புற்றீசல் போல பயிற்சி மையங்கள்
அரசுப்பணி பலருக்கு எட்டாக்கனி. சிலருக்கோ "சீ சீ இந்தப் பழம் புளிக்கும்' என்ற நரியின் நிலைதான். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள்ள பல்லாயிரக்கணக்கானோர், முதுமை அடைந்தும் நேர்க்காணலுக்கான அழைப்பா
அரசுப்பணி பலருக்கு எட்டாக்கனி. சிலருக்கோ "சீ சீ இந்தப் பழம் புளிக்கும்' என்ற நரியின் நிலைதான். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள்ள பல்லாயிரக்கணக்கானோர், முதுமை அடைந்தும் நேர்க்காணலுக்கான அழைப்பாணைகூட கிடைக்காத நிலையுள்ளது.
அரசுகளும், அரசு சார்ந்த நிறுவனங்களும் போட்டித் தேர்வுகளை நடத்தி, தகுதியானவர்களைத் தேர்வு செய்கின்றன. முக்கியப் பிரமுகர்களின் (!) சிபாரிசு, லட்சக்கணக்கில் பணம் உள்ளிட்ட தகுதிகள் இருப்போருக்கே அரசுப்பணி கிடைக்கும் என்ற ஓர் எண்ணம் இருந்து வருகிறது.
இவ்விதமான முறைகேடுகளைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. "தேர்வுகள் நியாயமாகவே நடக்கும்; பணிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறும் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்' என்று சம்பந்தப்பட்ட தேர்வு வாரியங்களும் நம்பிக்கையை ஊட்டி வருகின்றன. வெளிப்படையாக இணைய தள வழியில் மேற்கொள்ளப்படும் தேர்வுப் பணிகளால் இளைஞர்கள் அதீத நம்பிக்கையுடன் போட்டித் தேர்வுகளை எழுதத் தொடங்கியுள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம், ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம், மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வு வாரியம் உள்ளிட்டவைகளும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும் அவ்வப்போது பணியிடங்களுக்குத் தேர்வுகளை நடத்தி வருகின்றன.
இப்போது சில நூறு பணியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்வுகளுக்காகப் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் விண்ணப்பிப்பதும், இவர்களில் 90 சதவீதம் பேருக்கு மேல் தேர்வுகளை எழுதுவதும் தொடர்கதையாகி உள்ளன.
இந்நிலையில், போட்டித் தேர்வுகள் சரியான முறையில் நடைபெறத் தொடங்கியுள்ளது என்ற எண்ணம் மக்கள் மனதில் விதைத்துள்ள நிலையில், போட்டித் தேர்வுகளுக்காக ஓரிரு நாள்களில் தொடங்கப்படும் பயிற்சி மையங்கள்தான் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி வருகின்றன.
ஊருக்கு ஊர், கிராமத்துக்கு கிராமம், வீதிக்கு வீதி என்று இப்போது போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் செயல்பட்டும், தொடங்கப்பட்டும் வருகின்றன.
டிஜிட்டல் பேனர்கள், சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள், உள்ளூர் கேபிள் டி.வி.க்களில் விளம்பரங்கள் உள்ளிட்ட பல வழிகளில் இவர்கள் விளம்பரம் செய்து, இளைஞர்களை வசப்படுத்த கடும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.
ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, நாற்காலிகள், மேஜைகள், கரும் பலகைகள் போன்றவற்றுக்காக சில ஆயிரம் ரூபாய்கள் செலவழித்தால் போதும். ஒன்றிரண்டு பட்டதாரி இளைஞர்களைக் குறைந்த ஊதியத்தில் வேலைக்கு அமர்த்திக் கொண்டு, மையத்தைத் தொடங்கிவிடுகின்றனர்.
சில பயிற்சி மையங்களில் அளிக்கப்படும் பயிற்சிகளால், தேர்வர்களின் திறமைகள் மெல்ல, மெல்ல குறைகின்றன. அவர்களின் அறிவாற்றலை வளர்ப்பதைவிட, நினைவாற்றலைச் சிறிதளவு வளர்ப்பதிலேயே நாட்டம் செலுத்தி, பணம் பறிக்கும் மையங்களாகவே செயல்பட்டு வருகின்றன.
சரிவரக் கல்வித்தகுதி பெறாதவர்களை ஆசிரியர்களாகவும், வழிகாட்டிகளாகவும் நியமித்து, முந்தைய தேர்வுகளின் வினாத்தாள்களையும், பொது அறிவுப் புத்தகங்களையும் மேற்கோள் காட்டிவிட்டு, முக்கிய வினாத்தாள்களைப் பாடமாக நடத்திவிட்டு, தேர்வர்களிடம் பணம் பறிக்கின்றன.
கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பிச்செல்லும் தேர்வர்கள் பெரும்பாலும் ஏமாற்றத்தையே சந்திக்கும் நிலையுள்ளது.
போட்டித் தேர்வுகளுக்காக அரசும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பாக, தேர்வர்களுக்குப் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கிறது. மாவட்டத் தலைநகரத்தில் இருக்கும் தேர்வர்களுக்கு இம்மையம் பயனுள்ளதாக இருக்கிறது. தவிர, பக்கத்து நகரங்களைச் சேர்ந்தவர்களும், கடைக்கோடி கிராமங்களில் வசிப்போரும் இப்பயிற்சிகளில் சேர முடிவதில்லை.
எனவே, நகர்ப்புறங்களிலும், கிராமங்களின் தலைமையகமாக உள்ள பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் இதுபோன்ற பயிற்சி மையங்களைத் தொடங்க அரசே முன்வர வேண்டும்.
வேலைவாய்ப்பற்ற - தகுதியும் திறமையும் வாய்ந்த - பட்டதாரிகளைத் தேர்வு செய்து, கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களை நியமிப்பதுபோல் பயிற்சியாளர்களாக நியமிக்கலாம்.
இவர்கள் மூலம் தேர்வர்களுக்கு விடுமுறை நாள்களில் சிறிதளவுக் கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு பயிற்சியும் அளிக்கலாம்.
இதோடு, தகுதியும், திறமையும் வாய்ந்த பயிற்சியாளர்கள் பயிற்சி அளிப்பதை உறுதி செய்துவிட்டு அரசு அங்கீகாரம் அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கு அரசு வேலை கொடுக்கிறதோ இல்லையோ புற்றீசல் பயிற்சி மையங்களை வரன்முறைப்படுத்த முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், அரசுத் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் வீதிக்கு வீதி அல்ல.. வீட்டுக்கு வீடுகூட அமைந்துவிடும்!