அள்ளித் தரும் அமுத சுரபிகள்
வேளாண் வளர்ச்சிக்கு அடிப்படை தண்ணீராகும். அதிலும் மழை நீருக்கு மாற்று வேறு எதுவுமே இல்லை. தரத்திலும் சரி, அளவிலும் சரி மழை நீருக்கு நிகர் மழை நீரே.
வேளாண் வளர்ச்சிக்கு அடிப்படை தண்ணீராகும். அதிலும் மழை நீருக்கு மாற்று வேறு எதுவுமே இல்லை. தரத்திலும் சரி, அளவிலும் சரி மழை நீருக்கு நிகர் மழை நீரே.
இப்படிப்பட்ட வேளாண்மைக்கு அருமருந்தாகிய மழை நீரை ஒவ்வொரு கிராமத்தினரும் தங்களுக்கிடையே உள்ள பல்வேறு பேதங்களை மறந்து முழுமையாகச் சேமித்து விவசாயத்துக்குப் பயன்படுத்தினால் வேளாண் வருவாய் கணிசமாகப் பெருகும்.
முதல்வர் ஜெயலலிதாவின் தொலைநோக்குத் திட்டத்தால், கடந்த 2002-இல் கட்டப்பட்ட வீடுகள் அனைத்திலும் கட்டாயம் மழைநீர் சேகரிப்பு செயல்படுத்தப்பட வேண்டும் என்ற சட்டத்தால் பெருவாரியான மக்களிடம் மழைநீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டது. வீடுகளில் சேகரிக்கப்படும் மழைநீரின் அளவு கிடைக்கின்ற மொத்த மழையளவில் ஒன்று முதல் மூன்று சதவிகிதமே.
Advertisement
ஆனால், மிகச் சிறப்பான முறையில் 60 முதல் 70 சதவிகித மழைநீரைச் சிறப்பாகச் சேமிக்கின்ற உத்தியை நம் முன்னோர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் உருவாக்கி உள்ளனர். அது இன்றளவும் நன்கு செயல்பட்டுக் கொண்டுள்ளது. அதுவே ஏரிகள் மற்றும் கண்மாய்கள்.
ஏரிகளைப் பராமரிப்பதும், பாதுகாப்பதும் ஒவ்வொரு கிராமத்தினர் மற்றும் விவசாயிகளின் கடமையாகும். ஆனால், பல ஏரிகளில் ஆக்கிரமிப்புகள் இடம்பெற்றுள்ளன; மழைநீரைத் தேக்குவதை விடுத்து கரைகளை வெட்டி தேங்கிய நீரை வீணாக்குவது போன்ற செயல்களையும் காணும்போது வருத்தமே மேலிடுகிறது.
சமீபத்தில்கூட தீபாவளிக்கு முன்னதாகப் பெய்த பெருமழையில் நிரம்பிய சில ஏரிகளின் கலங்கல்கள், மதகுகள் பழுதானதால் ஏரித் தண்ணீர் வெளியேறி வீணாவதையும் ஏரிக்கரை திடீரென உடைப்பெடுத்து தண்ணீர் வயலில் பாய்ந்ததையும் பத்திரிகைகளில் படித்து மனம் பதைக்க நேர்ந்தது.
ஏரிகளின் மூலம் மக்களுக்குக் கிடைக்கின்ற பலன்கள் ஏராளம். சமீபகாலம் வரை வேளாண்மைக்கு மட்டுமே நீர் அளித்து வந்த ஏரிகள் தற்போது நகர்ப்புற மக்களின் குடிநீர்த் தேவைக்கு மிகவும் உறுதுணையாகி உதவுகிறது.
தமிழகத்தின் 41,260 ஏரிகளில் 20 மிகப்பெரும் ஏரிகளாகும். மொத்தமுள்ள அனைத்து ஏரிகளின் பாசனப் பரப்பு 10,11,862 ஹெக்டேர். இதில் மேற்கூறப்பட்ட 20 பெரிய ஏரிகளின் பாசனப் பரப்பு 52,806 ஹெக்டேர். அதாவது, மொத்த பாசனப் பரப்பில் இது 5.2 சதவீதமாகும்.
இந்த 20 பெரிய ஏரிகளுள் செம்பரம்பாக்கம் (ஆயக்கட்டு 5270 ஹெக்டேர்) மற்றும் வீராணம் (18,160 ஹெக்டேர்) ஏரிகள் இப்போது சென்னை மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதில் பெரும்பங்கு வகிக்கின்றன. இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை 38 கிராமங்களுக்கு 8 மதகுகள் மூலம் 5,270 ஹெக்டேர் நிலத்துக்குப் பாசனம் அளித்த செம்பரம்பாக்கம் ஏரி இப்போது 13 கிராமங்களுக்கு ஏறத்தாழ 2,000 ஹெக்டேர் மட்டுமே பாசனம் அளிக்கிறது. மீதமுள்ள நிலங்கள் நகர்ப்புறங்களாகவும் வீட்டு மனைகளாகவும் தொழிற்சாலைகளாகவும் மாறிவிட்டன. இம் மாற்றத்தின் பலனாக விவசாயத்துக்குச் செல்ல வேண்டிய தண்ணீர், சென்னை மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்கிறது.
மாறாக, வீராணம் இன்னும் முழுமையான நீர்ப்பாசன ஏரியாக இருப்பதோடு அல்லாமல் சென்னைக்குக் குடிநீரையும் அளித்துவருகிறது. வீராணம் ஏரியின் ஆயக்கட்டான 18,160 ஹெக்டேர் நிலம் 97 கிராமங்களில் பரவியுள்ளது. இத்தனை கிராமங்களுக்கும் 33 மதகுகள் மற்றும் கால்வாய்கள் மூலம் நீர்ப்பாசனம் கிடைக்கிறது.
இந்த 33 மதகுகளில், "ஒரு மதகு ஒரு கிராமப் பாசனம்' என்ற அளவில் 9 மதகுகளும், "ஒரு மதகு 12 கிராமங்களுக்குப் பாசனம்' என்ற அளவில் இரு மதகுகளும் உள்ளன. மீதமுள்ள 22 மதகுகள் இதற்கு இடைப்பட்ட அளவான இரண்டு முதல் 11 கிராமங்கள் என்ற அளவில் பாசனம் அளித்து வருகின்றன.
இந்த ஏரியின் முக்கியச் சிறப்பு இதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து கிடைக்கும் மழைநீர் மட்டுமல்லாமல் காவிரியின் நீர் ஆதாரத்தையும் பெறுகிறது.
ஏரிகள் விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதோடல்லாமல் கீழ்க்கண்ட பல்வேறு பலன்களை அந்தந்த கிராம மக்களுக்குக் கைமாறின்றி அளித்து வருகின்றன.
நான்கு மாதங்களுக்கு மேல் நீர் தேங்கும் பல்லாயிரக்கணக்கான ஏரிகளில் மீன் வளர்ப்பு ஒரு முக்கியத் தொழிலாகும். ஊட்டச்சத்து மிகுந்த, உள்ளூர் ஏரிகளில் கிடைக்கும் மீன்கள் அப்பகுதி மக்களுக்கு ஒரு "திருவிழா' போன்ற விருந்தாகும்.
பல பெரிய ஏரிகளில் கிடைக்கும் மீன்களை பல லட்ச ரூபாய்க்கு ஏலம்விட்டு ஊர் மேம்பாட்டுத் திட்டங்களுக்குப் பயன்படுத்துகின்றனர். பல கிராமங்களில் கோயில்கள் கட்டவும் கூடுதல் பொதுப் பராமரிப்புக்கும் இந்த மீன் ஏல வருவாயே பிரதான நிதியாகும்.
மீன் வருவாய்க்கு அடுத்து மரம் வளர்ப்பு. சமீபகாலம்வரை பெரும்பாலான பெரிய ஏரிகளில் வனத்துறையினர் கருவேல் போன்ற மரங்களை நட்டு வளர்த்து சில ஆண்டுக்குப் பின் அம் மரங்களை ஏலம் விட்டு கிடைக்கின்ற நிதியில் ஒரு பகுதியை அந்தந்த கிராமங்களுக்கு அவற்றின் உள்ளூர் வளர்ச்சிப் பணிகளுக்கு அளித்து வந்துள்ளனர்.
இது தவிர, ஏரிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் ஏரிக் கரைகளில் யாரும் பயிரிடாமல் தானாகவே வளரும் சீமைக் கருவேல முள் மூலம், சில ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரும்பாலான ஏரிகளில் லட்சக்கணக்கான ரூபாய்க்கு மேல் ஏல வருவாய் கிடைக்கிறது.
உதாரணமாக, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பொதுப்பணித்துறை கண்மாய்களின் நீர்வள - நிலவளத் திட்ட மேம்பாடு பற்றிய ஆய்வின்போது கீழ்க்கண்ட 4 ஏரிகளின் மர ஏல வருவாய் விவரம் அட்டவணைக்குள் தரப்பட்டுள்ளது.
எந்த ஒரு தனி நபரின் உழைப்பும் இல்லாமல் ஓரிரு ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரும்பாலான ஏரிகள் மேற்கூறப்பட்ட வகையில் பல லட்சக்கணக்கான ரூபாயை கிராமங்களுக்கு அளித்து உதவும்போது இந்த ஏரிகளை "அமுத சுரபிகள்' என அழைத்தால் அது மிகையாகாது.
அடுத்து, ஏரிகளில் நீர்தேங்கும் பகுதிகளில் ஆண்டுதோறும் வந்துசேரும் வண்டல் மண் மிகச் சிறந்த இயற்கை உரமாகும். பல ஏரிகளில், ஏரி நீர் வடிந்ததும் இந்த ஏரி வண்டல் மண்ணில் நேரடியாகவே வெள்ளரி, பாகல், வெண்டை போன்ற பல்வேறு காய்கறிப் பயிர்களை அருகிலுள்ள கிராம விவசாயிகள் பயிரிட்டு கணிசமான வருவாயைப் பெறுகின்றனர்.
மேலும் பல விவசாயிகள் இந்த வண்டல் மண்ணைத் தங்களுடைய நிலங்களுக்கு எடுத்துச் சென்று, தரமிழந்து காணப்படும் தங்களுடைய வயல் மண்ணுடன் கலந்து பயன்படுத்தி அதிக அளவு கண்டுமுதல் பெறுகின்றனர்.
அறுவடைக் காலம் முடிந்து ஏரிகளில் தண்ணீர் வற்றியபின் பல ஏரிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் புல் வளர்ந்து அந்தந்த கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு முக்கிய பசுந்தீவனத்தை அளித்து உதவுகிறது.
இன்னும் சில கிராமங்களில் தங்களுடைய கிணறுகளில் கிடைக்கும் நீர்வளம் போதுமானதாக இல்லாததை உணர்ந்து, ஏரிகளில் போதுமான அளவு நீர் நிறைந்தும் அதனை நேரடியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் மதகுகள் அனைத்தையும் அடைத்து அந்த ஏரி நீரினைக் கிணறுகளின் நீர்ப் பெருக்கத்துக்கான ஊற்றுக்காலாக மாற்றிப் பலனடைகின்றனர்.
இறுதியாக "செத்தும் கொடுத்தான் சீதக்காதி' என்ற பழமொழிக்கு ஏற்ப, இப்போது பல ஊர்களில் சிறு சிறு ஏரிகளை முழுமையாகத் தூர்த்து, வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகள், தனியாருக்கு வீடுகள், அரசு அலுவலகங்கள், கல்லூரிகள், நீதிமன்றங்கள், கல் குவாரிகள், பஸ் நிறுவனங்களின் மிகப் பிரம்மாண்டமான பணிமனைகள் என்று மாற்றி வருகின்றனர். ஏரிகள் அழிந்தாலும் வேற்றுருவில் சமுதாயத்துக்கே பயன்படுகின்றன.
இவ்வளவு நன்மைகளை நமக்கு நேரடியாக அளிக்கவல்ல ஏரிகளைக் காப்பாற்றத் தமிழர்களாகிய நாம் என்ன கைம்மாறு செய்கிறோம்?
உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூ.2,200 கோடி நிதியுதவியுடன் ஏரிப்பாசன மேம்பாடு குறித்து தமிழக அரசால் கடந்த 5 ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டு வரும் நீர்வள - நிலவள திட்டத்தின்படி, நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிப்பாசன கிராமங்களை ஆய்வு செய்து வரும்போது அந்தந்த கிராம ஏரிப்பாசன விவசாயிகளை அதிகாரிகள் அணுகுகின்றனர்.
""உங்கள் பாசன மேம்பாடு மற்றும் பராமரிப்புக்காக ஆண்டுக்கு ஒரு ஏக்கருக்கு நூறு ரூபாய் வீதம் உங்கள் ஏரிப்பாசன சங்கத்துக்கு வழங்குங்கள்'' என்று அறிவுறுத்துமாறு ஏரிப்பாசன சங்கத் தலைவர்களிடம் கூறினால், உடனே அனைவரும் எழுந்து சென்றுவிடுகின்றனராம்.
இப்போதைய நிலையில் ரூ.2,200 கோடி செலவிட்டு ஏரிகளை ஓரளவு செப்பனிட்டுவிட்டால் மீண்டும் அவற்றைப் பராமரிக்க வேறு எந்த ஒரு நிதி ஆதாரமும் ஏரிகளுக்கென்று இல்லை.
இந்த அளவில்தான் பல்வேறு நலத்திட்டங்களும் அரசு உதவிகளும் மக்களிடையே சென்று சேர்கின்றன. இந்த நிலை மாற வேண்டுமானால் விவசாயிகளும் கிராம மக்களும் விழிப்புணர்வு பெறவேண்டும். அதற்கு கல்வி அவசியம். அத்துடன் அரசின் கள விளம்பரத்துறைகளும் தீவிரமாகச் செயல்பட வேண்டும். அள்ளித்தரும் அமுதசுரபிகளான ஏரிகளைக் காப்பாற்றுவோம்.