ரிசர்வ் வங்கியின் வீரியமற்ற மருந்து!
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் பல்வேறு இலக்குகள் ரிசர்வ் வங்கியின் மூன்றாம் காலாண்டு நிதிக் கொள்கை மறுஆய்வில் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. உற்பத்தித் துறைகளுக்கு குறைந்த வட்டியில் வங்கிக
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் பல்வேறு இலக்குகள் ரிசர்வ் வங்கியின் மூன்றாம் காலாண்டு நிதிக் கொள்கை மறுஆய்வில் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. உற்பத்தித் துறைகளுக்கு குறைந்த வட்டியில் வங்கிக் கடன்கள் கிடைக்கச் செய்வதன் மூலமும் பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலமும் இந்த இலக்குகளை எட்டுவதற்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்த இலக்குகள் மிகச் சிறந்தவைதான். பொருளாதாரச் செழுமையையும், குறைந்த வட்டியில் அதிக வங்கிக் கடன்கள் கிடைப்பதையும், அத்தியாவசியப் பொருள்கள் விலை குறைவதையும் யார்தான் எதிர்ப்பார்கள்? ஆனால், நிர்ணயித்திருக்கும் இலக்குகளையெல்லாம் ரிசர்வ் வங்கி அடையப் போகிறதா என்பதுதான் கேள்வி.
பொருளாதார வளர்ச்சியும் நாட்டின் வளர்ச்சியும் ஒன்றுபோலத் தெரிந்தாலும் இவ்விரண்டும் வெவ்வேறானவை. பொருளாதார வளர்ச்சி என்பது பொருளாதார நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது. நாட்டின் வளர்ச்சி அல்லது மேம்பாடு என்பது பொருளாதார வளர்ச்சியினால் கிடைக்கும் பலன்கள் மக்களைச் சென்றடையச் செய்வது.
Advertisement
பொருளாதார நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டு, நாட்டின் வளம் கொழிக்கும் அதே நேரத்தில் வேலையில்லாத் திண்டாட்டமும் வறுமையும் அதிகரித்துக் கொண்டே செல்லுமானால், அங்கு வளர்ச்சி இல்லையென்றுதான் பொருள்.
பொருளாதார வளர்ச்சியும், நாட்டின் வளர்ச்சியும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் மாத்திரம் இல்லை. அவை, அரசின் பல்வேறு பொருளாதாரக் கொள்கைகளையும் சார்ந்தவை. ஆயினும், இந்த விஷயத்தில் ரிசர்வ் வங்கி முக்கியப் பங்காற்றுகிறது என்பதை மறுக்க முடியாது.
வங்கிக் கடன்களைக் கட்டுப்படுத்தும் பல்வேறு வகையான ஆயுதங்கள் ரிசர்வ் வங்கியிடம் இருக்கின்றன. அரசின் கொள்கையுடன் பொருந்திப் போகக் கூடியதாகத்தான் ரிசர்வ் வங்கியின் முடிவுகள் இருக்கும் என்றபோதிலும், இந்த ஆயுதங்களைக் கொண்டு தாம் நிர்ணயித்துள்ள இலக்குகளை ரிசர்வ் வங்கி அடைய முடியும் என்பது ஓரளவுக்கு உண்மைதான்.
இந்த ஆயுதங்களில் ஒன்றேயொன்றை மட்டும் ரிசர்வ் வங்கி தனது மூன்றாவது காலாண்டு நிதிக் கொள்கை மறுஆய்வில் பயன்படுத்தியிருக்கிறது. அதுதான் ரொக்கக் கையிருப்பு விகிதம்.
வங்கிகளுக்கான ரொக்கக் கையிருப்பு விகிதத்தை 0.75 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்து ரிசர்வ் வங்கி இப்போது அறிவித்திருக்கிறது. ஆனால், இந்த அறிவிப்பு பிரமாஸ்திரம் போலச் செயல்பட்டு எல்லாவற்றையும் சரி செய்துவிடுமா? பார்க்கலாம்.
ரொக்கக் கையிருப்பு விகிதம் என்பது, வங்கிகள் தாங்கள் பல்வேறு வழிகளிலும் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கும் மொத்த டெபாசிட் தொகையில், ரிசர்வ் வங்கியிடம் இருப்பு வைத்திருக்க வேண்டிய விகிதமாகும். ஏற்கெனவே 5 சதவீதமாக இருந்த இந்த விகிதத்தை ரிசர்வ் வங்கி இப்போது 5.75 சதவீமாக அதிகரித்திருக்கிறது. பிப்ரவரி 13 முதல் 0.5 சதவீதம், பிப்ரவரி 27 முதல் 0.25 சதவீதம் என இரு கட்டங்களாக இந்த அதிகரிப்பு அமலுக்கு வருகிறது.
இந்த அதிகரிப்பால் கூடுதலாக ரூ. 36 ஆயிரம் கோடி நிதியை ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் இருப்பு வைக்க வேண்டும். 5.75 சதவீதத்துக்கு ஒட்டுமொத்தமாக ரிசர்வ் வங்கியிடம் ரூ. 2 லட்சத்து 76 ஆயிரம் கோடி இருப்பு வைக்கப்பட்டிருக்கும்.
அதாவது, இப்போது கூடுதலாக இருப்பு வைக்கவேண்டிய ரூ.36 ஆயிரம் கோடி, வழக்கமான வங்கி வர்த்தக நடவடிக்கைகளுக்குக் கிடைக்காது. இந்தப் பணத்துக்கும் சேர்த்து வாடிக்கையாளர்களுக்கு வட்டி தர வேண்டியிருக்கும். கடந்த 2007-ம் ஆண்டுக்கு முன்புவரை ரிசர்வ் வங்கியிடம் இருப்பு வைக்கப்படும் தொகைக்கு 3 சதவீத வட்டியை ரிசர்வ் வங்கி வழங்கி வந்தது. அதன் பிறகு ரிசர்வ் வங்கியின் சட்ட விதிகள் திருத்தப்பட்டு வட்டி வழங்குவது நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எந்த வட்டியையும் தராது.
ஆக, கூடுதலாக ரூ.36 ஆயிரம் கோடியைப் பயன்படுத்த முடியாமல் போகிறது என்பதுடன், அந்தப் பணத்துக்கு வாடிக்கையாளர்களுக்கு வட்டி வழங்குவதால் ஏற்படும் இழப்பையும் வங்கிகள் சந்திக்க நேரிடுகிறது. ஆனால், இந்த இழப்பு டெபாசிட் தொகையில் 0.1 சதவீதம் அளவுக்கே இருக்கும் என்பதால், வங்கிகளுக்குப் பெரிய சுமையாகத் தெரியாது. அதனால், மொத்த விளைவு பூஜ்யம்தான்.
ரொக்கக் கையிருப்பு விகிதம் உயர்த்தப்பட்டிருப்பது, வங்கிகளின் கடன் விரிவாக்கத் திட்டங்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என ரிசர்வ் வங்கியே தெரிவித்திருக்கிறது. இது உண்மைதான். வங்கிகளிடம் ஏராளமான பணம் குவிந்து கிடக்கிறது. அந்தப் பணத்தை வேளாண்மை, வர்த்தகம், தொழில் போன்ற ஆக்கப்பூர்வமான துறைகளுக்குக் கடன் வழங்குவதற்காக வங்கிகள் பயன்படுத்துவதில்லை. கடன்கள் வழங்குவதில் வளர்ச்சி வீதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு 22 சதவீதமாக இருந்த வளர்ச்சி வீதம், இந்த ஆண்டில் 14.4 சதவீதமாகக் குறைந்திருக்கிறது.
உற்பத்தித் துறைகளுக்கு கடன் வழங்குவதற்குப் பதிலாக அரசுப் பங்குப் பத்திரங்களில் முதலீடு செய்வதைத்தான் வங்கிகள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. டெபாசிட்களில் 25 சதவீதத்தை அரசுப் பங்குப் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்கிற விதி இருப்பது உண்மைதான். ஆனால், நடப்பில் தேவையைக் காட்டிலும் இந்த முதலீடு மிக அதிகமாக இருக்கிறது.
ரிசர்வ் வங்கியின் கடந்த ஜனவரி 15-ம் தேதி வரையான புள்ளிவிவரங்களின்படி, அரசுப் பங்குப் பத்திரங்களில் ரூ.13 லட்சத்து 80 ஆயிரத்து 187 கோடி அளவுக்கு வங்கிகள் முதலீடு செய்திருக்கின்றன. இது தேவையைவிட ரூ.3 லட்சத்து 19 ஆயிரம் கோடி அதிகமாகும். ஆக, ரொக்கக் கையிருப்பு விகிதத்தை அதிகரிப்பதால், ரிசர்வ் வங்கியிடம் இருப்பு வைக்க வேண்டிய ரூ.36 ஆயிரம் கோடியால் வங்கிக் கடன் வழங்குவதில் பெரிய மாற்றம் ஏற்படப்போவதில்லை என்பது உறுதியாகிறது.
ரொக்கக் கையிருப்பு விகிதம் உயர்த்தப்பட்டிருப்பதை பிளேஸ்போ மருத்துவச் சிகிச்சையுடன் ஒப்பிடலாம். பிளேஸ்போ சிகிச்சைப்படி நோயாளிக்கு மருந்துக்குப் பதிலாக சிறிய சர்க்கரை வில்லைகள் வழங்கப்படும். அது மருந்துதான் என நோயாளி நினைத்துக் கொண்டிருப்பார். அந்த நம்பிக்கையில் நோய் குணமாகும் என்பதுதான் பிளேஸ்போ சிகிச்சையின் தத்துவம். இது வெறும் நம்பிக்கையின் அடிப்படையிலானது. நோய் தீரும் என்பது உறுதியில்லை. தற்போது ரிசர்வ் வங்கி அளித்திருக்கும் ரொக்கக் கையிருப்பு விகிதச் சிகிச்சையும் இதைப் போன்றதுதான்.
உணவுப் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு சப்ளை குறைவாக இருப்பதுதான் காரணம் என ரிசர்வ் வங்கியே ஒப்புக் கொண்டிருக்கிறது. அதாவது சப்ளை அதிகரிக்காதவரை பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாது என்று பொருள். அதேபோல, உலக அளவில் உணவுப் பொருள்களின் தொடர்ந்து விலை அதிகரித்துக் கொண்டிருப்பதால், பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவரும்படியாக வேளாண் பொருள்களை இறக்குமதி செய்வதும் சாத்தியமில்லாமல் போய்விட்டதாகவும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டிருக்கிறது.
முந்தைய மதிப்பீடான 6 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் எனவும் ரிசர்வ் வங்கி மதிப்பிட்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சிவீதம் அதிகரிக்கும்போது பணவீக்கமும் அதிகரிக்கும் என்பது பொதுக்கருத்து. அதன்படி, இப்போதும் பணவீக்கம் அதிகரிக்கத்தான் செய்யும் என்பது பொருளாகிறது.
கச்சா எண்ணெய் விலை உயரக்கூடும் என்கிற எதிர்பார்ப்பும், வேளாண் துறையில் இப்போது ஏற்பட்டிருக்கும் சுணக்கமும் பொருளாதாரச் சரிவில் இருந்து இந்தியா மீண்டு வருவதைப் பாதிக்கும் காரணிகள் என்பதை ரிசர்வ் வங்கி குறிப்பிட்டிருக்கிறது.
இந்த விஷயத்தில் அமெரிக்காவின் அவுட்சோர்சிங் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை ரத்து செய்யப்படும் என்கிற ஒபாமாவின் அறிவிப்பை ரிசர்வ் வங்கிக் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறதா எனத் தெரியவில்லை. இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐ.டி. துறை 6 சதவீதப் பங்களிப்பைச் செய்கிறது. ஆயினும் ஒபாமாவின் அறிவிப்பால், இந்தியாவில் அவுட்சோர்சிங் செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் பின்வாங்காது என நம்பப்படுகிறது. இதனால், பாதிப்பு மிகக் குறைவானதாகவே இருக்கும்.
ஆக, ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள இலக்குகளை எட்டுவதென்பது, அதன் கட்டுப்பாட்டில் இல்லாத வேறு பல காரணிகளையும் உள்ளடக்கியிருக்கிறது என்பது தெளிவாகிறது. அதேபோல், ரொக்கக் கையிருப்பு விகிதம் உயர்த்தப்பட்டிருப்பதும் எதிர்பார்க்கப்பட்ட முடிவுகளைத் தரத் தவறக்கூடும். யார் கண்டது, வங்கிக் கடன்களுக்கு வட்டியை உயர்த்துவது போன்ற எதிர்விளைவுகள் கூட ஏற்படலாம்.