முன்மாதிரி சுகாதாரத் திட்டம்
நமது அரசின் அறிவிப்புக்கும், செயல்பாட்டுக்கும் கொஞ்சமும் தொடர்பிருக்காது என்பதை பல விஷயங்களில் நாம் பார்த்திருக்கிறோம். விவசாயமாகட்டும், வங்கித் துறையாகட்டும் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாகத்தான் அரசின்
நமது அரசின் அறிவிப்புக்கும், செயல்பாட்டுக்கும் கொஞ்சமும் தொடர்பிருக்காது என்பதை பல விஷயங்களில் நாம் பார்த்திருக்கிறோம். விவசாயமாகட்டும், வங்கித் துறையாகட்டும் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாகத்தான் அரசின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன.
இந்த வரிசையில், மக்களின் தேவைக்குச் சற்றும் பொருந்தாத மருத்துவக் கொள்கைதான் நமது நாட்டில் அமலில் இருக்கிறது என்பதை கடந்த கட்டுரையிலேயே தெளிவுபடுத்தியிருக்கிறேன்.
மக்களை நலமாக வைத்திருக்க வேண்டும், நோய்வாய்ப்பட்டால் சிகிச்சையளிக்க வேண்டும், தாறுமாறாக எகிறும் மருத்துவச் செலவுகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற மூன்றும்தான் சுகாதார அமைப்பின் அடிப்படை இலக்குகள். இந்த மூன்றையும் எட்டிவிட வேண்டும் என்பதை அரசு அவ்வப்போது அறிவித்துக் கொண்டிருக்கிறது. அதில் எந்தக் குறையுமில்லை. ஆனால், மூன்றில் ஒன்றைக்கூட இப்போதிருக்கும் கொள்கை பொருள்படுத்தவில்லை என்பதுதான் நடைமுறை உண்மை.
Advertisement
இந்த நேரத்தில், உலகின் மற்றப் பகுதியில் வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சுகாதாரத் திட்டங்களை ஆய்வு செய்வதன் மூலம், இந்தியாவுக்குப் பொருத்தமான ஒன்றை நம்மால் தேர்வு செய்ய முடியும். மாபெரும் வல்லரசான அமெரிக்காவை இந்த விஷயத்தில் ஒதுக்கிவிடுவதுதான் நல்லது.
உலகின் மிக மோசமான ஒரு சுகாதாரக் கொள்கை இருக்கிறதென்றால், அது அமெரிக்காவினுடையதுதான். வேண்டுமென்றால், பிரிட்டன், பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளைப் பின்பற்றலாம். முன்னோடி திட்டங்களில் ஒன்றான பிரிட்டனின் சுகாதார மாதிரியை இந்தக் கட்டுரையில் விரிவாக அலசுவோம்.
1948-ம் ஆண்டுக்கு முன்பு, பிரிட்டனின் சுகாதாரத் திட்டங்களின் நிலைமையும் மிக மோசமாகத்தான் இருந்தது. மருத்துவம் என்பது ஆடம்பரமாகக் கருதப்பட்டது. பணக்காரர்களுக்கு மட்டுமே மருத்துவச் சிகிச்சை கிடைக்கும். ஏழைகளுக்கு வியாதி வந்துவிட்டால், கை வைத்தியமே கதி. நகரத்தில் எங்கோ இருக்கும் நகராட்சி மருத்துவமனைகளுக்குச் செல்வதைவிட செத்துப் போவதே மேலென்று மக்கள் நினைத்த காலம் அது.
சேவை எண்ணம் கொண்ட டாக்டர்கள் இருக்கத்தான் செய்தார்கள். ஆனால், அவர்களாலும் நீண்ட காலத்துக்குச் செயல்பட முடியவில்லை. அவர்களில் வில்லியம் மார்ஸ்டன் குறிப்பிடத் தகுந்தவர். 1828-ம் ஆண்டில் "கொடிய நோய்களுக்கான லண்டன் பொது மருத்துவமனை' என்கிற பெயரில் இலவச மருத்துவமனையைத் தொடங்கி சேவை செய்தார். இந்த மருத்துவமனைதான் பின்னாளில் அரசு இலவச மருத்துவமனையானது.
இங்கு சிகிச்சை பெறுவதற்காக எப்போதும் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் இருக்கும். 1840-களிலேயே இங்கு ஆண்டுக்கு சுமார் 30 ஆயிரம் பேருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பணிபுரிந்த மருத்துவர்கள் யாரும் சம்பளம் பெற்றுக் கொள்ளவில்லை. பிற செலவுகளுக்கான நிதி, நன்கொடைகள் மூலம் திரட்டப்பட்டது. நிகழ்ச்சிகள் நடத்துவது, சந்தா பெறுவது உள்ளிட்ட வகைகளிலும் மருத்துவமனைச் செலவுகள் சமாளிக்கப்பட்டன.
ஆனால், இந்தச் சேவை நீண்ட காலத்துக்கு நீடிக்கவில்லை. 1920-களில் மருத்துவமனைக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. கிட்டத்தட்ட திவால் ஆகும் நிலைமை. அதுவரை இலவசமாக நடந்த மருத்துவச் சேவை கட்டணச் சேவையாக மாறத் தொடங்கியது. "முடிந்த அளவுக்குப் பணம் கொடுங்கள்' என்று நோயாளிகளிடம் கேட்டனர்.
மிகக் குறைந்த சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு மட்டும் இலவச மருத்துவச் சிகிச்சை என்று அப்போதிருந்த அரசு அறிவித்தது. ஊழியர்கள் என்றால், ஊழியர்கள் மட்டும்தான். அவர்களது மனைவிக்கும் குழந்தைகளுக்கும் இலவச சிகிச்சை கிடையாது.
இலவச சிகிச்சை பெறும் ஊழியர்களும், முதலில் கட்டணம் செலுத்திவிட்டு பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பணத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று விதிமுறை வகுக்கப்பட்டது. கடைசியில் இலவச மருத்துவம் என்பதே இல்லையென்றாகிவிட்டது.
நோய்வாய்ப்பட்டவர்களைவிட மாற்றுத் திறனாளிகளின் நிலை மிக மோசமாக இருந்தது. மனநலம் குன்றியவர்கள் தனி அறைகளில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்காக அல்ல, மற்றவர்களுக்கு அவர்கள் தொந்தரவாக இருக்கக்கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருந்தாலும், மற்றவர்களுக்கு அதைப்பற்றிக் கவலைப்பட நேரமில்லை.
வயதானவர்கள் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளானார்கள். அந்தக் காலத்தில் காப்பகங்கள் என்கிற பெயரில் இயங்கிவந்த பணியகங்களில் வெறும் உணவுக்காக ஏழைகள் வேலை செய்வது வழக்கமாக இருந்தது. அங்குள்ள அறைகளில் நீண்டகாலமாக அடைபட்டிருந்த பல முதியவர்கள் அங்கேயே செத்தும் போனார்கள்.
அந்தக் காலகட்டத்தில் பிரிட்டன் மக்கள் அனுபவித்த இன்னல்களை ஏ.ஜே.குரோனின் தனது சிடாடல் (1937) நாவலில் மிக உருக்கமாகப் படம்பிடித்திருப்பார். இந்த நாவல் பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டாலும், பல உண்மைகளை அம்பலப்படுத்தியதையும் மறுக்க முடியாது.
1937-ம் ஆண்டுக்கான அமெரிக்க தேசியப் புத்தக விருது உள்ளிட்ட பல விருதுகள் இந்தப் புத்தகத்துக்குக் கிடைத்தன. ஆனால், துரதிருஷ்டவசமாக இந்த நாவல் சுட்டிக் காட்டிய படிப்பினைகள் எதையும் அமெரிக்கா உணரவில்லை. இந்தியாவிலும் இதே கருவை மையமாகக் கொண்டு தேரே மேரே சப்னே (1971 - ஹிந்தி), ஜீவன் சைகேதே (1972, பெங்காலி), மதுர ஸ்வப்னம் (1982, தெலுங்கு) ஆகிய திரைப்படங்கள் வந்திருக்கின்றன. இந்தியாவும் அமெரிக்காவைப் போலவே எதுவும் செய்யாமல் இருந்துவிட்டது.
ஆனால், குரோனின் எழுதிய நாவல் பிரிட்டனின் சுகாதாரத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது. மாபெரும் வரவேற்பைப் பெற்ற, தேசிய சுகாதார அமைப்பு உருவாக்கப்படுவதற்கும் இதுவே காரணம். அரசியலிலும் புரட்சிக்கும் இந்தப் புத்தகம் வித்திட்டது. ஆம், 1945-ம் ஆண்டு நடந்த தேர்தலில் லேபர் கட்சி வெற்றி பெற்றதில் மிகப்பெரிய பங்கு குரோனின் நாவலுக்கு உண்டு.
சமூகச் சீர்திருத்தவாதியும் பிரிட்டிஷ் பொருளாதார நிபுணருமான வில்லியம் பெவரிட்ஜ் அளித்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருந்த பரிந்துரைகளின் அடிப்படையில், 1948-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி தேசிய சுகாதார அமைப்பை பிரிட்டன் அரசு நிறுவியது. பெவரிட்ஜ் பிரிட்டிஷ் கால இந்தியாவில் பிறந்தவர். அவர் பிறந்த ரங்பூர் இப்போது வங்கதேசத்தில் இருக்கிறது. அவரது தந்தை ஹென்றி பெவரிட்ஜ், ஒரு ஐ.சி.எஸ் அதிகாரி.
பெவரிட்ஜின் சிந்தனையில் உதித்த தேசிய சுகாதார அமைப்பு பரவலாக வெற்றி பெற்றதையடுத்து, அதே மாதிரியை இத்தாலி, ஸ்பெயின், ஸ்வீடன், டென்மார்க் ஆகிய நாடுகளும் பின்பற்றின. இந்தத் திட்டத்துக்கு இந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்ததற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
தேசிய சுகாதாரச் சேவைத் திட்டத்தின்படி, மருத்துவச் சேவைகள் அனைத்தும் அரசு மூலமாகவே வழங்கப்படும். இதற்காக பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கப்படும். பொது வரிவிதிப்பின் வாயிலாக இதற்கான நிதி திரட்டப்படும். காவல்துறை, ராணுவம் போன்றவற்றுக்கு அரசு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்குமோ அதேயளவு முக்கியத்துவம் சுகாதாரச் சேவைகளுக்கும் அளிக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.
பிரிட்டனின் சுகாதாரத் துறையைப் பொருத்தவரை, தேவையின் அடிப்படையிலேயே அனைவருக்கும் இலவச மருத்துவச் சேவை அளிக்கப்படுகிறது. நோயாளியால், கட்டணம் செலுத்த முடியுமா, இல்லையா என்பதெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 8.4 சதவிகிதம் அளவுக்கு சுகாதாரத் துறைக்காகச் செலவிடப்படுவதாக அந்நாட்டு அரசு பெருமையுடன் சொல்லிக் கொள்கிறது.
2011-ம் ஆண்டில் சுகாதாரத்துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு மட்டும் சுமார் ரூ. 10 லட்சம் கோடி. ஒட்டுமொத்த பட்ஜெட்டில் இது 18 சதவீதம்!
பிரிட்டனில் நிரந்தரமாக வசிக்கும் அனைவரும் தேவைப்படும் நேரத்தில் மருத்துவ சேவையை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். மருத்துவருக்குக் கட்டணம் செலுத்த வேண்டாம், காப்பீடு என்கிற மாயை கிடையாது, ஏழை பணக்காரர் என்கிற வித்தியாசமும் இல்லை. மருத்துவச் சேவை என்று வந்துவிட்டால், சொத்து இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியான சிகிச்சைதான். எந்தப் பாரபட்சமும் காட்டப்படுவதில்லை.
அவசரச் சிகிச்சை என்றால், நிரந்தரக் குடியுரிமையோ, வசிக்கும் உரிமையோ பெறாதவர்களுக்கும்கூட உடனடி மருத்துவச் சேவை கிடைக்கும். சட்டவிரோதமாகக் குடியேறினாலும் இலவசமாக மருத்துவச் சேவையைப் பெற முடியும்.
பிரிட்டனில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. மருத்துவக் கட்டணங்களைச் செலுத்துவது அரசுதான். சில தனியார் மருத்துவமனைகள் இருந்தாலும், அரசின் பொதுச் சுகாதாரச் சேவையை ஒப்பிடும்போது, அவற்றின் பங்களிப்பு மிக மிகக் குறைவே. அரசே எல்லாவிதமான மருத்துவச் சேவைகளையும் அளிக்கும்போது, தனியார் மருத்துவமனைக்கு யார்தான் போவார்கள்?
அரசு நினைத்தால், உண்மையாகவே விரும்பினால் இதைப் போன்றதொரு மருத்துவ சேவையை இந்தியாவாலும் அளிக்க முடியும். பிரிட்டனில் இந்தத் திட்டம் அமலுக்கு வந்தபோது, மருத்துவர்கள் இதைக் கடுமையாக எதிர்த்தனர். அதைப் புரிந்து கொண்ட அப்போதைய சுகாதார அமைச்சர், "அவர்கள் வாயை தங்கத்தைக் கொண்டு அடைப்பேன்' என்றார்.
இந்தியா உள்பட எல்லா நாடுகளுக்கும் இது பொருந்தும். மருத்துவ சேவை என்பது கார்ப்பரேட் வர்த்தகமல்ல, அது சமூகப் பொறுப்பு என்பதை அரசு உணர வேண்டும். உலகிலேயே, நல்ல சுகாதாரத் திட்டம் எது என்பதற்கு அருமையான முன் மாதிரி நமக்கு இருக்கிறது. நமது அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை இருக்கிறதா என்பதுதான் கேள்வி!