ஏற்றம் இழந்த நேரம்
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நேரம் சரியில்லை. நேரம்... அதாவது "டைம்' என்ற அமெரிக்கப் பத்திரிகையின் ஆசியப் பதிப்பில் மன்மோகன் சிங் அட்டைப்படத்தில் காட்சி தந்துள்ளார். ""செயல்படாதவர், இருட்டில்
கட்டுரைகள்ஏற்றம் இழந்த நேரம்
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நேரம் சரியில்லை. நேரம்... அதாவது "டைம்' என்ற அமெரிக்கப் பத்திரிகையின் ஆசியப் பதிப்பில் மன்மோகன் சிங் அட்டைப்படத்தில் காட்சி தந்துள்ளார். ""செயல்படாதவர், இருட்டில்
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நேரம் சரியில்லை. நேரம்... அதாவது "டைம்' என்ற அமெரிக்கப் பத்திரிகையின் ஆசியப் பதிப்பில் மன்மோகன் சிங் அட்டைப்படத்தில் காட்சி தந்துள்ளார். ""செயல்படாதவர், இருட்டில் வாழ்பவர், சக அமைச்சர்களைக் கட்டுப்படுத்த தைரியமில்லாதவர், செய்ய வேண்டிய சீர்திருத்தங்களைச் செய்யக் கையாலாகாதவர், ஏற்றம் இழந்து இறங்கிப் போய்விட்டார்...'' என்றெல்லாம் அடைமொழிகளை வழங்கி மானத்தை வாங்கியுள்ளதை இந்திய ஊடகங்கள் கண்டித்துள்ளன.
"டைம்' எழுதியுள்ள விஷயங்கள் உண்மைதான் என்றாலும், அமெரிக்கப் பத்திரிகை இந்தியப் பிரதமரைப் பழித்துள்ளது தவறுதானே! ""உலகமயமாதலுக்கு வழிகாட்டியவர், ஜான் மேனார்டு கீன்சின் தத்துப்பிள்ளை, வளர்ச்சியின் வித்தகர்'' என்றெல்லாம் ஏற்றங்களைப் போற்றிய நேரமும் உண்டல்லவா?
இந்தியப் பிரதமரை இந்தியப் பத்திரிகைகள் மட்டுமே விமர்சனம் செய்யலாம், அமெரிக்கப் பத்திரிகைகள் விமர்சனம் செய்யக்கூடாது என்றால் ""உலகம் ஒன்றே'' என்ற குளோபலைசேஷனுக்கு வழிகாட்டியுள்ள மன்மோகன் சிங்கையே அவமதிப்பதாகிவிடும் அல்லவா? வினையை விதைத்தவன் தினையை அறுக்க முடியுமா என்ன?
இந்தப் பின்னணியில் நமது ஏற்றுமதி இறக்கத்தையும், இறக்குமதி ஏற்றத்தையும் அன்னியச் செலாவணி கடன்நிலை பற்றியும் சற்று கவனித்தால் இறக்கத்தை நமக்கு நாமே தருவித்துக் கொண்டுள்ள அவலம் புரியவரும். இறங்கிப்போன பிரதமரும் புரிந்துகொண்டால் சரி.
பணவீக்கத்தைச் சற்றேனும் கட்டுப்படுத்தாமல் பணவீக்கமே நாட்டின் பொருளாதாரக் கொள்கை என்று போற்றிய மன்மோகன் காலத்தில் ஒரு ரூபாய் நோட்டு காணாமல் போயிற்று. மன்மோகன் ரிசர்வ் வங்கி கவர்னராயிருந்த காலத்தில் அந்த ஒரு ரூபாய் நோட்டில் சத்திய வாக்கு வழங்கிக் கையொப்பமிட்டிருந்ததைப் பலரும் கவனித்திருக்கலாம். மன்மோகன் சிங்குக்கு முன் ஐ.ஜி. படேல் என்பவர் கவர்னராயிருந்தார். அவரும் அந்தக்காலத்தில் ஒரு ரூபாய் நோட்டில் கையெழுத்திட்டவரே. ஐ.ஜி. படேலும் பொருளியல் வல்லுநர். கீன்ஸ் இலக்கணம் கற்றவர்.
மன்மோகனைப் பற்றி படேல் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ""மன்மோகன் அரசியல் சாணக்கியம் அறியாதவர் என்று குறைவாக மதிப்பிடப்பட்டுவிட்டார். அதுபோலவே, பொருளியல் ஞானம் மிக்கவர் என்று மிகக் கூடுதலாக மதிப்பிடப்பட்டுவிட்டார்...'' ஐ.ஜி. படேல் சற்று நாசூக்காகக் குறிப்பிட்டதை "டைம்' பத்திரிகை வெளிப்படையாக வெளிச்சமிட்டுவிட்டது. எல்லாம் நேரந்தான்!
"நாணயம்' இழந்த நாணயத்தால் ரூபாயின் அசல் மதிப்பு குறைந்துவிட்டது. ரூபாய் மதிப்பிழந்த காரணத்தால் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு டாலர் வடிவில் அதிக ரூபாய்களை அள்ளித்தர வேண்டும். அரசு வழங்கும் பலதரப்பட்ட மானியங்கள் காரணமாகவும் ரூபாய் மதிப்பு குறைந்துகொண்டே போகிறது. விலைவாசி உயர்ந்துகொண்டே போகிறது. உலகமயம், தாராளமயம் எல்லாம் பொருளாதாரத்தை மயக்கிவிட்டது.
இந்த மயக்கத்தால், 1990-91-இல் நம்முடைய ஏற்றுமதிப் பொருள்களின் பணமதிப்பு ஜி.டி.பி என்ற ஒட்டுமொத்த தேசிய வருமான மதிப்பில் 6.3 சதவிகிதம் என்ற நிலை 2010-11-இல் 16 சதவிகிதமாக உயர்ந்தது. இது ஏற்றந்தானே! அவசரப்பட வேண்டாம். அதேசமயம், 1990-91-இல் நமது இறக்குமதிப் பொருள் மதிப்பு ஜி.டி.பி.யில் 8.5 சதவிகிதம். இந்நிலை 2010-11-க்கு வரும்போது 25.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஒரு நாட்டின் பொருளாதாரம் உலகமயமாதல் தத்துவப்படி வளர வேண்டுமானால் ஏற்றுமதி மதிப்பு உயர்ந்தும் இறக்குமதி மதிப்பு இறங்கியோ அல்லது சம நிலையிலோ திகழ வேண்டும்.
2008-2009-க்குப் பின்னர் ஏற்றுமதி மதிப்பு இறங்கியும் இறக்குமதி மதிப்பு ஏறியும் உள்ளது. 2010-11-க்கு வரும்போது நமது வர்த்தகப் பற்றாக்குறை அல்லது "நெகடிவ் பேலன்ஸ் ஆஃப் பேமெண்ட்' ஜி.டி.பி.யில் 7.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதன் மதிப்பு 46 பில்லியன் டாலர்.
2011-12 நிலை 29 ஜூன் ரிசர்வ் வங்கி அறிக்கைப்படி வர்த்தகப் பற்றாக்குறை 78.2 பில்லியன் டாலர். எனினும், அன்னிய முதலீட்டுக் கணக்கு வரவு 16 பில்லியன் டாலரைக் கழித்தாலும்கூட 52 பில்லியன் டாலர் என்பதை ஈடுசெய்யும் அளவில் ஏற்றுமதி செய்ய முந்திரிப்பருப்புகூட இல்லை.
பண்ருட்டியில் சுனாமி வந்து முந்திரிப்பருப்பு மட்டுமல்ல, பலாப்பழமும் இல்லை. ஒவ்வோராண்டும் ஏற்றுமதி மதிப்பு குறைந்து இறக்குமதி மதிப்பு உயர்ந்து செல்வதால் ஏற்றுமதிக்குரிய பொருள்களில் வழங்கல் (சப்ளை) இல்லை. அதேசமயம் இறக்குமதிப் பொருள்களுக்கான தேவை (டிமாண்ட்) உயரும் நிலை அஞ்சத்தக்கதாயுள்ளது.
2010-11-இல் நமது அன்னியச் செலாவணி கையிருப்பு 315.7 பில்லியன் டாலர் 2011-12-இல் 294.4 பில்லியன் டாலராகிவிட்டது. நமது வர்த்தகப் பற்றாக்குறையை அன்னிய முதலீடு ஓரளவுக்குத்தான் ஈடுகொடுக்கும். நமது வளர்ச்சி வீதம் குறைந்துவிட்டதாலும், பொருளாதாரத்தை மன்மோகன் அரசு மிக மோசமாக நிர்வகிப்பதாலும் எதிர்காலத்தில் பெரிய அளவில் உற்பத்திக்குரிய அன்னிய முதலீடுகளை எதிர்பார்க்க முடியாது.
அமெரிக்காவிலும் வளர்ச்சி குன்றிய நிலை, ஐரோப்பிய நாடுகளில் திவாலா நிலை, இந்திய அமைச்சர்களின் ஹவாலா நிலை ஆகியவற்றை முன்நிறுத்திப் பார்த்தால் சேர்த்து வைத்துள்ள டாலர் ரிசர்வ்களை, அதிகரித்துவரும் இறக்குமதிகள் அழித்துவிடும். ஈடுசெய்யும் அளவில் ஏற்றுமதி இல்லாமல் குறையக் குறைய இந்தியா திவாலாகும் நாள் தூரத்தில் இல்லை.
சரியோ தவறோ ஒரு முடிவு எடுத்துவிட்டால் அம்முடிவை நோக்கிய பயணம் தொய்வில்லாமல் செல்ல வேண்டும். அந்த முடிவு உலகமயமாதல். இப்படிப்பட்ட முடிவில் உள்ளூர்ச் சந்தை இறக்குமதிப் பொருள்களை வைத்துத் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் நாம் செய்யக்கூடிய தொழில்பொருள் ஏற்றுமதியின் தரம் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நல்ல தரம் இருந்தால் தொழில் போட்டியில் வெல்லலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. தொழில் பொருள் ஏற்றுமதி அப்படிப் பெரிதாக வளரவில்லை. எனினும், இறக்குமதிகளால் ஏற்பட்ட நாணயச் செலாவணிச் சரிவை கணினி மென்பொருள் சேவை ஏற்றுமதி மட்டுமே மீட்டுத் தந்துள்ளது.
உலகப் பொருளாதார வீழ்ச்சி காரணமாக மென்பொருள் ஏற்றுமதி சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் அதை ஈடுசெய்ய வேறு வழியை நாட வேண்டும். அன்னிய முதலீடுகள் வந்து நமக்காக இங்கு தொழில்செய்து, நமக்காக ஏற்றுமதி செய்து, நம்மைக் காப்பாற்றும் என்று எண்ணுவது மதியீனம். அதேசமயம், மேலும் இறக்குமதிக்கும் வேலை இழப்புக்கும் வழிவகுக்கும் சில்லறை வர்த்தகத்தில் அமெரிக்க முதலீடுகள் நுழையக் காத்துக் கிடக்கின்றன. வால்மார்ட் வணிக வளாகங்கள் இந்தியாவைக் காப்பாற்றாது.
தொழில் வளர்ச்சியில் ஏகப்பட்ட முட்டுக்கட்டைகள் புதிது புதிதாக முளைத்தவண்ணம் உள்ளன. தேவையான அளவில் மின்சாரம் இல்லை. மின் பற்றாக்குறை தொடர்கதையாக உள்ளது. அப்படியே மின்சாரம் கிடைத்தாலும், சூழல் விடுதலை கிடைக்க வேண்டும்.
வளமான வனப் பிரதேசங்களில்தான் கனிம வளம் உள்ளது. வனப்பிரதேசங்கள் அழியும் ஆபத்துடன் அங்கு வாழும் பழங்குடி மக்களின் வாழ்நிலை பிரச்னைக்கு உரியதாயுள்ளது.
உள்ளூரில் தொழில் உற்பத்தி செலவுமிக்கதாக மாறும்போது முழுக்க முழுக்க இறக்குமதிப் பொருள்களின் தேவை உயர்கிறது. நுகர்வோர் இந்தியப் பொருளை வாங்குவதைவிட சீனத்துப் பொருள்களை வாங்குகின்றனர்.
குறிப்பாக, இந்தியாவில் வீட்டுக்கு வீடு சீனத்து ரிசார்ஜபிள் ஒளிவிளக்குகள் எரிகின்றன. எவ்வளவு விதமான டார்ச் லைட்டுகள்? எல்லாம் சீன இறக்குமதிகள், சீனத்துத் துணிகளும், வங்கதேசத் துணிகளும் மலிவாகக் கிடைக்கின்றன.
அடுத்த பிரச்னை பணவீக்கம், விலைவாசி உயர்வு காரணமாக நிர்வாகிகளின் சம்பளம், தொழிலாளர்களின் சம்பளம் உயர்ந்து வணிகப் பொருள் மதிப்பும் உயர்ந்துள்ள சூழ்நிலையில் இறக்குமதிப் பொருள்கள் மலிவாக உள்ளதும் இறக்குமதி உயர்வுக்குக் காரணமாயுள்ளன.
கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும்கூட ரூபாயின் மதிப்பு இழக்கப்பட்டதால் முன்பைவிட அதிக அளவில் ரூபாய்களைச் செலவழித்து அமெரிக்க டாலர்களாக வழங்க வேண்டிய கட்டாயமும் உள்ளது.
நம்முடைய வர்த்தகப் பற்றாக்குறையை என்.ஆர்.ஐ. டிபாசிட்டுகள் ஓரளவு ஈடு செய்யலாம். அன்னியக் கடன் ஈடு செய்யலாம். எவ்வளவுதான் இவை ஈடு கொடுத்தாலும் உள்நாட்டு வர்த்தகம் வலிமைபெற்று ஏற்றுமதிக்குத் தயாராவதும், இறக்குமதியைக் குறைப்பதும் மிக அவசியம். அப்போதுதான் உலகமயமாதல் நியதிப்படி ஓர் அரசு வலிமை பெறும்.
கடந்த இரண்டாண்டுகளாக நல்ல பருவ விளைவால் விவசாய விளைச்சல் குறிப்பாக உணவு தானியமாகிய நெல், கோதுமை மற்றும் தென்னை சாகுபடி மேலோங்கியிருந்ததால் தொழில் வீழ்ச்சி தாக்குப்பிடித்தது. அதேசமயம் மலேசியப் பாமாயில், ஆஸ்திரேலியா - ஆப்பிரிக்கப் பருப்புகள், கலிபோர்னிய பாதாம் பருப்பு எல்லாம் இறக்குமதியாகியுள்ளன. பருப்பு வகைகளிலும், எண்ணெய் வித்து வகைகளிலும் இன்னமும் இந்தியா தன்னிறைவு பெறவில்லை. கலிபோர்னியா பாதாம்பருப்பு இறக்குமதியை கையால் உரித்த மூன்று விதை காந்தி வேர்க்கடலைப் பருப்பு ஏற்றுமதி ஈடு கொடுக்கலாம். பாசுமதி அரிசியுடன் பனைநுங்கு ஜெல்லி, மாம்பழ அல்வா, நெல்லிக்காய் ஜாம், தேங்காய் பர்பி என்ற வகையில் மதிப்புக் கூட்டப்பட்ட உணவு ஏற்றுமதிகளில் இந்தியா முயல வேண்டும்.
முதற்கண் நாட்டுப்பற்றுள்ள நல்ல அமைச்சர்கள் நாட்டை ஆள வேண்டும். ஜெய்ராம் ரமேஷ்போல் ஒரு சில நல்லவர்கள் இருப்பினும் பெரும்பாலோர் கவனமெல்லாம் நாட்டை நினைக்காமல் சுயலாபம், ஹவாலா, ஸ்விஸ் முதலீடு, தொகுதி மேம்பாட்டு நிதியை "லபக் செய்தல்' என்று போய்க் கொண்டிருக்கிறது.
பொதுக்கடன் வாங்கினால் அதைத் தொழில் வளர்ச்சிக்குப் பயன்படுத்தினால் நாடு வளரும். அதையும் "லபக்' செய்தால் நாடு என்னவாகும்? இவற்றையெல்லாம் பாரதப் பிரதமர் மன்மோகனிடம் கேட்டால், ""என்ன செய்வது? கூட்டணி ஆட்சியில் நாணயமான நான் பிரதமராக நீடிக்க வேண்டுமானால் கூட்டணிக்கட்சி அமைச்சர்களின் ஊழல்களையும் பொறுத்துக்கொள்ள வேண்டியதுதான்...'' இப்படி அவர் பதில் வழங்கியுள்ளதை எண்ணிப்பார்க்கும்போது, ""எல்லாம் நேரம்தான். எல்லாம் டைம்'' இந்த "டைம்' மாற வேண்டுமானால் ஏற்றம் வேண்டும்; இறக்கம் வேண்டாம்.
""மன்மோகன் அரசியல் சாணக்கியம் அறியாதவர் என்று குறைவாக மதிப்பிடப்பட்டுவிட்டார். அதுபோலவே,
பொருளியல் ஞானம் மிக்கவர் என்று மிகக் கூடுதலாக
மதிப்பிடப்பட்டுவிட்டார் } ஐ.ஜி. படேல்''