சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிராக மக்களவையில் பாரதிய ஜனதா கொண்டுவந்த தீர்மானத்தில், வழக்கம்போல தோழமைக் கட்சிகளை "சரிக்கட்டி' தப்பிப் பிழைத்திருக்கிறது மத்திய அரசு.
அன்னிய முதலீட்டு முடிவால் பாதிக்கப்படுவார்களோ இல்லையோ, இந்த விவகாரத்தில் அரசுக்கு ஆதரவாக இருப்பதற்காக அரசியல் கட்சிகள் போட்ட இரட்டை வேடத்தைக் கண்டு பெரும் பாதிப்படைந்துள்ளனர் சிறு வியாபாரிகள்.
சிறு வியாபாரிகளைப் பாதிக்கும் மத்திய அரசின் முடிவை ஏற்க முடியாது எனக் கூறி வந்த திமுக, சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் கடைசி நேரத்தில் அரசுக்கு ஆதரவான முடிவை எடுத்துள்ளதன் மூலம் தங்களது இன்னொரு முகத்தைக் காட்டியுள்ளன.
இந்த விவகாரம் ஆரம்பித்தபோதே இந்த மூன்று கட்சிகளின் முடிவு என்னவாக இருக்கும் என்பது எல்லோரும் அறிந்ததுதான். இருப்பினும், வியாபாரிகள் நலனுக்கு எதிரான செயலை அனுமதிக்க மாட்டோம் என்று அவ்வப்போது கூறி, இந்த விவகாரத்தில் தங்கள் முடிவு என்ன என்று வெளிப்படையாக அறிவிக்காமல் "சஸ்பென்ஸ்' வைத்தனர் முலாயம் சிங்கும் மாயாவதியும் கருணாநிதியும்.
"சொல்வதைத்தான் செய்வோம்; செய்வதைத்தான் சொல்வோம்' என்ற உறுதிப்பாட்டுடன் ஒருவேளை இந்த விவகாரத்தில் சொல்வதைச் செய்துவிடுவார்களோ என்று அப்பாவிகள் (மட்டும்) எதிர்பார்த்தார்கள். ஆனால், உள்ளபடியே காங்கிரஸ் சொன்னதை இவர்கள் செய்துவிட்டார்கள்.
மத்திய அரசை வெளியிலிருந்து ஆதரிப்பதால், இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் "வெளிநடப்பு' செய்தது நியாயம்தானே என்றுகூட சமாஜவாதியும், பகுஜன் சமாஜும் கேட்கக்கூடும்.
இந்த விவகாரத்தில் அரசுக்கு ஆதரவான நிலையை இந்தக் கட்சிகள் எடுத்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை என்றாலும், அதற்காக கூறப்பட்ட காரணங்கள்தான் ஆச்சரியப்படுத்துகின்றன.
"சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டு முடிவை எதிர்க்கிறோம்; ஆனால், தமிழக அரசு அதை அமல்படுத்த மாட்டோம் எனக் கூறிவிட்டதால், மத்திய அரசைக் காப்பாற்றுவதற்காக அரசுக்கு ஆதரவளிக்கிறோம்'- இது திமுக.
""சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் 5 கோடி சிறு வணிகர்கள், 20 கோடி விவசாயிகள் மற்றும் அவர்களது நலனை மத்திய அரசு புறக்கணித்துவிட்டதால், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வெளிநடப்பு செய்கிறோம்''- இது சமாஜவாதி.
மாநிலத்தில் எதிரும் புதிருமாக இருந்தாலும், "தேசிய நலன்' தொடர்பான விவகாரத்தில் ஒற்றுமையாக இருப்போம் என்பதுபோல சமாஜவாதி சொன்னதை வழிமொழிந்திருக்கிறது பகுஜன் சமாஜ்.
எல்லா விஷயத்திலும் அதிமுக தலைமையிலான தமிழக அரசின் முடிவுகளைக் குறைகூறும் திமுக தலைவர் கருணாநிதி, இந்த விஷயத்தில் மட்டும் தமிழக அரசு அளித்துள்ள "வாக்குறுதியை நம்பி', மத்திய அரசுக்கு ஆதரவு நிலையை எடுத்திருப்பதாகக் கூறுகிறார்.
5 கோடி சிறு வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறும் முலாயம் சிங் யாதவ், அந்த வணிகர்களுக்கு எதிரான ஒரு முடிவை எதிர்த்து அல்லவா வாக்களித்திருக்க வேண்டும்?
"சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு ஆதரவு' என்று ஆரம்பத்திலேயே அறிவித்து இருந்தால்கூட, இந்தக் கட்சிகளின் முடிவு பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்காது.
100 ஆண்டுகளைக் கடந்த காங்கிரஸ் கட்சி, சுமார் 50 ஆண்டு காலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. அந்த அனுபவத்தில், கட்சிகளை "வளைக்கும் வித்தையை' நன்றாகவே கற்றுத் தேர்ந்திருக்கிறது. இதே வித்தையைப் பயன்படுத்தி, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவையும், லோக்பால் மசோதாவையும் நிறைவேற்ற காங்கிரஸ் முன்வராதது ஏன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.