கட்டுரைகள்

ஊர்களைத் துண்டிக்கும் சாலைகள்...

பொதுப் போக்குவரத்து வசதியில் தமிழகம் ஓரளவு தன்னிறைவைப் பெற்றுள்ளது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை நான்குவழிச் சாலைகள் மற்றும் பிற முக்கிய நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் என சாலைக் கட்டமைப்புகளும் நல்ல முறையிலேயே உள்ளன.

எஸ். ராஜாராம்

பொதுப் போக்குவரத்து வசதியில் தமிழகம் ஓரளவு தன்னிறைவைப் பெற்றுள்ளது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை நான்குவழிச் சாலைகள் மற்றும் பிற முக்கிய நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் என சாலைக் கட்டமைப்புகளும் நல்ல முறையிலேயே உள்ளன. அதிலும் இப்போது பரவலாக அமைக்கப்பட்டுவரும் புறவழிச்சாலைகளின் வளர்ச்சியால் பயண நேரம் வெகுவாகச் சுருங்கிவிட்டது. அதேநேரம், இந்தப் புறவழிச்சாலைகள் காரணமாகப் புறக்கணிக்கப்படும் ஊர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் சுட்டிக்காட்டியாக வேண்டும்.

புறவழிச்சாலைகள் அமைக்கப்படுவது எதற்காக? போக்குவரத்து மிகுந்த இடங்களில் நெரிசலைக் குறைக்கும் வகையில், சரக்கு வாகனங்கள் மற்றும் பிற தனியார் வாகனங்கள் செல்வதற்குத் தனியான பாதை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் இதன் பிரதான நோக்கம்.

சரக்கு வாகனங்கள் புறவழிச்சாலையில் சென்றுவிடுமானால், நகர்ப்பகுதியில் பொதுப் போக்குவரத்து நெரிசலின்றி எளிதாக இருக்கும். ஆனால், தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் இந்தப் புறவழிச்சாலை வழியாக அரசுப் பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் கூட பறக்கின்றன. இதனால், அந்தப் புறவழிச்சாலைகளையொட்டி அமைந்துள்ள ஊர்களில் வசிக்கும் மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றனர்.

உதாரணத்துக்கு, திருநெல்வேலியில் இருந்து மதுரை செல்லும் வழியில் கோவில்பட்டி, விருதுநகர் போன்ற முக்கிய நகரங்களைக்கூட அரசுப் பேருந்துகள் புறக்கணித்து புறவழிச்சாலை வழியாகச் செல்லும் நிலை உள்ளது. போக்குவரத்து என்பது வெறுமனே பயணம் என்பதுடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை. இந்தப் போக்குவரத்தை நம்பியே வியாபாரக் கடைகள், உணவகங்கள், சிறு தேநீர்க் கடைகள் என சமூகப் பொருளாதார வாழ்க்கை ஒரு சங்கிலித் தொடர்போல நீள்கிறது. ஊருக்குள் அமைந்துள்ள பேருந்து நிலையத்துக்கு வரும் மக்கள் கூட்டம், பேருந்துகள் வராமல் போனால் அப்படியே புறவழிச்சாலையை நோக்கிச் செல்லும். இதனால், இந்த மக்கள் கூட்டத்தை நம்பி வியாபாரம் நடத்திவரும் எண்ணற்றோரின் வாழ்க்கையே கேள்விக்குறியாகிறது.

மக்களும் ஊருக்குள் அமைந்துள்ள பேருந்து நிலையத்துக்கு எளிதாகச் செல்வதற்குப் பதிலாக, ஊருக்கு வெளியே புறவழிச்சாலையில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தை அணுகுவதற்கு சிரமப்பட வேண்டியுள்ளது. இரண்டாம்நிலை நகரங்களிலாவது ஊருக்குள் இருந்து புறவழிச்சாலை பேருந்து நிலையத்தை அடைவதற்கு நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், சிறிய ஊர்களில் இந்த வசதியுமின்றி, புறவழிச்சாலையை அணுகுவதற்கு கிலோ மீட்டர் கணக்கில் நடக்க வேண்டும் அல்லது ஆட்டோவில்தான் செல்ல வேண்டும்.

அரசுப் பேருந்துகள் இப்போது "பை-பாஸ் ரைடர்', "பாயின்ட் டு பாயின்ட்', "ஒன் டு ஒன்' என பல்வேறு பெயர்களில் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகள் எல்லாமே செல்லும் வழியில் பல இடங்களில் ஊர்களுக்குள் செல்லாமல் புறவழிச்சாலை வழியாகவே செல்கின்றன. இந்தப் பேருந்துகளை ஊருக்குள் இயக்க வேண்டும் என அந்தந்த ஊர் மக்கள் மறியல் போராட்டங்களை அவ்வப்போது நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மறியல் நடக்கும்போது மட்டும் பேச்சுவார்த்தையில் உறுதி அளிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், ஒரு வாரம்-பத்து நாளில் வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டுவிடுகின்றனர்.

பயணிகள் பேருந்தை புறவழிச்சாலை வழியாக இயக்கக்கூடாது என்பதுதான் விதிமுறை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலரே இவ்வாறு பதில் அளித்துள்ளார். எனவே, வேகமான சேவையை அளிக்க வேண்டும்; கூடுதல் நடைகள் பேருந்தை இயக்க வேண்டும் என்பதற்காக ஏதேனும் ஊர்களைப் புறக்கணித்து புறவழிச்சாலை வழியாக பேருந்தை இயக்குவது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

ஒட்டுமொத்த மக்களின் வசதிக்காகத்தான் பேருந்துகள் இயக்கப்படுகின்றன; அதில் குறிப்பிட்ட சில பேருந்துகள் குறிப்பிட்ட சில ஊர்களுக்குள் செல்ல வேண்டாம் என போக்குவரத்து அதிகாரிகள் எப்படித் தீர்மானிக்க முடியும்? அந்தச் சில குறிப்பிட்ட பேருந்துகளின் சேவை சில ஊர் மக்களுக்குத் தேவையில்லை என எப்படி இவர்களே முடிவு எடுக்க முடியும்?

சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பேருந்துகளை "பாயின்ட் டு பாயின்டாக' இயக்குவது தவிர்க்க முடியாதது என போக்குவரத்து அதிகாரிகள் கூறுகின்றனர். இதை அனுமதிப்பதில்தான் பிரச்னை. ஏனென்றால் படிப்படியாக இந்த "குறிப்பிட்ட பேருந்துகளின்' எண்ணிக்கை அதிகமாகி சாதாரணப் பேருந்துகள் குறைந்துவிடுகின்றன.

அரசுப் பேருந்துகளே இப்படி இயக்கப்படுகின்றன என்றால், தனியார் பேருந்துகளை யார் கட்டுப்படுத்துவது? கூட்டம் இல்லையென்றால் புறவழிச்சாலைகளையொட்டிய ஊர்களுக்குள் செல்வது, கூட்டம் அதிகமாக இருந்தால், இந்த ஊர்களுக்குள் செல்லாமல் புறக்கணிப்பது என தனியார் பேருந்துகள் முற்றிலும் வியாபார நோக்கத்தோடுதான் இயங்குகின்றன. அவை எப்போது ஊருக்குள் வரும், எப்போது வராது என்பதே அன்றைய நிலைமையைப் பொறுத்தது. ஆனால், போக்குவரத்து சேவை எனக் கூறிக்கொண்டு அரசுப் பேருந்துகளும் இவ்வாறு செயல்படலாமா?

சாலைப் போக்குவரத்து என்பதே ஊர்களை இணைக்கத்தான், இடையில் புறவழிச்சாலை என்ற பெயரில் ஊர்களைத் துண்டிப்பது எப்படிச் சரியாகும்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு சம்பவங்களில் பெண்களிடம் நகை பறிப்பு

சமூகத்தின் உடனடி தேவை உணவு விழிப்புணா்வு! - மருத்துவா் கு. சிவராமன்

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மகன்

கொடைக்கானலில் கபடிப் போட்டி

பெங்களூரு - நாா்த் ஈஸ்ட் யுனைடெட் ஆட்டம் டிரா!

SCROLL FOR NEXT