வீழ்ச்சியின் வெற்றி!
பெருகிவரும் வெப்பத்தால் காலநிலை தடுமாறுகிறது. இயற்கையின் ஆட்டம் போதாது என்று
கட்டுரைகள்வீழ்ச்சியின் வெற்றி!
பெருகிவரும் வெப்பத்தால் காலநிலை தடுமாறுகிறது. இயற்கையின் ஆட்டம் போதாது என்று
பெருகிவரும் வெப்பத்தால் காலநிலை தடுமாறுகிறது. இயற்கையின் ஆட்டம் போதாது என்று நம்மை ஆளும் முற்போக்குக் கூட்டணி போடும் ஆட்டம் தாங்க முடியவில்லை. தடுமாறும் தட்பவெப்பத்திற்கு ஏற்ப, சில்லறைத்தனமான வர்த்தகத்தில் அன்னிய முதலீடுகளை வரவேற்கும் மசோதா நாடாளுமன்றத்தில் வெற்றிகரமான ஒப்புதலைப் பெற்றதன் மூலம் குளிர்காலத்தில் வசந்தம் வருமா என்று எதிர்பார்க்கிறார்கள். வசந்தம் என்பது எட்டாத கனவு. இந்தியப் பொருளாதாரம் மைனஸ் டிகிரி கடுங்குளிரில் சிக்கியுள்ளது ஏனோ உணரப்படவில்லை.
மறுபடியும் மணிலாவை மையமிட்டுள்ள ஆசிய வளர்ச்சி வங்கி, நடப்பு நிதி ஆண்டின் வளர்ச்சி வீதத்தை 5.4 சதவீதம் ஆகக் குறைத்து இந்தியப் பொருளாதாரம் ரத்தசோகை நோயில் வீழ்ந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. நுகர்வு, முதலீடு, தொழில் உற்பத்தி ஆகிய மூன்றும் மந்தித்துவிட்டன.
கடந்த ஆண்டு 2011-12-இல் வளர்ச்சி வீதம் 6.5 என்ற நிலை 5.4 சதவீதமான வீழ்ச்சி வெற்றிபெற்று, வளர்ச்சி தோற்றுவிட்டது. வீழ்ச்சியை மீட்டும் கசப்பு மாத்திரையாகிய வால்மார்ட்டை வரவேற்கப் பாடுபடும் "தில்லை அம்பல நடராஜர்' மொத்தவிலைக் குறியீட்டெண் 7.24 ஆகக் குறைந்துள்ளதை வைத்து அற்ப சந்தோஷம் பெறலாம்.
குறைந்த நுகர்வுச் சந்தையின்மை போன்ற எதிர்மறைக் காரணங்களை மறந்துவிடும் அய்யன், மாற்றமில்லாமல் மேலே மேலே போகும் சில்லறை விலைக் குறியீட்டெண்ணைக் கணக்கில்கொண்டால் பணவீக்கம் புலப்படும். "அதற்குத்தான் வால்மார்ட்' என்று போடு போடுவார்.
வீழ்ச்சியின் வெற்றிக்குரிய காரணிகளைக் கண்டறிவது கடினமல்ல. வீழ்ந்துவிட்ட பொருளாதாரத்தைத் தலைநிமிர்த்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இலக்கு மேலும் வீழ்ச்சியை உறுதிப்படுத்தக்கூடியதும், ஓட்டு வங்கியை உயர்த்தக்கூடியதுமான அரசியல் நடவடிக்கைதானே தவிர பொருளாதார வளர்ச்சிக்குரிய நடவடிக்கை அல்ல.
""வால்மார்ட் வந்தால் நுகர்வோர் நலம் பெறுவர். வால்மார்ட் வந்தால் விவசாயிகள் நலம் பெறுவர். உர மானியம், உணவு மானியம் எல்லாம் பணமாகத் தருகிறோம் என்றெல்லாம் காதில் பூச்சுற்ற "ஆதார்' அட்டைகள் துரித கதியில் வழங்கப்படுகின்றன.
நிஜமான குறி இலக்கு தொழில் வளர்ச்சியில் இருக்க வேண்டும். தும்பைவிட்டு வாலைப் பிடிப்பது அரசின் வாடிக்கைதான். வால்மார்ட் மாடு பயிரை மேய்ந்துவிடுமே என்ற கவலை யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.
வளர்ச்சிக்குத் தேவையான சீர்திருத்தம் என்று கூறி, மேலும் மேலும் அமெரிக்கா அல்லது அன்னிய முதலீடுகளை மருந்து, இன்சூரன்ஸ், வங்கி போன்ற துறைகளில் நுழையவிட்டு, லாபத்தை விட்டுக்கொடுத்து விபரீதங்களை விலைக்கு வாங்கக்கூடாது; நம் நாட்டுக்குள்ளேயே மின்சாரம், நிலக்கரி, சுரங்கம் போன்ற துறைகளில் துரித உற்பத்திக்கான சீர்திருத்தங்களைச் செய்தால்தான் நாம் தொழில்துறை, பொருளாதாரத்துறை வீழ்ச்சியிலிருந்து மீள முடியும்.
உதாரணமாக, கர்நாடக மாநிலத்தில் சுரங்கத் தொழிலுக்குத் தடை விதிக்கப்பட்டதால் இரும்பு எஃகுத் தொழிற்சாலைகளுக்குப் போதிய கச்சாப் பொருள்கள் / மூலப்பொருள்கள் கிட்டாததால் படிப்படியாக ஆலைகளை மூடி வருகிறார்கள்.
இரும்புத்துறைசார்ந்த ஏராளமான யூனிட்டுகள் ஹோசூரில் உள்ளன. மின்சார வழங்கல் போதுமானதாக இல்லை. "பவர்-கட்' செய்யவேண்டியதுதான். பகல் நேரத்தில் விட்டுவிட்டு மின்சாரம் வழங்கப்படுவதால் ஷிப்டு முறை சாத்தியப்படுவதில்லை. மின்சாரம் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, வேலை செய்தாலும் சரி, வேலை செய்யாவிட்டாலும் சரி தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுத்தாக வேண்டும்.
வேலையில்லாத நேரத்திற்கும் சம்பளம் கொடுத்துக் கட்டுப்படி ஆகாததால் ஹோசூரில் பல தொழில் யூனிட்டுகள் மூடப்பட்டு விட்டன.
திருப்பூரிலும் அதே நிலை. ஆடைகள் ஏற்றுமதிக்கு வழி இருந்தும் லாபத்துக்கு வழி இல்லை. அப்படியே விட்டுவிட்டு மின்சாரம் வந்தாலும் குறைந்த அழுத்தமாக வேறு வருகிறது.
இதனால் ஜெனரேட்டரை இயக்கி வேலை செய்யப்படும்போது மின்செலவு கூடுதலாகி, உற்பத்திச் செலவு அதிகரிக்கிறது. தொழில் வீழ்ச்சி என்பது இதுவே.
மாநில அரசு மத்திய அரசிடமிருந்து மின்சாரம் எதிர்பார்க்கிறது. வடக்கிலிருந்து மின்சாரம் பெறுவதற்கான மின்தடம் பழுதடைந்துவிட்டதாகக் காரணம் சொல்லப்படுகிறது.
அதுதான் பிரச்னையென்றால் அதில் கவனம் செலுத்தாமல் வால்மார்ட் மீதும், பங்குச்சந்தை மீதும் மத்திய அரசு குறிவைத்து நாடகம் போடுவது நாட்டுக்கு நல்லதல்ல. தொழில்ரீதியான முன்னேற்றமே நாட்டின் தேவை. விவசாயத்தை இழந்துவிட்ட தமிழ்நாடு தொழிலிலும் நகரமயமாதலிலும் முன்னேற்றம் பெற்றுவருவதும் சூனியமாகும் அபாயத்தை "அரசியல்ரீதியாக' நோக்காமல் வளர்ச்சியின் வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தும் இலக்கில் நோக்க வேண்டும்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் பங்கு வகிக்கும் மத்திய அமைச்சர்களுக்கும் தமிழ்நாட்டு வளர்ச்சியில் தங்களுக்கும் பங்கு உண்டு என்ற உணர்வுடன் போதிய மின்சாரத்தைப் பெற்றுத் தருவதில் மாநில அரசுடன் ஒத்துழைப்பதுதான் நல்ல தார்மிக அரசியல் உதாரணமாக இருக்கும். மையமும் மாநிலமும் ஒருவரை ஒருவர் பழிசுமத்தும் போக்கு விரும்பத்தக்கதல்ல.
தமிழ்நாடு மட்டுமல்ல. மகாராஷ்டிர மாநிலத்திலும் மும்பை நகரத்துக்கு வெளியே மின்தடை 8 மணி நேரம் கடைப்பிடிக்கப்பட்டு ஓசூர், திருப்பூர் நிலைமை அங்குள்ள தொழிற்பேட்டைகளிலும் உள்ளது.
தொழில்துறை மேதைகளான டி.டி. கிருஷ்ணமாச்சாரி, ஆர். வெங்கட்ராமன் போன்றோர் வழங்கியுள்ள அடித்தளம் - அதாவது இந்தியாவில் தொழிற்பேட்டைகள், ஆயிரக்கணக்கான சிப்காட்டுகள் எல்லாம் ஆடிப்போய்விட்டன. அம்பத்தூர், கிண்டி போன்ற எண்ணற்றவை வெறிச்சோடிவிட்டன.
உண்மையில் இவைதான் இந்தியத் தொழிற்புரட்சிக்கு வித்திட்டவை. மைக்ரோ, ஸ்மால், மீடியம் என்று சொல்லப்படும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இந்தியவில் 26 மில்லியன்கள் உண்டு.
தொழில் துறையில் இவற்றின் பங்களிப்பு 45 சதவீதம் என்றாலும் கனரகத் தொழில் நிறுவனங்களுக்கும், கட்டமைப்புத் துறைகளுக்கும் மட்டுமே சலுகைகளும் முன்னுரிமைகளும் அள்ளிவிடப்படுகின்றன. எல்லா சிறு நிறுவனங்களிலும் உள்ள மாபெரும் பிரச்னை பவர்கட், போதிய மூலப்பொருள் இல்லாமை.
எங்கு சீர்திருத்தம் தேவையோ அங்கு எதுவும் செய்யப்படவில்லை. நிலக்கரி மற்றும் பல்வேறு உலோகச் சுரங்கங்களில் பணி நிகழவில்லை. இவையெல்லாம் பொதுத்துறையில் உள்ளன. நிர்வாகச் சீர்கேடு, ஊழல் காரணமாக நம் நாட்டு மூலப்பொருள்களை நாம் பயன்படுத்தாமல் இங்குள்ள பன்னாட்டுப் பெருந்தொழில் முதலைகளின் மூலப்பொருள் தேவைகளை இறக்குமதி செய்து நிறைவேற்றப்படும் கொடுமையை என்னவென்று சொல்ல? உள்நாட்டில் நிலக்கரி இருந்தும் மின் உற்பத்தி இல்லை. மின் உற்பத்தி செய்ததைக் கொண்டு செல்ல மின்தடம் இல்லை. ஏன் என்று கேட்டால் மின்திருட்டு, மின்கடத்தி வழங்கலில் இயந்திரக் கோளாறு என்று பொறுப்பற்ற பதில்களை வழங்கிவிட்டுச் சில்லறை வணிகத்திற்கு வால்மார்ட் வந்துவிட்டால் மின்தட்டுப்பாடு நீங்கிவிடும் என்று மணீஷ் திவாரி பேசினால் வியப்படைய ஒன்றுமில்லை. எல்லாம் வீழ்ச்சியின் வெற்றியைப் பறைசாற்றும் அறிகுறியே.
இந்தியாவில் இரண்டு வகையான மக்கள் உள்ளனர். பணம் உள்ளவர்கள் என்றும் பணம் இல்லாதவர்கள் என்றும் பிரித்து நோக்கும்போது இரண்டு சாராருமே உலகப் பொருளாதாரத்தின் சரிவு பற்றிய விவரம் அறிந்தவர்களாகத் தெரியவில்லை. மூன்றாவதாக ஒரு பிரிவு உள்ளது. அவர்கள் அதிகாரவர்க்க அரசியல்வாதிகள், கறுப்புப்பண முதலைகள். இவர்களுக்கு எல்லாம் தெரியும். நோக்கமோ வளர்ச்சி பற்றியதல்ல. "வளர்ச்சி' என்று சொல்லி எவ்வளவு "வளைக்க' முடியும் என்று நினைப்பவர்கள். உலக வர்த்தகமே ஸ்தம்பித்துவிட்டது.
மேலை நாடுகளில் உள்ள பல நிறுவனங்கள் பணியில் இருந்தவர்களில் குறிப்பிட்ட சதவீதம் பணி நீக்கம் செய்துவிட்டதாகக் கூறி, ""இந்தியா பத்திரமாக உள்ளது. இங்கு அப்படி எதுவும் நிகழவில்லை...'' என்றும் கூறி மகிழலாம்.
மேலை நாடுகளில் பணி நீக்கம் செய்து இழப்பீடும் வழங்குவார்கள். இந்தியாவில் பணியும் நிகழவில்லை. வேலைநீக்கம் என்ற பிரச்னையும் இல்லை. மக்களுக்கு வேலையே வழங்காதபோது பணிநீக்கம் என்பது எப்படி ஒரு பிரச்னையாகும்? நிரந்தரமற்ற பணிகள் நிரந்தரமாக உண்டு.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முதல்கட்ட ஆட்சியில் 2004-2008-ஆம் ஆண்டுகளில் ஜி.டி.பி. வளர்ச்சி 10 முதல் 13 சதவிகிதம் என்று மகிழ்ந்து வந்த நிலை தடுமாறி 2011-12-இல் 6.5 சதவிகிதமாகி, 2012-13-இல் 5.4 சதவிகிதமாக மீண்டும் குறைந்துள்ளதே!
"ரெப்போ' வட்டியைக் குறைக்க மறுக்கும் ரிசர்வ் வங்கி மீது பாய்ந்து என்ன பயன்? பணவீக்கத்தை மேலும் வளர்ப்பதால் வளர்ச்சியுறுமா? கறுப்புப்பண வளர்ச்சிக்கு வித்திட இந்தியச் சந்தைகளை வால்மார்ட்டுக்கு விற்று அமெரிக்க வளர்ச்சிக்குப் பாடுபடும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அணுகுமுறைகளை வாழ்த்தவா முடியும்?
""வளர்ச்சியில் தோல்வியுற்று, வீழ்ச்சியில் வெற்றிபெற்ற'' அணியை வீழ்த்த - வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் முடிவு நல்ல பதில் வழங்கும் என்று காத்திருப்போம். வாழ்க பாரதம்.