பிரணாப் ஏற்படுத்தும் எதிர்பார்ப்பு...
குடியரசுத் தலைவர் தேர்தலின் வாக்குகள் எண்ணப்படுவதற்கு பல வாரங்கள் முன்னதாகவே பிரணாப் முகர்ஜி வெற்றி பெறுவார் என்பது எல்லோருக்கும் உறுதியாகிவிட்டது. மேலும், பல நாள்கள் தமது முடிவை ஒத்திப்போட்ட திரிணா
குடியரசுத் தலைவர் தேர்தலின் வாக்குகள் எண்ணப்படுவதற்கு பல வாரங்கள் முன்னதாகவே பிரணாப் முகர்ஜி வெற்றி பெறுவார் என்பது எல்லோருக்கும் உறுதியாகிவிட்டது.
மேலும், பல நாள்கள் தமது முடிவை ஒத்திப்போட்ட திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி கடைசியில் மிகவும் வருந்தத்தக்க முடிவாக பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு என்று கூறியதும் தேர்தல் அநேகமாக முடிவடைந்துவிட்டது.
பதின்மூன்றாவது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜியின் அரசியல் பயணம் ஏற்றத் தாழ்வுகள் மிக்க நீண்டதொரு வரலாறாகும். 1967-ல் "பங்களா காங்கிரஸ்' கட்சியின் உறுப்பினராகச் சேர்ந்ததுதான் அவரின் அரசியல் ஆரம்பம்.
1967-1969 ஆண்டுகளில் "பங்களா காங்கிரஸ்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி' மேற்கு வங்க சட்டசபைத் தேர்தல்களில் வெற்றிபெற்று இரு தடவைகளிலும் பங்களா காங்கிரஸ் தலைவர் அஜாய் முகர்ஜி முதல்மந்திரியாக ஆனார். சிறிது காலத்திற்குள் அந்தக் கூட்டணி உடைந்துவிட்டது. அதன் பிறகு பிரணாப் முகர்ஜி உள்பட பங்களா-காங்கிரஸ் உறுப்பினர்கள் பலர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர்.
1969 ஜூலையில் காங்கிரஸ் சார்பில் பிரணாப் நாடாளுமன்றத்தின் மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஊக்கத்தாலும் திறமையாலும் சலியாத உழைப்பாலும் பிரணாப் அடைந்த வளர்ச்சி வேகமானதாக அமைந்தது, 1973 ஜனவரி துணை அமைச்சர், 1974 அக்டோபர் மாநில அமைச்சர், 1975 டிசம்பர் வருமானவரி-வங்கிகள் மத்திய அமைச்சர் - இவ்வாறு ஆண்டுக்கு ஆண்டு அவர் அரசாங்கத்தில் முக்கியமான பதவிகளில் இடம் பெற்றார்.
மாநில அவை உறுப்பினராக ஐந்து தடவைகள் பிரணாப் முகர்ஜி இருந்தார். 2004, 2009 பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டு மக்கள்சபை உறுப்பினராக ஆனார்.
இந்திரா காந்தி அரசாங்கத்துக்கு 1971-77வரை மக்கள் சபையில் இருந்த பெரும்பான்மை பலத்தைப் பெரிதும் நம்பி அப்பொழுது இருந்த நிதியமைச்சர் ஒய்.பி. சவாண், சட்ட அமைச்சர் ஹெச்.ஆர். கோகலே இருவரும் தவறான முறையில் வரவு-செலவு விவரங்களை அவையில் வைத்தபடி இருந்தனர். குறிப்பாக, நிதி மசோதாக்களில் இருந்த குறைபாடுகளை எதிர்க்கட்சித் தலைவர்களுடன் நானும் சேர்ந்து வெற்றிகரமாக வெளிப்படுத்தினோம்.
அரசமைப்புச் சட்டத்தில் உள்ள வழிமுறைகளைச் சுட்டிக்காட்டி, ஐந்தாறு தடவைகள் அரசாங்கத்தின் நிதித் திட்டங்களை அவை ஏற்றுக்கொள்ள முடியாதபடி, எதிர்க்கட்சியில் இருந்த நாங்கள் செய்தோம். அவற்றால், நிதி அமைச்சருக்கும் சட்ட அமைச்சருக்கும் தலைக்குனிவும், பத்திரிகைகளின் ஏளன விமர்சனங்களும் எதிர்க்கட்சியினரால் ஏற்பட்டன.
சில சமயங்களில் நிதித்துறையின் மாநில அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி அவைமுன் வந்து விளக்கம் தர முயன்றார். அவராலும் தக்க பதில்களைத் தர முடியவில்லை. இருப்பினும் மற்றவர்களைப் போலல்லாமல், அவை முடிந்ததும், பிரணாப் முகர்ஜி எங்களுடன் பழகுவார்.
2011-ல் எனது நாடாளுமன்றச் சொற்பொழிவுகளின் தொகுப்பு நூல் தயாரானது. அப்பொழுது வெளிநாட்டு அமைச்சராக இருந்த பிரணாப் நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய பணிகளைப் பாராட்டித் தந்த வாழ்த்துரை அந்த நூலில் இடம்பெற்றது.
பிரணாப் குமார் முகர்ஜிக்கு என் வாழ்த்துகள்; அவரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியுற்ற பி.ஏ.சங்மாவுக்கு பாராட்டுதல்கள்.
இதற்கு முன்பு நடைபெற்ற குடியரசுத் தலைவர்கள் தேர்தல்களில் நாட்டில் வேறு துறைகளில் சிறப்புற விளங்கியவர்கள் சிலர் வெற்றி கிடைக்காது என்று திட்டவட்டமாகத் தெரிந்தும், ஒரு ஜனநாயகக் கடமையாகக் கருதி போட்டியிட முன்வந்தனர்.
1952, 1959 தேர்தல்களில் காங்கிரஸ் ஆதரவில் ராஜேந்திர பிரசாதை வலிமையாக எதிர்த்து நிற்க யாரும் முன்வராத காரணத்தால் அமோக ஆதரவுடன் வெற்றிபெற்றார். 1962 தேர்தலில் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் எளிதாக வெற்றியடைந்தார்.
1967 தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவில் போட்டியிட்ட ஜாகீர் ஹூசைனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே. சுப்பாராவை நிறுத்தின. அந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியின் வேட்பாளர் 56% வாக்குகளையும் எதிர்த்தரப்பு வேட்பாளர் 43% வாக்குகளையும் பெற்றது ஜனநாயக முறைக்கு ஒரு நல்ல வளர்ச்சியாக இருந்தது. சுதந்திர இந்தியாவின் ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த மிகப்பெரிய செல்வாக்கு சரியத் தொடங்கிவிட்டது என்பதை அந்தத் தேர்தல் எதிரொலித்தது.
1982 எட்டாவது குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நின்ற ஞானி ஜைல் சிங்கை எதிர்த்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹெச்.ஆர்.கன்னா நின்றார். 1975-77 நெருக்கடி காலத்தின் அநீதியான அடக்குமுறை சட்டத்தை மற்ற நீதிபதிகள் ஏற்றுக்கொண்ட நிலைமையில், அதை எதிர்த்து மாறுபட்ட தீர்ப்பை நீதிபதி கன்னா எழுதினார். அதனால் அவருக்கு முறைப்படி வரவிருந்த தலைமை நீதிபதி நியமனத்தை இந்திரா ஆட்சி நீக்கிவிட்டது, இருப்பினும் உலக அளவில் நேர்மையில் நீதியில் நம்பிக்கையுள்ள அரசியல் மேதைகள் அவருக்குத் தந்த பாராட்டுதல்கள் குவிந்தன.
1987 தேர்தலில் ஆர். வெங்கடராமனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண ஐயர் போட்டியிட்டார்.
2002 குடியரசுத் தலைவர் தேர்தலில் ஏ.பி.ஜே.அப்துல் கலாமை எதிர்த்து லட்சுமி ஷெகல் நின்றார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அமைத்த இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர், அண்மையில் ஜூலை 23-ல் அவர் 97-வது வயதில் மறைந்தார்.
பிரணாப் முகர்ஜியின் நீண்டகால அரசியல் அனுபவத்தையும் காங்கிரஸ் கட்சிக்குத் தொடர்ந்து ஏற்படும் நெருக்கடிகளைச் சமாளிக்கும் அவருடைய திறமையையும் காங்கிரஸ் கட்சி பலமுறை பயன்படுத்திக் கொண்டாலும், அவருக்கு உரிய மதிப்பைக் காங்கிரஸ் தலைமை தந்தது கிடையாது.
பிரதமராக இருப்பவர் திடீரென்று இறந்துவிட்டால், அரசியல் மரபுப்படி மந்திரி சபையில் பிரதமருக்கு அடுத்தபடி உள்ள மந்திரி தாற்காலிகப் பிரதமராக இருக்க ஏற்பாடு செய்வார்கள். இதை ஒட்டித்தான், பிரதமர் ஜவாகர்லால் நேரு 1974 மே மாதத்தில் இறந்ததும், மூத்த மந்திரி குல்சாரிலால் நந்தாவை காங்கிரஸ் தலைவர் காமராஜர் உடனடியாக பிரதமராகப் பதவி ஏற்கச் செய்தார். அதேபோல் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி 1966 ஜனவரியில் தாஷ்கண்ட் நகரில் இறந்ததும், குல்சாரி லால் நந்தா தாற்காலிகப் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். அதன்பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி முறையே லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியவர்களைப் பிரதமர் பதவிக்குத் தேர்ந்தெடுத்தனர்.
ஆயினும் பிரதமர் இந்திரா காந்தி திடீரென்று அவருடைய இரு காவல்காரர்களால் 1984-ல் படுகொலை செய்யப்பட்டதும், உடனடியாக மந்திரி சபையில் மூத்த மந்திரியாக இருந்த பிரணாப் முகர்ஜிதான் தாற்காலிகப் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதன்பிறகு முறைப்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டி, அவர்களுடைய பெரும்பான்மை பலத்தைப் பெற்றவரை நிலையான பிரதமராக பதவிக்குத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். பிரணாப் முகர்ஜி மீது காழ்ப்புணர்ச்சியுடன் இருந்த காங்கிரஸ் தவைர்கள் சிலர், "பிரணாப் மீது நம்பிக்கை வைக்கக்கூடாது' என்று விரைவாக ராஜீவ் காந்தியை அழைத்துக்கொண்டு குடியரசுத் தலைவர் ஞானி ஜைல் சிங் முன் சென்று அவரைப் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தனர். ஜைல் சிங்கும் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
நேர்மையான மரபு முறைக்குக் களங்கம் ஏற்படுத்தியதைத் தாங்காமல், பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, "ராஷ்ட்ரிய சமாஜ்வாதி காங்கிரஸ்' என்ற கட்சியைத் தொடங்கினார். காங்கிரஸ் தலைவர்கள் பிரணாபை சமாதானப்படுத்தி மீண்டும் காங்கிரஸில் சேர்ந்துவிடுமாறு செய்தனர்.
ஒருவருக்கு அதிகமான திறமை இருந்தால், அவரைவிட உயர் பதவியில் இருப்பவருக்கு அது அபாயகரமான எதிர்ப்பாகத் தோன்றும். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த ஐந்தாண்டுக் காலத்தில் பிரணாப் முகர்ஜிக்கு அரசாங்கப் பதவி எதுவும் தரப்படவில்லை.
1991-ல் காங்கிரஸ் ஆட்சியில் நரசிம்மராவ் பிரதமராக ஆன பொழுதுதான் திட்டக்குழுவின் துணைத் தலைவராக பிரணாப் ஆனார். 1993 ஜனவரியில் வெளிநாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
2004, 2009 பொதுத் தேர்தல்களுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி தலைமையில் அமைக்கப்பட்ட மந்திரி சபைகளில் ஒரு பிரதம மந்திரிக்கு உள்ள பொறுப்புகளையும், வேலைகளையும் பிரணாப் முகர்ஜிதான் ஏற்றுக்கொண்டு செயல்பட்டார்.
இந்தியாவில் 1952 முதல் 2004 வரை இருந்த ஒவ்வொரு பிரதமரும் மக்கள் சபை உறுப்பினராக இருந்தார், பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபொழுது மக்கள்சபை உறுப்பினராக இல்லை என்றாலும் - இந்திரா காந்தி, நரசிம்மராவ் போன்றவர்கள் - விரைவில் தேர்தலில் நின்று மக்கள் சபை உறுப்பினராக ஆகிவிட்டனர். பிரதமர் ஜவாஹர்லால் காலம் முதல் 2004 வரை பிரதம மந்திரியாக இருந்த ஒவ்வொருவரும் மக்கள் சபையின் உறுப்பினராகவும், மக்கள் சபையின் முன்னவராகவும் (லீடராக) இருந்தனர். இது நாம் பின்பற்றுகிற இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கடைப்பிடிக்கும் மரபு ஆகும்.
இந்த முறைக்கு மாறாக இருப்பவர் பிரதமர் மன்மோகன் சிங் ஒருவர்தான். பெயருக்கு மன்மோகன் சிங் பிரதமர் என்று இருந்தாலும். செயல் முறையில் பிரணாப் முகர்ஜிதான் பிரதமர் பணிகளை எல்லாம் செய்து மக்கள் சபையின் முன்னவராகவும் இருந்தார்.
காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை இதற்கு முன் மந்திரிசபையில் இருந்தவர்களில் பக்ருதின் அலி அகமது, ஞானி ஜைல் சிங் ஆகிய இருவரும் மந்திரிகளாக இருந்து அடுத்துக் குடியரசுத் தலைவராக ஆகியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் காலத்தில் தவறான முடிவுகளை அவர்கள் எடுத்திருக்கிறார்கள்.
மந்திரி சபையின் அனுமதியைப் பெறாமலே 1975-ல் உள்நாட்டு நெருக்கடி கால அறிவிப்பில் நள்ளிரவில் பக்ருதின் அலி அகமது கையெழுத்திட்டு நாட்டின் இருண்ட கால ஆட்சிக்கு வழி அமைத்தார்.
இந்திரா காந்தி மறைவுக்குப் பின் தாற்காலிகப் பிரதமரை நியமிக்காமல் நேரடியாக ராஜீவ் காந்தியைப் பிரதமராக குடியரசுத் தலைவர் ஜைல் சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மந்திரி பதவியிலிருந்து நேராக குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்துள்ள பிரனாப் முகர்ஜி அத்தகைய நேர்மையற்ற செயல்களைச் செய்யமாட்டார் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
""பிரணாப் முகர்ஜியின் நீண்டகால அரசியல் அனுபவத்தையும்
காங்கிரஸ் கட்சிக்குத் தொடர்ந்து ஏற்படும் நெருக்கடிகளைச்
சமாளிக்கும் அவருடைய திறமையையும் காங்கிரஸ் கட்சி பலமுறை பயன்படுத்திக் கொண்டாலும், அவருக்கு உரிய மதிப்பைக்
காங்கிரஸ் தலைமை தந்தது கிடையாது''