வறுமை "ஒளிப்பு' திட்டம்!
வறுமையை ஒழித்தே தீருவோம் என்று ஆவேசமாக முழங்குவதற்கு நமது ஆட்சியாளர்களை விட்டால் ஆளே கிடையாது. வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்களை முன்னேற்ற வேண்டும் என்பதில் அக்கறை உள்ளவர்கள் போலக் காட்டிக் கொள்வ
வறுமையை ஒழித்தே தீருவோம் என்று ஆவேசமாக முழங்குவதற்கு நமது ஆட்சியாளர்களை விட்டால் ஆளே கிடையாது. வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்களை முன்னேற்ற வேண்டும் என்பதில் அக்கறை உள்ளவர்கள் போலக் காட்டிக் கொள்வார்கள். இதோ ஏழைகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது என்று புள்ளிவிவரத்தைக்கூட காண்பிப்பார்கள்.
ஆனால், உண்மையில் அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளும் வகுக்கும் கொள்கைகளும் ஏழைகளுக்கு எதிர்மறையாகவே இருக்கின்றன. இதனால் ஏழைகள் அப்படியே இருக்கிறார்கள். வறுமைக்கோட்டுக்கு மேல் அவர்களால் வர முடியவில்லை.
நமது ஆட்சியாளர்கள் ஏன் இப்படி நடந்து கொள்ள வேண்டும்? காரணம் இருக்கிறது. ஏழைகள் அதிகமாக இருந்தால் நலத்திட்டங்கள், மானியங்கள் என்று பல வகையான செலவுகளைச் செய்தாக வேண்டும். ஆனால், ஏழைகளுக்குச் செலவு செய்து அதன் மூலம் பட்ஜெட்டில் துண்டு விழுவதை நமது அரசு விரும்பவில்லை.
Advertisement
இதனால் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது என்பதற்காக பல்வேறு வகையான புள்ளிவிவரங்களை நீட்டுகிறார்கள்.
இதென்ன தந்திரம் என்கிறீர்களா? புரிந்துகொள்ள மிக எளிது. ஏழைகள்தான் முன்னேறவில்லை. ஆனால், வறுமைக்கோடு என்கிற ஒன்று இருக்கிறதே அதை இன்னும் கொஞ்சம் இறக்கிவிட்டால் நிறையப்பேர் அந்த வறுமைக்கோட்டுக்கு மேலே போய்விடுவார்களே. அதுதான் அரசு தரும் புள்ளிவிவரங்களுக்குப் பின்னால் இருக்கும் சூட்சுமம்.
அரசின் கணக்குப்படி கிராமப்புறங்களில் ரூ.15-க்கும், நகர்ப்புறங்களில் ரூ.20-க்கும் குறைவாகச் சம்பாதிப்பவர்களே ஏழைகள். வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்கள். டெண்டுல்கர் கமிட்டியின் அறிக்கையில் கூறப்பட்ட இந்த வரம்பை மத்திய அரசு அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கு மட்டும்தான் அரசு வழங்கும் மானியங்கள் எல்லாம் கிடைக்கும்.
தினமும் ரூ.20 சம்பாதிப்பவர்கள் எல்லோரும் வறுமைக்கோட்டுக்கு மேல் வாழ்பவர்கள். பணக்காரர்கள் என்று அரசு சொல்கிறது. அவர்களுக்கு ஏழைகளுக்கான சலுகைகள் கிடைக்காது.
ரூ.20-க்கு என்ன வாங்க முடியும்? ஒரு முழுச்சாப்பாடு கூட சாப்பிட முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். இந்தக் காலத்தில் 20 ரூபாய்க்கு இருக்கும் மதிப்பு எல்லோருக்குமே தெரிந்திருக்கும் நிலையில், நமது ஆட்சியாளர்களுக்கும், கொள்கையை வகுப்பவர்களுக்கும் இந்த விஷயம் தெரியாமல் போனது நமது துரதிருஷ்டம்.
இவர்களுக்கெல்லாம் ஒரு நாளுக்கு 20 ரூபாய் சம்பளம் கொடுத்து எப்படி வாழ்க்கை நடத்துகிறார்கள் என்று பார்க்க வேண்டும். 200 ரூபாய் கொடுத்தால்கூட முடியாது. போக்குவரத்து, மின்சாரம், வீட்டு வாடகை உள்பட எல்லாச் செலவுகளையும் எந்தவிதமான அரசு மானியமும் இல்லாமல் சமாளிக்க வேண்டும். இந்தக் கால விலைவாசியில் இது சாத்தியமே இல்லை. இவ்வளவு குறைந்தபணத்தில் வாழ்க்கை நடத்துவதை நினைத்துப் பார்ப்பதற்குக்கூட அவர்கள் விரும்ப மாட்டார்கள்.
இப்படி உண்மைநிலை என்ன என்பதை அனுபவப்பூர்வமாக உணராதவர்களால்தான் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. ஏதோ சொந்த மனக்கணக்குகளால் அவர்கள் வறுமைக்கோட்டை நிர்ணயித்து விட்டிருக்கிறார்கள்.
வறுமை என்பதை ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் உணவுப் பொருளின் கலோரியின் அடிப்படையில் நிர்ணயிப்பதற்குப் பதிலாக வாழ்க்கைத் தரக் குறியீட்டின் அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும் என்று டெண்டுல்கர் கமிட்டி பரிந்துரை செய்திருக்கிறது. முன்னெல்லாம் 2,400 கலோரி சக்தி தரும் உணவுப் பொருள்களை வாங்கும் திறனைக் கொண்டு வறுமை வரையறுக்கப்பட்டது. நகர்ப்புறத்துக்கு இந்த அளவு 2,100 கலோரி. அதை மாற்றி சுகாதாரம், கல்வி போன்ற சேவைகளையும் டெண்டுல்கர் கமிட்டி சேர்த்திருக்கிறது.
சுகாதாரத்தையும் கல்வியையும் கணக்கில் சேர்த்த டெண்டுல்கர் கமிட்டி, கலோரியின் அளவை கிராமப்புறம், நகர்ப்புறம் ஆகிய இரண்டுக்கும் 1,800 கலோரி எனக் குறைத்திருக்கிறது. அதாவது முன்பு 2,400 கலோரி சக்தி தரும் உணவுப்பொருளை வாங்க முடிந்தவர்தான் பணக்காரர். இப்போது 1,800 கலோரி சக்தி தரும் உணவுப் பொருள்களை வாங்கினாலேயே அவர் பணக்காரர் ஆகிவிடுகிறார். இதை நியாயப்படுத்துவதற்கு உணவு மற்றும் விவசாய அமைப்பின் அறிக்கையைக் காட்டுகிறார்கள்.
இவர்களெல்லாம் வசதியாக ஒன்றை மறந்துவிடுகிறார்கள். உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு குறிப்பிட்டது, இலகுவான வேலை செய்வோருக்கான குறைந்தபட்ச சக்தியின் அளவுதான். காடு மேடுகளில் அலைந்து திரிந்து விவசாயம் செய்யும் நமது கிராமவாசிகளுக்கும், பலமாடிக் கட்டடங்களில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் நகர்ப்புறக் கூலித் தொழிலாளர்களுக்கும் இதைப் பொருத்துவது எந்த வகையிலும் நியாயமாகாது.
டெண்டுல்கர் கமிட்டியின் பரிந்துரைப்படி சராசரியாக ஒரு மாதத்துக்கு ரூ.578.80 சம்பாதித்தால் (கிராமப்புறத்துக்கு ரூ.446.68) அவர் ஏழை இல்லை. வாடகைக்கு ரூ.31, கல்விக்கு ரூ.18, மருத்துவச் செலவுக்கு ரூ.25, காய்கறிக்கு ரூ.36.50 ஒதுக்கினால் போதும் என்கிறது டெண்டுல்கர் கமிட்டி. என்ன கேலிக்கூத்து இது.
இதுபோல ஏதோ ஒரு கணக்கீட்டின் அடிப்படையில் நாட்டில் 32 சதவீதம் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர் என திட்டக்குழு தெரிவிக்கிறது. 2004-05-ம் ஆண்டில் இது 37.2 சதவீதமாக இருந்தது.
அரசின் வறுமை ஒழிப்புத் திட்டங்களால் கிட்டத்தட்ட 5 சதவீதத்துக்கும் அதிகமானோர் வறுமைக்கோட்டுக்கு மேலே போய்விட்டார்கள்.
இந்தக் கணக்குப்படி, ஒரு நாளைக்கு ரூ.20-க்கும் அதிகமாகச் சம்பாதிக்கிறார்கள் என்பதால் பிச்சைக்காரர்கள்கூட வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
ஆக, அரசின் கணக்கீடுகள் எல்லாம் நாட்டில் உள்ள வறுமையின் உண்மையான பரிமாணத்தைப் பிரதிபலிக்கவில்லை என்பது தெளிவாகியிருக்கிறது. அரசின் மானியங்கள் தேவைப்படும் பெரும்பான்மையினருக்கு அவை மறுக்கப்படுகின்றன என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
யூனிசெஃப் அறிக்கையின்படி இந்தியாவிலுள்ள 50 சதவீதம் குழந்தைகள் ஊட்டச் சத்துக் குறைபாடு உள்ளவர்கள் என்று தெரிய வருகிறது. அதேபோல், இந்திய மக்களில் 29 சதவீதம் பேருக்கு ஊட்டச் சத்துக் குறைபாடு இருக்கிறது என உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு கூறுகிறது.
6 முதல் 35 மாதக் குழந்தைகளில் 78.9 சதவீதம் பேர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என தேசிய குடும்பச் சுகாதார ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. நவீன மருத்துவ வசதிகள் பெருகிவிட்டதாகக் கூறப்படும் இந்தக் காலகட்டத்திலும் 60 சதவீத பிரசவங்கள் வீட்டிலேயேதான் நடக்கின்றன என்கிற அதிர்ச்சியளிக்கும் தகவலையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது.
தேசிய ஆய்வறிக்கையில் வேறு சில புள்ளிவிவரங்கள் தரப்பட்டிருக்கின்றன. நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 50 சதவீதம் பேருக்கு மட்டும் தரமான வீடுகளில் வசிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. வெறும் 7 சதவீதம் பேருக்கு மட்டும்தான் அமைப்புசார்ந்த துறைகளில் வேலை கிடைக்கிறது எனவும் அந்த அறிக்கை கூறுகிறது. இதன்படி பார்த்தால் நாட்டில் 93 சதவீதம் பேருக்கு முறையான வேலைவாய்ப்புக் கிடைக்கவில்லை என்பதுதானே பொருள்.
இதைப்போலவே நமது நாட்டில் 55 சதவீதம் பேருக்கு உரிய கழிப்பிட வசதி இல்லை என்று ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு தனது அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறது.
இப்படி ஊட்டச் சத்துக் குறைபாடு உள்ளவர்கள், கழிப்பிட வசதி இல்லாதவர்கள், உரிய வேலை கிடைக்காதவர்கள், சுள்ளி பொறுக்கி அடுப்பெரிப்பவர்கள், பிரசவத்துக்காகக்கூட மருத்துவமனைக்குச் செல்ல முடியாதவர்கள், குடிசைகளில் வசிப்பவர்களைத்தான் நமது அரசு வறுமைக்கோட்டுக்கு மேல் வசிப்பவர்கள் என்று கூறுகிறது. அதனால்தான் நாட்டில் வெறும் 32 சதவீதம் பேர் மட்டும் வறுமைக்கோட்டுக்குக் கீழே வசிப்பதாகப் புள்ளிவிவரங்களைக் காட்டுகிறது.
நாட்டில் பெரும் பணக்காரர்களும் இருக்கிறார்கள். ஆனால், எண்ணிக்கையில் அவர்கள் மிகவும் குறைவு. நமது நாட்டின் வளம் எல்லாம் பெரும்பணக்காரர்களின் கையில் சிக்கியிருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. நாட்டிலுள்ள 55 பில்லியனர்களிடம் ரூ.11 லட்சம் கோடி பணம் இருப்பதாக "ஃபோர்ப்ஸ்' பத்திரிகை மதிப்பிட்டுள்ளது. பாகிஸ்தான், இலங்கை ஆகிய இரு நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பையும் கூட்டினால்கூட வரும் தொகைகூட இதைவிடக் குறைவுதான். அப்படியென்றால் நம்நாட்டுப் பணக்காரர்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்தியாவின் அசுர வளர்ச்சியின் பலன் எல்லோருக்கும் போய்ச் சேரவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. நமது ஆட்சியாளர்கள் வகுக்கும் கொள்கைகள் ஏழைகளை முன்னேற்றுவதாக அமையவில்லை. இப்படியிருக்கும் நிலையில், ஏழைகளைக் குறைக்கிறோம் என்று கூறி வறுமைக்கோட்டுக்கான வரையறையை மாற்றுவதால், நிலைமை இன்னும் மோசமாகும்.
வறுமையை ஒழிக்க வேண்டும் என்று அரசு உண்மையிலேயே விரும்பினால், நாட்டில் உள்ள ஏழைகளின் எண்ணிக்கையை நேர்மையாக ஒப்புக்கொள்ள வேண்டும்.
நாட்டின் வறுமையை ஒளித்து வைக்கும்படியான புள்ளிவிவரங்களைத் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, மானியங்களும் நலத்திட்டப் பயன்களும் ஏழைகள் அனைவருக்கும் போய்ச் சேருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.