ஏற்றுமதியால் அதிகரிக்கிறதா வேலைவாய்ப்பு?
பதிமூன்று மாதங்கள் தொடர்ந்து சரிந்துவந்த ஏற்றுமதி இப்போது சிறிது, சிறிதாக ஏறுமுகம் கண்டுள்ளது. அதிலும் குறிப்பாக, சென்ற ஏப்ரல் மாதத்தில் மட்டும், 36 சதவிகிதத்துக்கும் மேல் ஏற்றம் அடைந்துள்ளது. அந்த ஒர
பதிமூன்று மாதங்கள் தொடர்ந்து சரிந்துவந்த ஏற்றுமதி இப்போது சிறிது, சிறிதாக ஏறுமுகம் கண்டுள்ளது. அதிலும் குறிப்பாக, சென்ற ஏப்ரல் மாதத்தில் மட்டும், 36 சதவிகிதத்துக்கும் மேல் ஏற்றம் அடைந்துள்ளது. அந்த ஒரே மாதத்தில் இந்திய ஏற்றுமதியாளர்கள், 1,700 கோடி டாலர் மதிப்புள்ள பொருள்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
2008-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குப் பிறகு செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய ஏற்றுமதி இது. சுணங்கியிருந்த ஏற்றுமதி எழுச்சி அடைந்துள்ளது என்பதையே இது காட்டுகிறது.
கடந்த 60 ஆண்டுகளில் உலகம் சந்தித்த மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை, இந்திய ஏற்றுமதியாளர்கள் தாக்குப் பிடித்து விட்டார்கள் என்றால் மிகை அல்ல.
அடுத்தகட்டமாக, நடப்பு நிதி ஆண்டில், இந்திய ஏற்றுமதியின் மதிப்பை இருபது ஆயிரம் கோடி டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்பது மத்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்கு. இந்த இலக்கை எட்டிப் பிடித்து விடுவது சாத்தியமா? சாத்தியம்தான் என்கிறார், இந்திய ஏற்றுமதியாளர் சங்கங்களின் சம்மேளனத் தலைவர்.
இந்நிலையில், ஐரோப்பாவை இப்போது ஆட்டிப் படைத்துக் கொண்டுள்ள யூரோ நாணய நெருக்கடி, இந்திய ஏற்றுமதியைப் பாதிக்காதா என்ற ஐயப்பாடு எழுவது இயல்பு. ஆனால், நமது ஏற்றுமதியில் ஐரோப்பாவின் பங்கு அந்த அளவு அதிகம் இல்லை என்பது ஒன்று. இன்னொன்று, நிலவரத்தை அவ்வப்போது கூர்ந்து நோக்கி, தேவையான மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொண்டு இருந்தால், அந்தப் பாதிப்பையும் சமாளித்து விடலாம்.
மாறாக, ஏற்றுமதியைப் பெருக்கி, இலக்கை எட்டுவதற்குச் சாதகமாக பல அம்சங்கள் உள்ளன என்பதே உண்மை.
உதாரணமாக, தொழிற்கூடங்களின் உற்பத்திப் பெருக்கம், இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 15 சதவீதம் அதிகரித்து உள்ளது. அதேபோல், நடப்பு ஆண்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு (ஜி.டி.பி.) 8 சதவீதமாக இருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்தக் கணிப்புக்கு அடிப்படை, சென்ற ஆண்டில் ஜி.டி.பி. 7.4 சதவீதம் எட்டியுள்ளது. இது எதிர்பார்த்ததைவிட அதிகம்.
இன்னொருபக்கம், பொருளாதாரச் சுணக்கம் நிலவியபோது, மத்திய அரசு அறிமுகம் செய்த புத்துயிர் திட்டங்கள் பெரும்பாலும் தொடர்ந்து செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, ஏற்றுமதிக்கு முன்பும், ஏற்றுமதிக்குப் பின்பும் வழங்கப்படுகின்ற வங்கிக் கடனுக்கான வட்டி விகிதத்தில், 2 சதவிகித வட்டிக் குறைப்புச் சலுகை, அடுத்த ஆண்டு மாத இறுதி வரை நீட்டிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று, விஷயமறிந்த வட்டாரங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன.
மேலும், முக்கியமாக, ஏற்றுமதியாளர்களுக்குச் சேவை வரியை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் மேலே குறிப்பிட்ட நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. இதை மத்திய அரசு நிதி அமைச்சகம் பரிவுடன் பரிசீலித்து ஆவன செய்ய வேண்டும்.
இப்போது சுங்க வரி வாபஸ் செய்யும் என்னும் நடைமுறை வழக்கில் உள்ளது. அதாவது கட்ட வேண்டிய சுங்க வரியை ஏற்றுமதியாளர்கள் செலுத்திவிட்டு, பிறகு அதைத் திரும்பப் பெறும் நடைமுறை உள்ளது.
இந்தப் பழமையான முறையைக் கைவிட்டுவிட்டு சம்பந்தப்பட்ட வரிகளை முழுமையாகத் தள்ளுபடி செய்தால், பல்வேறு சிக்கல்களிலும், சிரமங்களிலும் சிக்கித் தவிக்கும் ஏற்றுமதியாளர்கள் கொஞ்சம் மூச்சு விட்டுக் கொள்வார்கள்.
நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தியுள்ள மற்றொரு பரிந்துரை மிகவும் பொருள் பொதிந்ததாகும். விமானக் கூடங்கள், துறைமுகங்கள் மற்றும் சுங்கவரி மையங்கள் ஆகியவற்றில் இப்போது நிலவும் நடைமுறைகளை எளிமைப்படுத்தி, ஒற்றைச்சாளர முறையில், நடைமுறைகளை விரைவுபடுத்த வேண்டும் என்பதே அது. இந்த முக்கியமான பரிசீலனையை மத்திய அரசு விரைந்து பரிசீலனை செய்து, முனைப்புடன் செயல்படுத்தினால், ஏற்றுமதியாளர்களின் துயர் துடைக்க வழி பிறக்கும்.
குறிப்பாக பருவம் சார்ந்த ஏற்றுமதிப் பொருள்களான காபிக் கொட்டை, தேயிலை, ரப்பர், ஏலம், கிராம்பு உள்ளிட்ட நறுமணப் பொருள்கள், வேளாண் பொருள்களுக்கு ஒற்றைச்சாளர முறையை காலதாமதம் இல்லாமல் அறிமுகம் செய்ய வேண்டும்.
இந்நிலையில், தொழில் பூங்காக்கள் திட்டத்தின்கீழ், சி.பி.டி.டி. எனப்படும் மத்திய நேர்முக வரிகள் வாரியம் 2008-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வரும் சிறப்புச் சலுகைகள், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இறுதிவரை நீட்டிக்கப்படும் அறிவிப்பு அண்மையில் வெளிவந்துள்ளது. இது ஏற்றுமதியாளர்களுக்குத் தித்திக்கும் செய்தியாக இருக்கும்.
கடந்த ஓராண்டுக்கு மேலாக, ஏற்றுமதிக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு இப்போது தடைபட்டுள்ளது. 15 மாதங்களுக்குப் பிறகு, முதல்முறையாக, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 47.17 ஆக சரிந்துள்ளது. இது ஏற்றுமதியாளர்களுக்கு லாபகரமாக அமையும்.
இதுபோல், பல அம்சங்கள் ஏற்றுமதி அதிகரிப்புக்கு அனுசரணையாக உள்ளன என்பது உண்மையிலேயே நம்பிக்கையூட்டுவதாக உள்ளன. ஆனால், ஏற்றுமதி மீட்சி அடைந்து, மேலும் மேலும் அதிகரிக்கும் இந்தத் தருணத்தில், ஏமாற்றம் அளிக்கும் ஒரு விஷயம் உண்டு. அது என்னவெனில், ஏற்றுமதி அதிகரிக்கும் அதேநேரத்தில், வேலைவாய்ப்பு உருவாக்கம் அதிகரிக்கிறதா என்றால் "இல்லை' என்பதே பதில். ஏன் இந்த நிலை?
இந்தியாவிலிருந்து எண்ணற்ற பொருள்கள் ஏற்றுமதியான போதிலும், பாரம்பரியமாக, வேலைவாய்ப்பு உருவாக்கம் எடுப்பாக இருக்கக்கூடிய துறை ஜவுளித்துறையே. அந்த ஜவுளித்துறை மற்றும் ஆயத்த ஆடைகள் உற்பத்தித்துறையில், புதிய வேலைவாய்ப்பு உருவாக்கம், கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஒரு லட்சத்து 19 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன.
ஜவுளித்துறை மட்டுமல்லாமல், தோல்துறை, உலோகப் பொருள்கள், மோட்டார் வாகனம், ஆபரணக் கற்களை பட்டை தீட்டுதல், தங்க ஆபரணங்கள் தயாரிப்பு, போக்குவரத்து, கைத்தறி, விசைத்தறி, கைவினைப் பொருள்கள் ஆகிய ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள அனைத்துத் துறையிலும் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கம் சரிந்துள்ளது.
மத்திய அரசின் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அண்மையில் மேற்கொண்ட பரவலான ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
இன்னோர் அம்சமும் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது. குறைந்துள்ள புதிய வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும், ஒரு பகுதி வேலைகளுக்கு, ஒப்பந்த அடிப்படையில் ஆள்களை நியமிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது என்பதே.
விதிவிலக்காக தகவல் தொழில் நுட்பம் மற்றும் பி.பி.ஓ. எனப்படும், "அவுட்சோர்ஸிங்' (வெளியாருக்கு வேலைகளைச் செய்து கொடுக்கும்) துறையில் மட்டும் 2009-10-ம் ஆண்டில் அதிகபட்சமாக - அதாவது 6 லட்சத்து 90 ஆயிரம் புதிய வேலைகள் உருவாகியுள்ளன.
கவலைதரும் இந்தச் சூழ்நிலையிலும், ஓர் ஒளிக்கீற்று தென்படுகிறது. அது என்னவெனில், பொருளாதார மந்த நிலையின்போது வேலைவாய்ப்புகள் கடுமையாகச் சரிந்தன அல்லவா? அப்போது பலர் சுயவேலை வாய்ப்பைத் தேடிக் கொண்டனர். "கெல்லி' குலோபல் வேலைவாய்ப்பு ஆய்வு நிறுவனம் இதை உறுதிப்படுத்தியுள்ளது.
வேலை தேடுபவர்களில், ஆறில் ஒருவர் (18 சதவீதத்தினர்) சிறு வர்த்தகம், சிறுதொழில், சேவைத்துறை, ஒப்பந்ததாரர்கள், ஆலோசகர்கள் ஆகிய வேலைகளில் சுயவேலைவாய்ப்பைத் தேடிக்கொண்டுள்ளனர். அந்தவகையில், 18 வயது முதல் 29 வயது வரையிலானவர்களில் 20 சதவீதம் பேரும்; 30 வயது முதல் 47 வயது வரையிலானவர்களில் 14 சதவீதம் பேரும்; 48 வயது முதல் 65 வயது வரையிலானவர்களில் 26 சதவீதம் பேரும் சுயவேலை வாய்ப்பை மேற்கொண்டுள்ளனர்.
பாரம்பரியமாக நடப்பதுபோல் படித்துவிட்டு வேலை தேடும் படலத்தைத் தொடங்காமல், சொந்தக்காலில் நின்று சுயமாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு, சுயவேலைவாய்ப்பை உருவாக்கிக் கொள்பவர்கள் எல்லா வயது வரம்பிலும் இருக்கிறார்கள் என்பது மேலும் ஒரு நல்ல அறிகுறியாகும்.
எனினும், இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகம் உள்ள நாட்டில், பல்வேறு அரசு சலுகை பெற்று தொழில் புரியும் தொழிற்கூடங்களில் நியாயமாக உருவாக வேண்டிய வேலைவாய்ப்பு குறைவது ஏன் என அறிந்து, நிலைமையைச் சீர்செய்ய அரசு முற்பட வேண்டும். சமுதாய நலன் சார்ந்த இப்பணியை, அரசு மட்டுமல்லாமல், தொழில் சம்மேளனங்களிலும் அரசுடன் கைகோர்த்து, புதிய வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் முனைப்பு காட்ட வேண்டும்.
இது ஒருபுறமிருக்க, சுயவேலை வாய்ப்பில் நாட்டமுள்ள இளைஞர்களையும், முதல்முறையாக ஏற்றுமதி செய்ய முன்வருபவர்களையும், ஊக்குவிக்கும் வகையில், அரசு சிறப்புத் திட்டங்களை உருவாக்கினால், அது நல்ல பலனை அளிக்கும். அத்துடன், அவர்களுக்குச் சரியான தகவல்கள், ஆலோசனைகள் மற்றும் வங்கிக் கடனுதவியைச் சரியான நேரத்தில் கிடைக்கச் செய்து அரசு அவர்களுக்கு உதவி புரிய வேண்டும்.