நோய்வாய்ப்பட்டிருக்கும் மருத்துவக் கொள்கை
அரசு ஊழியர்கள், நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள், சமூகத்தில் செல்வாக்கு மிகுந்தவர்கள் போன்றவர்களுக்கு நமது நாட்டில் மகிழ்ச்சியாக வாழ்வதற்குத் தேவையான எல்லா வசதிகளும் கிடைத்து விடுகி
அரசு ஊழியர்கள், நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள், சமூகத்தில் செல்வாக்கு மிகுந்தவர்கள் போன்றவர்களுக்கு நமது நாட்டில் மகிழ்ச்சியாக வாழ்வதற்குத் தேவையான எல்லா வசதிகளும் கிடைத்து விடுகின்றன.
இவர்களை நினைத்து யாரும் பொறாமை கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், இவர்களும் நாட்டின் அங்கம். குடிமக்களில் ஒரு பிரிவினர் என்கிற வகையில் இவர்களுக்கு இந்த வசதிகள் அனைத்தும் கிடைக்க வேண்டிவைதான். இவற்றைச் செய்து தர வேண்டியது அரசின் கடமை என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.
அதே நேரத்தில் உலகின் பெரிய ஜனநாயக நாட்டின் கோடிக்கணக்கான பிற குடிமக்களுக்கும் இதுபோன்ற வசதிகளைச் செய்து தர வேண்டியதும் நமது மத்திய, மாநில அரசுகளின் கடமையே. ஆனால், அவர்களுக்கு வெற்று வாக்குறுதிகளைத் தவிர, வேறு எதுவும் கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை.
Advertisement
"அனைவருக்கும் சுகாதார வாழ்வு' என்பதே நமது இலக்கு என்று நமது மத்திய அரசு அவ்வப்போது கூறி வருகிறது. ஆனால், அதன் கொள்கைகள் எல்லாம் இந்த இலக்கை நோக்கி நடைபோடுவதற்குப் பதிலாக, பெரிய நிறுவனங்களின் மருத்துவமனைகள், பிற தொழில் நிறுவனங்களின் கல்லாவை நிரப்புவதற்கே பயன்படுகின்றன. மருத்துவக் காப்பீட்டு திட்டங்கள் போன்றவையும் மறைமுகமாக இதற்கே உதவி செய்கின்றன.
நமது நாட்டின் 121 கோடி பேரில் பெரும்பான்மையினர் ஏழைகள். அடிப்படைச் சுகாதார, மருத்துவ வசதிகள் கிடைக்கப் பெறாதவர்கள். இவர்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்க வேண்டும் என்று நமது அரசுகளுக்கு அக்கறை இருந்தால், மருத்துவத் துறைக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். ஆனால், இதற்குப் போதுமான முயற்சிகள் எடுக்கப்படுவதில்லை.
நாட்டின் சுகாதார நிலைமை மோசமாக இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்கு இங்கே புள்ளி விவரங்களை அடுக்க வேண்டிய அவசியமில்லை. எல்லோருக்கும் கண்கூடாகத் தெரிந்த விஷயம் இது. நாட்டில் 5 வயதுக்குள்பட்ட 42 சதவிகிதக் குழந்தைகள் ஊட்டச் சத்து இல்லாமல் வழக்கத்தைவிடக் குறைந்த எடையுடன் இருக்கின்றன என்று நமது பிரதமரே ஒப்புக் கொண்டிருக்கிறார். இது தேசத்தின் அவமானம் என்றும் அவர் வருத்தப்பட்டார். ஊட்டச்சத்து குறைவு, மோசமான வாழ்க்கைத் தரம், சுகாதாரமின்மை போன்றவற்றுக்கு ஏழ்மையே அடிப்படைக் காரணம் என்பதைக் கூறத் தேவையில்லை.
ஊட்டச் சத்துக் குறைபாடு, பிரசவகால சிசு இறப்புகள் போன்றவை இப்போது இருப்பதைவிட 1990-களில் மிகக் குறைவாக இருந்ததாகச் சுகாதாரத் துறைக்கான தேசிய ஆணையம் குறிப்பிட்டுள்ளது. "இப்போது, சிசு மற்றும் 5 வயதுக்குள்பட்ட குழந்தை இறப்பு போன்றவற்றில் வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளைவிட நமது நிலைமை மிக மோசமாக இருக்கிறது. உலக மக்கள் தொகையில் 16.5 சதவிகித மக்கள் வசிக்கும் நமது நாடு, அதிக அளவு நோய்களைக் கொண்டிருக்கும் பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கிறது' என்றும் அந்த ஆணையம் கூறியிருக்கிறது.
மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள், பெரும்பான்மையானவர்களுக்கு சுகாதார வசதிகள் கிடைக்கவில்லை என்றாலும்கூட, மருத்துவத் துறையில் ஈடுபட்டிருக்கும் தனியார் நிறுவனங்கள் வளமாகவே இருக்கின்றன. பணம் கொழிக்கும் துறையாக மருத்துவத் துறை உருவெடுத்திருக்கிறது. மருத்துவச் சுற்றுலாவுக்கு மிகச் சிறந்த நாடு எது என்றால், இந்தியாவைத்தான் குறிப்பிடுகிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் சுமார் 2 லட்சம் பேர் மருத்துவச் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
சிகிச்சைக்காக வெளிநாட்டினர் இந்தியாவுக்கு வருவதற்கும் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட சிகிச்சைக்கு மேலை நாடுகளில் ஆகும் செலவைக் காட்டிலும் 12 முதல் 20 சதவிகிதம் இந்தியாவில் குறைவு. பிற ஆசிய நாடுகளைக் காட்டிலும் 30 சதவிகிதம் குறைவான கட்டணத்தில் இந்தியாவில் அதே சிகிச்சையைப் பெற்றுவிட முடியும்.
செலவு குறைவாக இருந்தாலும், சிகிச்சையின் தரத்தில் எந்தவிதக் குறையும் கிடையாது. உலகத் தரத்துக்கு இணையான கட்டமைப்பு வசதிகள், காத்திருக்க வேண்டிய அவசியமில்லை போன்றவையும் நமது மருத்துவத்துறையின் கூடுதல் பெருமை. சர்வதேச அளவில் மருத்துவச் சிகிச்சையின் தரத்தை மதிப்பிடும் கூட்டு ஆணையத்தின் அங்கீகாரத்தை நமது நாட்டின் பல மருத்துவமனைகள் பெற்றிருக்கின்றன. திறமை மிகுந்த மருத்துவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். இந்தியாவின் சிகிச்சையளிக்கும் திறன் மிக உயர்ந்தது என மதிப்பிடப்படுகிறது.
உதாரணமாக, இந்தியாவில் நடக்கும் இதய பைபாஸ் அறுவைச் சிகிச்சைகளில் 98.7 சதவிகிதம் வெற்றிகரமாக நடக்கின்றன. மருத்துவ வசதிகளில் முன்னோடியாகக் கருதப்படும் அமெரிக்காவிலேயே இந்த அளவு 97.5 சதவிகிதம்தான்.
இப்படி எல்லா வகையிலும் சிறந்த மருத்துவ வசதிகளைக் கொண்ட இந்தியாவில், பெரும்பாலான குடிமக்களுக்கு இந்த வசதிகள் கிடைக்கவில்லை என்பதுதான் வேதனை. இந்த விஷயத்தில் உலக வங்கியின் அறிக்கை கவனிக்கத்தக்கது.
இந்தியாவில் எல்லா வகையிலான வருமானப் பிரிவினரையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், ஒரேயொரு முறை பெரிய அளவிலான மருத்துவச் சிகிச்சை பெற வேண்டிய நிலைமை ஏற்படும்போது, அவர்களது ஆண்டு வருமானத்தில் 58 சதவிகிதம் செலவாகிவிடுகிறது. இதன் காரணமாக அவர்களில் 2.2 சதவிகிதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளப்படுகிறார்கள்.
இன்னும் அதிர்ச்சியளிக்கும் உண்மை என்னவென்றால், பெரிய அளவிலான மருத்துவச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும்போது கடன் வாங்கியோ சொத்துகளை விற்றோதான் 40 சதவிகிதம் பேர் செலவு செய்ய வேண்டியிருக்கிறது என்று உலக வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, ஏழைகளால் உயர் மருத்துவச் சிகிச்சை பெறவே முடியாது; கொஞ்சம் வசதி படைத்தவர்களும், சொத்து வைத்திருப்பவர்களும் மருத்துவச் சிகிச்சை பெற்ற பிறகு ஏழைகளாகிவிடுகிறார்கள். அரசின் உதவி கிடைக்காததே இதற்கு முழுக் காரணம். ஒன்று நோயுடன் வாழ வேண்டும் அல்லது சிகிச்சை கிடைக்காமல் சாக வேண்டும் என்பதே இந்திய ஏழைகளின் தலைவிதி.
துரதிருஷ்டவசமாக, இதையெல்லாம் நமது மத்திய, மாநில அரசுகள் பொருள்படுத்துவதேயில்லை. சுகாதாரத்துறைக்கென அரசுகள் செலவழிக்கும் மிகக் குறைந்த நிதியும் ஏழை மக்களுக்குப் பயனளிப்பதற்குப் பதிலாக, தனியார்களை வளப்படுத்துவதற்கே சென்றுவிடுகிறது.
உதாரணமாக, ஆரோக்யஸ்ரீ என்கிற சுகாதாரத் திட்டத்துக்காக ஆந்திரப் பிரதேச அரசு கடந்த நவம்பர் 2011 வரை ரூ.3,482 கோடி செலவு செய்திருக்கிறது. ஆண்டுக்கு ரூ.1,400 கோடி ஒதுக்கப்படுகிறது. இந்தப் பணத்தில் 80 சதவிகிதத் தொகை தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்கிறது என்றால், இதைப்பற்றி வேறென்ன சொல்ல?
கியூபாவில் இருப்பதைப் போன்று மருத்துவத் துறை முழுவதையும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது இந்தியாவில் சாத்தியமில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், பிரிட்டன் மாதிரியை நாம் பின்பற்ற முடியும். எத்தனையோ துறையில் அந்த நாட்டைப் பின்பற்றும் இந்தியாவில், இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. கனடா மற்றும் பிரான்ஸ் நாடுகளிலுள்ள நடைமுறைகளும் சாத்தியமானவையே. இங்கெல்லாம் மக்களுக்கு மருத்துவ வசதிகள் வழங்குவதை அரசு முதல் கடமையாக எடுத்துக் கொண்டு பணியாற்றுகிறது.
இது தவிர, சில அடிப்படைகளையே நாம் மாற்ற வேண்டியிருக்கிறது. நோயில்லாமல் இருந்தால் மட்டும் நலமாக இருப்பதாக அர்த்தமில்லை. உடல், மன ரீதியாகவும், சமூக அளவிலும் நன்றாக இருப்பதையே நலமாக இருப்பது என்று உலக சுகாதார அமைப்பு வரையறுத்துள்ளது. அதாவது, மக்கள் நலமாக இருப்பது என்பது வெறும் சுகாதாரத்துறை மட்டும் சார்ந்த பிரச்னையில்லை. பொருளாதார மற்றும் சமூகத் துறைகளும் இதில் முக்கிய இடம்பிடிக்கின்றன. இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மக்கள் நலமாக இருக்க வேண்டும் என்பதை இந்திய அரசியல் சட்டமும் வலியுறுத்தியுள்ளது. ஆனால், அரசியல் சட்டம் வரையறுத்திருக்கும் இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதில் நமது மத்திய, மாநில அரசுகள் தவறிவிடுகின்றன. சர்வதேச அளவில் இது தொடர்பாக வகுக்கப்படும் விதிமுறைகளும் நமது நாட்டில் மதிக்கப்படுவதில்லை.
வல்லரசுக் கனவுடன் இருக்கும் இந்த நேரத்திலாவது, மக்களுக்கு என்ன தேவை என்பதை அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும். காப்பீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்திவிட்டால், மக்கள் அனைவரும் நலமாக வாழ்ந்துவிட முடியும் என்பது கட்டுக்கதை. இதுபோன்ற திட்டங்களால் மக்களுக்கு நிச்சயமாக நன்மை ஏற்படப்போவதில்லை. காப்பீட்டு நிறுவனங்கள் செய்வது வர்த்தகம் மட்டுமே. அவர்களுக்கு லாபம் ஈட்டுவதே குறிக்கோள். சேவை செய்வதற்காக அவர்கள் இந்தத் துறையில் இறங்கவில்லை. அதனால், அரசு தரும் பணத்தை விடக் குறைந்த மதிப்புக்கே அந்த நிறுவனங்கள் சிகிச்சை அளிக்கும் என்பது வெளிப்படை.
அரசு செயல்படுத்தும் காப்பீட்டுத் திட்டங்கள் மூலமாக மருத்துவச் சிகிச்சையளிக்கும் முறையை வலுப்படுத்துவது சாத்தியமேயில்லை. மக்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், மருத்துவச் சிகிச்சையளிக்கும் அடிப்படை அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்.
மக்களுக்குத் தேவை நேரடியாகச் சிகிச்சையளிக்கும் முறைதான். எப்போதெல்லாம் நோய்வாய்ப்படுகிறார்களோ அப்போதெல்லாம் மருத்துவமனைக்குச் சென்று இலவசமாகச் சிகிச்சை பெற்றுக்கொள்ளும் வசதி இருக்க வேண்டும்.
நோயின் தன்மை எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதிலிருந்து மக்களை மீட்பதற்குத் தேவையான பொறுப்பை அரசே எடுத்துக் கொண்டால், மக்கள் மகிழ்ச்சியடைவார்கள். அவர்களுக்கு 5 நட்சத்திர அந்தஸ்து கொண்ட மருத்துவமனைகள் எல்லாம் தேவையேயில்லை. அப்படிப்பட்ட மருத்துவமனைகளுக்குச் போக முடிந்தவர்கள் யாரும் அரசு மருத்துவமனைப் பக்கம் எட்டிக்கூட பார்க்க மாட்டார்கள்.
சாதாரண மக்கள் பலனடைய வேண்டுமானால், அரசே போதுமான அளவுக்கு தொடக்கநிலை, இரண்டாம் நிலை, உயர்நிலை மருத்துவமனைகளை அமைக்க வேண்டும். இதற்குத் தேவையான உத்திகளை வகுக்க வேண்டும். கனடாவில் இருப்பதைப் போன்று, வரி விதிப்புகள் மூலம் இதற்கான நிதியைத் திரட்டலாம். இதன் மூலம் மட்டுமே எந்த பாரபட்சமும் இல்லாமல் பணமில்லா சிகிச்சை அனைவருக்கும் கிடைக்கும்.
அதன் பிறகே, மருத்துவச் சேவைகள் சென்றடைந்து விட்டதாக அரசு மார்தட்டிக் கொள்ள முடியும். நமது மத்திய, மாநில அரசுகளுக்கு இதற்கான திறன் நிச்சயமாக உண்டு. துணிச்சல் இருக்கிறதா என்பதுதான் கேள்வி.