முகப்பு
கட்டுரைகள்

சொர்க்கம் நரகமாக்கப்படுகிறது

இரு மனங்களுக்கிடையே ஏற்படும் விரிசல்களால் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமண உறவை இன்றைய இளம் தம்பதிகள் நரகமாக மாற்றிக்கொண்டுள்ளனர்.    அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் அதிவேக முன்னேற்றம்

Updated On : 20 செப்டம்பர், 2012 at 10:57 PM
பகிர்:

இரு மனங்களுக்கிடையே ஏற்படும் விரிசல்களால் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமண உறவை இன்றைய இளம் தம்பதிகள் நரகமாக மாற்றிக்கொண்டுள்ளனர்.  

 அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் அதிவேக முன்னேற்றம் கண்ட மேலை நாடுகள் கூட நம் நாட்டைக் கண்டு பொறாமைப்படக் காரணம், இந்தியாவின் தொழில் வளர்ச்சியோ, அறிவியல் வளர்ச்சியோ அல்ல.  நம் நாட்டின் பண்பாடும், கலாசாரமும்தான். கூட்டுக்குடும்ப அமைப்பு, கணவன் மனைவி  என்ற கண்ணியமான பந்தம், கட்டுக்கோப்பான வாழ்க்கை முறைதான் அவர்களை ஈர்த்தது.  

 இயந்திரமயமான வாழ்க்கை,  நிலையற்ற குடும்ப அமைப்பு, கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை முறை இப்படி வாழ்ந்துவந்த அவர்கள், நம்முடைய கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டு தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.  

Advertisement

  ஆனால், நம்மில் பலர் கொஞ்சம் கொஞ்சமாக மேற்கத்திய நாகரிகத்தைக் கடைப்பிடிக்கும் நிலைக்குச் சென்றுவிட்டனர். கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து கொண்டிருக்கின்றன. பொருளாதார நெருக்கடி, அவர்களின் வாழ்வைச் சீரழித்துக்கொண்டிருக்கிறது. கணவன், மனைவி, குழந்தை, குடும்பம் என்று வாழ்ந்த அவர்களின் இனிமையான வாழ்வு, இன்று நீதிமன்றங்களின் வாசலில் காத்துக்கிடக்கிறது.

  இந்தியாவில் தற்போது விவாகரத்து அதிகரித்துள்ளது.  குடும்ப நீதி மன்றங்களில் பல ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.  தமிழகத்திலும் இந்த அவலநிலை அதிகரித்துள்ளது.  சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் தினமும் 15 விவாகரத்து வழக்குகள் பதிவாகின்றன.  இப்படி விவாகரத்துகோரி நிற்பவர்கள் ஒன்றும் புரியாத படிப்பறிவற்ற பாமரர்கள் அல்ல.  நன்கு படித்து, மேலான பதவிகளில் இருப்பவர்கள்தான். ஒருவரை ஒருவர் காதலித்து, புரிந்துகொண்டு திருமணம் செய்துகொண்டவர்கள்கூட இப்படி விவாகரத்துகோரி நீதிமன்றங்களின் வாசலில் நிற்கின்றனர்.

 ஒவ்வொருவரும் எதிர்பார்ப்புடனும், ஏராளமான கனவுகளுடனும் தங்கள் திருமண வாழ்வைத் தொடங்குகின்றனர். இந்த எதிர்பார்ப்புகள், கனவுகள்  சின்னச்சின்னப் பிரச்னைகளால் சிதைந்து போகும்போது கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதனால் விவாகரத்து என்ற அவசர முடிவை எடுக்கின்றனர். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் தன்மை இல்லாததாலும், சந்தேக எண்ணங்களாலும் பல குடும்பங்கள் பிரிகின்றன. கணவன் மனைவியிடையே தாம்பத்ய உறவுச் சிக்கலால்  விவாகரத்து கோருகின்றனர்.  

 இன்றைய அவசர உலகில் காலை முதல் இரவு வரை வேலை செய்வதால் கணவன் மனைவி தங்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள நேரமில்லாமல் போகிறது.  உணர்வுகளை மட்டுமல்லாமல் அவர்களிடையே ஏற்படும் சிறுசிறு பிரச்னைகளைக்கூட ஒருவருக்கொருவர் பேசித் தீர்த்துக்கொள்ள முடியாமல் போகிறது. இதனால் சிறு பிரச்னைகூட பூதாகரமாகிறது.  மேலும் பொருளாதாரத்தில் இருவரும் சமமாக இருப்பதால் உன்னை நம்பி நான் இல்லை என்று மனதளவில் கௌரவ எண்ணம் வந்து தங்கள் பிரச்னையை பெரியவர்களிடம் கூறாமல், தங்களுக்குள்ளேயே பிரிவு என்னும் ஒரு முடிவை எடுக்கின்றனர்.

 இந்த நிலையைத் தவிர்க்க கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.  ஒருவர் மற்றவர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இருவருக்கும் ஏற்படும் சின்னச்சின்னப் பிரச்னைகளை மனம்விட்டுப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். மணமுறிவு என்பது தங்களைச் சார்ந்தவர்களையும் பாதிக்கும் என்பதை தம்பதிகள் உணரவேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மண முறிவு ஏற்பட்டால் அது அந்தக் குடும்பத்தை வெகுவாகப் பாதிக்கும்.

 ஒரு குழந்தை நன்கு வளர வேண்டுமானால் அந்தக் குடும்பத்தில் அன்பான, அமைதியான சூழ்நிலையும், அனுசரணையான பேச்சும், அறிவார்ந்த வழிகாட்டலும் மிகவும் தேவை.  அதைத் தரவேண்டிய பெற்றோர்களே  ஆளுக்கொரு திசையில் இருந்தால் எதையுமே பெறமுடியாத அந்தக் குழந்தையின் தளிர் மனது எவ்வளவு வேதனை அடையும். இதனால் குழந்தைகளின் எதிர்காலமே வீணாகிவிடும்.   

  பிறப்பு ஒருமுறைதான். எங்கோ பிறந்து நம்முடன் வாழ்வில் சேரும் துணையை அன்பாக அரவணைத்துச் செல்வதில் ஆண்,பெண் இருவரும் கௌரவம் பார்க்க வேண்டாமே. சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமண உறவு, சொர்க்கத்தை நோக்கிப் பயணிப்பதில்தான் நியாயம் இருக்கிறது. இல்லற வாழ்வு என்பது சுகமான சுமை. இந்தச் சுமையைச் சுமந்து பார்ப்பதற்குப் பயந்து, நீதிமன்றப் படிகளில் காத்திருக்கிறது இன்றைய இளம் தலைமுறை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.