முகப்பு
கட்டுரைகள்

பாசன சங்கங்களின் பலம்; விவசாயிகளுக்கு வளம்

இந்தியா போன்ற வளரும் நாடுகளின் முதுகெலும்பாக இன்றும் விளங்கி வருவது வேளாண்மையே ஆகும். ஏறத்தாழ 60 சதவிகித மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நீர்ப் பாசனம்தான் வேளாண் வளர்ச்ச

Updated On : 20 செப்டம்பர், 2012 at 4:51 AM
பகிர்:
Updated On : 29 டிசம்பர், 2023 at 12:34 AM

இந்தியா போன்ற வளரும் நாடுகளின் முதுகெலும்பாக இன்றும் விளங்கி வருவது வேளாண்மையே ஆகும். ஏறத்தாழ 60 சதவிகித மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நீர்ப் பாசனம்தான் வேளாண் வளர்ச்சிக்கு அடிப்படையாகும்.

ஆறுகள், ஏரிகள், கிணறுகள் மற்றும் இதர வகை என நான்கு வகை பாசன ஆதாரங்கள் உணவு உற்பத்தியின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கின்றன. தமிழகத்தில் இதர வகைப் பாசனம் தவிர மற்ற மூன்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

தமிழகத்தில் 1960-களில் ஏரிப்பாசனம் முதலிடத்திலும், ஆறுகள் மூலமான கால்வாய்ப் பாசனம் இரண்டாம் இடத்திலும், கிணற்றுப் பாசனம் மூன்றாம் இடத்திலும் இருந்தது.

Advertisement

இந்நிலை கடந்த 40 ஆண்டுகளில் தலைகீழாக மாறியுள்ளது. அதாவது தற்பொழுது கிணற்றுப் பாசனம் முதலாவதாகவும், ஆற்றுப் பாசனம் இரண்டாவதாகவும், ஏரிப்பாசனம் மூன்றாவதாகவும் உள்ளது.

தமிழகத்தில் 2005-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி 40,319 ஏரிகள் உள்ளன. இதில் பதிவு செய்யப்பட்ட மொத்த சாகுபடிப் பரப்பு ஏறத்தாழ பத்து லட்சம் ஹெக்டேர் ஆகும். தமிழக ஏரிகள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

ஒன்று, பொதுப் பணித்துறையின் பராமரிப்பில் உள்ள 40 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பு கொண்ட ஏரிகள். இவற்றின் எண்ணிக்கை 11,008, இதன் மூலம் பயன்பெறும் பாசனப் பரப்பு 8,17,703 ஹெக்டேர். மற்றொன்று - பஞ்சாயத்து யூனியன் கட்டுப்பாட்டில் 40 ஹெக்டேர் பாசன அளவுக்கு கீழ் உள்ள ஏரிகள். இவற்றின் எண்ணிக்கை 29,311. இதன் மூலம் பயன்பெறும் பாசனப் பரப்பு 1,94,159 ஹெக்டேர்.

ஏரிகளைப் பொருத்தவரை அதன் பராமரிப்பு மிக மிக முக்கியமானது. ஏனெனில், இவற்றின் அமைப்பு இயற்கையான முறையிலேயே வடிவமைக்கப்பட்டது. ஒவ்வோர் ஏரிக்கும் நீர்வரத்துக் கால்வாய், ஏரிக்கரை, மதகு, கலுங்கு மற்றும் நீர் கொள்ளும் பகுதி என இயல்பான அமைப்புகள் இருக்கின்றன.

இவை ஒவ்வொன்றையும் தொடர்ந்து சரியான முறையில் பராமரித்தால் அனைத்து ஏரிகளும் அவற்றின் முழு கொள்ளளவுக்குத் தண்ணீர் பெற்று அவற்றின் கீழ் உள்ள அனைத்து நிலங்களும் முழுமையாக நீர்ப்பாசனம் பெறும்.

ஆனால், தற்போது ஏறத்தாழ பாதியளவு ஏரிப்பாசன நிலங்கள் மட்டுமே தொடர்ந்து சாகுபடியின் கீழ் உள்ளன. மீதமுள்ள ஏரிப்பாசன நிலங்கள் சாகுபடி செய்யப்படாமலும், வேலிக்காத்தான் முள் வளர்ந்த நிலையிலும் உள்ளன.

மேலும் வீட்டுமனைகள், கட்டடங்கள் மற்றும் பல்வேறு இதர உபயோகங்களுக்காக உரிய அனுமதியின்றி ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ளன. அதை மீட்க இயலாமல் ஏரிப்பாசன நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது.

இந்நிலைமைகளை எல்லாம் கருத்தில்கொண்டு தற்போது கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தில் உலக வங்கியின் உதவியுடன், ""நீர்வள நிலவள மேலாண்மைத் திட்டம்'' என்ற பெயரில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்படி தமிழகம் முழுவதுமாக ஏறத்தாழ 5,200 பொதுப் பணித்துறை ஏரிகளில் வரத்துக் கால்வாய் சீரமைப்பு, ஏரிக்கரைகளைப் பலப்படுத்துதல், மதகுகள் மற்றும் கலுங்குகளைச் சீரமைத்தல் எனப் பல்வேறு பணிகள் நான்கு கட்டங்களாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இப்பணிகள் எல்லாம் பொதுப் பணித்துறை மூலம் செயல்படுத்தப்படுவதால் விவசாயிகளின் பங்கு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. இதைக் கருத்தில்கொண்டு, உலக வங்கி இத்திட்டத்துக்கு நிதி உதவி (ஏறத்தாழ ரூ. 2,200 கோடி) அளிக்கும்போதே அனைத்து விவசாயப் பயனாளிகளையும் இப்பாசன மேம்பாட்டுத் திட்டத்தில் முழுமையாக ஈடுபடுத்தும் நோக்கில் நீர்ப்பாசனக் குழுக்கள் அனைத்து ஏரிகளிலும் அமைக்கப்பட்டன.

இத்திட்டம் விவசாயப் பயனாளிகளின் துணையோடு செயல்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தியது. அதன்படி பொதுப் பணித்துறை உதவியுடன் அனைத்து ஏரிகளிலும் நீர்ப்பாசனக் குழுக்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி அமைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், ஏரி நீரைப் பயன்படுத்துவோரை முழுமையாக உள்ளடக்கிய இந் நீர்ப்பாசனக் குழுக்கள் அனைத்தும் இன்றளவும் பெயரளவிலேயே உள்ளன. ஏரிகளின் மேம்பாட்டுக்கான எந்த ஒரு நடவடிக்கையிலும் கடந்த சில ஆண்டுகளாக அவை ஈடுபட்டு வந்ததற்கான அறிகுறிகளே தென்படவில்லை.

ஏரிப்பாசனக் குழுக்களில் சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாக இருந்துகொண்டு அவர்கள் பயன்படுத்தும் ஏரிகளிலேயே என்னென்ன திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதே பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லை.

இந்த நிலையானது, விவசாயிகள் இன்னும் முழுமையாக எதையும் புரிந்துகொள்ளும் நிலைக்கு விழிப்புணர்வு அடையவில்லை என்பதையே காட்டுகிறது.

இந்நீர்ப்பாசனக் குழுக்களுக்குத் தலைவர் (1), தொகுதி உறுப்பினர்கள் (4) மற்றும் துணைக்குழு உறுப்பினர்கள் (16) எனக் குறைந்தபட்சம் 21 தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் ஒவ்வொரு நீர்ப்பாசனக் குழுவிலும் இடம்பெற்றிருந்தும் எவ்விதச் செயல்பாடும் நடைபெறவில்லை.

இவர்கள் தங்களுடைய பொறுப்புகள் மற்றும் பணிகள் பற்றி அறிய அரசு பல வழிமுறைகளைக் கையாண்டு வருகிறது. அதன்படி 2000-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை நீர்ப்பாசனக் குழுக்களைச் செம்மைப்படுத்துவதற்காகவும், ஏரிகளை ஆக்கிரமிப்புகளிலிருந்து பாதுகாக்கவும் பல்வேறு சட்ட விதிமுறைகளைத் தமிழக அரசு இயற்றியுள்ளது.

ஆனால், இவை எதைப் பற்றியும் பெரும்பாலான நீர்ப்பாசனக் குழுக்கள் அறிந்திருக்கவில்லை. உண்மையில் பல நீர்ப்பாசனக் குழுத் தலைவர்கள் அரசு வெளியிட்டுள்ள சட்ட விதிமுறைகள் அடங்கிய புத்தகங்களை வைத்துள்ளனர். ஆனால், அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதைப் படித்தறிய அல்லது கேட்டறிய விருப்பமற்றவர்களாக உள்ளனர்.

ஊராட்சிமன்றத் தலைவர்கள்போல் தங்களுக்குத் தனிப்பட்ட செயல்பாட்டு அதிகாரம் எதுவும் வழங்கப்படவில்லை என அவர்கள் கூறிவருவது "கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்தாற்போல்' உள்ளது மிகவும் வருந்தத்தக்கதாகும்.

மேலும் இந்நிலையானது, விவசாயிகள் தாங்களாக ஒன்றுசேர்ந்து எதையும் செயல்படுத்துவதற்கு, அரசு நீர்ப்பாசனக் குழுக்கள் மூலம் முழு அங்கீகாரத்தை சட்டப்பூர்வமாக வழங்கியும், அவர்கள் இன்றளவும் அதைப் புரிந்துகொள்ளவில்லை, புரிந்துகொள்ள விரும்பவுமில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நீர்ப்பாசன சங்கங்கள் விழிப்புணர்வு பெறவும், பொதுப் பணித்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முழுப் பயனும் விவசாயிகளுக்குக் கிடைக்கவும் செப்பனிடப்பட்டு, சீர்படுத்தப்பட்டுள்ள ஏரிகளின் பராமரிப்புப் பணியை எதிர்காலத்தில் பாசனதாரர்களே முன்னின்று மேற்கொள்ளவும் அனைத்து விவசாயப் பயனாளிகளுக்கும் விழிப்புணர்வு மற்றும் புரிந்துணர்வு கருத்தரங்குகளை அரசு முன்னின்று செயல்படுத்த வேண்டியது முக்கியப் பணியாகும். பாசன சங்கங்கள் பலம் பெற்றால் வேளாண் உற்பத்தி கணிசமாகப் பெருக வாய்ப்பு உண்டு.

ஆண்டுதோறும் பெய்கின்ற வடகிழக்குப் பருவமழையால் இந்தியாவிலேயே தமிழகம் மட்டும் அதிக அளவு மழை பெறுகிறது. ஏரிப்பாசனத்தின் வளர்ச்சி, ஏரிகளுக்குக் கிடைக்கிற நீரின் அளவைச் சார்ந்ததாகும்.

"காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்' என்ற பழமொழிக்கிணங்க இயற்கையின் கொடையாகிய மழை நீரை இத்தருணத்தில் ஏரிகளில் முழுமையாகத் தேக்கி வைத்து, ஏரிகளைச் சரிவரப் பராமரித்து, நீர்ப்பாசன சங்கங்களை உயிரோட்டமுள்ளதாக மாற்றி, துரிதமாகச் செயல்பட்டால் வேளாண் உற்பத்தியில் தொடர்ந்து பெரும் பலன் காணலாம்; அதன் மூலம் விவசாயிகளின் வாழ்வும் வளம் பெறும்.

கட்டுரையாளர்: சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைப் பேராசிரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.