப்பம், கடல்மட்டத்திலிருந்து எவ்வளவு உயரத்தில் அது உள்ளது என்பதைப் பொருத்தே அமைகிறது. எனவேதான் சமவெளிப் பகுதிகளைவிட மலைப்பாங்கான பகுதிகளிலும், மலைவாசஸ்தலங்களில் எப்போதும் வெயில் குறைவாக உள்ளது.

குறிப்பாக, சென்னையும் பெங்களூரும் ஒரே அட்சரேகையில் இருந்தாலும் சென்னையில் வெப்பம் அதிகமாகவும், பெங்களூரில் வெப்பம் குறைவாகவும் உள்ளது. இதற்குக் காரணம் சென்னையைவிட கடல்மட்டத்திலிருந்து அதிக உயரத்தில் பெங்களூர் இருப்பதுதான்.

அந்த வகையில் வேலூரில் வெப்பம் அதிகமாக இருப்பதற்குக் காரணம் இந்த நகரம் கடல்மட்டத்திலிருந்து குறைந்த உயரத்தில் இருப்பதுதான்.

குறிப்பாக, எங்கெல்லாம் வெப்பம் அதிகமாக இருக்கிறதோ அங்கு குளிரும் அதிகமாக இருக்கும். எனவேதான், வேலூரில் பகலில் வெயிலும், இரவில் குளிரும் அதிகமாக உள்ளது.

தமிழகத்தில், பொதுவாக தென் மாவட்டங்களில் அக்னி நட்சத்திரத்தின்போது 100 டிகிரியைத் தாண்டினாலே மக்கள் அவதிப்படுவார்கள்.

ஆனால், வேலூரில் கோடைக் காலங்களில் சர்வசாதாரணமாக 110 டிகிரியைவிட அதிகமாக வெயில் இருக்கும். அதேபோல குளிரும் அதிகமாக இருக்கும்.

இரும்பின் கடினத் தன்மையை அதிகரிக்க அதனை வெப்பப்படுத்துவது பின்னர் குளிர்விப்பது என மாறிமாறிச் செய்வார்கள். அவ்வாறு செய்வதன்மூலம் அதன் உறுதித் தன்மையும் அதிகரிக்கும்.

அந்தவகையில் வேலூர் பகுதியில் வெப்பமும், குளிரும் மாறிமாறி வருவதால் இங்குள்ள மக்கள் அதைத் தொடர்ந்து எதிர்கொண்டு இயல்பாகவே இரும்பைப் போன்ற அதிக மன உறுதியுடன் உள்ளனர். அதனால்தான் முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு முன்னோட்டமாக அமைந்த ஒரு போராட்டம் வேலூரில் ஏற்பட்டதோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது.

வேலூர் மாநகர் உள்பட மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள சிறுசிறு கடைகளிலும் நடைபெறும் தண்ணீர் விற்பனையே இந்த மாவட்டத்தில் உள்ள தண்ணீர்ப் பற்றாக்குறையை வெட்டவெளிச்சமாக்குகிறது.

வேலூர் மாவட்டத்தில் குடிநீர்ப் பற்றாக்குறையை மட்டும் தீர்த்துவிட்டால் உண்மையிலேயே வேலூரின் அடையாளம் முழுவதுமாக மாறிவிடும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.







 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெஸ்ஸி நிகழ்ச்சியில் ரசிகா்கள் வன்முறை: மேற்கு வங்க விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜிநாமா!

அன்கேப்டு வீரர்களை ரூ. 28 கோடிக்கு ஏலத்தில் எடுத்து வரலாறு படைத்த சிஎஸ்கே!

கடும் பனிமூட்டம்: சாலை விபத்துகளில் 25 பலி, 59 பேர் படுகாயம்

ரூ. 9 கோடிக்கு கேகேஆர் அணியில் இணைந்த முஸ்தஃபிசூர் ரஹ்மான்!

2025-ல் இந்திய எல்லைகளில் நடந்த ஊடுருவல், கைது எத்தனை?

SCROLL FOR NEXT