கட்டுரைகள்

இடமாறு தோற்றப் பிழை!

முல்லைப் பெரியாறு அணையில் நீர் மட்டத்தை உயர்த்துவது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் அணை பலமாக உள்ளது என்றும், தமிழ்நாடு முதற்கட்டமாக தற்பொழுதுள்ள 136 அடியிலிருந்து 142 அடி

வழக்குரைஞர் கே. எஸ். இராதாகிருஷ்ணன்

முல்லைப் பெரியாறு அணையில் நீர் மட்டத்தை உயர்த்துவது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் அணை பலமாக உள்ளது என்றும், தமிழ்நாடு முதற்கட்டமாக தற்பொழுதுள்ள 136 அடியிலிருந்து 142 அடி வரையில் நீரைத் தேக்கி வைத்துக் கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் 27.2.2006 அன்று அளித்த தீர்ப்பு இன்றுவரை நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. அந்தத் தீர்ப்பை மறுத்து, கேரள அரசு ஒரு சட்டத்திருத்தமே கொண்டு வந்து நிறைவேற்றிவிட்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மதிக்கப்படாமல், உதாசீனப்படுத்தப்படுவதை நீதித்துறை வேடிக்கை பார்ப்பதா என்று தமிழக அரசு எழுப்பிய நியாயமான கேள்விக்குக் கிடைத்திருக்கும் பதில் என்ன தெரியுமா? தமிழக அரசின் வழக்கையே திசைதிருப்பி  மீண்டும் ஓர் ஆய்வு நடத்துவோம் என ஐவர் குழுவை இப்போது உச்ச நீதிமன்றம் அறிவித்திருப்பதுதான்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டமானது ஆண்டுக்கு 20 அல்லது 30 நாள்கள் மட்டுமே 142 அடியை எட்டும். மற்ற காலங்களில் 120 அடிக்குக் குறைவாகவே இருக்கும். மத்திய நீரியல் துறைத் தலைவர் கே.சி. தாமஸ் தலைமையில் 1979-ம் ஆண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் மத்திய அரசின் பொறியியல் வல்லுநர்கள், தமிழகம் மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களின் பொறியியல் வல்லுநர்கள் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இக்குழு அணையை முழுவதுமாகப் பரிசோதித்துவிட்டு அணை மிக பலமாக உள்ளது என கூறியது.

இருப்பினும், அணைக்கு முட்டுக் கொடுக்கும் வகையில் ஓர் அணை கட்டுவதென முடிவெடுக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் ரூ.26 கோடி செலவில் ஒரு முட்டு அணை கட்டப்பட்டது. இதற்குப் பிறகும் நியாயமற்ற வகையில் புதிய ஒப்பந்தம் வேண்டும் என கேரளம் கேட்டது.

÷டாக்டர் எஸ்.எஸ். பிரார் தலைமையில், வடமாநிலத்தவர் 12 பேர் அடங்கிய மற்றொரு குழு, அணையை மேற்பார்வையிட்டு, அணை மிக பலமாக உள்ளது எனவும், அணையில் 145 அடி உயரம் வரை நீரைத் தேக்கலாம் என்றும் மத்திய நீரியல் துறைக்கு அறிக்கை அளித்தது. இக்குழுவின் அறிக்கையையும் கேரள அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.

பின்னர், டி.கே.மித்தல் தலைமையில் 11 பேர் கொண்ட குழு பல்வேறு கோணங்களில் அணையைச் சோதனை செய்து, அணை மிக உறுதியாக இருப்பதாகவும், மிகக் குறைந்த அளிவில்தான் நீர்க் கசிவு உள்ளது என்றும் அறிக்கை சமர்ப்பித்தது. இதனையும் கேரளம் நிராகரித்து விட்டது.

கேரள அரசே தன்னுடைய கடற்படையினரைக் கொண்டு ஆய்வு செய்தது. இக்குழு நீரில் மூழ்கி எக்கோ சோதனை போன்ற பல ஆய்வுகளைச் செய்தது. அணை பலமாக உள்ளதாகவும், சுமார் 10 அடி அளவுக்குச் சேரும் சகதியுமாக உள்ளது எனவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இக்குழுவின் முடிவையும் கேரளம் ஏற்றுக் கொள்ளாமல் மறுத்து விட்டது.

இப்படிக் குழுக்கள் அமைப்பதும், அதன் முடிவுகளைக் கேரளம் ஏற்க மறுப்பதும் ஒரு தொடர்கதை. திரும்பவும் ஓர் ஐவர் குழுவை முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் உச்ச நீதிமன்றம் இப்பொழுது அமைத்துள்ளது. இதனால் என்ன பயன் ஏற்பட்டுவிடப் போகிறது என்று தமிழகம் சலித்துக் கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

முல்லைப் பெரியாறு பிரச்னையில் தொடர்ந்து உண்மைக்கு மாறான பல தவறான குற்றச்சாட்டுகளைக் கேரளம் முன்வைத்துத் தமிழகத்துக்கு எதிராகச் செயல்பட்டு வருவதை சரித்திரம் பதிவு செய்திருக்கிறது.

100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணை பாதுகாப்பற்றது, உடைந்துவிடும் என்றும், அணை உடைந்தால் கேரளத்தில் மூன்று மாவட்டங்களுக்குச் சேதம் ஏற்படும் என்றும், 999 ஆண்டு ஒப்பந்தம் என்பது பொய்யானது; 99 ஆண்டில் 9 சேர்ந்து கொண்டது என்றும் கேரளம் தொடர்ந்து கூறி வருகிறது.

மேலும், குமுளியில் உள்ள குடியிருப்புப் பகுதி, நீரில் அழிந்துவிடும்; கல் உடைப்பதனால் வன விலங்குகள் ஓடிவிடும்; பூர்வகுடிகளின் குடியிருப்பு நீரில் மூழ்கி விடும்; 136 அடிக்கு மேல் தண்ணீரை உயர்த்தினால் காடுகள் அழிந்துவிடும்; 136 அடிக்கு மேல் தண்ணீர் மட்டத்தைக் கூட்டினால் புற்கள் நீரில் மூழ்குவதால் மானினம் அழிந்துவிடும். மான்களை வேட்டையாட முடியாமல் புலிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும்; நீர் மட்டத்தை உயர்த்துவதனால் சுற்றுப்புறச் சூழல் பாதிக்கும் என்றெல்லாம் விதண்டாவாதம் பேசுகிறது கேரள அரசு.

எம்.கே. பரமேஸ்வரன் நாயர் கேரள அரசின் செயற் பொறியாளராக இருந்தபொழுது,முல்லைப் பெரியாறில் 136 அடி வரை நீரைத் தேக்கினால், மீதமுள்ள 16 அடி நீர் இடுக்கி அணைக்கு வந்து சேரும். அதைப் பயன்படுத்தி இடுக்கி அணையில் மின் உற்பத்தியை மேம்படுத்தலாம் எனத் திட்டமிட்டு கேரள அரசுக்கு சொன்னதால், தேவையில்லாமல் உண்மைக்கு மாறாக கேரள அரசு பேச ஆரம்பித்தது என்பதுதான் முல்லைப் பெரியாறு பிரச்னைக்குத் தொடக்கம்.

முல்லைப் பெரியாறு நதியின் மூலம் நெல்லை மாவட்டம், சிவகிரி  சுந்தரவனப் பகுதியிலிருந்து வடக்கு முகமாக சேத்தூர், வத்திராயிருப்பு, கொடிக்குளம், சிங்கிப்பட்டி போன்ற பகுதிகளில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில், 1,830 மீட்டர் உயரத்தில்  பெய்யும் மழையே முல்லைப் பெரியாறின் உற்பத்தி ஸ்தலம்.  ஒன்றுபட்ட மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்கள் வறட்சியால்  பாதிக்கப்பட்டபொழுது, தன்னுடைய சொந்த முயற்சியில், பல இடர்ப்பாடுகளுக்கு மத்தியில் பென்னிகுயிக் என்கிற ஆங்கிலேய நிர்வாகி இந்த அணையைக்  கட்டி இம்மாவட்டங்களுக்கு அர்ப்பணித்தார்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது 1.11.1956-ல் தான் இப்போதைய கேரள மாநிலம் உருவானது. தமிழர்கள் அதிகமாக வாழ்ந்த தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் தமிழகத்தோடு இணைந்திருந்தால் இப்போது ஏற்பட்டிருக்கும் முல்லைப் பெரியாறு பிரச்னை ஏற்பட்டிருக்குமா என்பதே கேள்விக்குறி.

முல்லைப் பெரியாறு பிரச்னை 1978-79-ல், தமிழகத்தில் எம்.ஜி.ஆரும் கேரளத்தில் பி.கே. வாசுதேவன் நாயரும் முதல்வர்களாக இருந்தபொழுது தொடங்கியது. கேரளம் முன்னுக்குப்பின் முரணாகவும் வாய்மையற்ற முறையில் 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தை மூடி மறைத்து உண்மைக்கு மாறாக 99 ஆண்டுகள்தான் ஒப்பந்தம் என  கருத்துகளைத் துணிச்சலாகச் சொல்லத் தொடங்கியது.

திருவனந்தபுரத்தில், 25.11.1979 அன்று, அன்றைய  தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரும், அன்றைய கேரள முதல்வர் சி.ஹெச். முகம்மது கோயாவும் சந்தித்துப் பேசியதன் விளைவாக ஏற்பட்ட ஒப்பந்தத்தில் தமிழகத்தின் உரிமைகள் யாவும் விட்டுக் கொடுக்கப்பட்டன.

இக்கூட்டம் மத்திய நீரியல் துறைத் தலைவர் கே.சி.தாமஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகப் பொதுப்பணித் துறை பொறியாளார் ஜார்ஜ் மாத்யூ, உண்ணிகிருஷ்ணன், பொதுப்பணித் துறை அமைச்சர் ராஜா முகமது, தலைமைச் செயலாளர் பத்மநாபன், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சிரியாக் போன்றோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கேரளத்தைச் சார்ந்தவர்களே மிகுதியாக இருந்த காரணத்தால் கேரளத்தின் குரலே ஓங்கி ஒலித்தது.

அப்போது தமிழகம் இழந்த உரிமைகள் கொஞ்சநஞ்சமல்ல. ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்னர் அணையின் 48 அடி தண்ணீர் தமிழகத்தின் பயன்பாட்டில் இருந்தது. ஒப்பந்தத்துக்குப் பின்னர் 3-ல் 2 பங்கு தண்ணீர் கேரளத்தின் இடுக்கி அணைக்குச் சென்றது. மீதம் உள்ள 1 பங்கு தண்ணீரே தமிழகத்துக்குக் கிடைத்தது.

அணையின் பாதுகாப்பைக் கேரளமே ஏற்றுக் கொண்டது. ஆனால் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள கேரள போலீஸôருக்குத் தமிழக அரசு ஊதியம் கொடுக்கிறது. அணையில் படகு விடும் உரிமை தமிழகத்திடமிருந்து பறிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டிலிருந்து குமுளி அணை வரைக்குமான சாலையை கேரள அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டது. அணையில் மீன் பிடிக்கும் தமிழகத்தின் உரிமையும் பறிபோனது. போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு போன்றவற்றை தமிழகம் முற்றிலும்  இழந்து விட்டது.

ஒப்பந்தத்துக்கு முன்பு அணைக்கு கேரள அரசு அதிகாரிகள், தமிழக அரசின் அனுமதி பெற்றுத்தான் செல்ல முடியும். ஆனால் நிலைமைகள் மாறி இப்போது தமிழக பொதுப்பணித் துறை அலுவலகத்துக்கு முன் சோதனைச் சாவடி ஒன்றை கேரள அரசு அமைத்து, வரி வசூலித்துப் பின்னர்தான் அனுமதி அளிக்கப்படுகிறது. தமிழகப் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான பல ஏக்கர் இடத்தில் கேரள அரசு ஆக்கிரமிப்பு செய்து பல கட்டடங்களைக் கட்டியுள்ளது.

படகில் தமிழகப் பொதுப்பணித் துறை அதிகாரிகளானாலும், அலுவலரானாலும் சோதனைச் சாவடியில் பெயர் பதிவு செய்துவிட்டுத்தான் செல்ல முடியும். தமிழகத்துக்கு என தனிப் பாதை ஒன்று அமைக்க எவ்வளவோ முயற்சித்தும் இன்று வரை இயலவில்லை. அணைக்கட்டில் தனியாக வயர்லஸ் செட் மற்றும் தனி நீர் மட்ட அளவுகோல் போன்றவற்றைப் பயன்படுத்தி கொண்டு கேரளம் நமது உரிமைகளைப் பறித்துக் கொண்டுள்ளது.

அணைக்கு அருகில் உள்ள வன விருந்தினர் விடுதி மற்றும் குடியிருப்பு வீடுகளுக்கு வந்து கொண்டிருந்த மின்சாரத்தையும் கடந்த பத்து ஆண்டு காலங்களில் பறித்துக்  கொண்டு விட்டனர்.

இன்னொரு குற்றச்சாட்டையும் கேரளம் கூறுகிறது. அணையின் நீர்மட்டம் அபாய நிலைக்கு மேல் உயர்ந்துவிடும்பட்சத்தில், தமிழகத்தின் தேவைக்குப் போக மீதம் உள்ள நீர் வடிய போதிய வசதிகள் அணையில் இல்லை என்று சொல்லி வருகிறது. 36 அடி அகலம், 16 அடி  உயரம் கொண்ட உபரி நீர் வழிந்தோடக் கூடிய பத்து "ஸ்பில் வே'க்கள் (ள்ல்ண்ப் ஜ்ஹஹ்) இருக்கின்றன. இதன்மூலம் விநாடிக்கு சுமார் 80,000 அடிக்கும் அதிகமான நீரை வெளியேற்ற இயலும். இது போதாதென்று கேரளம் கேட்டுக் கொண்டதற்கிணங்க மேலும் நான்கு ஸ்பில் வேக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

ஆக மொத்தம் இவற்றின் மூலமாக ஒரு லட்சம் கன அடிக்கும் அதிகமான உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. பென்னிகுயிக் காலத்திலேயே நீரின் மட்டம் 70 அடியாக இருக்கும்பொழுதே, ஒரு சுரங்கம் அமைத்து அதன் மூலம் நீரை வெளியேற்றி தமிழகத்துக்குத் திருப்பலாம் என்ற ஒரு திட்டம் இருந்தது. அத்தகைய ஒரு சுரங்கத்தை இப்போது தமிழகம் அமைத்தால் அதனை கேரளம் ஏற்குமா என்பது சந்தேகமே.

உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் சபர்வால், தாக்கர் மற்றும் பாலசுப்பிரமணியம் அடங்கிய பெஞ்ச் 27.2.2006 அன்று தீர்ப்பு வழங்கியது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது:

÷நிலநடுக்கம் உள்பட பல்வேறு கோணங்களில் அணையின் பாதுகாப்பு குறித்து ஆராயப்பட்டுள்ளது. நீர் தேக்கி வைக்கும்  உயரத்தை 142 அடியாக உயர்த்தினால் ஆபத்து ஏற்படும் என்ற கருத்தில் எந்த அடிப்படையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் கேரளம் இதில் முட்டுக்கட்டை போடும் வகையில் நடந்து கொண்டதாகவே தெரிகிறது.

முல்லைப் பெரியாறு அணையில் நீரைத் தேக்கி வைக்கும் உயரத்தின் அளவைக் குறைத்ததால் தமிழகத்தில் பாசனப் பகுதி ஏறத்தாழ இரண்டு லட்சம் ஏக்கர் பரப்பளவு குறைந்து விட்டது. மேலும் 140 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட அணையில் 40 சதவிகிதம் அளவுக்கு உற்பத்தித் திறன் குறைந்துவிட்டது.

அணையின் நீர்மட்டம் குறைந்தாலும் அணை அமைந்துள்ள எட்டாயிரம் ஏக்கர் நிலத்துக்கும் தமிழக அரசு குத்தகைப் பணம் இன்று வரையில் தவறாமல் செலுத்தி வருகிறது. அரபிக் கடலில் வீணாகக் கடலில் கலக்கும் நீரின் அளவு 2,313 கன மீட்டர்.

ஆனால் பெரியாறு அணையில் நாம் கூடுதலாகத் தேக்கி வைக்கக் கோருவது 126 மில்லியன் கன மீட்டர் மட்டுமே. ஆனாலும் வீணாகக் கடலில் கலக்க விடுவோமே ஒழிய, தமிழக விவசாயிகளுக்குத் தண்ணீர் தர அனுமதிக்க மாட்டோம் என்று கேரள அரசு வெட்டி வாதம் செய்கிறது.

பெüதிகத்தில் இடமாறு தோற்றப் பிழை என்று குறிப்பிடுவது உண்டு. தவறான பார்வையில் எதையும் பார்க்கும்பொழுது பிழைதான் தெரியும். கேரளத்தின் தவறான பார்வையாலும், அணுகுமுறையாலும் நியாயங்கள் மறுக்கப்படுகின்றன. உண்மைகள் மறைக்கப்படுகின்றன. தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது.

தனது உணவுத் தேவையைப்பூர்த்தி செய்யும் தமிழகத்தின் தண்ணீர்த் தேவையை மறுப்பது என்பது, யானை தானே தன்மீது மண் அள்ளிப்போட்டுக் கொள்ளும் செயல் என்பது கேரள அரசுக்கு ஏன் புரியவில்லை?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

SCROLL FOR NEXT