கட்டுரைகள்

விளையாட்டில் விளையாடாதீர்கள்...!

ஓலிம்பிக் போட்டியில் இந்தியா வெறும் ஆறே ஆறு பதக்கங்களைப் பெற்று, பதக்கப் பட்டியலில் 55-வது இடத்தையே பெற்றுள்ளது என்றாலும், இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை பங்கேற்ற ஒலிம்பிக் போட்டிகளிலேயே இதுதான் சிறப்ப

எஸ். ராஜாராம்

ஓலிம்பிக் போட்டியில் இந்தியா வெறும் ஆறே ஆறு பதக்கங்களைப் பெற்று, பதக்கப் பட்டியலில் 55-வது இடத்தையே பெற்றுள்ளது என்றாலும், இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை பங்கேற்ற ஒலிம்பிக் போட்டிகளிலேயே இதுதான் சிறப்பானது.

வெள்ளி வென்ற சுசில்குமார், விஜய்குமார், வெண்கலம் வென்ற ககன் நரங், சாய்னா, மேரிகோம், யோகேஸ்வர் ஆகியோருக்குப் பாராட்டுகள்.

எதிர்பார்த்ததைப்போல அமெரிக்காவும் சீனாவும் பதக்க வேட்டை நடத்தி பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளன.

லிதுவேனியா, ஜார்ஜியா, லாட்வியா, டுனீசியா என சிறிய நாடுகள்கூட தங்கம் வென்றுள்ள நிலையில், இந்தியா ஒரு தங்கப் பதக்கத்தைக்கூட வெல்லாதது ஏமாற்றம்தான்: ஒட்டுமொத்த இந்திய அணியின் செயல்பாடு இந்த ஒலிம்பிக்கில் சிறப்பாகத்தான் இருந்தது.

வில்வித்தை, தனிநபர் படகு, துப்பாக்கிச் சுடுதல், குத்துச்சண்டை, தடகளம் என தவறவிட்ட போட்டிகளிலும் பதக்கத்தை வெகுவாக நெருங்கியுள்ளோம்.

பதக்கம் வென்று சாதனை படைத்தவர்களுக்கு கோடிகளும், பரிசுப்பொருள்களும் குவிகின்றன. இது வரவேற்கத்தக்கதுதான்; இந்தப் பரிசுகள் சாதனை படைக்கத் துடிப்பவர்களுக்கு ஒரு தூண்டுகோலாக அமையும் என்றாலும், இந்தியாவின் ஒரே பலவீனமும் இதுதான். போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு கைகொடுக்காமல், ஒரு வழியாகப் போராடி வெற்றியை ருசித்தவர்களை தலைக்குமேல் தூக்கிவைத்துக் கொண்டாடுவதுதான் நம் வழக்கம்.

ஓர் அமைப்பாக விளையாட்டை வளர்க்க வேண்டும் என்கிற எண்ணம் இந்திய அரசுக்கு இல்லை. எந்த ஒரு விளையாட்டுக்குமே சரியான உள்கட்டமைப்பு இங்கு இல்லவே இல்லை. இருக்கின்ற மைதானங்களும் சரியான பராமரிப்பின்றிதான் காணப்படுகின்றன. அணித் தேர்விலும் அரசியல். ஓர் அணியாகச் செயல்படுங்கள் என்றால், "அணி அணி'யான செயல்பாடுகள்தாம் இங்கு அதிகம்.

120 கோடி மக்கள்தொகை கொண்ட நம் நாட்டில் விளையாட்டுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்தி, ஒரு நூறு விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்து, அவர்களை அரசே தத்தெடுத்து, சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சியளித்து ஒலிம்பிக்கிற்கு என்றே தயார் செய்தால் பதக்கங்களைக் குவிக்க முடியாதா என்ன?

துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளி வென்ற விஜய்குமார், மல்யுத்தத்தில் வெள்ளி வென்ற சுசில்குமார் போன்றவர்கள் சாதாரண குடும்பச் சூழ்நிலையில் வளர்ந்தவர்கள்; தங்களது சுய முயற்சியால் கடுமையாக உழைத்து இந்த கௌரவத்தைப் பெற்றுத்தந்துள்ளனர்.

நாடு முழுவதும் ஏராளமான விஜய்குமார்களும், சுசில்குமார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். மாவட்ட அளவில் வெறும் சம்பிரதாயத்துக்கு விளையாட்டுப் போட்டிகளை நடத்தாமல், உண்மையான அக்கறையுடன் போட்டிகளை நடத்தி, திறமையானவர்களைக் கண்டுபிடித்தால் ஒலிம்பிக் தங்கமும் ஒருநாள் வசப்படத்தான் செய்யும்.

ஊழலில் போட்டி வைத்தால் இந்தியாவுக்குதான் முதலிடம் என யோகா குரு ராம்தேவ் கூறினார் - அது உண்மையும்கூட.

காமன்வெல்த் போன்ற சர்வதேசப் போட்டிகளை நடத்தினால்கூட அதிலும் ஊழல் செய்து, உலக அரங்கில் இந்தியாவுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தத்தான் இங்கு மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் உள்ளனர்.

காமன்வெல்த் போன்ற ஓர் அனுபவமே போதும்... ஒலிம்பிக் போட்டிகளை எல்லாம் இந்தியா நடத்தினால் என்ன ஆகும் என்பதற்கு.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இந்தியாவின் தேசிய விளையாட்டு எது என்பது குறித்த ஒரு கேள்விக்கு, அப்படி இந்தியாவில் தேசிய விளையாட்டு என்று எதுவும் கிடையாது என மத்திய விளையாட்டு அமைச்சகம் பதில் அளித்தது.

இந்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், பல்வேறு பாடத்திட்டங்களில் ஹாக்கிதான் தேசிய விளையாட்டு எனப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அரசு நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளிலும் ஹாக்கிதான் தேசிய விளையாட்டு என்று கூறியுள்ள நிலையில், தேசிய விளையாட்டு என்று எதுவுமே இல்லை என மத்திய விளையாட்டு அமைச்சகம் பதில் அளித்தது ஏன்?

அப்படி அந்தப் பதில் உண்மையானால், உலக வரைபடத்தில் கண்ணுக்கே தெரியாத அளவில் அமைந்துள்ள சிறிய நாடுகள்கூட தேசிய விளையாட்டு என்று ஒன்றைத் தேர்வு செய்துள்ள நிலையில், இந்தியா ஏன் இப்படி தேசிய விளையாட்டைத் தேர்வு செய்யாமல் விளையாட்டுத்தனமாக உள்ளது?

இந்தியாவில் மனிதவள மேம்பாட்டுக் குறியீடு, தனிநபர் வருமானம் மிகக் குறைவு; எனவே, ஒலிம்பிக்கில் நாம் இதற்குமேல் எதிர்பார்க்க முடியாது என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கான் கூறியுள்ளார்.

இதற்குமேல் எதிர்பார்க்க முடியாது என்பது முன்னரே தெரியுமென்றால் 83 பேர் கொண்ட அணியை ஏன் தேர்வு செய்து லண்டனுக்கு அனுப்ப வேண்டும்?

இதுபோதாது; இன்னும் அதிக பதக்கங்களைப் பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்று கூற வேண்டிய மத்திய அமைச்சரே, இவ்வளவுதான் நம்மால் முடியும் என சுயபச்சாதாபத்துடன் கூறுவது நியாயமா? விளையாட்டு விளையாட்டான விஷயமல்ல, விளையாடாதீர்கள்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு சம்பவங்களில் பெண்களிடம் நகை பறிப்பு

சமூகத்தின் உடனடி தேவை உணவு விழிப்புணா்வு! - மருத்துவா் கு. சிவராமன்

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மகன்

கொடைக்கானலில் கபடிப் போட்டி

பெங்களூரு - நாா்த் ஈஸ்ட் யுனைடெட் ஆட்டம் டிரா!

SCROLL FOR NEXT