முகப்பு
கட்டுரைகள்

மம்தாவின் மாநிலப் பற்று

ரயில்வே பட்ஜெட் தொடர்பான பரபரப்புகள் ஓய்ந்துவிட்டன. ரயில்வேயின் உண்மையான பிரச்னைகள் பற்றி இப்போது பேசலாம். ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும் ரயில்வே பட்ஜெட்டை பற்றிப் பேசுவதும், அந்த பட்ஜெட்டில் கூறப்

Updated On : 20 செப்டம்பர், 2012 at 7:16 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 8:48 PM

ரயில்வே பட்ஜெட் தொடர்பான பரபரப்புகள் ஓய்ந்துவிட்டன. ரயில்வேயின் உண்மையான பிரச்னைகள் பற்றி இப்போது பேசலாம். ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும் ரயில்வே பட்ஜெட்டை பற்றிப் பேசுவதும், அந்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள மதிப்பீடுகள் குறித்து மட்டும் விவாதிப்பதும் துரதிருஷ்டவசமானது.

 உண்மையில், பட்ஜெட் மதிப்பீடுகள் அனைத்தும் அந்த ஆண்டின் இறுதியில் மாற்றி அமைக்கப்படக் கூடியவை. அந்த ஆண்டில் என்ன நடந்திருக்கிறது என்பது அடுத்த ஆண்டில்தான் தெரியவரும். வரும் ஆண்டில் என்ன நடக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்வதில் மக்களும் ஆர்வம் காட்டுகிறார்களே ஒழிய, கடந்த ஆண்டிலோ அதற்கு முந்தைய ஆண்டிலோ பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகள் என்னவாயின என்பதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. இதனால், கடந்த காலங்களில் செய்த அதே மாதிரியான தவறுகளைத் தொடர்ந்து செய்வதற்கு ஆட்சியாளர்கள் துணிந்துவிடுகிறார்கள்.

÷ரயில்வே அமைச்சர்களாக வருவோர் அரசியல் லாபம் கருதி, சொந்த மாநிலங்களுக்கு மட்டும் அதிக அளவில் திட்டங்களைச் செயல்படுத்துகின்றனர். பட்ஜெட் பற்றி விவாதிப்போர் இதைப் பற்றி பெரிய அளவில் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. இதனால் காலம்காலமாக இது தொடர்கிறது. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் அரசியல் சட்டத்துக்கும் எதிரானதாக இருக்கும் ரயில்வே அமைச்சர்களின் இந்தச் செயல்பாடு உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டியது.

÷கடமையைச் செய்யும்போது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தர மாட்டேன் என பதவியேற்பின்போது உறுதி மொழி எடுத்துக் கொள்ளும் ரயில்வே அமைச்சர்கள், தங்களது சொந்த மாநிலத்துக்கு மட்டும் ஆதரவாக நடந்து கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. மம்தாவும் இதற்கு விதிவிலக்கல்ல. மம்தா என்றால் பாசம் என்று பொருள். பெயருக்கு ஏற்றவாறே சொந்த மாநிலத்தின் மீது அதிக பாசம் வைத்திருக்கிறார் போலும். அவரது சொந்த மாநிலப் பாசம் ரயில்வே பட்ஜெட்டிலும் வெளிப்பட்டிருக்கிறது.

÷கடந்த ரயில்வே பட்ஜெட்டில் பஞ்சாப் மாநிலம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக அகாலிதளம் தலைவரும் மாநிலத் துணை முதல்வருமான சுக்பீர்சிங் பாதல் அதிருப்தி வெளியிட்டார். இதனால், மம்தாவின் பட்ஜெட்டை, மேற்கு வங்க மாநிலத்துக்கான ரயில் பட்ஜெட் என்று வர்ணித்த அவர், ரயில்வே அமைச்சர்கள், தங்களது சொந்த மாநிலத்தை மட்டும் கவனிப்பதை விட்டுவிட்டு நாடு முழுமைக்குமாகச் செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

÷நாடு விடுதலையடைந்த பிறகு வந்த ரயில்வே அமைச்சர்களில் லால் பகதூர் சாஸ்திரி தவிர மற்ற அனைவரும் பிகார் அல்லது மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள் என்பதையும் அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார். இந்த அமைச்சர்களெல்லாம் சொந்த மாநிலத்துக்கு ரயில் திட்டங்களை செயல்படுத்துவதிலேயே குறியாக இருந்திருக்கிறார்கள் என்பது அவரது குற்றச்சாட்டு. ஒரு குறிப்பிட்ட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை மறந்து இந்தியாவுக்காகச் செயல்பட வேண்டும் என்பதை ரயில்வே அமைச்சர்கள் உணர வேண்டும் என்பதையும் பாதல் வலியுறுத்தியிருக்கிறார்.

÷இதேபோல், வேறு சில மாநிலங்களும் மம்தாவின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்திருக்கின்றன. அந்த அதிருப்திக்குக் காரணங்கள் இல்லாமலில்லை. உதாரணத்துக்கு, இந்த பட்ஜெட்டில் 9 புதிய ரயில்பாதைகள் அமைக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதில் 6 திட்டங்கள் மேற்கு வங்கத்தில் செயல்படுத்தப்பட இருக்கின்றன. அதே போல் 25 இரட்டைப் பாதைகளாக்கும் திட்டங்களில், 5 திட்டங்கள் மேற்கு வங்கத்துக்குச் செல்கின்றன. 9 துரந்தோ அதிவேக ரயில்களில் 3 மேற்கு வங்கத்தில் ஓடப் போகின்றன.

÷முன்மாதிரி ரயில் நிலையங்களாக மாற்றுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 94 ரயில்நிலையங்களில் 25 ரயில்நிலையங்கள் மேற்கு வங்கத்தில் இருக்கின்றன. உலகத் தரம் வாய்ந்த ரயில்நிலையங்களாக மாற்றும் திட்டத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 10 ரயில் நிலையங்களில் இரண்டு, மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவை.

÷இது போக, பெண்களுக்காக 6 மாத்ருபூமி ரயில்கள் இயக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் 2 ரயில்கள் மேற்கு வங்கத்தில் இயக்கப்பட இருக்கின்றன. இதேபோல், கர்மபூமி மற்றும் பாரத தீரத் போன்ற திட்டங்களிலும் பெரும் பங்கை அள்ளிச் சென்றிருப்பது மேற்கு வங்கம்தான்.

÷எக்ஸ்பிரஸ் ரயில்கள், புறநகர் ரயில்கள், பெருநகர ரயில்கள், விரிவாக்கத் திட்டங்கள் போன்றவற்றிலும் மேற்கு வங்கத்துக்கே முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. கொல்கத்தா மெட்ரோ ரயில் திட்ட மேம்பாட்டுக்குப் பெரும் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

÷மேற்கு வங்கத்தின் முக்கியப் பணப் பயிர் சணல். இதைப் பயிரிடும் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும் உற்பத்தியைப் பெருக்கவும் புதிய திட்டங்களை வகுப்பது குறித்தும் ரயில்வே ஆய்வு செய்து வருகிறது. இப்படி ரயில்வே பட்ஜெட்டில் பெரும்பகுதி மேற்கு வங்கத்துக்கானதுதான்.

÷நிதியை ஒதுக்குவதில் பாரபட்சமாகச் செயல்படுவது ஒருபுறம் இருக்க, திட்டங்களுக்குப் பெயரிடுவதிலும் தனது பிராந்தியப் பாசத்தைக் காட்டியிருக்கிறார் மம்தா. கடந்த பட்ஜெட்டில் துரந்தோ என்னும் இடைநில்லா அதிவேக ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. துரந்தோ என்பது வங்காள மொழிச் சொல். ஒரு தேசியத் திட்டத்துக்குப் பெயரிடுகையில் பிராந்திய மொழியில் பெயர் வைப்பதை எந்த வகையில் ஏற்றுக் கொள்ள முடியும்? இதேபோல மற்ற துறையைச் சேர்ந்த அமைச்சர்கள் அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு அவரவர் மொழியில் பெயர் வைத்தால் நிலைமை என்னவாகும்?

÷ரயில்வே பட்ஜெட்டில் மேற்கு வங்கத்துக்குத் திட்டங்கள் எதையும் அறிவித்துவிடக்கூடாது என்பதில்லை. அதேபோல், ரயில்வே துறையில் அமைச்சர்களாக இருந்த வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், அவரவர் மாநிலத்துக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்த முனைந்தார்கள் என்பதையும் மறுக்க முடியாது. சொல்லப்போனால், அவர்கள் மம்தாவை விட அதிகமாகவே மாநிலப் பாசத்தைக் காட்டினார்கள். லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, அவரது மாமனார் ஊரிலிருந்து தனது ஊருக்கு ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை வெளிப்படையாகவே அறிவித்தார். இந்த மாதிரியான அணுகுமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

÷இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக ரயில்வே விளங்குகிறது என்பதை மம்தாவே பலமுறை குறிப்பிட்டிருக்கிறார். கிட்டத்தட்ட 24 லட்சம் டன் சரக்குகளையும், 1.8 கோடி பயணிகளையும் ரயில்கள் நாள்தோறும் ஏற்றிச் செல்கின்றன. 17 ஆயிரம் ரயில்களையும்,  64,015 கிலோ மீட்டர் தூர இருப்புப் பாதைகளையும், 14 லட்சம் ஊழியர்களையும் கொண்ட வலுவான அமைப்பாக ரயில்வே விளங்குகிறது. இன்னமும் மேம்படுத்துவதற்கு எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன.

÷ஆனாலும், பொறுப்பான, நிதர்சனமான எந்தவொரு திட்டத்தையும் இந்த ரயில்வே பட்ஜெட்டில் காண முடியவில்லை. உதாரணத்துக்கு ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு புதிய ரயில்பாதைகள் அடுத்த ஒரே ஆண்டில் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் மம்தா அறிவித்துள்ளார். அதே நேரத்தில், கடந்த 58 ஆண்டுகளில் நாட்டில் 10,419 கி.மீ. தூரத்துக்குத்தான் புதிய ரயில்பாதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் அவரே விளக்கியிருக்கிறார். அப்படிப் பார்த்தால் சராசரியாக ஓராண்டுக்கு 180 கி.மீ. பாதைதான் அமைக்கப்பட்டிருக்கிறது. இப்போது மட்டும் திடீரென ஒரே ஆண்டில் ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு ரயில் பாதைகளை அமைத்துவிட முடியுமா?

÷இதற்கு ஒருபடி மேலே போய், அடுத்த பத்தாண்டுகளில் 25 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு ரயில்பாதைகள் அமைப்பதே இலக்கு என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் ஓராண்டுக்கு 2,500 கி.மீ. ரயில்பாதைகள் அமைக்க வேண்டுமே? ஆண்டுக்கு ஆயிரம் கி.மீ. என்பதே சாத்தியமில்லை என்கிறபோது ஆண்டுக்கு 2,500 கி.மீ. என்கிற இலக்கு சாத்தியமானதா? மம்தா பட்ஜெட்டில் இன்னொரு முரண்பாட்டைக் காண முடிகிறது. ரயில்வேயைப் பொறுத்தவரை, லாபத்தைக் காட்டிலும் சமூகத்துக்கான சேவையே முக்கியமானது என பட்ஜெட் தொடக்க உரையில் அவர் பெருமைப்பட்டுக் கொண்டார்.

அதேநேரத்தில் ரயில் நிலையங்களில் குடிநீர் வழங்குவது உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் தனியாருடன் இணைந்து பணியாற்றுவது என்கிற திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளார். தனியார் பங்களிப்பு என்பதே லாப நோக்கத்தைக் கொண்டதுதான். எந்தத் தனியார் நிறுவனம் மக்களுக்குச் சேவையாற்றுவதில் கண்ணும் கருத்துமாகச் செயல்படப் போகிறது? அப்படியிருக்கையில் சமூக நோக்கில் ரயில்வே செயல்படுகிறது என்கிற கருத்து எப்படிச் சரியாகும்?

÷நாட்டின் முக்கியக் கட்டமைப்பான ரயில்வே பற்றி அரசு மீள்பார்வை செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது. ரயில்வேயைச் சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் மற்ற தொழில் மற்றும் சேவைத் துறைகளை வலுப்படுத்த முடியும். ரயில்வேயை மேம்படுத்துவதற்குச் செலவு செய்யப்படும் நிதியானது, நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடியதும், சமூக நலனுக்குத் தேவையானதும் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

÷அரசியல் லாபத்துக்காக மாநிலங்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், பிராந்திய வாரியாக சீரான நிதி ஒதுக்கீட்டுக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். ஒவ்வொரு ரயில்வே அமைச்சரும் அவரவர் மாநிலத்துக்கும், பிற மாநிலங்களுக்கும் எவ்வளவு நிதி ஒதுக்குகிறார் என்பதையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இதன் மூலம், ரயில்வே அமைச்சர்கள் பாரபட்சமில்லாமல் செயல்படுகிறார்களா என்பதை அறிந்து கொள்ள முடியும். அரசுக்கு உண்டா அந்தத் துணிவு?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.