இந்தியாவின் இரண்டு முகங்கள்!
இந்தியா வளர்ச்சிப் பாதையில் நடைபோடுகிறதா அல்லது மோசமான சரிவை நோக்கிச் செல்கிறதா? நாள்தோறும் கேட்கப்படுகின்ற கேள்விகள்தான் இவை. பதில்கள் வேறுபடுகின்றன, அவரவர் பார்வைக்குத் தகுந்தபடி. ""நேருவின் சோஷலிச
இந்தியா வளர்ச்சிப் பாதையில் நடைபோடுகிறதா அல்லது மோசமான சரிவை நோக்கிச் செல்கிறதா? நாள்தோறும் கேட்கப்படுகின்ற கேள்விகள்தான் இவை. பதில்கள் வேறுபடுகின்றன, அவரவர் பார்வைக்குத் தகுந்தபடி.
""நேருவின் சோஷலிச சித்தாந்தத்தில் சிக்கித் தவித்த நாடு, கடந்த 20 ஆண்டுகளில் வளம் பெற்று வருகிறது. இது ஒரு தரப்பினரின் கண்ணோட்டம். இவர்கள் வசதி படைத்தவர்கள். எண்ணிக்கையில் சிறுபான்மையினர். ஆனாலும் இவர்கள் குரல் ஓங்கி ஒலிக்கிறது. ""தனி நபர் வருமானம் அதிகரித்துள்ளதே. சந்தைப் பொருளாதாரத்தின் பலன்தானே இது'' என்பார்கள்.
""வறுமையாளர்களின் எண்ணிக்கை குறையவில்லையே, மாறாக அதிகரித்துள்ளதே'' என்று சுட்டிக்காட்டினால், ""வளரும் தருணத்தில் இது சகஜம்; நாளடைவில் வளர்ச்சியின் பலன் கடைக்கோடி மக்களையும் சென்றடையும்'' என்று சமாதானம் செய்வார்கள். இந்தக் கூற்றில் தெளிவு இல்லை என்றாலும், அவர்கள் இதை நம்புகிறார்கள். காரணம் இதுதான்: கடந்த சில ஆண்டுகளாக, பொருளாதார வளர்ச்சி 8 சதவிகிதத்துக்கு அதிகமாக இருக்கிறது.
மறுபக்கம் என்ன? சிலர் செல்வச் செழிப்பில் திளைக்கிறார்கள். பலர் அடிப்படைத் தேவைகளுக்கே திண்டாடுகிறார்கள். பெரும்பான்மையான மக்களுக்குக் கல்வி, சுகாதாரம் ஆகியவை எட்டாக்கனியாக இருக்கிறது. காரணம், சமுதாயக் காரணிகளில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது என்பதுதான்.
உதாரணமாக, உலக வங்கியின் ஆய்வறிக்கையின்படி உலகில் ஐந்தே ஐந்து நாடுகள்தான் (ஆப்பிரிக்கா நீங்கலாக) பெண் கல்வியில் இந்தியாவைவிட அதிகமாகப் பின்தங்கியுள்ளன. அவை, ஆப்கானிஸ்தான், பூடான், பாகிஸ்தான், பபுவா நியூ கினியா மற்றும் ஏமன் ஆகும்.
சிசு மரணத்தை எடுத்துக்கொள்வோமேயானால், ஆப்கானிஸ்தான், கம்போடியா, மியான்மர், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மோசமான நிலையில் இருப்பது இந்தியாதான்.
சத்துணவு குறைவான குழந்தைகளை எடுத்துக்கொண்டால் இந்தியா உலகிலேயே அடிமட்டத்தில் இருக்கிறது.
ஆக, உலக வங்கியின் ஆய்வறிக்கையின்படி, கல்வி, சுகாதாரம் ஆகிய அடிப்படை சமுதாயக் காரணிகளில் இந்தியா மிக மோசமாகப் பின்னடைந்துள்ளது என்பது வெளிப்படை.
இந்த நிலையில், இந்தியா வளர்ச்சிப் பாதையில் நடைபோடுகிறதா அல்லது மோசமான சரிவை நோக்கிச் செல்கிறதா? இரண்டு கேள்விகளுக்கும், "ஆம்' என்பதே பதில். முகேஷ் அம்பானி, மிட்டல் ஆகியவர்களும் இந்தியர்கள். குப்பனும், சுப்பனும் இந்தியர்கள்தான்!
இதில் புதிர் ஒன்றும் இல்லை. பொருளாதார வளர்ச்சி வேறு; மக்கள் நல மேம்பாடு என்பது வேறு. இதை உணர்ந்தால் மேற்கூறிய இரண்டு முரண்பட்ட நிலைகள் இந்தியாவில் நிலவுகின்றன என்பது தெளிவு.
மக்கள் நல மேம்பாட்டுக்கு, பொருளாதார வளர்ச்சி கண்டிப்பாக உதவக்கூடும். ஆனால், அது தானாக நிகழாது. அது வசப்பட வேண்டுமானால், கல்வி மற்றும் பொதுச் சுகாதாரம் ஆகிய துறைகளில், முறையான திட்டங்களை வகுத்து, அரசு முனைப்புடன் செயல்படுத்திட வேண்டும். பொருளாதாரத்தில் காட்டும் அதே முனைப்பை, சமுதாய மேம்பாட்டிலும் காட்ட வேண்டும். இதுவரை காட்டத் தவறிவிட்டோம்.
இதைக் கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார் பொருளாதார நிபுணரும் நோபல் பரிசு பெற்றவருமான அமார்த்திய சென். சென்ற சில தினங்களுக்கு முன், அமெரிக்காவின் சிறப்பு விருது இவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்ற முதல் அமெரிக்கர் அல்லாத நபர் இவர் மட்டுமே!
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகச் சிறப்பாக உள்ளது என்பதை எவராலும் மறுக்க இயலாது. 1990 - 91 முதல் 2009 - 10 வரையிலான காலத்தில், தனி நபர் வருவாய் ஆண்டுக்கு 5 சதவிகிதம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. ஜி.டி.பி. வளர்ச்சி பற்றி சொல்லவே தேவையில்லை.
உலகிலேயே, சீனாவுக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ச்சி அடைவதில், இரண்டாவது நிலையில் இந்தியா உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக, சராசரியாக 8 சதவிகிதம் வளர்ச்சி கண்டு வருகிறது. 2010-11-ல் அதற்கும் மேலாக 8.6 சதவிகிதம் வளர்ச்சி அடைந்தது. நடப்பு நிதி ஆண்டில் மட்டும், வளர்ச்சி விகிதம் 7 சதவிகிதமாகக் குறையக் கூடும் என்கிறது மத்திய புள்ளியியல் நிறுவனம். இந்தச் சரிவுக்கும் காரணம் அமெரிக்கா, ஐரோப்பாவில் நிலவும் பொருளாதாரச் சிக்கல்தான் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
கடந்த 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து பொருளாதார வளர்ச்சி அடைந்தும்கூட, இந்தியா ஓர் ஏழை நாடாகத் தொடர்கிறது என்பதுதான் வேதனை.
அதேநேரம், நமது அண்டை நாடுகளான வங்கதேசம் மற்றும் நேபாளத்தைப் பாருங்கள். அங்கு பொருளாதார வளர்ச்சி மிகக் குறைவு. தனிநபர் வருமானம் இந்தியாவைப்போல் அதிகரிக்கவில்லை. ஆனால், அந்த இரு நாடுகளும் சமுதாயக் காரணிகளில் நம்மைவிட மிகச் சிறப்பான நிலையில் உள்ளன.
இதைப் பார்க்கும் இந்திய எளிய மக்கள் என்ன நினைப்பார்கள்? பொருளாதார வளர்ச்சியால் நாம் என்ன பலனைக் கண்டோம் என்று நினைக்க மாட்டார்களா?
வங்கதேசம், நேபாளம் மட்டுமல்ல. நமது இதர அண்டை நாடுகளான இலங்கை, பூடான், பாகிஸ்தான், சீனா ஆகிய அனைத்து நாடுகளையும்விட ஏதேனும் ஒரு சமுதாயக் காரணியில், இந்தியா தாழ்ந்த நிலையில் உள்ளது.
சிலர் நினைக்கக் கூடும்; இந்தியாவில் மக்கள்தொகை அதிகம். எனவே, வங்கதேசம், நேபாளத்துடன் இந்தியாவை ஒப்பிடுவது நியாயமா? என்று. சரி, நம்மால் முடியாதது, சீனாவுக்கு எப்படிச் சாத்தியமானது? சீனாவின் மக்கள்தொகை இந்தியாவைவிட அதிகம் அல்லவா?
எதற்கெடுத்தாலும், இந்தியாவை சீனாவுடன் ஒப்பிட்டுப் பெருமிதம் கொள்ளும் பொருளாதார நிபுணர்கள், சமுதாயக் காரணிகளின் அடிப்படையில் சீனாவை ஏன் மேற்கோள் காட்டுவதில்லை?
இதோ ஓர் உதாரணம்:
சிசு மரணத்தை எடுத்துக்கொண்டால், இந்தியாவில் 1990-ல் 1,000 சிசுக்களில் 81 சிசுக்கள் மரணம். 2010-ல் 1,000 சிசுக்களில் 48 சிசுக்கள் மரணம்.
சீனாவில் 1990-ல் 1,000 சிசுக்களில் 38 சிசுக்கள் மரணம். 2010-ல் 1,000 சிசுக்களில் 16 சிசுக்கள் மரணம். பெண் கல்வியில் (15 வயது முதல் 24 வயது வரை) இந்தியாவில் 1991-ல் 49 சதவிகிதம். 2009-ல் 74 சதவிகிதம். சீனாவில் 1991-ல் 91 சதவிகிதம். 2009-ல் 99 சதவிகிதம். என்னே ஒரு சாதனை!
சத்துணவு பெறாத குழந்தைகளை எடுத்துக்கொண்டால், இந்தியாவில் 1990-ல் 59.5 சதவிகிதம். 2007-ல் 43.5 சதவிகிதம். சீனாவில் 1990-ல் 13 சதவிகிதம். 2007-ல் 4.5 சதவிகிதம் மட்டுமே. ஆக, இந்தியாவில் மக்கள்தொகை அதிகம் என்று காரணம் காட்டி, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது நியாயம் ஆகுமா?
அதேநேரம், ஒரு விஷயத்தை நாம் மறக்கவோ, மறைக்கவோ முடியாது. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. சீனா அப்படி அல்ல. இது சில நேரங்களில், சில திட்டங்களைச் செயல்படுத்துவதில் இந்தியாவுக்குக் கூடுதல் இடர்ப்பாடுகள் இருக்கக் கூடும். ஆனால், அதன் அடிப்படையில், தற்போதைய அவல நிலையை நியாயப்படுத்த முடியாது. ஆக, தேவையெல்லாம், அரசியல் துணிவு மட்டுமே.
உண்மை என்னவெனில், சீனா ஒரு ஜனநாயக நாடாக இல்லாவிடினும், தனது அபரிமிதமான வளர்ச்சியின் பயனாகக் கிடைக்கும் கூடுதல் நிதி ஆதாரத்தின் ஒரு பகுதியை சமுதாயக் காரணிகளின் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்துகிறது என்பதுதான்.
இந்தியாவில், ஆரம்பக் கல்வி, உடல் நலம், சமூகப் பாதுகாப்பு தொடர்புடைய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவு என்பதும், திட்டங்களைச் செயல்படுத்துவதில் காணப்படும் மெத்தனப் போக்கும் எல்லோரும் அறிந்ததே. அதேபோல், வேளாண்மை, கிராமப்புற மேம்பாடு ஆகியவை தொடர்பான திட்டங்களின் கதியும் அதுவே.
இது ஒருபக்கம் என்றால், தனியார்களின் பேராசையின் காரணமாக, சுற்றுச்சூழல் சூறையாடப்படுவதும், காட்டு வளங்களை தனியார்கள் கொள்ளையடித்து சமூகத்துக்கு ஒட்டுமொத்தமாக கேடு விளைவிப்பதும் அன்றாட நிகழ்வுகள். இதை இரும்புக் கரம் கொண்டு தடுப்பதை எந்த ஜனநாயக அமைப்பு தடுக்கிறது?
இதில் ஒரு வேடிக்கை என்னவெனில், அண்மையில் வெளிவந்த ஓர் ஆய்வறிக்கையின்படி, தேசிய "மீடியா'வில், 2 சதவிகித செய்திகள் மட்டுமே கிராமப்புற மக்கள் தொடர்புடையதாக உள்ளன என்பதுதான்.
இவ்வளவுக்கும் மத்தியில் ஒரு ஒளிக்கீற்றும் தென்படுகிறது. வருங்காலத்தில், ஜி.டி.பி.யில் 6 சதவிகிதத்தை கல்வி மேம்பாட்டுக்காக ஒதுக்கீடு செய்வதே மத்திய அரசின் இலக்கு என அண்மையில் வெளிவந்த செய்தியே அது. தற்போது, இது ஜி.டி.பி.யில் 3.78 சதவிகிதமாக மட்டுமே உள்ளது.
ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களைக் குறைக்க வேண்டும் என்று முழக்கமிடுவது இப்போதெல்லாம் நாகரிகம் என்றாகிவிட்டது.
அதேநேரம், கடந்த ஆண்டு மட்டும், ஓசைப்படாமல், மத்திய அரசு 4.6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு தொழில் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை வாரி வழங்கியுள்ளது. இதை ஒப்பிடும்போது விவசாயிகளுக்கும் எளிய மக்களுக்கும் வழங்கிய மானியம் 1.54 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே. கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் அளித்த தகவல் இது.
இது ஒருபுறம் இருக்க, சமுதாயக் காரணிகளைப் பொருத்தவரை இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதல்முறையாக, பள்ளிக் குழந்தைகளுக்குச் சத்துணவுத் திட்டம் தொடங்கப்பட்டது உலகறிந்த விஷயம். அதேபோல் தொடக்கக் கல்வி, சுகாதாரம், உணவுப் பண்டங்கள், பொது விநியோகம் ஆகிய துறைகளில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. மேற்கூறிய சமுதாயக் காரணிகள் மேம்பாடு அடைவதற்கு தமிழ்நாட்டின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் வழிகாட்டுதலாக அமைந்துள்ளன.
தற்போதைய நிலைமையை எடுத்துக்கொண்டால், தமிழ்நாடு தவிர, கேரளம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களும் தமிழ்நாட்டைப் பின்தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசு தவிர, இதர மாநிலங்களும், சமுதாய மேம்பாட்டுத் துறைகளில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு பெருவாரியான மக்களின் வாழ்க்கைத்தரம் உயர வழிவகை காண வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும் ஆகும்.