முகப்பு
கட்டுரைகள்

மறைந்துவரும் மனித உறவுகள்

பொருளாதாரத் தேவை, ஆன்மிகத் தேடல், மன நிம்மதி காண வழிகள்

Updated On : 15 டிசம்பர், 2012 at 4:07 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 1:25 AM

பொருளாதாரத் தேவை, ஆன்மிகத் தேடல், மன நிம்மதி காண வழிகள், சமூகத்தில் பாதுகாப்பு, சமுதாயத்தில் அங்கீகாரம் என பல தளங்களில் மனிதர்கள் வேகமாக இயங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. இந்த வேகத்தில் மனித உறவுகள் மறைந்து அல்லது மறந்துவருவது குறித்து அனைவரும் உணர்ந்திருந்தாலும், அதனை வெளியில் காட்டிக் கொள்வதில் தயக்கம் உள்ளது.

 முன்பு கிராமங்களில் உள்ள வீடுகளுக்குச் சென்றால், வரவேற்பு அறையில் பல கறுப்பு -வெள்ளை புகைப்படங்கள் இருக்கும். ""புகைப்படத்தில் இருப்பது எனது அண்ணன் குடும்பம், தம்பி குடும்பம், மாமா, அத்தை, சித்தி'' என வீட்டில் உள்ளவர்கள் பெருமையுடன் கூறுவார்கள்.

  இப்போது தலைமுறை இடைவெளி காரணமாக பெரும்பாலான கிராமத்து வீடுகளிலும், தங்களது பிள்ளைகள், மருமகன், மருமகள், பேரன், பேத்தி புகைப்படங்களை மட்டுமே காட்சிக்கு வைத்துக் கொண்டு உறவுகளைச் சுருக்கிவிட்டனர். மற்றவர்கள் ஆல்பங்களுக்குள் மறைந்துவிட்டனர்.

Advertisement

  நகரங்களில் கேட்கவே வேண்டாம். உடன்பிறந்தவர்களின் புகைப்படங்களையே வீட்டில் மாட்டி வைத்திருப்பதில்லை. ஏன் இந்த மாற்றம்? கல்யாணம், சடங்கு, காது குத்துதல் போன்ற விழாக்களை நமது முன்னோர்கள் ஏன் அமைத்தனர்?

 அந்த விழாக்களில் உறவினர்கள் கூடி, பேசி தங்களது அனுபவங்களையும், பழக்க வழக்கங்களையும், வெற்றிகளையும், மகிழ்ச்சிகளையும் பிறருடன் பகிர்ந்து கொள்ளத்தான். எந்த ஒரு நிகழ்வையும் பிறருடன் பகிர்ந்து கொள்வதில் உள்ள மகிழ்ச்சியே தனிதான்.

  முன்பு திருமண விழா என்றால் இரண்டு அல்லது மூன்று நாளைக்கு முன்பே உறவினர்கள் கூடி விடுவார்கள். கோலமிடுவது, இட்லிக்கு மாவு ஆட்டுவது, பொருள்கள் வாங்கச் செல்வது என பல வேலைகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து செய்துவந்தனர்.

  இப்போது திருமணம் காலை 9 மணியிலிருந்து 10 மணிக்குள் என இருந்தால் 9.30 மணிக்கு வந்து, திருமணம் முடிந்ததும், உணவு அருந்தினாலும், அருந்தாவிட்டாலும் மறு விநாடியே, ""வேலை உள்ளது செல்கிறேன்'' எனக் கூறி, சென்று விடுகிறார்கள். தற்போது உள்ள திருமண வீட்டில் திருமண நாள் மாலையில் உடன் பிறந்தவர்கள் கூடத் தங்குவதில்லை. அந்த அளவுக்கு வேகமாக மக்கள் இயங்கத் தொடங்கிவிட்டனர். மனித உறவுகள் என்பது மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டாடுவதற்குத்தான் என்பதை மனிதர்கள் மறந்துவருவது வருத்தத்திற்கு உரியது.

 எவ்வளவு வேலைகள் இருந்தாலும், குடும்பத்திற்கு என நேரம் ஒதுக்குங்கள். மனைவி, குழந்தைகளுடன் அந்த நேரத்தில் இருந்து சிரித்துப் பேசி மகிழுங்கள் என உளவியல் நிபுணர்கள் கூறி வருகிறார்கள். அதேபோல, உறவினர்களுடனும் விழாக்களில் பார்க்கும் போது சிறிது நேரத்தைச் செலவிடுங்கள். அதில் உங்களுக்கு ஒரு மனநிம்மதி கிடைக்கும்.

 ""சந்தோஷம் பனித்துளி போன்றது, சிரிக்கும்போதே உலர்ந்து விடுகிறது'' என அறிஞர் ஒருவர் கூறியுள்ளார். 

  விழாக் காலங்களில் உறவினர்களைப் பார்த்துச் சந்தோஷப் புன்னகை புரியக்கூட நாம் நேரம் ஒதுக்குவதில்லை. வாழ்க்கையில் நிறைய ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அதையும்  மீறி நாம் செயல்பட்டு வெற்றிபெற வேண்டும். அதுபோலத்தான் மனித உறவுகளும். சண்டை  சச்சரவுகள் இருக்கும். அதை ஒதுக்கிவைத்துவிட்டு, மகிழ்ச்சிக்கு மரியாதை கொடுப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.