ஒளி பெறும் மக்களாட்சி
தமிழ்நாட்டுச் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற 2011 தேர்தலும் அதன் முடிவுகளும் இந்திய அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன. மார்ச் 19-ம் நாள் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது மனுக்கள
தமிழ்நாட்டுச் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற 2011 தேர்தலும் அதன் முடிவுகளும் இந்திய அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன.
மார்ச் 19-ம் நாள் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது மனுக்களைத் தாக்கல் செய்ய ஆரம்பித்தனர். மார்ச் 30-ம் தேதி வேட்பாளர்கள் பட்டியல் ஒவ்வொரு தொகுதியிலும் முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு கடுமையான சூறாவளிப் பயணங்களும் தேர்தல் பிரசாரங்களும் அதிமுக அணி - திமுக அணி ஆகிய இரு பிரிவுகள் இடையே கடும் வேகத்தில் ஏப்ரல் 11-ம் தேதி வரை நடைபெற்றன. இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் மிகக்குறைந்த கால அளவில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது இந்தத் தேர்தலில்தான்.
வாக்கெடுப்பு நாளுக்குப் பிறகு 2-வது நாள் அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வெற்றி தோல்விகள் அறிவிக்கப்படும். ஆனால், தமிழ்நாட்டின் இந்தத் தேர்தலில் வாக்கெடுப்பு முடிந்து ஒரு மாதம் கழித்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக அல்லற்பட்ட தமிழ்நாட்டு மக்கள், இந்த முப்பது நாள்களில் அதைவிட மிகவும் அதிகமாக அவதிப்பட்டனர். போடப்பட்ட வாக்குகளுக்கு தக்க பாதுகாப்புக் கிடைக்குமா என்ற அவநம்பிக்கை எதிர்க்கட்சியினருக்கும் வாக்காளர்களுக்கும் ஏற்பட்டது.
60 மாதங்களில் வளர்க்கப்பட்ட பயிர் பலன்தரவேண்டிய கடைசி 1 மாதத்தில் கருகிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. முன்பு எப்பொழுதும் இல்லாத அளவுக்கு இந்தியத் தேர்தல் ஆணையமும், தமிழ்நாட்டு தேர்தல் அதிகாரியும் தமது கடமையையும், அதிகாரத்தையும் மிகவும் நேர்மையாக, வலிமையாக நிலைநாட்டியதால், மாநில ஆட்சியாளர்களின் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டு தேர்தல் பணி செம்மையாக நடைபெற்றது.
கடைசியாக, மே 13-ம் தேதி வந்தது. காலை 8.30 மணிக்குத் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை ஒவ்வொரு சுற்றிலும் அதிமுக அணியின் வெற்றியை மின்னல் வேகத்தில் குவித்தபடி இருந்தது. கடைசியில் மொத்தம் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக அணி 203 இடங்களைப் பெற்றது. திமுக அணிக்கு 31 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
2011 தேர்தலின் தொடக்கத்திலிருந்து அதிமுக அணி வெற்றி பெறுவது நிச்சயம் என்ற எதிர்பார்ப்பு தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் பரவியிருந்தது. ஆனால், எதிர்பார்த்ததைவிட பிரமிக்கத்தக்க அளவுக்கு 203 இடங்களில் அதிமுக அணி வெற்றி பெறும் என்றோ, 160 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 146 இடங்களில் தனியாக வெற்றி பெறும் என்றோ யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.
ஆனால், ஐந்தாண்டு காலத்தில் சீரழிக்கப்பட்ட பொருளாதாரம், சிதைந்துவிட்ட சட்டம்-ஒழுங்கு, ஏழைகளை வாட்டி வதைத்த அன்றாடப் பொருள்களின் விலை ஏற்றம், மின்வெட்டு, எங்கும் எதிலும் ஊழல், அதிலும், ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி ரூபாய் அலைக்கற்றை மோசடி ஆகியவை மிக வேகமாக கிராம மக்களிடமும் பரவி விட்டன.
நகர்ப்புற வாக்காளர்களைவிட அதிகமான அளவுக்கு, ஒரு குடும்ப ஆட்சியை நடத்திய மகான்களின் அக்கிரமங்களை நன்கு அறிந்த கிராம மக்கள் தக்க பாடம் கற்பித்து விட்டனர். இப்பொழுது தமிழ்நாட்டின் கிராம மக்களின் எண்ணிக்கை 4 கோடியே 20 லட்சம். 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் கோமான்களாலும், இளவரசர்களாலும் அவர்களை ஏமாற்ற முடியவில்லை.
தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, ""இந்த மாபெரும் வெற்றியைத் தந்த வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகம் வெற்றி பெற்றதென்றால் அது மக்கள் தந்த வெற்றியாகும்'' என்று மிக அடக்கமாகக் கூறினார்.
தமிழ்நாட்டில் அதிமுக அணி பெற்ற மகத்தான வெற்றி தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுக்கும் உற்சாகம் தரும் வழிகாட்டியாக அமைந்து விட்டது.
குறிப்பாக, மேற்கு வங்கத்தில் தொடர்ந்து 34 ஆண்டுகளும், கேரளத்தில் அடுத்தடுத்து பல தடவைகள் ஆட்சி புரிந்தும் அகில இந்திய அளவில் முக்கிய தேசிய அமைப்பாக விளங்கிய இடதுசாரிக் கூட்டணி 2011-ல் நடைபெற்ற தேர்தலில் இரண்டு மாநிலங்களிலும் ஆட்சியை இழந்தது.
ஆனால், தமிழ்நாட்டிலோ, அதிமுக அணியில் இடம்பெற்ற தேசிய முற்போக்கு திராவிட கழகம் போட்டியிட்ட 41 தொகுதிகளில் 29-ல் வெற்றி பெற்றது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்ட 12 தொகுதிகளில் 10-ல் வெற்றி பெற்றது. அதேபோல் 10 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 9 தொகுதிகளில் வெற்றிபெற்றது.
மேலும், மற்ற சிறுபான்மைக் கட்சிகளான மனிதநேய மக்கள் கட்சி மூன்றில் இரண்டு இடங்களையும், புதிய தமிழகமும், சமத்துவ மக்கள் கட்சியும் போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றன. இந்தியக் குடியரசுக் கட்சி, பார்வர்டு பிளாக், கொங்கு இளைஞர் பேரவை ஆகியவை போட்டியிட்ட ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுவிட்டன.
இதற்கு முன்பு தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் மிக உற்சாகத்துடனும், உறுதியுடனும் பங்கேற்று உள்ளனர்.
பதிவு செய்யப்பட்ட வாக்காளர் எண்ணிக்கையில் 2001 தேர்தலில் 53 சதவிகிதமும், 2006 தேர்தலில் 70 சதவிகிதமும், 2011 தேர்தலில் 80-84 சதவிகிதமும் தேர்தல் நாள் அன்று தமது வாக்குகளைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த வளர்ச்சி ஜனநாயக வளர்ச்சிக்கு நல்லதோர் எடுத்துக்காட்டாகும்.
எதிர்பார்த்த வெற்றி அதிமுக அணிக்கு அளவில் மிகப் பெரியதாகக் கிடைத்துவிட்டது. இதில் அடுத்து ஆளும் கட்சி வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அது வாக்காளப் பெருமக்களுக்கு ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பு ஆகும்.
சீரழிந்த பொருளாதாரத்தையும், சிதறிவிட்ட சட்டம் - அமைதியையும், மலிந்துவிட்ட ஊழல் பிரவாகத்தையும், தேங்கிவிட்ட அடிப்படை வசதிகளையும், மின் வெட்டு, ஏறிவிட்ட விலைவாசியையும், திருத்திச் செம்மைப்படுத்த வேண்டிய பொறுப்பு மிகவும் கடினமான ஒன்றாகும்.
முன்பெல்லாம் இந்தியாவில், தமிழ்நாடு நேர்மையான, நியாயமான முறையில் பொது வாழ்விலும், அரசாங்க நிர்வாகத்திலும் முதல்தர மாநிலமாக விளங்கியது. அந்த நிலைமை முழுமையாக மாறியது மட்டுமல்லாது, 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அலைக்கற்றை ஊழலுக்குப் பிறகு தமிழ்நாடு என்றால் இந்தியாவில் முதல் தர ஊழல் மாநிலமாக மாறிவிட்டது. 2011 தேர்தலில் ஏற்பட்டுள்ள மாறுதல் இந்த அவமானத்தை அகற்றியுள்ளது என்று நம்பலாம்.
ஒளிமயமான எதிர்காலத்துக்கு வழி திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒன்றுபட்டு வளர்த்துள்ள ஜனநாயகச் சுடர் ஒளிவிட்டுப் பிரகாசிக்க வேண்டும். பஞ்சமும் பட்டினியும் நீங்க வேண்டும். நேர்மையும், நீதியும் நிலைபெற வேண்டும். தொடர்ந்து வரும் மக்களின் ஈடுபாடுதான் ஒரு ஜனநாயக ஆட்சியைப் பாதுகாக்கும்.