அறுந்து போகும் நூற்பு ஆலைத்தொழில்
இந்தியாவில் பருத்தி விவசாயிகள் நொந்து நூலாகி ஒரு முழக்கயிறு தேடும் பரிதாப நிலை என்று பார்த்தால், தமிழ்நாட்டில் நூற்பாலை அதிபர்களும் இன்று ஒரு முழக்கயிறு தேடுகின்றனர். என்னிடம் இயற்கை வி
கட்டுரைகள்அறுந்து போகும் நூற்பு ஆலைத்தொழில்
இந்தியாவில் பருத்தி விவசாயிகள் நொந்து நூலாகி ஒரு முழக்கயிறு தேடும் பரிதாப நிலை என்று பார்த்தால், தமிழ்நாட்டில் நூற்பாலை அதிபர்களும் இன்று ஒரு முழக்கயிறு தேடுகின்றனர். என்னிடம் இயற்கை வி
இந்தியாவில் பருத்தி விவசாயிகள் நொந்து நூலாகி ஒரு முழக்கயிறு தேடும் பரிதாப நிலை என்று பார்த்தால், தமிழ்நாட்டில் நூற்பாலை அதிபர்களும் இன்று ஒரு முழக்கயிறு தேடுகின்றனர். என்னிடம் இயற்கை விவசாயம் பயிலவரும் விவசாயிகளில் சிலர், நூற்பாலைப் பங்குதாரர்களாகவும் உள்ளனர். அவர்கள் வழங்கும் தகவல்கள், அதிர்ச்சியூட்டுவதாயுள்ளன.
ஏனைய மாநிலங்களோடு ஒப்பிடும்போது வேளாண்மை சார்ந்த தொழிலில் தமிழ்நாடு முதல்நிலை வகிக்கிறது. வேளாண்மையை விடவும் பல்வேறு சிறுதொழில்களில் தமிழர்கள் ஈடுபட்டு நல்ல லாபம் பெற்று வந்ததெல்லாம் மெல்ல மெல்லப் பழங்கதைகளாக மாறி வருகின்றன.
கோதுமையே விளையாத தமிழ்நாட்டில்தான் கோதுமை உருட்டு ஆலைகள் - அதாவது ரோலர்ஃப்ளவர் மில்ஸ் மற்றும் ரொட்டி (பிரட்) நிறுவனங்களும் அதிகம். இவ்வாறே பருத்தி சாகுபடியில் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்ட தமிழ்நாட்டில் நூற்பு ஆலைகள் அதிகம். நூல் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாகக் கூறப்படுகிறது.
ஜவுளித்தொழிலில் மகாராஷ்டிரம், குஜராத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு உள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகியவை சிறந்த உதாரணங்கள்.
கைத்தறி கதர் உற்பத்தியிலும் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. அதுபோல் எள் உற்பத்தியில் பின்தங்கியுள்ள தமிழ்நாட்டில்தான் நல்லெண்ணெய் ஆலைகள் அதிகம் மட்டுமல்ல; முதலிடம் என்ற பெருமையும் நமக்கு உண்டு.
சரி, இன்று என்ன பிரச்னை? பருத்தி விலை உயர்வால் பஞ்சு விலை உயர்ந்து தொழில் செய்யமுடியாமல் நூற்பாலை அதிபர்களும், நூல் விற்பனையாளர்களும் அழிந்து வருவதுதான்.
தமிழ்நாட்டில் பருத்தி விளைந்த விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், ராஜபாளையம் என்றாலும் சரி, தேனி, திண்டுக்கல் என்றாலும் சரி, மதுரை, சேலம் என்றாலும் சரி இந்த மாவட்டங்களில் பருத்தி சாகுபடி மறைந்து குத்துக்கல் (ரியல் எஸ்டேட்) சாகுபடி உயர்ந்ததால் இன்றைய பருத்தி விலை ஏற்றத்துக்கு முன்பே பல நூற்பு ஆலைகளும், ஜின்னிங் தொழிலும் நசிந்துபோய் ஒன்று, இரண்டு மிச்சமிருப்பதும் அழியத் தொடங்கிவிட்டன.
பருத்தியை மையமிட்ட பருத்தி ஆடைத் தொழில், நூற்பு ஆலை, பின்னலாடை, பனியன் தொழிலில் ""இந்தியாவின் மான்செஸ்டர்'' என்று சொல்லும் அளவில் புகழ்பெற்ற திருப்பூர் நகரில் மும்பையைப்போல் பிழைப்பை நம்பி வருவோருக்கு வேலைகளை வழங்கிய ஒரு பொன்னகரம் இன்று பித்தளையாகிவிட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலை இழந்துவிட்டனர்.
இந்திய ஜவுளித்துறை தமிழரான அமைச்சரிடம் இருந்து என்ன பயன்? நூல் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு எதிராக ஊக்கப்படுத்தும் நடைமுறைகளையே இந்திய ஜவுளித்துறை செய்துவருகிறது.
அனைத்துலகச் சந்தையில் பஞ்சுவிலை உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டி இதுநாள்வரை தடை விதித்திருந்த பஞ்சு ஏற்றுமதியை இப்போது நீக்கிவிட்டதால் ஊகவணிகம் வளர்ந்து நூல் உற்பத்தியாளர்களுக்குப் பஞ்சு கிடைக்கவில்லை. நூல் விலை உயர்வால் பருத்தி ஆடைகளின் விலை 20 முதல் 30 சதம் உயர்ந்துவிட்டது. கதர், கைத்தறி, காந்தி கண்ட கனவு எல்லாம் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பருத்தியில் நெய்யப்பட்ட பாதுகாப்பான ஆடை அணிந்துவரும் மக்கள் இனி சுத்தமாகவே பருத்தி ஆடைகளை வாங்க முடியாத அளவில் விலை உயரும் அபாயம் உள்ளது.
""ட்விஸ்டட் யார்ன்'' அதாவது பாலிஸ்டர், ரேயான் நூல்களில் பருத்தி நூல் மிக்ஸ் செய்து வழங்கும் ஆடைகளின் விலையும் உயரும்.
இதுவரை பழைய ஸ்டாக் இருப்பதால் விலையேற்றம் அச்சம் தரும் வழியில் உயரவில்லை. நூற்பு ஆலைகளுக்குக் கட்டுபடியாகும் விலையில் பஞ்சு கிடைக்காதவரை - தமிழ்நாட்டின் ஜவுளித்தொழிலுக்கு ஒரு பேரபாயம் காத்து நிற்கிறது.
ஏப்ரல் மாதம் வரை பஞ்சுவிலை ஒரு கேண்டி | 23,000 விற்றது பொய். இன்று அதே பஞ்சு | 42,000 விற்பது நிஜம். பஞ்சு ஏற்றுமதிக்குத் தடை விதித்தவரை விலை ஒரு கட்டுப்பாட்டில் இருந்தது.
நவம்பரிலிருந்து ஏற்றுமதி தொடங்கத் திட்டமிடப்பட்டதால் பஞ்சு வியாபாரத்தில் ஊகவணிகம்; நூல் விலையில் ஆன்லைன் வர்த்தகம், பதுக்கல் புகுந்துவிட்டது. நூல் உற்பத்திக்குப் பஞ்சு இல்லை. ஜவுளித்தொழிலுக்கு நூல் இல்லை.
பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து, இலவசங்களை நம்பி வாழவேண்டிய புதிய சூழ்நிலை ஏற்படும். நூற்பு ஆலைகளுக்கு வேண்டிய அளவில் கச்சாப்பொருளாகிய பஞ்சு நியாய விலையில் கிடைத்தால்தான் நூல் உற்பத்தியும், நூல் வியாபாரமும் வளர்ச்சியுறும். தொழிலை உள்ளூரில் வளர்ப்பதைப் புறக்கணித்துவிட்டு சீனாவின் தொழில் வளர்ச்சிக்குப் பஞ்சை ஏற்றுமதி செய்வது என்ன நியாயம்?
ஏற்றுமதி மூலம் நமது அன்னியச் செலாவணி உயர்கிறது. சீனாவோடு ஒப்பிட்டால் நமது ஏற்றுமதி மதிப்பு 6 பங்கு குறைவு. சீனாவில் 1.2 ட்ரில்லியன் யு.எஸ். டாலர் ஏற்றுமதி மதிப்பு என்றால் நம்நிலை 200 பில்லியனைவிடக் குறைவு.
இன்று பருத்தி விளையும் உலக நாடுகளில் வறட்சி, வெள்ளம் காரணமாக பஞ்சு உற்பத்தி குறைந்துவிட்டது. என்ன விலை கொடுத்தாவது பஞ்சு இறக்குமதி செய்ய சீனா தயாராக உள்ளது.
உலகிலேயே பருத்தி உற்பத்தியில் சீனா முதல்நிலையிலும் இந்தியா இரண்டாவது நிலையிலும் உள்ளன. பஞ்சு விலை உயர்வுக்கு அடிப்படைக் காரணம் பாகிஸ்தான் - உஸ்பெகிஸ்தான் வெள்ளத்தால் அறுவடை நிலையிலிருந்த பருத்திப்பயிர் நாசமானதே.
இதன் காரணமாக ஊகவணிகத்தால் உலகச்சந்தை விலை அதிகரித்துள்ள நிலையில்கூட சீனா அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்யத் தயாராயுள்ளது.
தாங்கள்தான் தேசபக்திக்கு முழுக் குத்தகை எடுத்துள்ளதாகக் காட்டிக்கொள்ளும் காங்கிரஸ் தலைவர்கள் கம்யூனிஸ்டுகளை ""சீனாவின் அடிவருடி'' என்று வர்ணிப்பது உண்டு. உண்மையில் இன்று காங்கிரஸ்தான் அப்படிச் செயல்படுகிறது.
இந்தியவில் பல லட்சம் தொழிலாளர்களை வேலை இழக்கச் செய்யவும், உள்நாட்டில் ஜவுளி உற்பத்தியைக் குறைத்து சீனாவின் ஜவுளித்தொழிலுக்குக் கச்சாப் பொருளாகிய பஞ்சை ஏற்றுமதி செய்தால் என்ன அர்த்தம்? நம்மைச் சுரண்டுபவன் சீனாக்காரனாயிருந்தால் என்ன? அமெரிக்காக்காரனாக இருந்தால் என்ன? சுரண்டலின் பொருள் பச்சைத் துரோகமே.
பஞ்சை ஏற்றுமதி செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று ஒரு பம்மாத்து வாதம் செய்யப்படுகிறது. ஊகவணிகம் செய்யும் ஏற்றுமதியாளர்கள் பஞ்சை வாங்கிக் குவித்துக்கொள்ள வசதியாக, முதலில் தடை அறிவித்துப் பருத்திவிலையைக் குறைத்துவிட்டு விவசாயிகளிடம் ஸ்டாக் இல்லாமல் போனதும் ஏற்றுமதியை அனுமதித்து விவசாயிகளின் நண்பனாகக் காட்டிக்கொள்ளும் அரசாங்கம் இதே விஷயத்தை ஏன் நிலக்கடலையிலோ, எள்ளிலோ, பருப்பிலோ, தேங்காயிலோ அமல்படுத்தவில்லை. அழிந்து வரும் எண்ணெய்வித்து - பருப்புப் பயிர்களுக்கு ஆக்கம் தரவேண்டியதுதானே!
நெல், கோதுமை விஷயத்தில் கடைப்பிடிக்கும் அதே விலைக்கட்டுப்பாட்டுக் கொள்கை பஞ்சிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
உணவுப்பொருளை அதிக நாள் ஸ்டாக் வைக்க இயலாது. பருத்தியைப் பஞ்சாக மாற்றிய பின்னர் இருப்பில் வைக்கலாமே. இது கெட்டுவிடாது.
காட்டன் கார்ப்பரேஷன் என்ற ஒரு பொது நிறுவனம் உறங்குகிறது. ஊக வணிகத்துக்கு உரம் போடுவதுதான் அதன் பணிபோலும். பஞ்சைக் கொள்முதல் செய்து உள்ளூர் நூல் உற்பத்தியாளர்களுக்கு நியாய விலையில் வழங்காதவரை இந்த நாடு மேம்படப் போவதில்லை.