""ஐப்பசிச் சதயமும் சித்திரைச் சதயமும்''
தமிழக மன்னர்களில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாமன்னனாக விளங்கிய முதலாம் இராசராசன் கி.பி.985-ம் ஆண்டு அரசனாக ஆட்சி பீடம் ஏறி 1014 வரை ஆட்சி புரிந்தான். தென் இந்தியா முழுவதையும், இலங்கையின் பெரும்பகுதி
தமிழக மன்னர்களில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாமன்னனாக விளங்கிய முதலாம் இராசராசன் கி.பி.985-ம் ஆண்டு அரசனாக ஆட்சி பீடம் ஏறி 1014 வரை ஆட்சி புரிந்தான். தென் இந்தியா முழுவதையும், இலங்கையின் பெரும்பகுதியையும், லட்சத் தீவுகளையும் தன் கீழ் ஆள்படுத்தி சோழப் பெரும் பேரரசை நிறுவினார்.
இராசராசனின் புகழ்பரப்பும் வகையில் ""பாண்டிகுலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூரில்'' அவன் எடுத்த புகழ்பெற்ற பெருவுடையார் கோயிலில் ஐப்பசிச் சதய நாள் அன்று இராசராசனின் பிறந்தநாள் விழா ஒவ்வோராண்டும் அரசு விழாவாகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி போற்றுதற்குரியதாகும்.
""சதய நாள்விழா உதியர் மண்டலம் தன்னில் வைத்தவன்'' என்று இலக்கியம் கூறுவதற்கு ஏற்ப கேரள மாநிலத்தில் உள்ள திருநந்திக்கரைக் கோயிலில் இராசராசனின் பிறந்த நாளான சதய நாள் விழா ஐப்பசி மாதம் நடைபெற்றுள்ளது.
இது பற்றி வரலாற்றறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் தன் பிற்காலச் சோழர் வரலாற்றில் குறிப்பிட்டுள்ளதே தஞ்சையில் ஐப்பசிச் சதயவிழா கொண்டாடப்படுவதற்குக் காரணம் ஆகும்.
திருநந்திக்கரைக் கல்வெட்டில் ஐப்பசிச் சதயம் இராசராசனின் ""பிறந்தருளின நாள்'' என்றோ ""திரு அவதாரம் செய்தருளிய நாள்'' என்றோ கூறப்பெறவில்லை.
தமிழக அரசர்கள் பிறந்த நட்சத்திரத்தன்று எல்லா மாதமும் கோயில்களில் விழா எடுப்பர். இவ்விழா ஒருநாள் மட்டும் நடைபெறும். ஆனால், அரசர்கள் பிறந்த மாதத்தில் வரும் பிறந்த நட்சத்திரத்தன்று ""பெருந்திருவிழா'' என்ற பெயரில் பெரும்பாலும் ஏழு நாள்கள் விழா நடைபெறும். இதைப் பல கல்வெட்டுகள் தெளிவாகக் கூறுகின்றன.
ஐப்பசிச் சதயவிழாப் பற்றிக் கூறும் திருநந்திக்கரைக் கல்வெட்டிலேயே சித்திரைச் சதயத்தில் ""ஆறாடி ஸ்நமஞ்செய்து'' (பெருந்திருவிழா) கொண்டாடிய குறிப்பு இருப்பதை அக்கல்வெட்டை மறு ஆய்வு செய்த மத்தியத் தொல்லியல்துறைக் கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் சு. இராசவேலு கண்டுபிடித்துள்ளார்.
இராசராசனின் பட்டத்தரசியான தந்திசத்தி விடங்கியார் ஆன உலோகமாதேவியார் திருவையாற்றில் தான் எடுப்பித்த உலோகமாதேவீச்சரம் கோயிலில் தன் கணவர் இராசராசனின் சதய நாள் விழாவைப் பன்னிரண்டு மாதமும் கொண்டாட ஏற்பாடு செய்தார்.
11 மாதச் சதயவிழா மாதந்தோறும் 10 கலம் நெல் செலவிட்டுக் கொண்டாடப்பட்டது. ஆனால், சித்திரைச் சதயப் பெருந்திருவிழா மட்டும் 256 கலம் நெல் செலவிட்டு ஏழுநாள் தீர்த்தமாடி விழா கொண்டாடப்பட்டது. இதற்கு இராசராசன் சித்திரைச் சதயத்தில் பிறந்ததே காரணம் ஆகும் (செந்தமிழ் தொகுதி 21, பக்கம் 427)
இராசராசனின் மற்றொரு மனைவியான நக்கன் தில்லையழகியார் ஆன ஸ்ரீபஞ்சவன் மாதேவியார் திருப்புகலூர் அக்னீசுவரர் கோயிலில் மாதச் சதய விழாவையும், சித்திரைச் சதயப் பெருந் திருவிழாவையும் கொண்டாட ஏற்பாடு செய்தார்.
சித்திரைச் சதயப் பெருந்திருவிழாக் கொண்டாட மட்டும் எயினங்குடி என்ற ஊர் நிலங்கள் கொடையாக வழங்கப்பட்டன.
முதல் இராசேந்திரனின் 30-ம் ஆட்சியாண்டில் (1042) இராஜராஜச் சதுர்வேதிமங்கலத்துச் சபையார் ""ராஜராஜ தேவர் திரு அவதாரம் செய்தருளிய சித்திரைச் சதயநாள் அன்றும், ஸ்ரீ ராகவச்சக்ரவர்த்திகள் (இராமன்) திரு அவதாரம் செய்தருளிய புனர்பூச நட்சத்திரத்தன்றும்'' பெருந் திருவிழாக் கொண்டாடக் கொடை கொடுத்தனர். இதைக் குறிக்கும் கல்வெட்டில் இராசராசன் சித்திரைச் சதயத்தன்று பிறந்தான் என்று தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் கொத்தமங்கலம் இராசகேசரி விண்ணகரத்தில் இராசராசன் காலத்தில் 1005-ம் ஆண்டு பன்னிரண்டு மாதமும் சதய விழாக் கொண்டாடப்பட்டது. 11 மாதத்துக்கு மாதம் 5 கல நெல் விழாவுக்குச் செலவழிக்கப்பட்டது.
இராசராசன் பிறந்த சித்திரைச் சதயம் 245 கல நெல் செலவில் பெருந்திரு விழாவாகக் கொண்டாடப்பட்டதைக் கல்வெட்டு மிகத் தெளிவாகக் குறிக்கிறது.
""உடையார் ஸ்ரீ ராஜராஜ தேவர் திரு அவதாரஞ் செய்தருளின சதயத் திருநாள் திங்கள்தோறும் திருவிழா எழுந்தருளி ஒரு திருவிழாவுக்கு வேண்டும்படி நிவந்தஞ்செய்த நெல்லு அய்ங்கலமாக ஆட்டைக்குத் திங்கள் திருவிழா பதின்ஒன்றுக்கு நெல் 55 கலமும், சித்திரைத் திங்களில் உடையார் ஸ்ரீ ராஜராஜ தேவர் பிறந்தருளின சதயத் திருநாளுக்கு முன் ஏழு நாளே பிடித்துத் திருவிழாவாய் சதயத் திருநாளால் தீர்த்தமாடியருளும் ஆட்டைப் பெருந்திரு விழாவுக்கு வேண்டும் நிவந்தஞ் செய்தபடி நெல்லு 245 கலம் ஆக நெல்லு 300 கலம்'' கொடையாகக் கொடுக்கப்பட்டதைக் கல்வெட்டு தெளிவாகக் குறிக்கிறது.
மத்தியத் தொல்லியல் துறைக் கல்வெட்டுப் பிரிவினர் இக்கல்வெட்டுக் குறிப்பில் இராசராசன் பிறந்த சித்திரைச் சதயத்தை உறுதிபடக் குறிப்பிட்டுள்ளனர்.
மேற்கண்டவாறு பல கோயில்களில் இராசராசன் பிறந்த சித்திரைச் சதயவிழா மட்டும் ஏழு நாள் பெருந் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டுள்ளது.
இதற்குக் காரணம் மாமன்னன் இராசராசன் சித்திரைச் சதயத்தில் பிறந்ததேயாகும்.
இராசராசன் பிறந்த சதயம் பற்றி ஆய்வு செய்த மத்திய அரசு தொல்லியல்துறைக் கல்வெட்டு ஆய்வாளர்கள் முனைவர் சூ. சுவாமிநாதன், முனைவர் சு. இராசவேலு, வரலாற்று ஆய்வாளர் நெல்லை நெடுமாறன், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத் தொல்லியல் - கல்வெட்டியல் துறை முன்னாள் தலைவர் செ. இராசு ஆகிய பலர் இராசராசன் பிறந்தது சித்திரைச் சதயமே என்பதைத் தங்கள் ஆய்வு முடிவாகத் தெரிவித்துள்ளனர்.
ஐப்பசிச் சதயத்தில் சதயவிழாக் கொண்டாடலாம். தவறு இல்லை. ஆனால், சித்திரைச் சதயத்தில் பிறந்த இராசராசனை ""ஐப்பசி சதயத்தில் பிறந்தான்'' என்று கூறி அரசு விழா நடத்துவது பொருத்தமுடையதுதானா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
தமிழக அரசு ஒரு குழுவை நியமித்து உண்மையறிந்து எதிர்காலத்தில் இராசராசன் பிறந்த சதய விழாவைச் சித்திரைச் சதயத்தில் கொண்டாட ஏற்பாடு செய்ய வேண்டும். அதுவே இராசராசனுக்குச் செய்யும் உண்மையான மரியாதை ஆகும்.