கட்டுரைகள்

மனித நீதியா? மறுக்கப்பட்ட நீதியா?

உலகத்தின் பார்வைக்கே வராமல் மலையடிவாரத்தில் ஒளிந்து கிடந்த அந்த ஊருக்கு ஒரு மரியாதை வந்திருக்கிறது. "வாச்சாத்தி' இன்று எல்லோருக்கும் தெரிந்த பெயராகிவிட்டது.  துன்பத்திலேயே பிறந்து, துயரத்திலேயே வளர்ந்

உதயை மு. வீரையன்

உலகத்தின் பார்வைக்கே வராமல் மலையடிவாரத்தில் ஒளிந்து கிடந்த அந்த ஊருக்கு ஒரு மரியாதை வந்திருக்கிறது. "வாச்சாத்தி' இன்று எல்லோருக்கும் தெரிந்த பெயராகிவிட்டது.

 துன்பத்திலேயே பிறந்து, துயரத்திலேயே வளர்ந்து, அறியாமையிலேயே வாழ்ந்து கொண்டிருந்த அவர்கள் மீது அதிகார வர்க்கம் நடத்திய தாக்குதலுக்குத் தீர்ப்பு கிடைத்திருக்கிறது.

 கடந்த செப்டம்பர் 29, 2011 அன்று வாச்சாத்தி வழக்கு ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இதற்கு இந்தச் சிற்றூர் பழங்குடி மக்கள் 19 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. தீர்ப்பு கூறப்பட்ட அன்று அந்த ஊர் மக்கள் எந்த வேலைக்கும் போகாமல் நீதிமன்ற வாசலிலேயே ஆவலோடு கூடியிருந்தனர் என்று செய்திகள் கூறுகின்றன. இந்தத் தீர்ப்புக்காக அவர்கள் கண்ணீரோடும், கவலையோடும், அவமானத்தோடும் இத்தனை காலமாகக் காத்திருந்தனர்.

 தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் (இப்போது பாப்பிரெட்டிப்பட்டி வட்டம்) சித்தேரி மலையடிவாரத்தில் இருப்பது பேதாம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உள்பட்ட சிறிய ஊரே வாச்சாத்தி. 1992-ல் இங்கு 290 குடும்பங்களைச் சேர்ந்த 655 பேர் இருந்தனர்.

 இந்தக் கிராமத்தில் சந்தனக்கட்டைகள் உள்ளிட்ட வனப்பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து, நடைபெற்ற சோதனையின்போது பெண்கள், குழந்தைகள், முதியோர் உள்பட கிராம மக்கள் தாக்குதலுக்கும், சித்திரவதைக்கும் ஆளானார்கள்.

 கிராமத்துப் பெண்கள் 18 பேர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர். பொய் வழக்குகள் போடப்பட்டு சிறைக்கும் அனுப்பப்பட்டனர். இது நடந்தது 1992 ஜூன் மாதம் 20-ம் நாள்.

 இது தொடர்பாக 5 ஐ.எப்.எஸ். அதிகாரிகள் உள்பட 155 வனத்துறையினர், ஒரு டி.எஸ்.பி. உள்பட 108 காவல்துறையினர், ஒரு வட்டாட்சியர் உள்பட 6 வருவாய்த்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த 269 பேரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு, இப்போது தண்டிக்கப்பட்டுள்ளனர். 290 குடும்பங்களைக் கொண்ட ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தில் ஏழை, எளிய, பாமர பழங்குடி மக்கள் மீது வனத்துறையினரும், காவல்துறையினரும், வருவாய்த் துறையினருமாக 269 பேர் படையெடுத்து முற்றுகையிட்டுள்ளனர் என்பது வியப்பாக இல்லையா? ஆண்டாண்டு காலமாக அடக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் கிடக்கும் மலைவாழ் மக்கள்மீது இவ்வளவு வன்மம் வரக் காரணம் என்ன?

 விலைமதிப்புள்ள சந்தன மரங்கள் மிகுந்திருந்த சித்தேரி மலைத்தொடரின் அடிவாரத்தில் "வாச்சாத்தி' கிராமம் அமைந்திருக்கிறது. இந்தக் கிராமத்துக்குள் நுழைந்துதான் சித்தேரி மலைமீது ஏற முடியும். அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வனச்சரக அலுவலர்கள் அங்கே முறைகேடாக மரங்கள் வெட்டிக் கடத்தியதில் அவர்களுக்குள் போட்டியும், அதனால் மோதலும் ஏற்பட்டுள்ளது.

 இந்தக் கடத்தல் தொழில் அந்தக் கிராம மக்களைக்கொண்டே நடைபெற்று வந்துள்ளது. ஒரு கட்டத்தில் அச்சத்தின் காரணமாக அம்மக்கள் இருதரப்புக்கும் மரம் வெட்ட மறுத்ததால் ஆத்திரம்கொண்டு அவர்களைப் பழிவாங்கும் நோக்கத்துடன் இத்தகைய அநாகரிகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 அந்தக் கிராம மக்கள் சட்டவிரோதமாகச் சந்தன மரங்களை வெட்டிக் கடத்தினர் என்பது வனத்துறையினரின் குற்றச்சாட்டு. சிலர் கூலிக்காக மரங்களை வெட்டியிருக்கலாம். ஆனால், கடத்தல் போன்ற நோக்கங்கள் அந்த மக்களுக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை. சிலர் கடத்தல்காரர்களுக்குக் கூலிக்காகப் பணியாற்றியுள்ளனர் என்று சிபிஐ விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 சந்தனமரக் கடத்தலைத் தடுக்கவே வனத்துறை தனிப்படைப் பிரிவுகளை உருவாக்கி, "சிறப்பு ஆபரேஷன்'களை நடத்தியதாக சிபிஐ விசாரணை அறிக்கை தெரிவிக்கிறது. அப்படிப்பட்ட ஆபரேஷன்களில் ஒன்று இதுவென்றால் மற்றவற்றைப் பற்றிக் கேட்க வேண்டியதில்லை.

 நூற்றுக்கணக்கான அதிகாரிகள், ஊழியர்கள், காவல்துறையினர் துப்பாக்கி முனையில் படையெடுத்துக் கொண்டுபோய் மூன்று நாள்கள் வெறியாட்டம் ஆடியுள்ளனர் என்றால், இது நாகரிகச் சமுதாயத்தில் நடக்கும் செயல்தானா? அதிகாரத்தால் எதையும் சாதித்துவிடலாம் என்ற ஆணவத்தைத் தவிர, வேறு என்ன?

 இந்த அடக்குமுறை வெறியாட்டத்தால் பாதிப் பேர் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். மீதி பேர் பயந்து மலைக்காடுகளுக்குள் ஓடி ஒளிந்தனர்; திரும்பவும் ஊருக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே வீடுகள் சேதப்படுத்தப்பட்டன.

 வீட்டுக்குள் இருந்த பொருள்கள் களவாடப்பட்டன. வாழ்வாதாரமாக இருந்த ஆடு மாடுகள் சந்தையில் விற்கப்பட்டன. குடிநீர்க் கிணறுகள் பாழ்படுத்தப்பட்டன. யாரும் வாழத் தகுதியற்ற ஊராக மாற்றி, அந்த இடத்தை வனப்பகுதியாகச் செய்து விடுவதே அவர்கள் நோக்கமாகவும், திட்டமாகவும் இருந்தது என பாதிக்கப்பட்ட மக்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

 இவ்வளவு கொடுமைக்குள்ளான வாச்சாத்தி மக்கள் சார்பாக அளிக்கப்பட்ட புகாரை அரூர் காவல்துறையினர் கண்டுகொள்ளவே இல்லை. "தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம்' உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, "தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம்' கிராமத்தில் நேரடி விசாரணை நடத்தி, அவர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 பாதிக்கப்பட்ட மக்களும், அவர்களுக்காகப் போராடிய இயக்கங்களும் சிபிஐ விசாரணை கோரி பெற்றார்கள். முதலில் கிருஷ்ணகிரி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டது. பின்னர், தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு கிடைத்துள்ளது.

 "இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது இந்திய நீதித்துறை வரலாற்றில் புதிய சாதனை'' என்று கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில் 54 பேர் இறந்துவிட்டனர். மீதமிருக்கும் 215 பேரும் குற்றவாளிகள் என்றே தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

 இவ்வாறு தண்டிக்கப்பட்டவர்களில் பாலியல் குற்றம் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. யினருக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் தண்டனைபெற்ற 17 பேர் மட்டுமே சிறைக்கு அனுப்பப்பட்டனர்; மற்ற 198 பேருக்கும் ஜாமீன் பெற அவகாசம் வழங்கப்பட்டது.

 நீண்ட போராட்டத்துக்குப் பிறகு நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்று வாச்சாத்தி மக்களும், அவர்களுக்குத் துணை நின்ற சமூக ஆர்வலர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். காலம் கடந்த தீர்ப்பாக இருந்தாலும், தாங்கள் குற்றவாளிகள் அல்ல, நிரபராதிகள் என்று தலைநிமிர்ந்து நிற்கச் செய்தமைக்காக இந்தத் தீர்ப்பை வரவேற்பதாக அவர்கள் கூறியுள்ளனர். ஊரே பட்டாசு வெடித்து வெற்றி விழாவாகக் கொண்டாடியுள்ளது.

 "தாமதமாகும் நீதி மறுக்கப்பட்ட நீதி' என்பது நீதியரசர்களுக்குத் தெரியாதா? இப்போதே குற்றம் சாட்டப்பட்டவர்களில் 54 பேர் இறந்துவிட்டனர். மறுபடியும் முறையீடு செய்தால் தீர்ப்பு வருவதற்கும், அதைப் பார்ப்பதற்கும் எத்தனை பேர் உயிருடன் இருப்பார்கள்? இதற்கு யார் விடை கூறுவது? எது எப்படியிருந்தாலும் மிகப்பெரிய ஆதிக்கச் சக்திகளை எதிர்த்து ஏழை எளிய மக்கள் வெற்றிபெற முடியும் என்பதை நிரூபித்த வாச்சாத்தி மக்களும், அவர்களுக்குத் துணைநின்ற இயக்கங்களும் பாராட்டுக்குரியவர்கள் என்பதில் ஐயமில்லை.

 ஆனால், படித்து பதவியில் இருப்பவர்கள் படிக்காத பாமர மக்களிடம் காட்டவேண்டிய பரிவை இழந்துபோனது ஏன்? எத்தனை காலம்தான் ஒடுக்கப்பட்ட மக்களை அடிமையாக வைத்தே சுகம் காண்பது? இங்கே மனிதநேயம் மறைந்து போனதற்குக் காரணம் என்ன? சிந்திக்க வேண்டும்.

 ஆட்சிக்கு யார் வந்தாலும் அவர்கள் காவல்துறையைக் கைக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்றே எண்ணிச் செயல்படுகின்றனர். அதனால்தான் உடனடியாக காவல்துறை அதிகாரிகளை மாற்றித் தங்களுக்குச் சாதகமானவர்களை நியமித்துக் கொள்கின்றனர். இங்கேயிருந்துதான் முறைகேடுகளே ஆரம்பமாகின்றன.

 "அரசியல்வாதிகள், காவல்துறையினர் மற்றும் மாஃபியா கும்பல்கள் இடையே உறவு வளர்வது நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லதல்ல' என்று நீதிமன்றங்கள் பலமுறை எச்சரித்துள்ளன. எனினும், இந்தக் கூட்டணி இன்னும் தொடர்கிறது. அரசாங்கங்கள் இதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்குக் காரணங்கள் இருக்கின்றன. இந்தக் காரணங்களைக் கண்டுபிடித்துக் களைய வேண்டாமா?

 ஆட்சியில் இருந்தவரை அலட்சியமாக இருந்துவிட்டு, இப்போது அளித்த நிதியுதவியை வாச்சாத்தி மக்கள் வாங்க மறுத்துவிட்டனர். நிதியுதவியை அளித்திட வந்தவர்களையும் சந்திப்பதற்கு வரவில்லை. கொடுமையின் உச்சம்வரை அனுபவித்தவர்கள் கோபம் கொள்வதில் நியாயம் இல்லாமல் இல்லை.

 எந்தத் தீர்ப்பும் அவர்கள் இழந்துவிட்ட வாழ்வைத் திருப்பித்தர இயலாது. எத்தகைய இழப்பீடும் அவர்கள் இழந்த வாழ்க்கைக்கு ஈடுசெய்ய முடியாது. காலம்தான் அவர்கள் கண்ணீரைத் துடைக்கும்; காயங்களை ஆற்றும்.

 "உலகத்துக்கு உபதேசிக்க என்னிடம் புதிதாக எதுவும் இல்லை; மலைகள் எவ்வளவு பழமையானவையோ அவ்வளவு பழமையானவை சத்தியமும், அகிம்சையும்' என்றார் காந்தியார். தருமமும், நீதியும் அப்படித்தான். இவற்றின் வெற்றியில்தான் மனிதகுலத்தின் வெற்றியும் அடங்கியிருக்கிறது.

 இவ்வளவு தாமதமாகக் கிடைத்திருக்கும் இந்த நீதி மறுக்கப்பட்ட நீதியா? மனித நீதியா? ஒவ்வொரு நீதிமன்றத் தீர்ப்பின்போதும் இந்த வினா எழுந்துகொண்டே இருக்கிறது. இதற்கு விரைவில் விடைகாண வேண்டும்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

SCROLL FOR NEXT