திருப்பித் தாக்கும் பண ஆயுதம்
பாதாளம் வரை பாயும் தன்மை கொண்ட பணம் இப்போது அரசியலை ஆட்டிப் படைக்கிறது. தமது கட்சிக் கொள்கைகளை அரியணையில் அமர்த்தி அதன் வழியே மக்கள் பணியை மகேசன் பணியாக நடத்திட ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம்
பாதாளம் வரை பாயும் தன்மை கொண்ட பணம் இப்போது அரசியலை ஆட்டிப் படைக்கிறது. தமது கட்சிக் கொள்கைகளை அரியணையில் அமர்த்தி அதன் வழியே மக்கள் பணியை மகேசன் பணியாக நடத்திட ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்ட போது, அவர்கள் மக்கள் பணியைப் பிரதானமாக எடுத்தனர். அதற்காக முழு ஈடுபாட்டுடன் மக்கள் பணியாற்றினர்.
மேடைகள், எழுத்துகள் வழியாகத் தங்களின் கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றனர். மொழி உணர்வு, இன ஒற்றுமை, மூடப் பழக்கவழக்க எதிர்ப்பு போன்ற பணிகளால் மக்களுடன் தாங்கள் இரண்டறக் கலந்தனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பிரதிநிதிகள் மக்களிடமிருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டனர். மக்களும் தங்களது பிரதிநிதிகளைச் சரியாகத் தேர்வு செய்து ஆட்சியை ஒப்படைத்தனர். தங்களின் எதிர்கால வாழ்வையும், தமிழகத்தையும் இனி நமது பிரதிநிகள் பார்த்துக் கொள்வார்கள் என்று வழக்கம்போல் எதிர்பார்த்தனர்.
மக்களுக்கு எழுத்து, பேச்சு, கல்வி, வாழ்க்கைச் சுதந்திரம் கிடைத்தாகிவிட்டது. எனவே, மக்களுக்காக இனிமேல் செய்வது ஒன்றுமில்லையென ஆட்சியாளர்கள் எண்ணத் தொடங்கிய போதே ஆட்சியெனும் அதிகார வர்க்கம் உருவாகத் தொடங்கி விட்டது.
அதிகார வர்க்கத்தின் தோரணைகள், மரியாதைகள், சட்டத்தை வளைப்பது, வளைந்து கொடுக்கும் சட்டங்கள், சொத்துகள் என்று பிரமிப்போடு மக்கள் அண்ணாந்து பார்க்கும் இடத்துக்கு ஆட்சியாளர்கள் சென்று விட்டனர்.
இதை வேடிக்கை பார்க்கும் மக்கள் கூட்டத்திலிருந்து சிலர் தங்களை மேம்படுத்திக் கொள்ள அரசியலே சிறந்த வழியென கணக்கிடுகின்றனர். ஆனால், அதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும் பாதைதான் சரியாக உள்ளதா என்று நம்மைச் சிந்திக்க வைக்கிறது. மக்கள் பணியிலிருந்து அரியணை என்ற பிரதான நிலை மாறி, பணமே பிரதானம் என்ற நிலைக்கு இன்றைய அரசியல் சென்று விட்டது.
மக்களும் இதை நன்கு உணர்ந்துள்ள போதிலும், தங்களுக்காக உழைப்பவர்கள் யார் என்பதை மறந்தே விட்டனர் என்றே எண்ணத் தோன்றுகிறது. இதைத்தான் அண்மையில் நடந்து முடிந்த இடைத்தேர்தல்கள் எடுத்துக்காட்டியுள்ளன.
பணத்துக்காக வாக்கு என்ற நிலை வந்த பிறகு, ஜனநாயகம் எப்படித் தழைக்கும்? மக்களின் தேவைகள் நிறைவு செய்யப்படுவதற்குப் பதில் பணத் தேவைக்காக எதுவும் நடைபெறலாம் என்ற நிலை ஏற்பட்டது. உண்மையான ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் இதை எதிர்த்தனர்.
ஆனால், கையில் புத்தம்புதிய கரன்சி தாள்களைப் பார்த்த பொதுமக்கள் ஜனநாயகவாதிகளின் எச்சரிக்கையை காற்றில் பறக்க விட்டனர். நோட்டுகளை வாங்கிக் கொண்டு வாக்குகளை விற்றனர்.
தான் வாங்கும் பணத்தால் தனது வாழ்க்கை நிலையில் என்ன முன்னேற்றம் கண்டுவிட முடியும் என்று ஒரு கணமாவது சிந்திக்கவில்லை. இதனால், பணம் கொடுத்தால் வாக்கை வாங்கி வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணம் இப்போது அனைத்துத் தரப்பிலும் மேலோங்கி வருகிறது.
இந்த நிலை சமுதாயத்தில் தொடரக் கூடாது என்று அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டிய நிலைக்கு இப்போது நாம் தள்ளப்பட்டுள்ளோம் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
அறிஞர் நியூட்டன் தனது அறிவியல் விதியில், சுவரில் வீசப்பட்ட பந்து மறுபடியும் திரும்பி வருவது போல, ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர் வினை உண்டு என்றார்.
இதற்கு எடுத்துக்காட்டாக கரூர் மாவட்டத்தில் அண்மையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஓர் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் சுமார் 20 நாள்களாகக் குடிநீர் வரவில்லை.
இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சித் தலைவரிடம் முறையிட்டும், அவர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதோடு பொதுமக்களுக்கு சரியான முறையில் பதிலும் அளிக்கவில்லை. பொறுத்திருந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸôர் பொதுமக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, ஊராட்சித் தலைவர் வர வேண்டுமென கோரிக்கை விடப்பட்டது. ஆனால், அவரோ தான் ஒன்றும் சும்மா ஜெயித்து விடவில்லை. ஓட்டுக்கு பணம் கொடுத்துத்தான் வெற்றி பெற்றுள்ளேன். எனவே, அவர்கள் கூப்பிடும் போதெல்லாம் என்னால் வர முடியாது என்று பதிலளித்தாராம்.
இதனால், விரக்தியுற்ற பொதுமக்கள் தங்களின் போராட்டத்தை வேறு வழியில்லாமல் போலீஸôரின் உறுதி மொழியை ஏற்று முடித்துக் கொண்டனர்.
இதைச் சிந்திக்கும் மக்கள் தங்களுக்குள் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். தன்னால் முடிந்தவரை பிறரிடம் எடுத்துச் சொல்வதோடு, தனது குடும்பத்தினரையும் மாற்ற வேண்டும்.