என்ன செய்யப் போகிறோம்?
முரண்கள் சூழ்ந்த ஒரு தருணம் இது. ஒருபுறம், உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான நம் மொழியின் பழைமையையும் அதன் செவ்வியல்தன்மையையும் கொண்டாடும் வகையில் மாநாடு எடுக்கிறோம்; மறுபுறம், அம்மொழியின் இன்றைய நிலை
முரண்கள் சூழ்ந்த ஒரு தருணம் இது. ஒருபுறம், உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான நம் மொழியின் பழைமையையும் அதன் செவ்வியல்தன்மையையும் கொண்டாடும் வகையில் மாநாடு எடுக்கிறோம்; மறுபுறம், அம்மொழியின் இன்றைய நிலை, அது எதிர்கொள்ளும் நவீன மாற்றங்கள் } சவால்கள், அதன் எதிர்காலம் குறித்த கவலை நம் யாவருடைய மனத்திலும் கவிந்திருக்கிறது. ஆனால், செம்மொழியான எம் மொழியின் எதிர்காலம் இந்த முரண்களுக்கு இடையில்தான் சிக்குண்டிருப்பதாகத் தோன்றுகிறது.
ஒரு மொழியைப் பேசுகிற மக்கள் பல்வேறு பகுதிகளாகப் பிரிந்து செல்கிறபோதும் அந்த மக்களின் வழக்கிலிருந்து அம்மொழியின் பயன்பாடு குறைகிறபோதும் முதலில் அந்த மொழி தன் பேச்சு வழக்கையோ, எழுத்து வழக்கையோ இழக்கிறது.
பிறகு, ஒரு காலகட்டத்துக்குப் பின் எஞ்சியிருக்கும் வழக்கிலிருந்தும் அருகி, படிப்படியாக அழிந்துபோகிறது. உலகில் இதுவரை அழிந்துபோன, அருகிக் கொண்டிருக்கும் மொழிகள் யாவற்றின் வரலாறும் இதுதான். உலகில் தமிழுடன் ஒப்பிடத் தக்க தொன்மையான மொழிகளான கிரேக்கம், லத்தீன், பாலி யாவும் இந்நிலையையே எதிர்கொண்டிருக்கின்றன.
Advertisement
இந்நிலையில், வரலாற்றுக் காலம் தொடங்கி } அதாவது, நமக்கு இதுவரை கிடைத்திருக்கும் தொல்லியல் சான்றுகள் மற்றும் இலக்கியத் தடயங்கள் வாயிலாக அறியப்படும் அறிவியல்பூர்வமான தமிழின வரலாற்றில் } முன்னெப்போதும் சந்தித்திராத ஒரு பெரும் மாற்றத்தை சமூக ரீதியாகவும் மொழி ரீதியாகவும் சமகாலத்தில் தமிழ் எதிர்கொள்கிறது. மொழிப் பயன்பாட்டில் பெரும் சரிவை தமிழ் எதிர்கொள்கிறது.
சிறுசிறு பகுதியாக தத்தம் பாரம்பரிய வாழிடங்களிலிருந்து அந்நிய ஊர்கள், அந்நிய நகரங்கள், அந்நிய மாநிலங்கள், அந்நிய நாடுகள் எனத் தமிழர்கள் இடம்பெயர்கிறார்கள். பாரம்பரிய வாழிடங்களிலிருந்து பழையவர்கள் வெளியேறும்போதும் புதியவர்கள் உள்நுழையும்போதும் அந்தந்தப் பகுதி சார்ந்த, வட்டாரத் தமிழ், வழக்கை இழக்கிறது. ஆயிரக் கணக்கான சொற்களும் தனித்துவமிக்க பழக்கவழக்கங்களும் கலாசாரமும் அந்த வழக்கோடு மறைகின்றன. ஒரு பொது வழக்கை நோக்கி ஒட்டுமொத்த தமிழினமும் நகர்கிறது.
இத்தகைய ஒரு தருணம்தான் ஒரு மொழிக்கு முக்கியமான காலகட்டமாக } அதன் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வல்லதாக அமைகிறது. ஓர் இனம் } தன் மொழியின்பால் அக்கறையுள்ள ஒரு சமூகம் மிகுந்த பொறுப்புணர்வுடனும் அக்கறையுடனும் செயல்பட வேண்டிய தருணமும் இதுவே. ஆனால், தமிழுக்கு அப்படிப்பட்ட அக்கறை கிடைக்கிறதா என்று கேட்டால் எதிர்மறையான பதிலை அளிக்க வேண்டிய துர்பாக்கிய நிலையிலேயே நாம் இருக்கிறோம். மிக மோசமான ஒரு பொது வழக்கை நாம் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்.
நாம் உருவாக்கிக்கொண்டிருக்கும் பொது வழக்கு, நம்முடைய வட்டார வழக்கை முற்றிலுமாக நிராகரிக்கிறது. வட்டாரச் சொற்களை அழித்துவிடுகிறது. இதனால், தமிழினத்தின் பன்முகத்தன்மையும் பல அரிய வழக்குகள், வார்த்தைகள், மரபுகளையும் ஒரு சேர தமிழ் இழக்கிறது.
நாம் உருவாக்கிக்கொண்டிருக்கும் பொது வழக்கு, மக்களின் மொழியை அலட்சியப்படுத்துகிறது. பண்டிதர்கள் உருவாக்கும் வார்த்தைகள் புத்தகங்களில் மட்டுமே இடம்பிடிக்க வல்லவை. மாறாக, மக்களின் வார்த்தைகளோ இயல்பாக உருவாகின்றன. இயல்பாக மொழியோடு கலக்கின்றன. மொழிக் கலப்பு வேறு; மொழியின் திரிபு வேறு. ஒரு நதியின் பயணத்தைப்போல மொழியின் பயணத்தை அனுமதிக்க வேண்டும். மக்களின் மொழிப் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆனால், இன்றைய பொது வழக்கோ மக்களின் மொழியை அலட்சியப்படுத்தி அவர்களுடைய தமிழை அந்நியமாக்குகிறது.
நாம் உருவாக்கிக்கொண்டிருக்கும் பொது வழக்கு, மொழியைத் தனித்தோ, சரியாகவோ பயன்படுத்தத் தெரியாத } தவறாகப் பயன்படுத்துவதையே வழக்கமாகக் கொண்டதாக இருக்கிறது. தமிழ் எதிர்கொள்ளும் மிகப் பெரிய ஆபத்து இது.
மொழிப் பயன்பாட்டில் முக்கியப் பங்காற்றும் அரசு முதல் ஊடகங்கள் வரை அனைத்து அமைப்புகளும் துரதிருஷ்டவசமாக இந்த வழக்கையே கடைப்பிடிக்கின்றன. இந்தத் தவறுகளையும் ஆபத்துகûளையும் ஒரு பொருட்டாகவே கருதாமல் அலட்சியப்படுத்தவும் தமிழ்ச் சமூகம் கற்றுக்கொண்டிருக்கிறது.
ஆனால், இவையெல்லாம் தமிழ் மட்டுமே எதிர்கொள்ளும் ஆபத்துகள் அல்ல. உலகிலுள்ள பழைமையான மொழிகள் யாவும் ஏதோ ஒரு காலகட்டத்தில் இத்தகைய ஆபத்துகளைச் சந்தித்திருக்கின்றன. மீண்ட மொழிகள் தொடர்கின்றன. சிக்கிய மொழிகள் சிதைந்துவிட்டன.
வரலாறு நம்மை இன்னமும் கைவிடவில்லை. காலத்தின் முக்கியமான கட்டத்தில் நாம் நிற்கிறோம். நம் தாயும் தந்தையும் நமக்களித்த தமிழ் நம் கையில் இருக்கிறது. எதிரே நம் பிள்ளைகள். நாம் என்ன செய்யப் போகிறோம்?